ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 டிசம்பர், 2010

கலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா


விகடன் பொக்கிஷம் பகுதியில் தலைவர் சுஜாதா பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்த "ரிசப்ஷன் 2010" என்ற கதையை படிக்க நேர்ந்தது. கே (GAY) மேரேஜ் பற்றிய ஒரு கதை. கிட்டத்தட்ட இன்றைய நிலைக்கு ஒட்டி வந்திருந்தது. ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதாகக் கதை. ஆனால் அது முழுமையாய் நடக்க இன்னும் இருபது வருடங்களேனும் ஆகும்.

"உண்மைக்கு மிக நெருக்கமாய் கதை எழுதுவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது" என்று ஒருமுறை சுஜாதாவே சொல்லியிருந்தார். "அது உடனே உண்மை வாழக்கை வெளியில் நடந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்" என்று சொன்னார். ஒரு தேசியத் தலைவரின் படுகொலை பற்றிய சுஜாதாவின் கதை (பெயர் ஞாபகமில்லை) பிற்காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில் நடந்தேறியது. அவரது விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ள "திமலா" எனும் கதை, திருமலை திருப்பதிக்கு அனுமதி வாங்கி சுவாமி கும்பிடப்போகும் ஒரு ஹைடெக் தம்பதி பற்றிய கதை. அதுவும் இன்றைய காலகட்டத்திற்கு கிட்டத்தட்ட எழுபது சதம் நடந்தேறி விட்டது. திருமலாவுக்குச் செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதி தேவையாகி விட்டது.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு தொடர் வந்த போது குமுதத்திற்கும் சுஜாதாவிற்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை பலரும் அறிவார்கள். அதன் பின்னர் அது பெயர் மாற்றப்பட்டு ரத்தம் ஒரே நிறம் என்று வெளியானதும் சமீபத்தில் உயிர்மையில் தனிப்பதிப்பு கண்டதும் வரலாறு. "ஜில்லு" கதை வந்தால் போச்சு. அது இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் அணு ஆயுதப் போர் பற்றிய கதை. (கிட்டத்தட்ட அவர் வர்ணித்துள்ள கதைக் காட்சிகள் டாம் க்ருஸ் நடிப்பில் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் War of the worlds மற்றும் வில் ஸ்மித்தின் I am legend திரைப்படத்திலும் காட்சிகளாக விரிகின்றன.

"ரிசப்ஷன் 2010" கதைக்கு ஆன்லைனில் அருமையான சில பின்னூட்டங்களும் வந்திருந்தன வாசகர்களிடம் இருந்து. சில சாம்பிள்கள் இதோ............... 1. தீர்க்கதரிசி. என்ன, 2020ல் இதில் உள்ள எல்லாமே நடந்து விடும்(.இயல்பாக) 2. அதுதானே பார்த்தேன் சுஜாதாவை தவிர வேரு யாரால் முடியும் மிக நன்ரு 3. தலைவர் தலைவர் தான்...'gay marriage; பத்தி 10 வருஷம் முன்னாடியே....ஹ்ம்ம் 4. சுஜாதா இதையும் முன்னேயே எழுதிவிட்டாரா.. அபாரம்!

எப்படி?? சுஜாதா சுஜாதா தான் இல்லையா?
------------------------------------------------------------
ஷங்கர் இயக்கத்தில் தயாராகப்போகும் "3 இடியட்ஸ்" தமிழ் ரீ-மேக்கில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறதாம். இந்த கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டிருந்தவர் நமது டாகுடர் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தில் டிவிடி, திருட்டு விசிடி பார்க்கும் அனைவர் வரை தெரிந்த ஒரு ரகசியம். முதலில் விஜய் நடிப்பதாக இருந்து, பிறகு சூர்யா நடித்த 'அயன்’, 'சிங்கம்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சென்ட்டிமென்ட்டில் "3 இடியட்ஸு"ம் ஹிட்தான் என்று இப்போதே குஷியில் இருக்கிறதாம் சூர்யா தரப்பு. அது தவிரவும் தெலுங்கு பதிப்பிலும் மகேஷ் பாபுவுக்குப் பதில் சூர்யாவேதான் இடியட்டாம்.
------------------------------------------------------------

ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செமை மேட்டர் சிக்கியது. ராவணன் படத்தைப் பாருங்களேன். ப்ருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், விக்ரம் காம்பினேஷன் தான் படத்தின் அடிநாதத்தை நகர்த்தும் கதாபாத்திர முடிச்சு. அவர்களது வயதைப்பாருங்களேன். முறையே 28 (ப்ருத்விராஜ்), 37 (ஐஸ்வர்யா ராய்), 46 (விக்ரம் ). கிட்டத்தட்ட இந்த வரிசையில் ஒவ்வொருவருக்கும் ஒன்பது வயது வித்தியாசம். விக்ரமுக்கு காலாகாலத்தில் திருமணம் ஆகியிருந்து சீக்கரமே பையன் பிறந்திருந்தால் அவனுக்கு ப்ருத்விராஜ் வயது ஆகியிருக்கும் இல்ல.......................?
------------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)

வெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் தரை டிக்கெட்டை பத்து ரூபாய் ஆக்கினார் கலைஞர். ஆக படம் பார்க்க பத்து ரூபாய் போதும். ஆனால் நான் அதிக பட்சம் செலவு செய்தது என்று பார்த்தால் "மேட்ரிக்ஸ் ரீலோடட்"-கு 17 ரூபாய் ஃபர்ஸ்ட் கிளாஸ், “கிளாடியேட்டர்” 20 ரூபாய், “மைட்டி ஜோ யங்”-குக்கு 22 ரூபாய் பால்கனி, பிறகு டிக்கெட் விலை ஏறிய பின் “கஸீனோ ராயல்”-கு 30 ரூபாய், “க்வான்டம் ஆஃப் சோலேஸ்” 35 ரூபாய், அப்புறம் சென்னையில் காசு கொடுத்து பார்த்த “போக்கிரி” 40 ரூபாய், ஆபீஸில் தவிர்க்க முடியாமல் டீமாகப்போன “சரோஜா” 85 ரூபாய்.

ஆசைப்பட்டு பார்த்த ஒரே படமான அவதார் 120 ரூபாய் (நூற்றியிருபது ரூபாய் - த்ரீ டி கண்ணாடி உட்பட சத்யம் தியேட்டரில் - அது விதிவிலக்கு). அது தவிர என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு படத்துக்கு நூத்தி ஐந்து ரூபாய் கொடுத்து பார்த்திருக்கிறேன் என்றால் அது எந்திரனுக்குத்தான். அதே போல் முதல் நாளிலேயே பார்த்த ஒரே தமிழ் படமும் இது தான். மத்ததெல்லாம் நிதானமாக ஒரு மாதம் கழித்து பார்த்தாலே போதும். ஆனால் தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு மற்றும் பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே ஓடினால் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்காதா என்ன?

அதுவும் நைட் ஷோ இரண்டு டிக்கெட். எனக்கொன்று. எங்க நைனாவுக்கு ஒன்று. ப்ளஸ் ஒரு முறுக்கு பாக்கெட். இரண்டு பாப்கார்ன். மூன்று ஸ்பிரைட். இரண்டு ஸ்வீட் கார்ன். ஒரு வாட்டர் பாட்டில். (நைனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே கத்தித் தீர்த்ததில் கட்டிப்போன தொண்டையை சரி செய்ய) ஒரு ஸ்ட்ரெப்சில்ஸ். ஆக மொத்தம் எந்திரனுக்காக இந்த மாத குடும்பச்செலவில் கை வைத்தது ரூபாய் முன்னூற்று முப்பத்து இரண்டு. அதுவும் சேலம் என்ற ஊரில் ஒரு சாதாரண ஒதுக்குப்புறமான தியேட்டரில், இதையே சத்யத்தில் பார்த்துத் தொலைத்திருந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் மொய்யாகி இருக்கும். (நான் போயிருக்கவே மாட்டேன். அது வேற விஷயம்..)

அப்புறம் நேற்று எந்திரன் பார்த்து விட்டு இன்றைக்கு வேலைக்குப்போகாமல் எங்க நைனா கட்டடித்ததில் மார்ஜினல் லாஸ் தனி. அதையும் கூட்டிக் கொள்ளுங்கள். இனிமேல் அவரையெல்லாம் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தோன்றினாலும் அந்த மனுஷனுக்கு ரஜினியும், ராமராஜனும் ரொம்பப்பிடிக்கும் என்பதால் மன்னித்து விட்டு விட்டேன். பாட்ஷாவும், கரகாட்டக்காரனும் அவரது ஃபேவரைட். டிவியில் அந்தப்படங்கள் போடும் அன்றைக்கு வேலைக்கு லீவு போட்டு விடுவார்.

சரி. சொந்தக் கதை எதுக்கு? போதும். எந்திரன் படம் பற்றிப்பேசுவோம். பயப்படாதீர்கள். நான் விமர்சனம் எழுதவில்லை. நெட்டில் நோண்டும் பலரும் படம் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். அப்படியும் தெரியாதவர்கள் "எந்திரன்" என கூகுளிட்டோ, தமிழ்மணத்திலோ, இன்ட்லியிலோ கதையைப்படித்து விட்டு வாருங்கள். இரண்டே நாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் "எந்திரன்" பற்றி பதிவு போட்டுள்ளார்கள். நாமளும் எதையாவது போடுவோம் என்று தோன்றியது...

பதிவாகப்போடுவதற்குப் பதில் கேள்வியாகக்கேட்டால்? (போட்ட காசுக்கு நாலு கேள்வியாவது கேட்கணும் இல்லையா?) இந்தக்கேள்விகளை பலரும் கேட்கிறார்கள்.. கேட்காவிட்டாலும் பலர் மனதில் இந்தக் கேள்விகள் உட்கார்ந்திருக்கின்றன.. காப்பி என்று சொல்லாதீர்கள். ரெடி.. விடு ஜூட்.. கதையை படித்துத் தெரிந்து கொண்டு விட்டு இந்தக் கேள்விகளை படியுங்கள்..

இதோ கேள்விகள்...

21-ம் நூற்றாண்டின் இம்மாம் பெரிய அச்சீவ்மெண்டைச் செய்யும் விஞ்ஞானிக்கு இருக்கும் உதவியாளர்கள் இவ்வளவு மொக்கையாக இருப்பார்களா?

டிரெயினில் முப்பது நாற்பது பேரை புரட்டியெடுக்கும் ஒருவரை போலீஸ் தேடவே தேடாதா?

நாடே பரபரக்கும் ஒரு பெரிய வழக்கில் ஒரு ரோபோவின் சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தியாவில் எந்தக் கேஸ் ஒரே நாளில் முடிகிறது?

ரோபோவை டிஸ்மேன்டில் பண்ணிடுங்க - என்று சிம்பிளாகச் சொன்னால் போதுமா? அதை உருவாக்கிய ஃபார்முலா வசீகரனின் மண்டையிலும் ஃபைலிலும் இருக்காதா? அதை என்ன செய்வதாம்?

அழிவு செய்யும் ரோபோவின் ஓனரான விஞ்ஞானியை அரெஸ்ட் செய்யாமல் அவரையே புராஜெக்டுக்கு தலைவராக்கும் மாங்கா போலீஸ் எந்த ஊரில் இருக்கிறது?

ரோபோவை உருவாக்கவே பத்து வருட ஆராய்ச்சி தேவைப்பட்டால், அதற்கு உணர்ச்சிகள் கொடுக்க சும்மா போர்டில் பாடம் நடத்தினால் போதுமா?

சர்வ வல்லமை உள்ள ஒரு ரோபோ தயாரானால் அந்த ஃபார்முலாவைக் கவர சர்வதேசத் தீவிரவாதிகளோ, காங்க்லோமெரேட் கம்பெனிகளோ முயற்சிக்க மாட்டார்களா?

நூற்றுக்கணக்கான போலீஸையும், ராணுவத்தையும், பொது மக்களையும் கொலை செய்யும் ரோபோவை தயாரித்த ஒரு விஞ்ஞானியை மனித உரிமை ஆர்வலர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
ரோபோவைத் துரத்தும் போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா ராய் காருக்குள் இருக்கிறார் என்பதைப்பார்க்காமலே சுடுவார்களா?

ராணுவத்திற்கு கொடுக்க ரோபோவை உருவாக்கும் ஒரு விஞ்ஞானிக்கு அதற்கான கமாண்டு-களை யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சின்ன விஷயம் தெரியாதா?

பத்து வருடம் உழைத்து தயாரித்த ஒரு ரோபோவை "நியூரோ சிப்"பை டெமாலிஷ் செய்யாமல் சும்மா தூக்கி குப்பையில் போடுவாரா ஒரு விஞ்ஞானி?

ரஜினியே இரண்டு அல்லக்கை அரைகுறை விஞ்ஞானிகளை வைத்திருக்கும் போது அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு ரோபோ சப்ளை செய்யும் அளவுக்கு பெரியாளான அவரது விஞ்ஞானி புரபஸர் ஆள் பலம் இல்லாமல் தனியாகச் சுற்றுவாரா?

ஒரு சாதாரண குடிமகனின் பத்து இலட்ச ரூபாய் டீலிங்கில் எல்லாம் தலையிடும் ரெளடிகள், அரசியல் வாதிகள் எல்லாம் இவ்ளோ பெரிய மேட்டர்களில் தலையிடவே மாட்டார்களா?

ரோபோ பற்றியே படம் எடுத்தாலும் கும்பல் கும்பலாகவே ஆட்கள் வரிசையாக நின்று ஆடும் டான்ஸ்களை எப்போது நிறுத்துவார்கள்?

சுஜாதா இருந்திருந்தால் படத்தைப்பார்த்து விட்டு என்ன சொல்லியிருப்பார்?

வில்லனாக ரகுவரன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

----------------------------------------------------------------------------------

சரி போகட்டும். கொஞ்சம் பொது அறிவு கேள்விகள் கேட்கலாமா?...

இது ரஜினி படமா? ஷங்கர் படமா?

இந்தப்படத்தில் அஜீத் அல்லது கமல் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கிளைமாக்ஸ் கதை விவாதத்தில் இராம.நாராயணன் கலந்து கொண்டாரா?

ஒரு சூப்பர் ஸ்டாரே சாதாரணமாக அறிமுகம் ஆவதைப்பார்த்தாவது சுமோ டாப்பைக்கிழித்து, ஏரோப்ளேனில் ஃபுட்போர்ட் அடித்து, ஆட்டோவைக்கையால் தூக்கியபடி அறிமுகமாகும் மற்ற ஹீரோக்கள் கொஞ்சமாவது திருந்துவார்களா?.

போட்ட காசுக்கு மேல் திரும்பி வந்தால் மீண்டும் இதே கூட்டணியில் படம் எடுப்பாரா கல்லா நிறைய நிதி வைத்திருக்கும் மாறன்?

எந்திரனில் எடுக்கும் காசை கலாநிதி மாறன் மருதநாயகம் தயாரிப்பில் விடுவாரா?

எந்திரனில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? சம்பளமாக இருக்குமா? பர்சன்டேஜாக இருக்குமா?

டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்?

எதிர்பார்த்தபடி கலெக்ஷன் ஆகி இலாபம் வந்தால், சன் டி.வி ஷேர் விலை எவ்வளவு ஏறும்?

காமன் வெல்த் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வி.ஐ.பிக்களுக்கு எந்திரன் படத்தை போட்டுக்காண்பிப்பார்களா?

எந்திரன் படத்தைப்பார்த்து பாராட்டியதற்காக கலைஞர் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்களா? அப்படி வைத்தால் அது சன் டி.வியில் வருமா? கலைஞர் டி.வியில் வருமா?

எல்லா தியேட்டரிலும் எந்திரனே ஓடினால் மற்ற படங்களை பார்க்க விரும்புபவர்கள் எங்கே போவது?

ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?

படம் பார்க்காதவர்களை படம் பார்த்தவர்கள் இன்னுமா (?) எந்திரன் பாக்கலை என்று துக்கம் விசாரிக்கிறார்களே, ஏன்?

ரஜினி அடுத்த படத்துக்கு என்ன செய்வார்? இந்த அளவுக்கு பில்டப் யார் கொடுப்பார்கள்?
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரியா? ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலினா?
----------------------------------------------------------------------------------

ஓக்கே, படித்தாயிற்றா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வருவீர்களே? அல்லது என் மீது கோபப்பட்டாலும் படுவீர்களே? நோ டென்ஞன் பாஸ்.. எந்திரன் மேல் எனக்கொன்னும் கோவம் இல்லை. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனா சும்மா நாமளும் இருக்கோம்கிறதை காட்டிக்கணும் இல்லையா? அதுக்குத்தான்.. ஓக்கேவா? கூல்... (இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. எல்லாத்தையும் கேட்டால் அடிக்க வருவீர்கள். பை பை..)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------