வியாழன், 18 நவம்பர், 2021

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை

 வீட்டில் பெரியவர்கள், வயதானவர்கள் யாரும் இல்லாததாலோ என்னவோ, இந்த சனிக்கிழமை எண்ணெய் தேய்க்குறது, 6 மணிக்கு மேல வீடு கூட்டக் கூடாது, அமாவாசை தர்ப்பணம், காக்கா சோறு, சாமி பாட்டு போடுறது, மந்திரம் சொல்றது, சாமிக்கு நேர்ந்துக்குறது, காசு முடிஞ்சு வைக்கிறது, வாரம் தவறாமல் கோவில் போவது, சாம்பிராணி போடுறது, கண்ணு படுறது, கண் திருஷ்டி, ஞாயிற்றுக்கிழமை சுத்திப்போடுறது, ராகுகாலம், எமகண்டம் பார்க்கறது, தாயத்து கட்டுறது, அகால நேரத்தில் வெளியே போகக்கூடாதது, மசூதில போய் பாடம் போடுறது, போன்ற எந்த டிரெடிஷனல் விஷயங்களும், பழம் நம்பிக்கைகளும், வீட்டில் விவாதிக்கப்படுவதும் இல்லை. கடைப்பிடிக்கப் படுவதும் இல்லை. 

இவை எல்லாம் சரியா, தவறா என்று விவாதிக்காமல், அதைப் பற்றியே யோசிக்காமல் இரண்டு, படித்த, இந்தத் தலைமுறையினர் (சரி...... கொஞ்சம் வருஷம் முந்தைய தலைமுறை) லாஜிக் பார்த்து கேஷூவலாக நடத்தும் குடும்பம் எங்களுடையது. அதிலும் இந்த கண் திருஷ்டி விஷயமெல்லாம் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தோம்.

ஆனால் சில சமயம், சில பேர், சில விஷ வித்துக்கள் ஒரு விழாவில் எங்காவது சந்தித்தால், "நாம நல்லா இருக்கோம்" என்று சொல்லி விடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். பழைய ஸ்டைலில் "எங்கங்க? கையி வலிக்கிது, காலு கொடையுது, கடன் இருக்குது, கஷ்டப் படுறோம்" என்று சொல்லக் கேட்டால் உள்ளூர சந்தோஷப்படுகிறார்கள். "பாவம் கஷ்டப்படுறான்" என்று இன்னும் நாலு பேரிடம் போய்ச் சொல்வதிலும் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். "நல்லா இருக்கேன்" என்றால் போதும் (பவர் ஆஃப் பாஸிடிவ் திங்க்கிங் தியரிப்படி எவ்வளவுக்கெவ்வளவு நாம் நல்லா இருக்கோம்னு நினைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம் வாழ்க்கை நன்றாக அமையும்) அவ்வளவு பொறாமை பொங்கி வழிய, ஒரு பெருமூச்சை இழுத்து விடுகிறார்கள் (சோலி முடிஞ்சுது) "என்னமோப்பா? அந்த லோன் முடிச்சிட்டியா? இந்த லோன் முடிச்சிட்டியா? அங்க வருமானம் எவ்ளோ வருது? சம்பளம் எவ்ளோ வருது?" என்று ஒரு என்கொயரி. (இதையே கேஷூவலாகவும், அன்புடனும் கேட்பவர்கள் வேறு கேட்டகிரி, அவர்களைப் பற்றி இப்போது பேச்சில்லை). 

சமீபத்தில் இப்படி ஒரு சம்பவம். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு அம்மணி நல்லா பொங்கிட்டுப் போயிருச்சி. கடந்த 15 நாளாக அது சம்பந்தப் பட்ட விஷயத்தில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். ஃபினான்ஷியலாகவும், வேறு சில பிரச்சினைகளுமாக சரியான குடைச்சலாக இருக்கிறது. எப்படா அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வருவோம் என்று இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது தான் இந்தக் கண் திருஷ்டி போன்ற நெகடிவ் விஷயங்களெல்லாம் இருக்குதப்பா, இனிமே இப்படிப்பட்ட ஆட்கள் கண்ணுல படாம இருந்துக்கணும்னு தோணுது. 

மறுபடியும் முதல் பாராவைப் படிங்க. இனிமே, அப்பாம்மா இருந்தப்ப என்னென்ன பழக்கங்கள் செய்வாங்களோ அதையெல்லாம் ஒன்னொன்னா கொண்டு வந்துரலாமானு தோணுது. "முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை".

19 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக