சனி, 23 ஏப்ரல், 2011

தங்கம்.. தங்கம்.. தங்கம் வாங்கலியோ தங்கம்.. இல்லாட்டி வெள்ளி...?

டி.வியில வர்ற ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பாத்தீங்களா? ஆக்சுவலி நெம்ப நாளாவே அது ஜோஸ் ஆலுக்காஸூக்கு விளம்பரமா? இல்ல விஜய்க்கு விளம்பரமான்னு எனக்கு ஒரு டவுட்டு.. (எங்க ஊர்ல எங்க வீட்டுகிட்டயே ஒரு பிராஞ்சு வந்திருக்கே....எவ்ளோ பெருசு.. யப்பாடி... அதுக்கு எதிர்ல ஒரு இட்லிகடை இருக்கு, நமக்கு நைட்டு டிபன் அங்கதான். மூணு இட்டிலி பத்து ரூவா? விலையெல்லாம் ஏறிப்போச்சு). சொந்தம்ங்கறது தங்கம் மாதிரி.. எவ்வளவு இருக்கோ அவ்வளவு சந்தோசம்... சரிதான் சாமி... உங்களுக்கு ஓக்கே.. எங்க நிலைமை? நீங்க ஒரு படத்துல (ஏன் ஒரு விளம்பரத்துல) சம்பாதிக்கிற காசை நாங்க பார்க்க எத்தனை வருசமாகும்..?

ஒரு படத்துக்கு (எவ்வளவு வாங்குறீங்கன்னு தெளிவா தெரியலை, ஆனா) நாலு கோடி ரூபாய்ன்னு வச்சா கூட, மாசம் பத்தாயிரம் ரூவா சம்பளம் வாங்குற ஒருத்தன் அந்த நாலு கோடியை பார்க்க மொத்தமா எத்தனை வருசம் ஆகும்? (கால்குலேட்டர் எடுத்து கணக்கு போட்டுப்பாருங்கப்பா) ம்ம்ம்..... 333 வருசம் ஆகும்.. யம்மாடியோவ்.. அப்புறம் வருசத்துக்கு எட்டு பர்சன்ட் பேங்க் வட்டி கணக்குப்போட்டா எவ்ளோ வரும்? இது ஒரு பட கணக்கு.. வருசத்துக்கு ரெண்டு மூணு படம் நடிக்கிறீங்க.. ஒரு நாலஞ்சு வருசம் பீக்ல இருக்கீங்கன்னு வச்சா கூட நல்லா தேறும் போல இருக்கு.. ம்.. சொக்கா.. எனக்கில்ல.. எனக்கில்ல.. (டிவிடி வாங்கி படம் பாத்தா மட்டும் தப்புங்கிறாய்ங்க)

ஓக்கே.. ஓக்கே.. சீரியஸ்..

நான்கு மாதங்களுக்கு முன்பு என் டீம் பையன் ஒருவருக்கு ஒரு அரை பவுன் கோல்டு காயின் வாங்க ஐடியா கொடுத்து காயினும் வாங்கிக்கொடுத்தேன் (அவர் காசில் தான்).. 7350 ரூபாய். ரொம்பநாள் கழித்து போன வாரம் மற்றொரு அரை பவுன் கோல்டு காயின் வாங்கினார் அதே ஆள்... எவ்ளோ தெரியுமா? (22 காரட் தான் என்பதை நிரூபிக்கும் ஹால்மார்க் லோகோ அச்சடிக்கத் தேவையான நூறு ரூபாயையும் சேர்த்து) 8085 ரூபாய்.. எவ்வளவு விலை ஏறியிருக்கிறது பாருங்கள்... இன்றைக்கு ஒரு கிராம் சுமார் 2020 ரூபாய்.. மக்களே... இது வெறும் காயினுக்கான விலை மட்டுமே.. இதையே நீங்கள் நகையாக செய்வதாக இருந்தால் ஒரு கிராமுக்கு சுமார் 250 முதல் 300 ரூபாய் செய்கூலியாம் (டிசைனை பொறுத்து). ஆக ஒவ்வொரு பவுனுக்கும் சுமார் 2400 ரூபாய் வரை சேர்த்துக்கொள்ளுங்கள். அது போக சேதாரம் தனி..

ஆக ஒரு சாமானியன் தன் வீட்டுப் பெண்ணுக்கு ஒரு பத்து பவுனாவது போட்டு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம் என்று ஆசைப்பட்டால் (கல்யாண செலவுகளையும் சேர்த்து) குறைந்தது மூன்று இலட்சம் ரூபாயாவது ஆகும்.. முடியுமா? ஏற்கனவே வீட்டில் பழைய நகைகளாக இருந்தால் உருக்கி புதிதாக செய்து கொள்ளலாம். ஆனால் இல்லாதவன் என்ன செய்வான்?

தற்போது பஸ்ஸில் போகும் போதெல்லாம் கவனிக்கிறேன் புறநகர் மற்றும் கிராமப்புறப் பெண்களை. காதில் எண்ணெய் ஏறிய பழைய ஒரு ஜோடி கம்மல் தவிர எவரிடமும் தங்க நகைக்கான அறிகுறியே இல்லை. கழுத்திலிருப்பது அப்பட்டமான கவரிங்.. கைகளில் கலர் கலராய் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்கள். இதில் எப்படி கல்யாணத்திற்கு தங்கம் சேர்க்கிறார்களோ? (சமீபத்தில் கூட தெரிந்தவர் வீட்டுக் திருமணம் ஒன்று.. பத்து என்று ஆரம்பித்த பட்ஜெட் இந்தப் பிரச்சனைகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி பனிரெண்டரை, பதிமூன்று என ஆகி விட்டதாக சொன்னார்கள்..)

அவ்வளவு ஏன்? 2007 மே-ல் பப்பி நிச்சயதார்த்தத்தின் போது ஒரு பவுன் 8000 ரூபாய்.. மூன்றே மாதத்தில் கல்யாணத்தின் போது ஜூலை மாதம் அதே ஒரு பவுன் விலை 10000 ரூபாய்... 25 பர்சன்ட் எகிறி விட்டது. கல்யாண செலவு என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எதிர்பார்க்கவில்லை.. ஆனால் பரவாயில்லை. எங்கோ எப்படியோ உருட்டி புரட்டி ஒருவாறு சமாளித்தாயிற்று.. இப்போது அதே தங்கத்தின் விலை ஒரு பவுன் 16000 ரூபாய். வாங்கி வைக்கலாம் என்று நினைத்தால் கூட முடியாது.. யோசித்துப்பாருங்கள். மூன்றரை வருடத்தில் நூறு சதவீதம். அதாவது ஒரு இலட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் அது இப்போது இரண்டு இலட்ச ரூபாய்.. வேறெந்தப் பொருள் இவ்வளவு விலையேறுகிறது? (ரியல் எஸ்டேட். ஆனால் அதற்கு இலட்சங்களில் பணம் தேவை - சாமானியர்களால் முடியாது)

2006 துவக்கத்தில் ராசிபுரத்தில் வேலையில் இருக்கும் போது, என்னோடு வேலை செய்த டீச்சரிடம், மாதா மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கி வையுங்கள், உங்கள் பெண் ஆறாம் வகுப்பு படிக்கிறாள் அல்லவா? உபயோகப்படும் என்றேன். எங்க சார்? வாங்குற 3000 ரூபாய் சம்பளத்துல 750 ரூபாய் (அப்போதைய ஒரு கிராம் விலை) தங்கம் வாங்கிட்டா எப்படி? கொஞ்சம் விலை குறையட்டும் என்றார்.. சரி என்று விட்டு விட்டேன். எனக்கும் ஒரு புத்தி கெட்ட மனுஷன் கிராம் 450 ரூபாய் இருக்கும் போது அட்வைஸ் செய்தார். மண்டையில் ஏறுமா நமக்கு? நானும் வாங்கவில்லை... போன மாதம் போன் செய்திருந்தார் அதே டீச்சர். அவர் பெண் இப்போது ப்ளஸ் டூ போகப்போகிறாள். தங்கம் ஒரு கிராம் 2020-ஐத் தாண்டியிருக்கிறது.

அதை விடுங்கள்.. வெள்ளி? அதற்கு மேல் அநியாயம்.. போன வாரம் தம்பிக்குட்டி சர்வேஷ்-க்கு பெயர் வைக்க நாமகரணம் வேலையாக அலைந்து கொண்டிருந்த போது சில்வர் விலை போர்டு ரேட் கிராம் ஒன்றுக்கு 64.50 என்று காண்பித்துக்கொண்டிருந்தது. சரி நம்மகிட்ட இருக்கிற சிறுசேமிப்பு காசுக்கு தங்கம்லாம் வாங்க முடியாது என்று பாவாவிடம் ஒரு ஐம்பது கிராம் வெள்ளிக்காசு வாங்கி வைக்கலாமா? எங்கே வாங்கலாம்? என்றேன். ஃபங்க்ஷன் வேலை இருக்கிறது யோசித்து இரண்டு நாளில் சொல்கிறேன் என்றார்.. இரண்டு நாளில் விலை 67.. அதற்கப்புறம் முந்தாநாள் அவர் அக்கவுண்டுக்கு ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யும் போது 68.50. நேற்று குட் பிரைடே ஆதலால் அந்த அமவுண்ட் இன்றைக்கு தான் அவர் அக்கவுண்டில் கிரெடிட்டே ஆனது..

இன்றைக்கு வெள்ளியின் விலை, அதிகமில்லை ஜென்டில்மேன் கிராம் ரூபாய் 70.00 மட்டுமே.. நாலு நாள் முன்னாடி வாங்கியிருந்தால் இன்றைக்கு விலை வித்தியாசம் 275 ரூபாய் 50 கிராமுக்கு.. ம்ஹூம்.. ஒரு 3500 ரூபாய்க்கு சேமிப்பு செய்ய இந்தப்பாடு.. நாமள்லாம் எங்க போய் வெள்ளி, தங்கம், வண்டி, வாகனம், வீடு, வாசல், நிலம், நீச்சு இதெல்லாம் வாங்கி செட்டில் ஆகறது.. போங்கப்பா... யப்போவ்... அந்த ரிமோட்டை எடு டி.வி பாக்கலாம்.. விஜய் படம் இல்லாட்டி ரஜினி படம் எதுலயாவது போட்டிருக்கானா பாரு...

--------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------

6 கருத்துகள்:

  1. என்னமோ போங்க சார்... என்னென்னமோ சொல்றீங்க... கொஞ்சம் பர்சனல் கலந்து சொல்லியிருக்கீங்க... என்னதான் செய்ய சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  2. nalla thunguveenga madiyila entha kanamum ille
    enakkulla theriyum ithoda avasthai

    பதிலளிநீக்கு
  3. // நண்பன் சொன்னது…
    nalla thunguveenga madiyila entha kanamum ille //

    மடியில கனம் இல்ல.. நல்லா தூங்குவீங்களா??? அதெல்லாம் ரஜினி படத்துல வர்ற டயலாக்.. அவர் டயலாக் பேசிட்டு நல்லா சம்பாதிச்சுகிட்டு தான் இருக்காரு... எனக்குதான் ஃபியூச்சரை நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது..

    // enakkulla theriyum ithoda avasthai //

    இதுதான் புரியலை.. என்ன பாஸ் அவஸ்தை? எங்கயாவது மாட்டிகிட்டீங்களா? இல்லை, நிறையா சேர்த்து வச்சிருக்கீங்களா? இருந்தா எனக்கு கொஞ்சம் கொடுங்க...

    பதிலளிநீக்கு
  4. ஹும்... எல்லோரும் தங்கத்தின் மீது ஓவரா ஆசைபடறதால தான் (அதுவும் நம் இந்திய மக்கள் முதலிடம்) இப்படி விலை ஏற்றம்..
    என் தோழிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேளை அது.... மாப்பிள்ளை வீட்டாரின் வேண்டுகோள் ( ஒருவகையில் டீசன்ட் பிச்சை என்று கூட சொல்லலாம்) எங்களுக்கு கார்,நிலம் மற்றும் பாத்திர பண்டங்கள் இவை ஏதும் வேண்டாம் (ஏற்கனவே பேசி வைத்தது),அதற்கு பதிலாக நகைகள் 15 பவுன் போடுங்கள் என்க் கேட்டுக் கொண்டனர்..
    எஸ்காவின் படைப்பு நீண்ட நாட்களுக்கு பின்,என் தோழியை நினைவுபடுத்தியது..
    நன்றி எஸ்கா.. தங்கள் எழுதுக்கள் நகைச்சுவை உணர்வு மட்டுமின்றி,விழிப்புணர்வையும் தருகின்றன..

    பதிலளிநீக்கு
  5. பெண் வீட்டார்க்கு நல்ல அட்வைஸ் பதிவு..!!மறைமுகமா பெண்வீட்டுக்கு நீ எதுவும் மெஸெஜ் குடுக்கலியே..?! :)

    பதிலளிநீக்கு