வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஆரோகணம் அவரோகணம்

இந்த கர்நாடக இசையில் ஆரோகணம் அவரோகணம் என்று இரண்டு சொல்வார்கள். தெரியுமா? அப்படி என்றால் என்ன என்கிறீர்களா? சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். அதாவது கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட படங்களில் எல்லாம் ஹீரோவும், ஹீரோயினும் அல்லது ஹீரோவும் காமெடி வில்லனும் போட்டி பாடல் பாடும் போது ஆரம்பத்தில் இந்த ச, ரி, க, ம, ப, த, நி, ச... என்று படிப்படியாக ஏற்றியபடியே ஒரு முறை பாடுவார்கள். அப்புறம் சா, நி, த, ப, ம, க, ரி, ச... என்று இறக்கிப்பாடுவார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஸாரி, கேட்டிருக்கிறீர்களா? அவைதான் ஆரோகணம் அவரோகணம் . முதல் செட்டில் ஏற்றிப் பாடுவது ஆரோகணம். இரண்டாவது செட்டில் இறக்கிப்பாடுவது அவரோகணம்.

இது நம்ம ஆளு படத்தில் கூட பாக்யராஜ் போட்டி பாடல் பாடும் போது ஷோபனாவை சுரவரிசை (ஸ்வர வரிசை - ஏழு ஸ்வரங்களின் வரிசை) பாடாதே என்று கேட்டுக்கொள்வார். ஆனால் அம்மணி நேரம் பார்த்து சுரவரிசை பாடி அவரை காலை வாரி விடுவார். அந்தப்படம் மட்டுமில்லாமல் எல்லா படங்களிலுமே கர்நாடக சங்கீதப்போட்டி என்று ஆரம்பித்து அந்த ஒரு வரியை மட்டும் பாடிவிட்டு அதுக்கு அப்புறம் அவர்கள் சாதாரணமாக தமிழுக்குத் தாவி பாடல் பாடத்துவங்கி விடுவார்கள்.

அதுசரி. சாதாரண ரசிகனுக்குப் புரிய வேண்டும் அல்லவா? முழுக்க முழுக்க சரிகம.... சரிகம.... சரிகம.... என்றே பாடிக்கொண்டிருந்தால்? முழுக்க கர்நாடக இசை பற்றிய படமான சிந்து பைரவியில் கூட அப்படித்தான். கர்நாடக இசைக்கச்சேரி செய்யும் பாடகரை ஒரு ரசிகை தடுத்து தமிழ்ப்பாடல் பாடி ரசிகர்களை வசியப்படுத்துவார். (பாலச்சந்தரின் க்ளாஸிக்குளில் ஒன்று...சிவகுமார், சுஹாசினி..)

ஆரோகணம், அவரோகணம் இரண்டும் கலந்து தான் எந்த ஒரு பாடலையும் அமைக்க முடியும். அதாவது ஏற்ற இறக்கத்துடன். பாடல் மட்டுமல்ல.. பேசுவது கூடத்தான். வெறும் ஏற்றம்? அல்லது இறக்கம்? அதாவது ஆரோகணத்தை மட்டுமே கொண்டு ஏற்ற வரிசையிலோ அல்லது அவரோகணத்தை மட்டுமே கொண்டு இறக்க வரிசையிலோ ஒரு பாடல் அமைக்க முடியுமா?

முடியாது என்று சொன்னவர்களை எம்.எஸ்.வியும் இளையாராஜாவும் தடுத்தாட்கொண்டார்கள். பழைய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" பாடல் அப்படி ஒரு ஸ்பெஷல் பாடல். இசை? வேறு யாரு? மெல்லிசையில் கலக்கிய மன்னரான எவர்க்ரீன் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அப்படி ஆரோகணத்தில் மட்டுமே (மற்ற இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்டு) அமைக்கப்பட்ட ஏற்ற வரிசைப் பாடல் அது.

அதற்குப்பிறகு நம்ம இளையராஜாவும் அதே மாதிரி ஆரோகணத்தில் மட்டுமே அமைந்த ஒரு பாடலை “சிந்து பைரவி” படத்தில் "கலைவாணியே உனைத்தானே, அழைத்தேன். உயிர்த்தீயை" என்று சிவகுமாரின் ரீ-என்ட்ரி சமயத்தில் பாடுவதாக அமைத்திருப்பார். அதிலும் அவரோகணம் கிடையவே கிடையாது. ஒன்லி ஆரோகணம். அந்தப்பாடல் படத்தில வரும் போது ஒரு நடிகர் (பேர் மறந்து போச்சு) வந்து இதைப்பற்றி லீட் கொடுத்து விட்டுப்போவார். இந்த இரண்டு பாடல்களும் தமிழ் சினிமா சரித்திரத்தில் இரு மைல்கல்கள்.

நம்ம ஏ.ஆர்.ரஹ்மான் அப்படி ஏதும் ஆரோகணத்தில் முயற்சி செய்திருக்கிறாரா? செய்திருப்பதாகத் தெரியவில்லை. செய்திருந்தால் சூப்பராக இருக்கும். அப்படி ஏதும் தகவல் தெரிந்தால் யாரேனும் பின்னூட்டம் போடுங்கள். ஏன் ஏ.ஆர்.ஆர் மட்டும் என்கிறீர்களா? 75 ஆண்டு காலத்திற்கான தமிழ் திரைப்படங்களை மொத்தமாக கணக்கெடுக்கும் போது தலைமுறை வாரியாக பார்த்தால் எம்.எஸ்.வி, இளையராஜா, அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் என்று மூன்று பேர்தான்அவுட்ஸ்டாண்டிங்-ஆக நிற்கிறார்கள்.



கே.வி.மகாதேவன், ராமமூர்த்தியில் ஆரம்பித்து சந்திரபோஸ், ஷங்கர் கணேஷ், மனோஜ்-கியான் என்று பயணித்து யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ், விஜய் ஆன்டனி என்று தொடரும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் லிஸ்ட் மிக மிக மிகப் பெரியது. ஆனால் டைம் ட்ராவல் செய்து பார்த்தாலும் கடைசியாக எஞ்சி விஞ்சி நிற்பது இவர்கள் மூவர் மட்டும் தான். அதனால் தான் ஆரோகணம் மேட்டரில் எம்.எஸ்.வி, இளையராஜா மட்டுமில்லாமல் ரஹ்மானும் ஒரு பாடல் போட்டால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை.

இந்த ஏழு கட்டை, எட்டு கட்டை (நாட்டு கட்டைலாம் இல்லை) எல்லாம் கூட அப்படித்தான். அவ்வை சண்முகியில் ருக்கு ருக்கு ருக்கு பாடலுக்கு முன் மாமிகள் "மாமி எத்தனை கட்டை" (நான் செம கட்டை என்று கத்தினேன் தியேட்டரில்) கேட்கும் போது ம்ம்ம்ம்ம்ம்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ என்று ஒரு முறை பாடிப்பார்த்து விட்டு அஞ்சு என்பார் மாமி கமல். பாய்ஸ் படத்தில் பாடல் பதிவு செய்யும் போது ஹரிணி (அப்போ ஹரிணி தானே, இப்போ தான் ஜெனிலியா... அதுவும் ஃபாஸ்ட் ட்ராக் விளம்பரத்தில் வரும் ஜெனிலியா!!!!!!!! ம்ஹூம்.. முடியல) கூட நாலா என்று கேட்கும் நகுல்-இடம் இதே மாதிரி ம்ம்ம்ம்ம்ம்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ என்று ட்ரை செய்து விட்டு ஆமாம்.. என்பார் அவர்.. அதெல்லாம் இதில் தான் வருகிறதாக்கும்.

இந்த மேட்டரெல்லாம் எனக்குக்கூட தெரியாமல் தான் இருந்தது. ஆனால் இப்போல்லாம் விஜயில் சூப்பர் சிங்கர்கள் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகள் பார்க்கும் போது தான் ஒவ்வொரு ரவுண்டிலும் பாடகர்களை வார்த்தைகளையும் வரிகளையும் பிட்டு பிட்டாக பாடச்சொல்லி அப்படியே அக்கக்காக பிரித்து மேய்வார்கள் நடுவர்கள் என்று உட்கார்ந்திருக்கும் பெரிய பெரிய பாடகர்கள். அதையெல்லாம் பார்த்துத்தான் ஓஹோ, இப்படியெல்லாம் பல மேட்டர்கள் இருக்கிறது போல என்று நம் சிறுமூளை (சிறுமூளைன்னா சிறுமூளை இல்லைங்க. சிறிய மூளை)- க்கும் தெரிய வருகிறது.

என்னடா இது சம்மந்தமே இல்லாமல் திடீரென்று கர்நாடக சங்கீதம் பற்றியெல்லாம் பேசுற? எப்படி உனுக்கு இந்த அறிவு என்கிறீர்களா?

அது ஒன்றுமில்லை. நீண்ட நாட்களுக்குப்பிறகு பஸ்ஸில் எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை ராஜ் வீடியோ விஷனில் பார்த்தபடியே ஒரு பயணம் செய்ய நேர்ந்தது. கிட்டத்தட்ட பதினைந்து சூப்பர் டூப்பர் ஹிட் எம்.ஜி.ஆர் பாடல்கள். அதில் பல பாடல்கள் மெலடி வகை. மழைச்சாரல் தூவ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே பாடல்கள் பார்த்தபடியே பளிச்சென்ற ஈரமான ரோட்டை ரசித்தபடியே ஒரு பயணம். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் அப்படியே மிதந்து கொண்டே போனது மனது. இதைக்கூட அதே பஸ்ஸில் இருந்து தான் டைப் செய்து பதிவேற்றுகிறேன்.


அதில் வந்த ஒரு பாடல்தான் ஆயிரத்தில் ஒருவன்-ல் இருந்து "அதோ அந்த பறவை போல" பாடல். அதிசயமாக மேலும் ஒரு மணி நேரம் கழித்து "கலைவாணியே"வும் ஒளிபரப்பானது. அப்புறம் கொஞ்ச நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ். அதையெல்லாம் பார்த்தவுடன் தோன்றியவைதான் இவையெல்லாம். ஆனால் நிஜமாகவே ஒரு க்ளாஸிக் ஃப்ரைடே தான் இது என்று சொல்ல வேண்டும். நாளை இருமத்தூரில் இருக்கும் ஒரு பேரன்ட் டெமோ, நாமக்கல்லில் செய்ய வேண்டிய பேமென்ட் கலெக்ஷன், சேலத்துக்கு ஒரு ஆர்.சி ரெக்ரூட்மெண்ட் எல்லாவற்றையும் மறக்க வைத்த ஒரு இரவுப்பயணம் இது.

டேய்.. போதும்டா போ... என்கிறீர்களா? ரைட்டு.. ஓக்கே.. பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு, இறங்கணும். பை... பை...

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

5 கருத்துகள்:

  1. உங்களுக்கு சங்கீதத்த பத்தி ஆர்வம் இருக்குது போல, எந்த அளவுக்கு புரிஞ்சிருக்கீங்க என்பதை இசைத் துறையில் விபரமரிந்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும். நீங்கள் சொல்லியிருப்பது எதுவுமே எனக்குப் புரியவில்லை. நிற்க. //எம்.எஸ்.வி, இளையராஜா, அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் என்று மூன்று பேர்தான்அவுட்ஸ்டாண்டிங்-ஆக நிற்கிறார்கள்// இது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இவர்கள் மூன்று பேரும் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுருக்கிரார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர இவர்களுக்கு இணையாகவோ, இவர்கள் விட சிறந்தோ யாருமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதை நீங்கள் மேற்ச்சொன்ன மூன்று பேருமே ஒப்புக் கொள்வார்கள். மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு வாய்ப்புகள் அமையாமல் போயிருக்கலாம், அதனாலேயே ஒருத்தரின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களைவிடச் சிறந்தவர்கள் யார் என்று என்னைக் கேட்டால், என்னால் சொல்ல முடியாது, ஆனால் விஷயம் தெரிந்தவர்களால் நிச்சயம் சொல்ல முடியும். கீழ்க் காணும் London BBC-தமிழோசையின் இணையதளத்தைப் பார்த்திருக்கிறீர்களா? தங்களுக்கு சரியான தீனி போடும் என நினைக்கிறேன். Real Player Install-செய்து கேட்டு விட்டு மடல் எழுதுங்கள். jayadevdas2007@gmail.com

    பதிலளிநீக்கு
  2. http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/08/040805_filmsongs.shtml#6

    பதிலளிநீக்கு
  3. http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/08/040805_filmsongs.shtml#6

    பதிலளிநீக்கு
  4. லிங்க் கொடுத்ததற்கு நன்றி ஜெயதேவா...

    பதிலளிநீக்கு
  5. எந்த ஒரு இசையமைப்பாளரும் குறைத்து மதிப்பிடக்கூடியவர் அல்ல. என்னைப் பொறுத்த வரை இசை என்பது தான் படைப்புகளிலேயே மிகச்சிறந்தது. காலங்கள் கடந்து நிற்கக் கூடியது. வெறும் ஏழு ஸ்வரங்களை வைத்துக்கொண்டு இலட்சக்கணக்கான ராகங்களையும், இசையையும் உருவாக்குவது சாதாரண காரியமும் அல்ல. நான் சொல்வது இந்த மூன்று பேர் மற்றவர்களை விட ஸ்பெஷல் என்று..

    பதிலளிநீக்கு