செவ்வாய், 28 ஏப்ரல், 2020

பாகுபலி 2 வின் அதிர்வுகள்

29 ஏப்ரல் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாகுபலி போன்ற ராஜா கதையில் கூட கதை, திரைக்கதை விஷயத்தில் புதிதாக எதையாவது எதிர்பார்ப்பவர்களுக்கு... 23 - ம் புலிகேசியில் "நாங்கள் இருவரும் இணைவோம் என்று எப்படித் தெரியும் அப்பா?" என்று கேட்கும் உக்கிரபுத்தனுக்கு முதுகு காட்டி கேமராவுக்கு முகம் காட்டி வி.எஸ்.ராகவன் சொல்லும் "அரச கதை என்று வந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும்?" தான் பதில்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஃபர்ஸ்ட் ஹாஃப் - சத்தியமாக எனக்கு, பழைய அம்புலிமாமா படிப்பது போலவே இருந்தது. கட்டப்பாவைத் தோளில் தூக்கிப் போகும் அமரேந்திரனைப் பார்க்கையில் "வேதாளத்தைத் தோளில் சுமந்த விக்கிரமன்" தான் நினைவுக்கு வந்தான். விக்கிரமனைப் போல அதே வளைந்த காலணி, வளைந்த லேசான முறுக்கு மீசை, தோள்வரை புரளும் கேசம். ஸேம்.. ஸேம்..

அதிலும் அந்த அன்னப் படகில் சவாரியும், பாடல் காட்சிகளும். அடாடாடாடாடா. முழுக்க ஒரு கற்பனை, ஃபேன்டஸி உலகிற்குள் மூழ்கிப் போவீர்கள். பாகுபலி 1 - ன் "பச்சைப் பூ நீயடா" தோற்கும். இதிலும் எனக்கு அம்புலி மாமா கதைகளும், சாண்டில்யனின் "கடல் புறா" படகும் நினைவுக்கு வந்தன. கடல் புறா படிக்கையில் அப் பிரமாண்ட படகினைப் பற்றி நம் மனதில் எழும் பிம்பத்திற்கு நிகராய்.

கூடவே ஒன்று சொல்ல வேண்டும் பாகுபலி 1 பற்றி. பல்லாளதேவனின் 120 அடி உயர சிலை நிறுவப் படும் போது, ஷிவு ஊருக்குள் வர, சில சம்பவங்களால் விழா தடைபட்டு நின்று பிறகு மீண்டும் "பாகுபலி, பாகுபலி, பாகுபலி" கோஷம் அதிர்கையில், நடக்கும் நாட்டியங்களும், கச்சேரிகளும், இசை நடனங்களும், நாட்டுப்புறக் கலைகளும், இவையனைத்தையும் கழுகுப் பார்வையில் காட்டும் கோணத்தில் பார்க்க, ஒரு வேளை ஆயிரமாண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் பெரிய கோவில் கும்பாபிஷேகமும் இப்படித்தான் நடந்திருக்குமோ என்று தோன்றியது.

பாகுபலி 2 விலும் இதுபோல பெரும் அதிர்வளிக்கும் பட்டாபிஷேகக் காட்சி ஒன்று உண்டு. யாருக்கு? எப்படி? எவ்வளவு பிரமாண்டம்? என்பதைத் திரையில் காணுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு விஷயம் நான் கவனித்தது (ஸ்பாய்லர்)
பார்ட் 1 ல் பல இடங்களில், ராணா - காளைச் சண்டை யில் கூட இடது கீழ் ஓரத்தில் CGI என்று எழுத்துக்கள் இருந்தன. மிருக வதை குறித்த சட்டம் காரணமாக இருக்கலாம்.
ஆனால் பார்ட் 2 வில் பல இடங்களில் கிராஃபிக்ஸ் என்று நன்றாகத் தெரியும் இடங்களில் கூட CGI போடப்படவில்லை. யானைகள், கருப்புக் காளைகள், வெள்ளை காளைகள், மாடுகள், பன்றி வேட்டைக் காட்சிகள் என பலதும். துண்டான தலை சீனில் மட்டும் CGI என்று போட்டார்கள்.
இது தெரிந்தே, "இது போதும்டா" எனச் செய்யப்பட்டதா? அல்லது க்யூப் பிரச்சினை விவகாரத்தால் இன்றைய பிரிண்டுகளில் இல்லாமல், இனி வரும் நாட்களில் வர வாய்ப்புள்ளதா ....⁠⁠⁠⁠
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அஸ்லான்" கிச்சா சுதீப் பார்ட் 2 விலும் இருப்பார். ஏதேனும் ஒரு போருக்கு படை கொடுத்து உதவுவார் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஏமாற்றி விட்டார் ராஜமௌலி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாகுபலி 2
கட்டாயமாக வீட்டில் உள்ள வயசான ஆயா, தாத்தா, புள்ளகுட்டிகளையும் கூட்டிக் கொண்டு தண்ணி பாட்டில், வேக வைத்த சோளம், ஜூஸ் பாட்டில், பொரி கடலை, அதிரசம், முறுக்கு பாக்கெட்டுகள், கடலை மிட்டாய், தேன் மிட்டாய் வகையறாக்கள் சகிதம் குடும்பத்துடன் தியேட்டரில் என்ஜாய் செய்து பார்க்க வேண்டிய நல்லதொரு அம்புலிமாமா வகை ஃபேன்டஸி, ராஜா, ராணி கதை வகையறா படம்.
#இந்தப் போஸ்ட்டை 20 வருஷம் முந்தி போட்டதா நினைச்சுக்கோங்க. டோன்ட் மிஸ் இட் இன் எ நல்ல தியேட்டர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக