சனி, 16 பிப்ரவரி, 2019

சொல்வது ஒன்று செய்வது வேறு.

15 பிப்ரவரி 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

டிஸ்கிளெய்மர் - என் நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது அனைவரையும் தாக்கும் பொதுப் பதிவு அல்ல. இது போன்ற அலங்கார வாழ்க்கை வாழ்பவர்களை மட்டுமே.

சமீபத்தில் ஒரு பிரபலரின் பட்டிமன்ற பேச்சு ஒன்றின் சிறு பகுதியைக் கேட்க நேர்ந்தது. (அவரது தனிப்பட்ட ஆட்டிட்யூட் பற்றி, வேறு ஒன்று கேள்விப் பட்டேன். அது கிடக்கட்டும்) அவர் கேரளாவில் ஒரு ஸ்டேஷனில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்காக ஒரு சிறு அறை ஒன்றைப் பார்த்ததைப் பற்றி "மனிதநேயம், ஆஹா, ஊஹூ" என்று வியந்தோதிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டிலும் கட்டிவைத்திருக்கும் "தாய்ப்பாலூட்டும் அறை"கள் படுவதே இல்லை போலும்.

பேச்சை முடிக்கும் முன்னாவது அதைப் பற்றி ஒருவார்த்தையாவது பேசுவார் என்று பார்த்தேன். இல்லை. அதுசரி, தெரிந்திருந்தால் தானே வரும்? அரசுப் பேருந்தில் பயணித்தால் தானே இங்குள்ள நிஜம் தெரியும். வால்வோ, ஏஸி ஸ்லீப்பர் தனியார் பேர, செகண்ட் ஏஸி டிரெயின் கோச், முடிந்தால் எகனாமிக் க்ளாஸ் விமானப் பயணம் என்று கேட்டு வாங்கிப் பயணிக்கும் "பிரபல" பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு தமிழக அரசு பஸ் நிலையங்களில் கட்டி வைத்திருக்கும் "தாய்மார்கள் அறை" பற்றி எங்கே தெரியும்?

தன் தேவைகள், தன் எதிர்கால வாய்ப்புகளுக்காக எதைச் "செய்தால்", எதைப் "படித்தால்", எவரைக் "கவனித்தால்" போதும் என்பது மட்டுமே நான் பார்த்த பலரின் பாதை. நன்றாக வாயில் வடை சுடுவார்கள். தன்னை அலங்கரித்துக் கொள்வார்கள். ஆண், பெண் பேதமில்லை. தான் பேசுவதை நான்கு பேர் நம்ப வேண்டும். அவர்கள் தான் வெகுவேகமாக பிரபல்யத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறி மேலேறிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். தரையில் கால் வைத்து நிஜம் பேசும் நாம் தரையிலேயே நின்று கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கிறது. மேடைக்கு ஒரு பேச்சு, நிஜ வாழ்க்கைக்கு ஒரு பேச்சு என்று வாழ்பவர்கள் தானே பலர்.

நியூஸ் பேப்பர் படிப்பதை விட, மேடைப்பேச்சுக்கு ஆகும் என்று கம்பராமாயணத்தை வாங்கிப் புரியாததையும் நெட்டுரு போடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு ஒரு "யூஸ்லெஸ் சோடாபுட்டி ஃபெலோ" ஒருத்தனைச் சந்தித்தேன். என்னமோ மார்ஸ் கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவன் போல், நிஜவாழ்க்கை மக்களைப் பற்றி எதுவுமே அறியாமல் லூஸூ மாதிரியே எல்லாவற்றும் தர்க்கம் செய்து கொண்டிருந்தான். சரி, என்ன செய்கிறீர்கள் என்றால் "பட்டிமன்றப் பேச்சாளர், கம்ப இராமாயணச் சொற்பொழிவாளர்" என்றான். நம்பர் கேட்டான். தரவில்லை. நல்லாயிரு, என்னை விட்ரு என விலகி விட்டேன்.

மேடையில் வாய் கிழிய அன்பு, காதல், பாசம், நட்பு, உதவி, மனித நேயம், சேவை பற்றி அலங்காரமாக வார்த்தைகள் கோர்த்துப் பேசும் பலரும் நிஜ வாழ்க்கையில் அதற்கு எக்ஸ்ட்ரீம் ஆப்போஸிட் ஆக இருக்கிறார்கள். மேலே சேவை, மனித நேயம் பற்றிப் பேசிவிட்டு கீழே தன் உதவியாளரை சிறு விஷயத்திற்காக அடிப்பது. மேலே கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் பற்றிப் பேசிவிட்டு கீழே, இவனுங்கள்லாம் வேஸ்ட்டு, தறுதலைப் பசங்க என்று கமெண்ட். மேலே நட்பு பற்றிப் பேசிவிட்டு, கீழே வந்து, கூடப் பேசுபவர்கள் வாய்ப்பைப் பறிப்பது, குழி பறிப்பது...... இதர....

பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் என்று திராவிடக் கட்சியினரைப் பற்றிச் சொல்வார்கள். அதே திராவிடக் கட்சிகளிலும், மற்ற கட்சிகளிலும், சமீபமாக மேடையில் பேசத் தெரியாமல் உளறிக் கொட்டி, தம் கட்சியின் பிம்பத்தைச் சிதைத்துக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கிறோம். "பேச்சு" மிக வலிமையான ஆயுதம். ஆனால் அதைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பதைத்தான் தாங்க முடியவில்லை. அலங்காரப் பேச்சுகளை தலையாட்டி நம்பும் ஆட்டு மந்தைக் கூட்டமாக நம் மக்கள் இருப்பது தான் வருத்தமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக