வியாழன், 9 ஏப்ரல், 2020

வங்கித் தவணைகளுக்கு மூன்று மாதம் சலுகை

3 April 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

வங்கித் தவணைகளுக்கு மூன்று மாதம் சலுகை என்ற அறிவிப்பு வங்கிகளால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு.

1. இது ஆட்டோமேடிக் ஆக நடக்காது. உங்களுக்கு இந்தச் சலுகை வேண்டுமானால் நீங்கள் தான் உங்கள் வங்கியை அணுக வேண்டும். அல்லது அவர்கள் மொபைல் ஆப்பில் அல்லது அவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தால் அதன் மூலம் வரும் லிங்க்-இல் சென்று உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் பட்டனை அமுக்க வேண்டும்.

2. சலுகை மூன்று மாத தவணைக்குத் தானே தவிர, வட்டிக்கு அல்ல. ஈ.எம்.ஐ கட்டாமல் மூன்று மாதம் தள்ளிப்போடலாம். ஆனால் அசலுக்கான வட்டி கட்ட வேண்டும் (பின்னால் வரும் ஈ.எம்.ஐ உடன் சேர்த்து).

3. உதாரணமாக - உங்கள் கடன் 30 இலட்சம் என்றால் அதற்கு மூன்று மாத வட்டி கணக்கிடப்பட்டு, அது உங்களது மற்ற ஈ.எம்.ஐ உடன் சேர்க்கப்படும். குத்துமதிப்பாக 63,750 ரூபாய். இன்னும் 20 வருடம் தவணை கட்ட வேண்டி உள்ளது என்றால் உங்கள் ஈ.எம்.ஐ மாதம் சுமார் 265 ரூபாய் அதிகரிக்கலாம் (இது சும்மா குத்துமதிப்பான கால்குலேட்டர் கணக்கு. வங்கிகள் அவர்களுக்கென வட்டிக்கு வட்டி அல்லது Amortization அது இது என்ற டெக்னிகல் விஷயங்கள் மூலம் கணக்கிட்டால் இத்தொகை அதிகரிக்கக் கூடும்)

4. மேற்சொன்னது போல ஈ.எம்.ஐ தொகை அதிகரிக்கக் கூடாது என்றால், அந்த வட்டிப் பணத்தை ஈ.எம்.ஐ யின் காலக்கெடுவில் கூட்டலாம். அதாவது 20 வருடங்களுக்குப் பிறகு இன்னும் சில ஈ.எம்.ஐ கள். ஆனால் இந்த - குத்துமதிப்பாக 63,750 வட்டி ரூபாய் - அசலில் சேருமல்லவா? அந்த அசலுக்கு வட்டி கட்டணும்ல?

ஆக 20 ஆண்டுகளைத் தாண்டி, குத்துமதிப்பாக ஒரு ஏழெட்டு ஈ.எம்.ஐ அதிகரிக்கலாம். கண்டிப்பாக நீங்கள் பெற்ற சலுகையை விட நான்கு மடங்கேனும் அதிகம் கட்ட வேண்டி இருக்கும். அநியாயமா இருக்கா? (நேர்மாறாக - பாயிண்ட் 8 ல் உள்ளபடி ஈ.எம்.ஐ யில் நீங்கள் சும்மா 1000 ரூபாய் அதிகரித்தால் அது அசலில் கழிந்து ஏழெட்டு ஈ.எம்.ஐ குறையும். அப்போ நமக்கு இனிக்குமல்லவா?)

5. ஆனால் இன்னோரு விஷயம். இப்போது சுமார் 22000 ரூபாய் நீங்கள் ஈ.எம்.ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், 20 ஆண்டுகள் கழித்து அது உங்களுக்குச் சிறிய தொகையாக இருக்கும். (உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ரூபாய் என்பது உங்களுக்கு மிகப் பெரிய தொகையாக, ஏன் மாதச் சம்பளமாகக் கூட இருந்திருக்கக்கூடும். ஆனால் இன்று அது உங்களுக்கு ஒரு சிறு தொகை தானே?). எனவே, விருப்பமிருந்தால் இந்த ஆப்ஷனை எடுத்துக் கொள்ளலாம்.

6. இது முழுக்க நிதி சார்ந்த கணக்குகள் தான். வாங்கின காசுக்கு நாம் வட்டி கட்டித்தான் ஆக வேண்டும். அசலையும் கட்டித் தான் ஆக வேண்டும். (நாமம் போட்டுவிட்டு நாட்டைவிட்டு ஓடிப்போகத் தெம்பிருக்கிறதா? எங்களுக்குத் தெரிந்த ஒரு ஆள் இரண்டாண்டுகள் முன்பு சுமார் 9 கோடி ஆட்டையைப் போட்டு விட்டு ஆள் எஸ்கேப்) அதை விட்டு விட்டு பாமரத்தனமாக "ஐயோ, கொள்ளை, அநியாயம்" என்று மோடி மேலோ, காங்கிரஸ் மேலோ லைட்டைத் திருப்ப வேண்டாம்.

7. உங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களைச் சமாளிக்கும் வகையில் வருமானம் அ சம்பளம் வரும்பட்சத்தில் பேசாமல் ஈ.எம்.ஐ - யைத் தொடர்ந்து கட்டிவிட்டுப் போகலாம். உங்களுக்குத் தான் இலாபம். குழப்பமும் தலைவலியும் மிச்சம். (this is my personal suggesion)

8. "இல்லங்க, வருமானத்தில் பிரச்சினை இருக்கு"ன்னா, "மூன்று மாதச் சலுகை"யைத் தேர்ந்தெக்கலாம். ஆனால் வருத்தப்பட வேண்டாம். தேர்ந்தெடுத்து விட்டு ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து உங்கள் வருமானம் உயர, உயர வெறும் 1000, 2000 என ஈ.எம்.ஐ தொகையை ஏற்றிக் கட்டுங்கள். அவை அசலில் தான் கழியும். வட்டியும் சரசரவெனக் குறையும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பே சீக்கிரம் முடித்து விடலாம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக