ஞாயிறு, 12 மார்ச், 2017

காங் - தி ஸ்கல் ஐலண்ட்.

பழைய பியர். புதிய பேக்கிங். நிறைய ஃப்ளேவர்களுடன்.



ஸ்பாய்லர் அலர்ட் - ஸ்பாய்லரா? - ஹி. ஹி.. ஹாலிவுட் படங்கள் கதைக்காகப் பார்க்கப்படுகின்றன என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அவை விஷூவல்ஸூக்காகவும் இன்ன பிற வஸ்துக்களுக்காகவும் பார்க்கப் படுகின்றன என்பதால் கதையைச் சொல்வதில் யாதொரு குற்றமுமில்லை என்று நம்புகிறேன்.

கதை? 
சிம்பிள் தான். இதுவரை வரைபடத்திலேயே இல்லாத ஒரு தீவான "ஸ்கல் ஐலண்ட்" ஐ அமேரிக்காவின் சாட்டிலைட் ஒன்று கண்டுபிடிக்க, அப்படி ஒன்று உள்ளது என நெடுநாட்களாக நம்பும் விஞ்ஞானி ஒருவர், போட்டி நாடான ரஷ்யா அதைக் கண்டுபிடிக்கும் முன் நாம் போய் இறங்க வேண்டும் எனப் போராடி அனுமதி வாங்கி, ஒரு ராணுவப் படை, விஞ்ஞானிகள், வழிகாட்டி, போட்டோகிராபர், ஹெலிகாப்டர்கள், நிறைய எக்ஸ்ப்ளோஸிவ்கள் சகிதம் போய் இறங்குகிறார். கதை 1973 ல் நடக்கிறது மக்களே. 

ஆராய்ச்சி செய்கிறேன் என்ற பெயரில் தீவினில் நுழைந்த உடனேயே குண்டுகளைப் போட்டதால் வெறியாகித் தாக்கும் தீவு வாசியான ஒரு மிகப்பெரிய விலங்கு, அதான் "காங்" கிடம் தோற்று, ஹெலிகாப்டர்களையும், படைவீரர்களையும் இழந்து, மீதமுள்ளோர் தீவின் வடக்குப் பகுதிக்கு இரண்டு டீமாகப் பிரிந்து செல்கையில் மற்றும் பல வித்தியாசமான விலங்குகள், பூச்சிகள், பல்லிகளால் பல பேர் இறக்க, 28 ஆண்டுகளுக்கு முன் 1944 உலகப் போரின் போது அந்தத் தீவில் விழுந்து உயிர் தப்பி ஆதிவாசிகளுடன் வாழ்ந்து வரும் அமெரிக்க விமானியைச் சந்திக்கிறார்கள். இவர்களுக்காக அவர் விமான உதிரிகளால் ஆன ஒரு போட் - ஐ உருவாக்கி உதவுகிறார். இரண்டு டீம்களும் முழுதாகத் தப்பித்தார்களா? வீம்பு பேசும் ஆர்மி கர்னலுக்கும், "காங்" கிற்கும் நடக்கும் போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதை வெள்ளித்திரையில் அல்லது - அமேசான் ப்ரைமில் காண்க.

முழு ஸ்பாய்லர்களும், பிற விபரக் குறிப்புகளும் - 
சுமார் 15 - 20 வருடங்களுக்கு முன் "காட்ஸில்லா வெர்சஸ் தி கிங் மான்ஸ்டர்" என்றொரு படத்தை சேலம் பி.என்.கே தியேட்டரில் பார்த்தேன். (இப்போது அந்த தியேட்டரே இல்லை) அது ஒரு ஜப்பானியப் படம். "மான்ஸ்டர்" படங்களைப் பற்றி எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது அதில் தான். பின்னாளில் "தி பஸிஃபிக் ரிம்" போன்ற படங்கள் வந்த போது ஜப்பானிய கைஜூ மிருகங்கள் பற்றி ஒரு தௌிவான பார்வை கிடைத்தது. ஆனால் 40 அ 60 மாடி உயர மிருகங்கள், அவற்றின் வாயில் இருந்து வரும் லேசர் வீச்சு, என "இது ஏன் இப்படி இருக்கு?" என லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. ஏன்னா? "அஜூக்கு இன்னா அஜூக்கு தான். குமுக்கு இன்னா குமுக்கு தான்" என்று இருந்தது படம். ஆனால் வருடங்கள் செல்லச்செல்ல, காலம் மாற, மாற எல்லாவற்றையும் லாஜிக்கையும், ரியாலிட்டிக்கு அருகிலும் எதிர்பார்க்கும் நமக்கு, ஆயிரம் கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியாது.

ரியாலிட்டிக்கு அருகில், நோலன் ரீ-பூட் செய்த பேட்மேன் சீரிஸ் ட்ரிலாஜி படங்களைப் பார்த்து விட்டுப் பின்னாளில் "பேட்மேன் வெ சூப்பர்மேன்" மின் டமால் டுமீல்களைப் பார்த்தபோது "என்னடா இது?" என்று தோன்றியது. ஆனால் இது போன்ற திரைப்படங்களுக்கு காமிக்ஸ்கள், கார்ட்டூன்கள் என (பேட்மேன், சூப்பர்மேன், கைஜூ, மான்ஸ்டர், காட்ஸில்லா, கிங் காங் என) ஒரு பரந்த பின்புலம் இருப்பது புரிந்தால், இவை உறுத்தலாகத் தோன்றாது. உதாரணமாக நேரடியாக சிங்கம் 3 பார்க்கும் ஒருவரை விட, சிங்கம் மூன்று பாகங்களையும் வரிசையாகப் பார்க்கும் ஒருத்தருக்குக்கிடைக்கும் புரிதல் வேறு அல்லவா? 

இதுவரை கிங் காங் படங்களைப் பார்க்காத புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு "ஸ்கல் ஐலண்ட்" ஒரு "வாவ்" அனுபவம். ஆனால் நீங்கள் குறைந்தது இரண்டு, மூன்று கிங் காங் படங்களையேனும் அட்லீஸ்ட் ஒன்றேனும் பார்த்திருக்கும் பட்சத்தில், படத்தில் வரும் எல்லாவற்றையும் ஒப்பிடத் துவங்குவீர்கள் - "காங்" கின் உருவம், காடு, நல்ல அல்லது கெட்ட ஆதிவாசிகள், ஹீரோயின் (பலி? or no), மற்ற காட்டு விலங்குகள், புதிய பூச்சிகள், "காங்" Vs மனிதர்களுக்கிடையேயான சண்டை, "காங்" ஊருக்குள் வருவது, வராமலே இருப்பது என. நீங்கள் 70 கள், 80 களில் வெளியான "கிங் காங்" படங்களைப் பார்த்திருந்தாலும் சரி, 2005ல் வெளிவந்த பீட்டர் ஜாக்சனின் ரீ பூட் "கிங் காங்" பார்த்திருந்தாலும் சரி, இந்தப் படத்தில் நிறைய மாற்றங்கள் உங்கள் கண்ணுக்குப் புலப்படும். அவை பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பது மட்டும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்து.

அதில் மிக முக்கியமான ஒன்று, இந்தப் பட கிளைமாக்ஸில் கிங் காங் சாகவில்லை. சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிப் போய் விடுகிறது. காரணம்? பின்னால் சொல்கிறேன். மேலும், "காங்" வில்லன் அல்ல. ஹீரோ. மேலும் எப்போதும் வருவது போல இந்த முறை கிங் காங் நகரத்திற்கு வந்து அதகளம் செய்வதில்லை. காட்டிலேயே படம் முடிகிறது. மேலும் காங் - கிற்கு ஏகப்பட்ட ஹீரோ பில்டப். சாமுயேல் எல்.ஜாக்சன் தான் கிட்டத்தட்ட காங் - கின் முகஜாடையில் வில்லன் போல இருக்கிறார். என் ஆட்களைக் கொன்ற காங் - கைக் கொல்லாமல் விடமாட்டேன் என நம்மைக் கடுப்பேற்றுகிறார். சும்மா இருந்த தீவுக்குள் வீம்பாகப் போய் குண்டுகளைப் போட்டு விட்டு காங் வந்து எதிர்த்து அழிக்கிறதே என்றால்? தியேட்டரிலேயே திட்டுகிறார்கள். இது போன்ற வெளிப்படையான உறுத்தல்கள் படத்தில் உண்டு. கொஞ்சம் கவனித்திருக்கலாம். 

டைனோசர்களையெல்லாம் கொண்டு வந்து 2005 கிங் காங் கில் நுழைத்து காமெடி செய்த பீட்டர் ஜாக்சனுக்கு சவால் விடும் விதமாக ராட்சத ஸ்பைடர், ராட்சத ஆக்டோபஸ், "ஸ்கெர் பஃபேல்லாே" எனும் ராட்சத எருமை,  மரத்தாலான வெட்டுக்கிளி என்றெல்லாம் உருவங்களை உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள். அதனால் கதையோட்டத்தில் பல கதாபாத்திரங்கள் இறக்கிறார்கள். "காங் இல்லாவிட்டால் ராட்சதப் பல்லிகளிடம் (ஆம், தமிழில் தான் பார்த்துத் தொலைத்தேன்) இருந்து இந்த ஆதிவாசி கிராமத்தை யாரும் காப்பாற்ற முடியாது" என்று வசனத்திலேயே இந்தப் படத்தின் ஹீரோ "காங்" தான் என்ற மெஸேஜ் அழுத்தமாகச் சொல்லப் படுகிறது.

"காங்" ஹீரோ ஆதலால், பின்னங்கால்கள் இல்லாத "pit lizard" என்ற பல்லி போன்ற உயிரினத்தை 1933 ன் "கிங்காங்" ஒரிஜினல் படத்தில் இருந்து எடுத்து இதில் வில்லன் ஆக்கியிருக்கிறார்கள். Ramarak என்றும் அழைக்கப்படும் அந்த "pit lizard" க்கு "skull crawlers" என்று பெயர் மாற்றி, 33 க்குப் பின்னால் வந்த பல படங்களின் உயிரினங்களை ரெஃபரன்ஸ் எடுத்து இன்றைய காலகட்டத்திற்கேற்ப மெருகேற்றியிருக்கிறார்கள். ரெகுலராகப் படம் பார்க்கும் உங்களுக்கு வேறு பட அனிமல்களின் உருவ அமைப்புகள் நினைவுக்கு வரலாம். "ஸ்பிரைட்டட் அவே (இந்தப்படம் என்னிடம் இருக்கிறது, ஒரு அமானுஷ்ய லோன்லி ஃபீல் தரும், என்னமோ செய்யுதுல - என்பது போன்ற படம்) போகிமான் போன்றவற்றில் இருந்து ரெஃபரன்ஸ் எடுத்திருப்பதாகவும் காமிக் கான் ஃபெஸ்டிவல் - ன் போது பேட்டியில் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கிங் காங்கின் உருவத்திலும் நிறைய மாற்றங்கள். அவை பீட்டர் ஜாக்சனின் APE போன்ற உருவாக்கத்தில் இருந்து முழுக்க மாறுபட்டு பழைய காங் படங்களோடு ஒத்துப் போகின்றன. காரணம்? இருக்கிறது. (காமிக்ஸ்கள், பொம்மைகள், ஆர்ட் விஷயங்களுக்கும், மார்க்கெட்டிங்குகளுக்கும் உபயோகப் படும் வகையில்) ஒரு பள்ளிச் சிறுவன் கூட வரையும் வகையில் காங்கின் உருவம் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்று படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதனால் நிமிர்ந்த நிலையில் இரண்டு கால்களில் மனிதன் போல நிதானமாக நடந்து போகும் பழைய ஸ்டைல் காங் - ஐ இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.

அது மட்டும் அல்ல. கடந்த 2014 ல் வெளியான "காட்ஸில்லா ரீபூட்" நினைவிருக்கிறதா? 1997 ல் ஹாலிவுட் காட்ஸில்லாவுக்கு டைனோசர் ஸ்டைலில் "ரோலண்ட் எம்மரிக்" கொடுத்த புது உருவமும் பழையபடி மாற்றப்பட்டு, மீண்டும் ஜப்பானிய மான்ஸ்டர் காட்ஸில்லாவின் உருவம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் காட்ஸில்லா வும் சாவதில்லை. அது மனிதர்களுக்கு வில்லனும் அல்ல, ஹீரோ. அதன் வில்லன் "ம்யூடோ" என்ற உயிரி. ம்யூடோவுடன் போராடி அழித்து விட்டு, அங்கேயும் ஒரு சிங்க நடை. காட்ஸில்லா கடலில் இறங்கி சாதுவாக நடந்து போய் விடுவது போல கிளைமாக்ஸ் அமைத்திருந்தார்கள். 

ஒருவேளை, இந்த இரண்டு சிங்கங்களும் சந்தித்தால்? அதே...
"கிங்காங் - காட்ஸில்லா" பிஸினஸ் ஃப்ரான்ச்சைஸ் சீரிஸ் துவங்கப்பட்டு அதில் "காட்ஸில்லா Vs காங்" என்ற படம் பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது 2020 மே மாதத்தில் ரிலீஸ் என்ற அறிவிப்புடன். அந்தப் படத்திற்கான அடித்தளமாகத்தான் "காட்ஸில்லா 2014" மற்றும் "காங் - ஸ்கல் ஐலண்ட் 2017" படங்கள் ஸ்டிராங் ஆன ஸ்டேண்ட் அலோன் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் காட்ஸில்லாவின் பவரை இன்னும் கொஞ்சம் தூக்கி நிறுத்த "காட்ஸில்லா - கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்" என்ற ஒரு படமும் 2019 மார்ச் ல் வரவிருக்கிறது. ஆக, இனிமேல் படங்களையெல்லாம் தனித்தனியாகப் பார்க்காமல், சீரிஸாகப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஓவரால் வெர்டிக்ட் - அட்டகாசம். அனிமல்ஸ் அட்டகாசம். தியேட்டரில் பார்க்கலாம்.

மற்றபடி அவ்வப் போது "அவதார்" (ஹெலிகாப்டர்கள் குண்டு போடும் காட்சி), "ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த் - 2" (பல்லிகள் மனிதர்களைத் துரத்தும் காட்சி), "அனகோண்டா 1" அல்லது "ஜூராஸிக் பார்க் 2" (போட் - டில் காட்டு நதியில் செல்லும் காட்சி, தண்ணீர் ஏரிகளில் நடந்து செல்லும் காட்சிகள்), "ஜூராஸிக் பார்க் 4" (காட்டில் நடக்கும் துரத்தல்கள்), "கிங் காங் 2005" (காங்கும் பெரிய பல்லியும் போடும் சண்டை) "காட்ஸில்லா" (சேதமான கப்பல்) இன்ன பிற பல படங்கள் உங்கள் கண் முன்னால் வந்து போனால் நீங்கள் உங்கள் ஞாபக சக்தியை மட்டுமே மெச்சிக் கொள்ள வேண்டும். காப்பி, இன்ஸ்பிரேஷன் என்றெல்லாம் சொல்லி சினிமாப் போராளி மூடுக்கு மாறக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஏதேனும் பாடாவதி தியேட்டரில் பார்க்காதீர்கள். நல்லதொரு தியேட்டர் உத்தமம். வீட்டில் இருந்தபடியே 1080 என்ற தரத்தில் டவுன்லோடுகள் கிடைக்கும் போது, தியேட்டரில் இருக்கும் இடைஞ்சல்கள் நம்மைக் கடுப்பேற்றும். அவ்வளவே.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக