ஞாயிறு, 11 டிசம்பர், 2016

டி.விக்காரர்கள்

சென்ற வருடம் இதே நாளில் ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் இது.

சென்னையில் வீடு மூழ்கிய நண்பர் ஒருவரிடம் பேசினேன். முன்னறிவிப்பின்றி ஏரி திறந்து விடப்பட்டதால் திபுதிபுவென வந்த தண்ணீரால் அரை மணி நேரத்தில் தரை தளம் முழுவதும் நிறைந்து விட்டதாம். அடுத்த மூன்று மணி நேரத்தில் முதல்தளமும். இரண்டாம் தளத்திற்கு ஓடியிருக்கிறார்கள். பல ஏரியாக்களில் இதுதான் நிலை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் தூங்கும்போதோ, அல்லது வேலைக்குப் போயிருக்கும் போது திடீரென இப்படி நிகழ்ந்தால் வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகள் என்ன செய்வார்கள்? வயதானவர்கள் எங்கே ஓடுவார்கள்? ஒரே தளம் மட்டுமே உள்ள வீடுகள் என்ன ஆகும்? என்ன நடக்கிறது, நடக்கப் போகிறது என்றே தெரியாமல் அரை மணி நேரத்தில் எதை எடுப்பது, எங்கே ஓடுவது என எப்படி முடிவெடுப்பது? ப்ளக் பாயிண்டிலும் புகுந்த தண்ணீரால் மின்சாரம் பரவியிருந்தால் என்ன செய்வது? தண்ணீர் வேகத்தில் கதவை இழுத்து மூடக் கூட முடியாதே?

இதுதான் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிலை. கிரைண்டர் போச்சு, மிக்ஸி போச்சு, கேஸ் போச்சு, பீரோ போச்சு, ஆவணங்கள் போச்சு, லேப்டாப், போன், மாத்திரைகள், ஏ.டி.எம் கார்டு, நகைகள், தையல் மிஷின், பாத்திரங்கள், ப்ரிஜ், அரிசி, பருப்பு பொருட்கள் என எவையெல்லாம் இருந்ததோ எல்லாம் போச்சு. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது? பணம்? எங்கே போய் வாங்குவது? இன்னும் படிந்துள்ள சேற்றழுக்கைக் கூட கழுவ காசு வேண்டும். ரோட்டில் தண்ணீர் வடிந்தால் போதுமா?

எதை வைத்து இயல்பு நிலை திரும்பியது என்று சொல்கிறார்கள் இந்த டி.விக்காரர்கள்? சாலைகளில் தண்ணீர் காய்ந்து, வாகனங்கள் ஓடத்துவங்கினால் ஆச்சா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக