எந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 நவம்பர், 2010

கலவை சாதம் (24/11/2010)

ஒரு பெரிய டவுட்டு......

இன்ட்லியில இந்தப்பதிவு 21 ஓட்டு வாங்கியிருக்கு. ஆனா பிரபலமாக்கப்பட்டது ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வரலை. ஆனா 18 ஓட்டு, 20 ஓட்டு வாங்கிய பதிவுகள் எல்லாம் "சில நிமிடங்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது" ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வந்து கிட்டு இருக்கு.

என்ன கணக்குல பதிவுகள் எல்லாம் பிரபலாமாக்கப்படுது? யாராவது சொல்லுங்களேன்.

------------------------------------------------------

குயில் குஞ்சு: ஊர்ல பத்து பதினஞ்சு கம்பூட்டர் வச்சிருக்குறவன்லாம் சந்தோசமா இருக்கான்.......

ஒரே ஒரு லேப்டாப்ப வச்சிகிட்டு நான் பட்ற அவஸ்த இருக்கே அய்யய்யய்யய்யய்யய்யோயோ......

(அது ஒண்ணுமில்லல. லேப்பு டாப்ப தொறந்தாலேலேலே.. ஒரே அபீசியல் (official) மெயிலா வந்து குமிஞ்சு கெடக்கு...... அதான்.... ஒரோரு மெயிலுக்கும் ஒரு மணி நேரம் வேல வக்கிது......

------------------------------------------------------

ஒரு டவுட்டு

ப்ளாக் மேயும் போது கண்ணுல பட்டுது.......... என் பிளாக்கு வேல்யூ....என் பிளாக்கு வேல்யூ....னு அங்கங்க போட்டு வச்சிருக்காய்ங்களே...... இந்த பிளாக்கையெல்லாம் யாரு வாங்குவா? அதுவும் அவ்ளோ காசு குடுத்து...........

(ஒரு வேளை பாண்டியராஜன் படத்துல வர்றா மாதிரி................. ரெண்டாயிரம்......... நாலாயிரம்............ ஆறாயிரம்........... - அப்படி இருக்குமோ? )

சில சினிமாக்கள்ல ஏழை அப்பாக்கள் சொல்வாங்களே..... என் தலையை அடமானம் வச்சாவது கல்யாணத்தை நடத்திடுறேன்.. (டேய் நாயே...... சிக்கும் பேனுமா இருக்குற உன் தலையை எவன்டா வாங்குவான்?)

------------------------------------------------------

கோச்சுக்காதீங்க - ஒரே ஒரு கவிதை

உனக்கான நேரங்களை
சேமித்து வைத்துக்
காத்திருக்கிறேன்
எனக்கான நேரம்
ஒதுக்கி வருவாயா?

------------------------------------------------------


விக்கிப்பீடியா கணக்குப்படி எந்திரன் வசூல் வெறும் 250 கோடி தானாமே........... அவ்ளோ தானா? கட்டுபடி ஆகாதேப்பா....... (சன் பிக்சர்ஸூக்கு). ஏதோ ஐநூறு கோடி கலெக்சன் ஆவும், ஆயிரம் கோடி கலெக்சன் ஆவும்னு சொன்னாய்ங்களே....... (அது சரி......... இந்தப்பணத்தையே நம்ம டவுசர் பாக்கெட்ல இருந்துதான் எடுக்குறாங்க. இன்னும் கலெக்சன் ஆவணும்னா லங்கோட்டையும் உருவுவாங்க, பரவாயில்லையா? - லங்கோடு ன்னா என்ன அங்கிள்னு கேக்குற குழந்தைங்கள்லாம் ஓடிப்போய்டுங்க)

நான் தான் அப்பவே சொன்னேன்ல. சன் டிவி ஷேர் வாங்குங்கடா, சன் டிவி ஷேர் வாங்குங்கடான்னு... யாராவது கேட்டீங்களா...... வாங்கிருந்தா கொஞ்சமாவது சம்பாரிச்சிருக்கலாம்ல....... (நான் தான் அப்பவே சொன்னேன்ல........... கேட்டா............. இவர் துபாய்ல இருந்து வரும்போதே டிக்கிட் எடுக்காமத்தான் வந்தாராம்)

நமக்கென்ன? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அர்சி தர்றாய்ங்களே..... போதாது???? கூடவே கலர் டிவி. இலவச வேட்டி, சேலை... பீப்பீ........ போங்கடா டேய்........

------------------------------------------------------

மூணு வருடம் முன்பு எக்ஸாம் இன்விஜிலேஷன் டியூட்டியில் நடந்தது.

நான்: ஆன்ஸர் ஷீட்டை மறைச்சு வச்சு எழுதுடா. பக்கத்துல இருக்குறவன் எட்டிப்பாக்குறான்.

குயில் குஞ்சு: சார் மனசாட்சி இல்லாமப் பேசாதீங்க.. என் பேப்பரே காலியா இருக்கே என்ன பண்லாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன், நீங்க நக்கல் பண்றீங்களா...

நான் : ஙே.. ஙே.. ஙே.. ஙே..

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

திங்கள், 4 அக்டோபர், 2010

அழைப்பு

(இக்கட்டுரை உயிர்மையின் நேற்றைய (அக்டோபர் 4-ம் தேதி) உயிரோசை டாட் காம் இணைய இதழில் வெளியானது.)
--------------------------------------------------------------------------------
நைட்டு பன்னிரண்டே கால் மணி இருக்கும். ஓசூரில் இருந்து பயங்கர டயர்டாகி சேலம் வந்து, புது பஸ் ஸ்டாண்டில் பசியோடு இறங்கி கைவலியில் சூட்கேஸை தலைக்கு மேல் தூக்கியபடி, லேப்டாப்பை ஒதுக்கியபடி ஹோட்டல் ஏதாவது இருக்கிறதா என்று தேடியபடி உள்ளே நடந்தால், ஒரு ஓரமாக இருந்து "ஹெலோ...." என்று நளினம் கலந்த குரலில் ஒரு அழைப்பு.

பகீரென்று இருந்தது.

ஒரே இருட்டு. மச மசவென்று. மழை ஈரம் வேறு. வெளிப்புறமாகவே பஸ்ஸில் இறங்கி ஷேர் ஆட்டோ நிற்கும் இடத்தில் இருக்கும் சிறு திறப்பு வழியாக உள்ளே இறங்கிப்போனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு வண்டிகள் நிற்கும். எந்திரன் போஸ்டர்கள் அங்கே ஒட்டப்பட்டிருக்கும். அந்த திறப்பிற்கு முன்பு இருந்து தான் இந்த அழைப்பு. பார்த்தால் உருவம் நல்ல ஆஜானுபாகுவாக இருந்தது. நம்ம சைஸூக்கு அவ்ளோ பெரிய உருவத்தைப்பார்த்தால் கை நடுங்க ஆரம்பித்து விட்டது.

நல்ல ஜிகுஜிகுவென்ற நிறத்தில் சேலை. கிட்டத்தட்ட ஸ்லீவ்லெஸ் போன்ற கையுடனான முழுதும் கீழிறங்கிய ஜாக்கெட். பளிச்சென்ற மேக்கப்புடனான முகம். உதட்டைத் துடைத்தபடி என்னை நோக்கிய கூர் பார்வை.. அந்த அகால நேரத்தில் ஓவர் மேக்கப் கொஞ்சம் பயமாகவே இருந்தது. லேசாக அசைந்தபடி சைகை காண்பித்தது அந்தப் பெண் உருவம். உற்றுப்பார்த்தால் அது பெண் அல்ல.






---------------------------------------------------

மும்பைக்கு அடுத்தபடியாக "அந்த" மேட்டரில் எங்க ஊர்தான் ஃபேமஸ் என்று பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஜூ.வி முதற்கொண்டு நெற்றிக்கண் வரை ஏதாவது கிசுகிசு மேட்டர்களில் இந்த மாதிரி மேட்டர்கள் தான் இருக்கும். முன்பெல்லாம் பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது திருநங்கைகள் கூட. அதிலும் பெண் தன்மை அதிகமாக இருந்தால் ரேட் உயருமாம். அவர்கள் சொல்லும் இடத்தில் தனி ரேட், கஸ்டமர் இடத்திற்கு தனி ரேட், நேரக்கணக்கு மணிக்கணக்காக நீள்கிறது - அதற்கு தனி ரேட். (ரேட் கட்டர்-லாம் கிடையாதாம்)

ராஜேஷ்குமார் கூட ஒருமுறை ஊர்வாரியாக ஊர்களை மையமாக வைத்து குமுதத்திலோ, விகடனிலோ கதை எழுதிய போது எங்க ஊரைப்பத்தி மட்டும் பலான மேட்டருக்கு ரெய்டு போய் உயிருக்கு ஆபத்தை சந்திக்கும் குமரகிரி பெண் இன்ஸ்பெக்டர் கதையை எழுதியிருந்தார். அதைப்படிக்கும் போது இவர்கள் எல்லாம் எங்கே இருப்பார்கள் என்று பலநாள் யோசித்திருக்கிறேன்.

புது பஸ் ஸ்டாண்டு பக்கம் ஒரு சைடில் ஓரமாக வரிசையாக நிற்பார்கள், அல்லது பஸ் ஸ்டாப்பில் கூட நிற்பார்கள் என்று சொல்வான் கோவிந்தன். ஆனால் நான் இதுவரை பார்த்ததே இல்லையே, ஒருவேளை நான்தான் வேளை கெட்ட வேளைகளில் போயிருக்கிறேனோ என்னவோ, அல்லது நான் ரொம்ப நல்ல பிள்ளையோ, அல்லது அவன் சொன்ன அடையாளங்கள் பொருந்திப் போகவில்லையோ என்று ஒரு டவுட்டு இருந்தது.

ஒருமுறை இதை வைத்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று தகவல் திரட்டும் போது கோவிந்தனிடம் போன் செய்து திரும்பக் கேட்டால் நீ இன்னும் வயசுக்கு வரலடா மச்சி என்று சிரித்தபடியே போனை வைத்துவிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் சொன்ன பழைய பஸ் ஸ்டாண்டு பக்கமும் இரண்டு நாட்கள் சுற்றினேன். ஆனால் அவன் சொன்ன அடையாளங்கள் பல பேருடன் பொருந்திப் போயின. கருத்து கேட்கலாம் என்றால், அது அதிக அளவில் கிராம மக்கள் வந்து போகும் இடம். ஒரு வேளை தவறுதலாக ஏதேனும் பிரச்சினை ஆகி விட்டால் என்ன செய்வது என திரும்பி வந்து விட்டேன்.

இதே போல் போன வருடம் கல்கத்தா போனபோது கூட அங்கே (அங்கேன்னா? அங்கேன்னா அங்கே தாங்க - "சோனாகாச்சி" - தெரியாத மாதிரி கேக்குறது...) எட்டிப்பார்க்கலாமா? என்று ஒரு குறுகுறுப்பு இருந்தது. ஆனால் பயம். நெஞ்சு முழுக்க பயம். (பழைய) ஆபீஸில் சொல்லியனுப்பினார்கள். கொல்கத்தால மூணு ஆபீஸ் இருக்கு. அதுல விபின்-னு ஒரு பிராஞ்ச் மேனேஜர் இருக்கான். பார்த்துக்கோடா, அவன் ஆபீஸில் இருந்து எட்டிப்பார்த்தாலே பின்பக்கம் அந்த இடம் தெரியும் என்று. ஆனால் சுவ்ரோ கூடவும் ஷூப்ரா கூடவும் சுற்றியதில் அந்த மேட்டர் மறந்தே போயிற்று.


ஆச்சா? கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.. கொல்கத்தாவும் மறந்து போயாயிற்று.. இப்போது திடீரென்று இங்கே நம்ம ஊரிலேயே (என்னையும் பெரிய மனுஷனாக மதித்து) ஒரு புதிய அழைப்பு. இவர்களை எல்லாம் எங்கே, எப்படிப் பார்ப்பது என்று ரொம்ப நாள் யோசித்த ஒரு விஷயம். அது திடீரென்று அது எங்க ஊரிலேயே நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால் அந்தப் படபடப்பு இன்னமும் போகவில்லை.

எத்தனை பேர் இதில் ஈடுபட்டிருப்பார்கள், பெண்கள், திருநங்கைகள், இவர்கள் எப்படி வந்தார்கள்? அவர்கள் வருமானம், போலீஸ், மாமூல், கேஸ், அரசியல்வாதிகள், ரெளடிகள், என்றெல்லாம் எண்ணிபடி திரும்பி வந்தேன். இப்போதெல்லாம் பஸ் இறங்கியதும் உடனே அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. தினமும் கண்ணில் படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது.

(கடைசி வரை அன்றைக்கு எங்கேயும் ஹோட்டல் இல்லை. பசியோடு தான் திரும்ப வேண்டியிருந்தது)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)

வெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் தரை டிக்கெட்டை பத்து ரூபாய் ஆக்கினார் கலைஞர். ஆக படம் பார்க்க பத்து ரூபாய் போதும். ஆனால் நான் அதிக பட்சம் செலவு செய்தது என்று பார்த்தால் "மேட்ரிக்ஸ் ரீலோடட்"-கு 17 ரூபாய் ஃபர்ஸ்ட் கிளாஸ், “கிளாடியேட்டர்” 20 ரூபாய், “மைட்டி ஜோ யங்”-குக்கு 22 ரூபாய் பால்கனி, பிறகு டிக்கெட் விலை ஏறிய பின் “கஸீனோ ராயல்”-கு 30 ரூபாய், “க்வான்டம் ஆஃப் சோலேஸ்” 35 ரூபாய், அப்புறம் சென்னையில் காசு கொடுத்து பார்த்த “போக்கிரி” 40 ரூபாய், ஆபீஸில் தவிர்க்க முடியாமல் டீமாகப்போன “சரோஜா” 85 ரூபாய்.

ஆசைப்பட்டு பார்த்த ஒரே படமான அவதார் 120 ரூபாய் (நூற்றியிருபது ரூபாய் - த்ரீ டி கண்ணாடி உட்பட சத்யம் தியேட்டரில் - அது விதிவிலக்கு). அது தவிர என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு படத்துக்கு நூத்தி ஐந்து ரூபாய் கொடுத்து பார்த்திருக்கிறேன் என்றால் அது எந்திரனுக்குத்தான். அதே போல் முதல் நாளிலேயே பார்த்த ஒரே தமிழ் படமும் இது தான். மத்ததெல்லாம் நிதானமாக ஒரு மாதம் கழித்து பார்த்தாலே போதும். ஆனால் தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு மற்றும் பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே ஓடினால் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்காதா என்ன?

அதுவும் நைட் ஷோ இரண்டு டிக்கெட். எனக்கொன்று. எங்க நைனாவுக்கு ஒன்று. ப்ளஸ் ஒரு முறுக்கு பாக்கெட். இரண்டு பாப்கார்ன். மூன்று ஸ்பிரைட். இரண்டு ஸ்வீட் கார்ன். ஒரு வாட்டர் பாட்டில். (நைனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே கத்தித் தீர்த்ததில் கட்டிப்போன தொண்டையை சரி செய்ய) ஒரு ஸ்ட்ரெப்சில்ஸ். ஆக மொத்தம் எந்திரனுக்காக இந்த மாத குடும்பச்செலவில் கை வைத்தது ரூபாய் முன்னூற்று முப்பத்து இரண்டு. அதுவும் சேலம் என்ற ஊரில் ஒரு சாதாரண ஒதுக்குப்புறமான தியேட்டரில், இதையே சத்யத்தில் பார்த்துத் தொலைத்திருந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் மொய்யாகி இருக்கும். (நான் போயிருக்கவே மாட்டேன். அது வேற விஷயம்..)

அப்புறம் நேற்று எந்திரன் பார்த்து விட்டு இன்றைக்கு வேலைக்குப்போகாமல் எங்க நைனா கட்டடித்ததில் மார்ஜினல் லாஸ் தனி. அதையும் கூட்டிக் கொள்ளுங்கள். இனிமேல் அவரையெல்லாம் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தோன்றினாலும் அந்த மனுஷனுக்கு ரஜினியும், ராமராஜனும் ரொம்பப்பிடிக்கும் என்பதால் மன்னித்து விட்டு விட்டேன். பாட்ஷாவும், கரகாட்டக்காரனும் அவரது ஃபேவரைட். டிவியில் அந்தப்படங்கள் போடும் அன்றைக்கு வேலைக்கு லீவு போட்டு விடுவார்.

சரி. சொந்தக் கதை எதுக்கு? போதும். எந்திரன் படம் பற்றிப்பேசுவோம். பயப்படாதீர்கள். நான் விமர்சனம் எழுதவில்லை. நெட்டில் நோண்டும் பலரும் படம் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். அப்படியும் தெரியாதவர்கள் "எந்திரன்" என கூகுளிட்டோ, தமிழ்மணத்திலோ, இன்ட்லியிலோ கதையைப்படித்து விட்டு வாருங்கள். இரண்டே நாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் "எந்திரன்" பற்றி பதிவு போட்டுள்ளார்கள். நாமளும் எதையாவது போடுவோம் என்று தோன்றியது...

பதிவாகப்போடுவதற்குப் பதில் கேள்வியாகக்கேட்டால்? (போட்ட காசுக்கு நாலு கேள்வியாவது கேட்கணும் இல்லையா?) இந்தக்கேள்விகளை பலரும் கேட்கிறார்கள்.. கேட்காவிட்டாலும் பலர் மனதில் இந்தக் கேள்விகள் உட்கார்ந்திருக்கின்றன.. காப்பி என்று சொல்லாதீர்கள். ரெடி.. விடு ஜூட்.. கதையை படித்துத் தெரிந்து கொண்டு விட்டு இந்தக் கேள்விகளை படியுங்கள்..

இதோ கேள்விகள்...

21-ம் நூற்றாண்டின் இம்மாம் பெரிய அச்சீவ்மெண்டைச் செய்யும் விஞ்ஞானிக்கு இருக்கும் உதவியாளர்கள் இவ்வளவு மொக்கையாக இருப்பார்களா?

டிரெயினில் முப்பது நாற்பது பேரை புரட்டியெடுக்கும் ஒருவரை போலீஸ் தேடவே தேடாதா?

நாடே பரபரக்கும் ஒரு பெரிய வழக்கில் ஒரு ரோபோவின் சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தியாவில் எந்தக் கேஸ் ஒரே நாளில் முடிகிறது?

ரோபோவை டிஸ்மேன்டில் பண்ணிடுங்க - என்று சிம்பிளாகச் சொன்னால் போதுமா? அதை உருவாக்கிய ஃபார்முலா வசீகரனின் மண்டையிலும் ஃபைலிலும் இருக்காதா? அதை என்ன செய்வதாம்?

அழிவு செய்யும் ரோபோவின் ஓனரான விஞ்ஞானியை அரெஸ்ட் செய்யாமல் அவரையே புராஜெக்டுக்கு தலைவராக்கும் மாங்கா போலீஸ் எந்த ஊரில் இருக்கிறது?

ரோபோவை உருவாக்கவே பத்து வருட ஆராய்ச்சி தேவைப்பட்டால், அதற்கு உணர்ச்சிகள் கொடுக்க சும்மா போர்டில் பாடம் நடத்தினால் போதுமா?

சர்வ வல்லமை உள்ள ஒரு ரோபோ தயாரானால் அந்த ஃபார்முலாவைக் கவர சர்வதேசத் தீவிரவாதிகளோ, காங்க்லோமெரேட் கம்பெனிகளோ முயற்சிக்க மாட்டார்களா?

நூற்றுக்கணக்கான போலீஸையும், ராணுவத்தையும், பொது மக்களையும் கொலை செய்யும் ரோபோவை தயாரித்த ஒரு விஞ்ஞானியை மனித உரிமை ஆர்வலர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
ரோபோவைத் துரத்தும் போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா ராய் காருக்குள் இருக்கிறார் என்பதைப்பார்க்காமலே சுடுவார்களா?

ராணுவத்திற்கு கொடுக்க ரோபோவை உருவாக்கும் ஒரு விஞ்ஞானிக்கு அதற்கான கமாண்டு-களை யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சின்ன விஷயம் தெரியாதா?

பத்து வருடம் உழைத்து தயாரித்த ஒரு ரோபோவை "நியூரோ சிப்"பை டெமாலிஷ் செய்யாமல் சும்மா தூக்கி குப்பையில் போடுவாரா ஒரு விஞ்ஞானி?

ரஜினியே இரண்டு அல்லக்கை அரைகுறை விஞ்ஞானிகளை வைத்திருக்கும் போது அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு ரோபோ சப்ளை செய்யும் அளவுக்கு பெரியாளான அவரது விஞ்ஞானி புரபஸர் ஆள் பலம் இல்லாமல் தனியாகச் சுற்றுவாரா?

ஒரு சாதாரண குடிமகனின் பத்து இலட்ச ரூபாய் டீலிங்கில் எல்லாம் தலையிடும் ரெளடிகள், அரசியல் வாதிகள் எல்லாம் இவ்ளோ பெரிய மேட்டர்களில் தலையிடவே மாட்டார்களா?

ரோபோ பற்றியே படம் எடுத்தாலும் கும்பல் கும்பலாகவே ஆட்கள் வரிசையாக நின்று ஆடும் டான்ஸ்களை எப்போது நிறுத்துவார்கள்?

சுஜாதா இருந்திருந்தால் படத்தைப்பார்த்து விட்டு என்ன சொல்லியிருப்பார்?

வில்லனாக ரகுவரன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

----------------------------------------------------------------------------------

சரி போகட்டும். கொஞ்சம் பொது அறிவு கேள்விகள் கேட்கலாமா?...

இது ரஜினி படமா? ஷங்கர் படமா?

இந்தப்படத்தில் அஜீத் அல்லது கமல் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கிளைமாக்ஸ் கதை விவாதத்தில் இராம.நாராயணன் கலந்து கொண்டாரா?

ஒரு சூப்பர் ஸ்டாரே சாதாரணமாக அறிமுகம் ஆவதைப்பார்த்தாவது சுமோ டாப்பைக்கிழித்து, ஏரோப்ளேனில் ஃபுட்போர்ட் அடித்து, ஆட்டோவைக்கையால் தூக்கியபடி அறிமுகமாகும் மற்ற ஹீரோக்கள் கொஞ்சமாவது திருந்துவார்களா?.

போட்ட காசுக்கு மேல் திரும்பி வந்தால் மீண்டும் இதே கூட்டணியில் படம் எடுப்பாரா கல்லா நிறைய நிதி வைத்திருக்கும் மாறன்?

எந்திரனில் எடுக்கும் காசை கலாநிதி மாறன் மருதநாயகம் தயாரிப்பில் விடுவாரா?

எந்திரனில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? சம்பளமாக இருக்குமா? பர்சன்டேஜாக இருக்குமா?

டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்?

எதிர்பார்த்தபடி கலெக்ஷன் ஆகி இலாபம் வந்தால், சன் டி.வி ஷேர் விலை எவ்வளவு ஏறும்?

காமன் வெல்த் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வி.ஐ.பிக்களுக்கு எந்திரன் படத்தை போட்டுக்காண்பிப்பார்களா?

எந்திரன் படத்தைப்பார்த்து பாராட்டியதற்காக கலைஞர் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்களா? அப்படி வைத்தால் அது சன் டி.வியில் வருமா? கலைஞர் டி.வியில் வருமா?

எல்லா தியேட்டரிலும் எந்திரனே ஓடினால் மற்ற படங்களை பார்க்க விரும்புபவர்கள் எங்கே போவது?

ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?

படம் பார்க்காதவர்களை படம் பார்த்தவர்கள் இன்னுமா (?) எந்திரன் பாக்கலை என்று துக்கம் விசாரிக்கிறார்களே, ஏன்?

ரஜினி அடுத்த படத்துக்கு என்ன செய்வார்? இந்த அளவுக்கு பில்டப் யார் கொடுப்பார்கள்?
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரியா? ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலினா?
----------------------------------------------------------------------------------

ஓக்கே, படித்தாயிற்றா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வருவீர்களே? அல்லது என் மீது கோபப்பட்டாலும் படுவீர்களே? நோ டென்ஞன் பாஸ்.. எந்திரன் மேல் எனக்கொன்னும் கோவம் இல்லை. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனா சும்மா நாமளும் இருக்கோம்கிறதை காட்டிக்கணும் இல்லையா? அதுக்குத்தான்.. ஓக்கேவா? கூல்... (இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. எல்லாத்தையும் கேட்டால் அடிக்க வருவீர்கள். பை பை..)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

வியாழன், 30 செப்டம்பர், 2010

பாபர் மசூதி வழக்கும் எந்திரன் சினிமாவும்

ஒரு வழியாக புலி வருது, புலி வருது கதையாக அயோத்தி, பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கில் இன்று (செப்டம்பர் 30-ம் தேதி) தீர்ப்பு வந்தாயிற்று. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ஏக்கர் நிலத்தை மூன்று துண்டாக கேக் மாதிரி வெட்டி ஆளுக்கொன்றாக எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த உத்தரவைப்பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர்.


சர்ச்சைக்குரிய இரண்டரை ஏக்கர் நிலத்தை மூன்றாக (எப்படி பிரிப்பாங்க?) பிரிக்க வேண்டும், ஆனால் தற்போதைக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும். நிலத்திற்கு முழு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவற்றிற்கு அல்வா தரப்பட்டது.

கூடவே சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் என்றும் நீதிபதிகள் ஒரு பிட்டைப்போட்டிருக்கிறார்களாம். அப்போ ராமாயணம் நடந்தது உண்மைதானா? அணிலுக்குக்கோடு போட்டது அவர்தானா? பாம்பன் (?????) பாலத்தைக்கட்டியது அனுமார்தானா? என்றெல்லாம் என் மனதில் பிறந்த உப கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இதில் இன்னோரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வழக்கம் போல "மூன்று மாதத்திற்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாமாம்". தீர்ப்பின் முழு விவரம் ஐயாயிரம் பக்கங்களுக்கு மேலாம். டைப் செய்யவே ஒரு மாதம் ஆகியிருக்குமே..

சுமார் அறுபது (நோட் தி பாயிண்ட்: ரஜினியின் வயது அறுபது - எப்படி லிங்க் கொடுத்தேன் பாத்தீங்களா?) வருடங்களாக இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்றிருந்த இந்த வழக்கின் இந்தத்தீர்ப்புக்காக நாடே காத்திருந்தது. ஒரு வாரமாக இதோ, இதோ என்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, பந்தோபஸ்து, டாஸ்மாக்கெல்லாம் மூடிட்டாங்களாம், மசூதிங்களுக்கெல்லாம் போலீஸ் போட்டிருக்காங்களாம், இன்போஸிஸ் கம்பெனி லீவாம், இஸ்கூல் எல்லாம் அரை நாள் லீவாம், இன்டர்நெட்டை ஸ்லோ பண்ணிட்டாங்களாம், இந்தியாவுல எல்லார் போனும் ரெக்கார்ட் ஆவுதாம், பல்க் மெஸேஜ் அனுப்பக்கூடாதாம், மசூதி பத்தி மெஸேஜ் அனுப்பினா தானாவே டெலிட் ஆகிடுமாம், எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போயிடுச்சாம், என்றெல்லாம் பரபரப்புக்குத் திரி கிள்ளிப்போட்டிருந்தார்கள்.

இதில் ஹைலைட் (?) என்னவென்றால் இந்தத்தீர்ப்புக்காக அகில உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அகில உலக சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் டமால் டுமீல் ஹிட் எந்திரன் படமே ஒரு நாள் தள்ளி வைத்து ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டியிருந்ததால் ஏதேனும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பாபா மாதிரி படம் பப்படம் ஆகிவிடக் கூடாதே என்று (பயந்து) ஒரு நாள் தள்ளி வெள்ளிக்கிழமையில் ரிலீஸ் ஆகிறது படம். ஒரு நாள் வசூல் போச்சே.


அவ்வளவு ஏன்? செப்டம்பர் 23-ம் தேதியே வெளியாக வேண்டியதாம். சென்ற வாரமே பாபர் மசூதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து தள்ளிப்போனதால் ஒரு வாரம் வீணாய்ப்போச்சு. (எந்திரன் டிக்கெட் புக் பண்ணியாச்சே!!!!!. பெரிய தியேட்டரில் ஐநூறு, ஆயிரத்திற்கெல்லாம் போவதாகச் சொன்னார்கள். எனக்கு சிம்பிளாக நூறு ரூபாய் பிளாட் ரேட்டில் கிடைத்தது. அது சரி, ஊரில் உள்ள சந்து, பொந்து, இண்டு, இடுக்கு, அது தவிர பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே வெளியானால்?) ஒரு வாரம் லேட். ஆனால் அத்தனை தியேட்டர்களிலும் ப்ளாட் ரேட் நூறு ரூபாய் மினிமமாம். அதற்கு மேலே என்றால் நோ ப்ராப்ளமாம்.

என்ன ஒரு அநியாயம்? இந்தியாவில் ஒரு மாபெரும் வசூல் சாதனை படைக்கப்போகும், புதிய புதிய ரெக்கார்டுகளை உருவாக்கப்போகும், சன் பிக்சர்ஸ் ஷேர் விலையை உயர்த்தப்போகும், 1000 கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும், ஹிந்தி பட ரெக்கார்டுகளை தாண்டப்போகும், எந்திரன் (மற்றும் ரோபாட்) படத்திற்கு ஒரு வாரம் தள்ளி வைத்து இப்படி ஒரு மாபெரும் தடையா?

சரி விடுங்கள். வழக்குக்குப்போவோம். நாட்டாமையில் கவுண்டமணி அலுமினியத்தட்டை ஓரே உடையாக உடைத்து சொத்தைப்பிரி என்பது போல், மூணு பீஸாப்பிரிச்சி எடுத்துக்கோங்கப்பா என்று அயோத்தி விவகாரத்தில் சொல்லி விட்டிருக்கிறார்கள். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏதேனும் ஒரு சார்பாகத்தீர்ப்பு வந்து அதனால் பல கலவரங்கள் வருவதற்குப்பதில் இந்தத்தீர்ப்பு பரவாயில்லை. ஓரளவு வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறார்கள், செய்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டன். இந்த இடத்தில் ஒரு சாதாரண ஒரு பொது ஜனமாக “இந்தச்சண்டையில் கடந்த அறுபது வருடங்களாக சம்பந்தமே இல்லாமல் உயிர் துறந்து கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டலாம்” என்பது எங்களின் தாழ்மையான கருத்து. அல்லது “ஒரு பள்ளிக்கூடமோ அல்லது மருத்துவமனையோ” அந்த இடத்தில் கட்ட உத்தரவிட்டிருக்கலாம்.

அல்லது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் காந்தித்தாத்தா. அவருக்கு ஒரு மணி மண்டபம் (!) கட்டலாம். யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? ஒரு ஆலோசனைதான். அவருக்காக இடம் ஒதுக்கினால் இந்தியா முழுக்க யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. எந்தப்பிரச்சினையும் வரப்போவதில்லை. என்னடா ரொம்ப அட்வைஸா எனாதீர்கள். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் பிரதமரே "இந்தத் தீர்ப்பு இறுதித்தீர்ப்பு அல்ல" என்று சொன்ன பிறகு ஒரு சின்ன தைரியம் தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------