வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

என்னய்யா தகப்பன் இவன்?


2019 பிப்ரவரி 7 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.


ஸ்ருதியும், அக்ஷராவும் மிகவும் மாடர்ன் ஆக, பச்சையாக சொன்னால், உடல் தெரிய கவர்ச்சியாக உடை உடுத்தினால் "என்னய்யா தகப்பன் இவன்?" என்று கமல்ஹாசனைச் சாடும் அதே சமூகம் தான், கதீஜா முழுமையாக முக்காடு உடுத்தி மேடையேறினால் ஏ.ஆர்.ரஹ்மானையும் "என்னய்யா தகப்பன் இவன்?" என்று சாடுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் பிறப்பால் ஒரு இந்து என்பதையும், பின்னாளில் விரும்பி இஸ்லாம் சென்றதையும், கமல்ஹாசன் குழந்தையில் ஆத்திகன் என்பதையும், பின்னாள் வாழ்வில் விரும்பி நாத்திகன் ஆனதையும் வசதிக்கேற்ப மறந்து விடுகிறது இச்சமூகம். முஸ்லிம், ஐயங்கார், இந்து, மலையாளி, தமிழன் என்ற பச்சைகளை தன் வசதிக்கேற்ப, நேரத்திற்கேற்ப யார் மேலேனும் குத்தவும் அது தயங்குவதில்லை.

இங்கே மதம் பிரதானமல்ல. பிரபல்யமே பிரதானம். எவரையேனும் ஏதேனும் குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி மனநோயின் வெளிப்பாடாகவும் இதைப் பார்க்கவேண்டும். தவறு செய்யும் ஒருவரைக் குறை கூறுவது தவறில்லை. ஆனால் எது செய்தாலும், பிரபலங்களைக் குறை சொல்வதில் நமக்கு ஓர் அலாதி ஆனந்தம். "பெரிய ஆளை எதிர்த்தா தான் நாம பெரிய ஆளு" என்ற சொத்தையான சுய வாதத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஆனந்திப்பதும், வேறொரு விஷயத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த காழ்ப்பைக் கொண்டு போய் சந்தர்ப்பம் பார்த்துக் கொட்டுவதையும் காலம் காலமாகவே இந்தச் சமூகம் செய்து வருகிறது.

ஆனால், அந்த இரு தகப்பன்களும் தன் குழந்தைகளை தன்னிஷ்டப்படிச் செயல்பட முழுச் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதையோ, அப்பேர்ப்பட்ட சிறந்த தகப்பன்களைப் பெற்ற அந்தப் பிள்ளைகள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதையோ, தன் தகப்பன்களிடம் அடிமையாய் வாழ்ந்து, அடி உதை வாங்கி, பெற்றோர் சொன்னதைப் பிடிக்காமல் படித்து, பிடித்தோ, பிடிக்காமலோ பெற்றோர் சொன்ன பெண்ணை மணந்து, ஏதோ ஓர் கட்சிக்கோ கார்ப்பரேட்டுக்கோ அடிமை வாழ்க்கை வாழும் நாம் உணர்வதே இல்லை.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக