ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

யசாேதா ஹோட்டல் மாஸ்டருக்கோர் மடல்..

டியர் யசாேதா ஹோட்டல் மாஸ்டர்காள்...
.
உங்கள் கைவண்ணத்தில் உருவாகும் பூ போன்ற அந்த பொரோட்டாக்களுக்கு என் குடும்பமே அடிமை. நீவிர் ஒரு கரண்டி கார கெட்டிச் சட்னி வைத்துத் தரும் வீச்சு பொரோட்டாவுக்கு நான் தனியாக அடிமை. ஆனால் அப் பொரோட்டாக்களுடன், "முத்து"வின் தந்தை ஸமீன்தாரைப் போல ஒரு பெரிய கிண்ணம் நிறைய நீங்கள் பெருந்தன்மையாக அள்ளி வழங்கும் அந்தக் காரக்குருமாவைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. ஆம், ஜீரணிக்க மட்டும் முடியவில்லை. சூடாக பேய் பறக்கும் பொரோட்டாக்களை விள்ளல் விள்ளலாக பிய்த்துப் போட்டு அவை மேல் அக் காரக் குருமாவை ஊற்றி நொதிக்க வைத்து ஒரு நொதித்த விள்ளலை சூடு பறக்க வாயில் போட்டு அது கரைகையில், எம் விருப்பத்தின் பேரில் நீங்கள் ஆக்கித் தரும் அரை வேக்காட்டுப் பெப்பர் கலக்கியின் முட்டை வழியும் சூடான விள்ளலையும் போட்டு மெல்லும் போது வரும் மனமகிழ்ச்சியை, ஈரோடு கொங்கு பொரோட்டா ஸ்டாலின் சிக்கன் கொத்து பொரோட்டக்களும் கூடத் தருவதில்லை.
.
ஆனால் பொரோட்டா ருசித்த அன்றிரவு, சிவராத்திரியாகி என்னை இரவு முழுதும் விழிக்க வைக்க அந்த மசாலாக்களே போதுமானதாய் இருக்கின்றன. சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன் மவுண்ட்ரோடில் வாக்கிங் செல்கையில் அரை மணி நேரத்தில் ஆறு ஐட்டங்களை வாங்கித் தின்று செரித்த வயறு தானா இது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. என் உடலுக்கு வயதாகிறதோ என்ற உபரிச் சந்தேகத்தையும் சேர்த்தே தருகிறது அந்த மசாலாவின் ஆக்கம். நாய்கள் ஊளையிடும் நடு இரவில் என் தங்கமணியைத் தட்டி எழுப்பும் அக் கடகடா, குடுகுடு சத்தத்திற்கு, ஈனோ மட்டுமே ஓர் தீர்வாக இருக்கிறது. ஆயினும் மாதம் ஒன்றிரண்டு ஈனோ மட்டுமே வாங்கினால் கூட "இதெல்லாம் சாப்பிட்டா கேன்சர் வருமாம் சார், சிவகார்த்திகேயன் வேலைக்காரன்ல சொன்னாரு" என்ற டென்னிஸ் டிபார்ட்மென்டலின் அன்பர் குமாருவின் அன்பையும் என்னால் தட்ட முடியவில்லை.
.
"ஒரு ஈனோவுக்கு கேன்ஸரா?" என்றெழும் பேரதிர்ச்சியுடன் சேர்த்து "ஒரு பாலிஸி போடுடா" என்று சாந்தமாகக் கேட்கும் நண்பன் எல்.ஐ.சி தேவாவின் முகமும் என் மனக்கண்ணில் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை. என்னால் தவிர்க்க முடியாமல் தற்போதைக்குத் தவிர்க்க முடிந்த ஒரே விடயம் தங்கள் கடை பொரோட்டா மட்டுமே என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் அதே வேளையில், அரை கிலோ மீட்டர் தள்ளி டபுள் ஓ செவன் தாபா வின் பன் பொரோட்டா குருமா காம்பினேஷன் வயிற்றைக் கெடுக்காமல் அருமையாக இருக்கிறது என்ற தகவலையும் தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
.
இப்படிக்கு - ஒப்பம்
கடைமாறும் கஸ்டமர்,
எஸ்கா (அலையாஸ்) எஸ்.கார்த்திகேயன்
.
நகல் 1 - கல்லாவில் நிற்கும் அழுக்குச் சட்டை அண்ணன்
நகல் 2 - முகநூல் சுவரில் ஒட்ட

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக