திங்கள், 10 பிப்ரவரி, 2020

லைகா பிரச்சினைஸ்

2018 பிப் 10 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

அன்றொரு நாள்..

லைகா பிக்சர்ஸ் பிரச்சினை நினைவிருக்கிறதா? ஈழத்தமிழர்கள் பிரச்சினை வந்த போது எத்தனையோ அமைப்புகள் லைகா பிக்சர்ஸூக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஆனால் இன்றைக்கு? குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல ஆகிவிட்டது. "கத்தி" படம் வந்த போதே கவனித்தேன். லைகா புரொடக்ஷன்ஸ் என்று பேனர். அப்போது மட்டும் லேசாக சலசலப்பு இருந்தது. ஆனால் அவ்வளவு தான். அதற்குப்பிறகு அந்தப் பொங்கல் அமைப்புகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

இன்று வரை லைகா பிக்சர்ஸ் வரிசையாக வெற்றிகரமாகப் படம் தயாரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெரிய ஹீரோக்களான விஜய் (கத்தி), இப்போது ரஜினியை வைத்து 2.0 என்று படம் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடுவில் விஜய் ஆன்டனியின் எமன், ஜி.வி யின் எ.இ.பே.இ என்று படங்கள். சமீபத்தில் கூட மலேஷியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கூட சன் டி.விக்கு ஒரு பெரிய துகை (அன்பளிப்பு அல்லது ஸ்பான்ஷர்ஷிப்) வழங்கினார்கள். 2.0 வும் சன் டி.வி கையில் தான்.

நேற்றைய மணிரத்னத்தின் பேனர் பார்த்தீர்களா? கிட்டத்தட்ட 15 - 20 வருடங்களாக சொந்த பேனரிலேயே படம் எடுத்த மணிரத்னம் கூட "செக்கச் சிவந்த வானம்" படத்திற்காக லைகாவுடன் இணைந்திருக்கிறார். எங்கே போனார்கள் அந்தப் போராட்ட அமைப்புகள்?

அல்லது கார்ப்பரேட்டுகளை நாம் தவிர்க்க முடியாது என்பதைச் சொல்கிறதா இது? மேகிக்கு எதிராக அவ்வளவு போராட்டங்கள் நடந்ததே, இப்போது என்ன ஆயிற்று? மீண்டும் புதிய பரிமாணத்தில் விலை கூட்டப் பட்ட மேகி கடைகளில். ஒரு காலத்தில் கேட்பரீஸ் சாக்லெட்டுகளில் புழு இருக்கிறது என்று கிளப்பி விடப் பட்டதே. இன்றைக்கு சாக்லெட் என்றாலே அதில் கேட்பரீஸைத் தவிர்க்க முடியுமா உங்களால்?

இது யாருக்கு எதிரான பதிவும் அல்ல. ஈழம், தமிழன், தெலுங்கன், ஜல்லிக்கட்டு, இந்து, முஸ்லிம், தலித், பார்ப்பனன் என்று சீஸனுக்கு ஏற்றாற்போல், உங்களை வைத்து ஒரு கூட்டமே எங்கோ, எதிலோ, எப்படியோ ஆதாயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் அரசியலுக்கு நீங்கள் தீனி ஆகி விடாதீர்கள். அவ்வளவு தான்.
.
- எஸ்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக