2017 ஏப்ரல் 2 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
2037 வாக்கில் எது போன்ற வேலைகள் / துறைகள் இருக்கும்?
வீட்டில் ஜூனியர் உள்ள அனைவரும் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம். எதை நோக்கி நாம் அவர்களைத் தயார் படுத்துகிறோம்?
அல்லது கொஞ்சம் பின்நோக்கி யோசியுங்கள். 1997 ல் எது போன்ற வேலைகள் / துறைகள் இருந்தன?
நான்கு மாதங்கள் முன் ஒரு அயர்ன் லேடி நம்மிடையே இருந்தார். வெளிநாட்டு சர்வாதிகாரி ஒருவர் இருந்தார். இன்று அவர்கள் இல்லை. ஐந்து மாதங்கள் முன் கட்டாகவே, ஒன்றிரண்டாகவோ 1000, 500 ரூபாய்கள் வைத்திருந்தோம். இன்று அவை வெற்றுக் காகிதங்கள். 15 ஆண்டுகள் முன்பு பேஜர் என்று ஒன்று வந்தது. இரண்டே வருடத்தில் காணாமல் போனது. ஐந்து மாதங்கள் முன்பு சென்னையில் 20,000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இன்று அவை இல்லை. (5 விநாடி ஆக்ஸிஜன் இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்ற வாட்ஸ் அப் ஃபார்வர்ட் படித்திருக்கிறீர்களா?)
ஃபிளெக்ஸ் பிரிண்ட் என்ற ஒன்று வந்ததும், சுவர் ஓவியம் என்ற துறை காணாமல் போனதே, கம்பூட்டர் வந்ததும், டைப் ரைட்டர் சென்டர்கள் காணாமல் போயினவே, மொபைல் என்றொன்று வந்ததும், தெருமுக்கில் அமைந்து காதல் வளர்த்த பி.சி.ஓ - க்கள் எங்கே?
அது போல இன்று முழுக்க புழக்கத்தில் இருக்கும், நாளைக்குக் காணாமல் போகக் கூடிய வாய்ப்புள்ளவைகள் என்னென்ன இருக்கலாம் என்று யோசியுங்கள். யார் கண்டார்? திடீரென்று வாட்ஸ் அப் புக்குத் தடை வரலாம். கடும் வறட்சியில் நீரை நம்பியிருக்கும் துறைகள் நசியலாம். தண்ணீர் இறக்குமதி யை நம்பி புதிய தொழில்கள் வரலாம். ஓட்டுப் போடும் வயதோ, திருமண வயதோ, லைசென்ஸ் வாங்கும் வயதோ குறைக்கப்படலாம்.
ஆட்டோமேஷன் (இயந்திரங்கள், ரோபோக்கள், ஆன்லைன் போன்றவை) களால் இன்னும் பதினைந்து ஆண்டுகளில் சுமார் 69 சதவீதம் வேலையிழப்பு இருக்கப் போகிறது என்றொரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஹேண்ட் ரைட்டிங் க்குக்கு இன்னும் பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டாலும், பள்ளி / கல்லூரி யை விட்டு வெளியே வந்தால் கைகளால் எங்கே எழுதுகிறோம்? டேப் அல்லது கின்டில் போல மாணவர்கள் கையில் ஒரு டிவைஸ் வந்தால் கையெழுத்துக்கு என்ன வேலை? நிஜ வாழ்க்கையில் அவர்களுக்குத் தேவையில்லாத பல விஷயங்கள் இன்னும் சிலபஸில் இருக்கின்றன.
இவையெல்லாவற்றையும் மனதில் வைத்து மீண்டும் யோசியுங்கள். 2037 / 2040 வாக்கில் எது போன்ற வேலைகள் / துறைகள் இருக்கும்? எதை நோக்கி நாம் நம் குழந்தைகளைத் தயார் படுத்துகிறோம்?
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக