சனி, 25 ஏப்ரல், 2020

வருவானா பக்ஷிராஜன்?




இந்த கொரோனா லாக் டவுன் மூலம் மனிதன் துப்பிக் கொண்டிருந்த கார்பன்களின் அளவு குறைந்து உலகெங்கிலும் உள்ள மரங்களின் காடுகளின் அளவு 7 சதம் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அதனால் ஆக்ஸிஜன் அளவும் நன்கு அதிகரித்திருக்கிறதாம். ஆனால் இயற்கை ஒரு மகத்தான சக்தி என்பதையும் மறக்க வேண்டாம். மிதமிஞ்சிய ஆக்ஸிஜன் உள்ளதை அது புரிந்து கொண்டால், சடாரென ஒரு சிறு தீப்பொறியின் மூலம் பெரு நெருப்பை உருவாக்கி, அதை "வனத்தீ" மூலம் தின்று தீர்த்து, காட்டை அழித்து கார்பனை உருவாக்கித் தன்னை சமன் செய்து கொள்ளும். அந்தச் சக்தி அதற்குண்டு.

ஆனால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்" அல்லவா?

நாம் எங்கிருந்தாலும் இயற்கையை அழிக்கும் வேலையை மட்டும் மிகச் சிறப்பாகச் செய்வோம். அந்த திமிர்த்தனம் நமக்கு எப்போதும் உண்டு. "லாக் டவுன்" இல்லாவிட்டால் கார், பஸ், ஃபேக்டரி, தம்மு, விறகுப்புகை, அணு உலை, பிளாஸ்டிக் கழிவுகள் என மிகச் சிறப்பாக சுற்றுச் சூழலை நாசமாக்குவோம். "வீட்ல இருடா" என்றால் அதை விடச் சிறப்பாக. சில சமயம் நம்மையும் அறியாமல்.

எப்படி? நாம் அரை மணி நேரம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதால் வெளியாகும் கார்பனின் அளவு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 1.6 கிலோ கார்பன் டை ஆக்ஸைடுக்குச் சமமான எமிஷன். இது சுமாராக காரில் 6.5 கிலோ மீட்டர் நீங்கள் பயணித்ததற்குச் சமம். இவற்றில் யூ டியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் துவங்கி துண்டு துக்கடா போர்ன் சைட்டுகள் வரை பங்குண்டு.

ஹை டெஃபனிஷனில் நீங்கள் ஒரு வீடியோ பார்க்க அதற்கான ஆற்றலை அதை வழங்கும் சிஸ்டம்களும், சர்வர்களும், ஸ்டீரிமிங் நெட்வொர்க்குகளும் தந்தாக வேண்டும். அத்தனை வலுவையும் அந்த டேட்டா சென்டர்கள் தாங்கியாக வேண்டும். அவை வெளியிடும் கார்பன் எவிக்ஷன் தான் மேலே சொன்னது. நீங்கள் ஒருநாள் எவ்வளவு நேரம் வீடியோ பார்க்கிறீர்கள்? ஒரு மாதத்திற்கு? உங்களைப்போல தமிழ்நாடு முழுக்க எத்தனை பேர்? இந்தியா முழுக்க எத்தனை பேர்? உலகம் முழுக்க?

ஹை டெஃபனிஷன் வேண்டும் எனத்தேடி 3ஜி, 4ஜி, 5ஜி என அலைவதன் மூலமும், மொபைல் ஃபோன்கள், வை.ஃபை டிவைஸ்கள் முதல், க்ரோம், ஏர்டெல், டிஸ்னி, ஆப்பிள்களின் ஸ்டீமிங் டிவைஸ்கள் என, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 14 இன்ச் முதல் 65 இன்ச் டிவிக்கள் வரை அத்தனைக்கும் இவற்றில் பங்குண்டு. இவ்வளவையும் நாம் பார்த்துத் தொலைக்கத் தேவையான அளவற்ற மின்சாரம், அதை உற்பத்தி செய்ய வேண்டி எரிக்கப்படும் கார்பன் கரி முதல், டீசல், பெட்ரோல் வரை. மேலும் அணு மின்சாரத்திற்காக இயங்கும் அணு உலைகளின் அணுக்கழிவுகள் தனி.

குத்து மதிப்பாகக் கணக்குப் போட்டதில் 2019 ஆம் ஆண்டு மட்டும் 300 மில்லியன் டன் (ஒரு டன் = 1000 கிலோ, ஒரு மில்லியன் = 10 இலட்சம், கணக்குப் போடுங்க) கார்பன் டையாக்ஸைடை இதன் மூலம் உற்பத்தி செய்து கார்பன் எமிஷன் செய்திருக்கிறோமாம்.

கொரோனா புண்ணியத்தில் இந்த ஆண்டு அது மூன்று மடங்காகலாம் என்கிறார்கள். பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ், கார்பன் என குப்பைகளால் உலகையே நிரப்பும் நாம் செய்யும் பாவம் இன்னும் சிலபல ஆண்டுகளில் நம் பிள்ளைகளின் தான் தலையில் விடியப் போகிறது. டேட்டா, டேட்டா, டேட்டா என வெறிபிடித்து அலையும் நம்மையெல்லாம் அழித்தொழிக்க ஒரு பக்ஷிராஜன் போதாது. இயற்கை கொரோனாவை விட மிகப்பெரும் ஷக்தி ஒன்றை மிக விரைவில் மீண்டும் அனுப்பி வைக்கலாம். யார் கண்டது?
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக