புதன், 8 ஜனவரி, 2020

8 செகண்ட் கதைகள்

15 டிசம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது


8 செகண்ட் கதைகள் - எனது முதல் கின்டில் ஈ.புக்

எப்போதும் புதுமைகளைச் செய்வதில் "ஆனந்த விகடன்" இதழ் முன்னோடி. நான்காண்டுகளுக்கு முன் அதாகப்பட்டது 2015 ஆம் ஆண்டு விகடன் "10 செகண்ட் கதைகள்" என்ற ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தது. குட்டிக்குட்டிக் கதைகள். அவற்றில் எந்தக்கதையும் 25 வார்த்தைகளுக்கு மேல் மிகாது. மினி மீன்ஸ் Meenakshi Sundaram போல சிலர் 6 வார்த்தைகளில் கூடக் கதைகள் எழுதினார்கள். ஆனால் அவை தந்த உள்ளார்ந்த அனுபவம் ரசிக்கத்தக்கது. பிரபல எழுத்தாளர்கள் முதல் துணுக்கு எழுத்தாளர்கள், நகைச்சுவை எழுத்தாளர்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் என மைக்ரோ ப்ளாக்கிங் பிரபலங்கள், அவ்வளவு ஏன்? எழுதியே பழக்கமில்லாத வாசகர்கள் எனப் பல தரப்பினரும் "10 செகண்ட் கதைகளை" எழுதித்தள்ளினார்கள். விகடனும் ரசிக்கும் படியான படைப்புகளைத் தேர்வு செய்து வாராவாரம் 10 கதைகளை வெளியிட்டது. இந்தக் காலகட்டத்தில் அதில் அடியேனின் கதைகளும் சுமார் 25+ கதைகள் வெளியாயின.

மூட்டை மூட்டையாக, மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய, விகடனுக்கு, இந்த ஒட்டு மொத்த காலத்தில் கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்து 400 க்கும் மேற்பட்டோர் கதைகள் எழுதிக்குவித்ததில், கதைகள் வெளியான எண்ணிக்கையில் அடியேன் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருந்தேன். என்னை விடப் பிரபல சிற்றெழுத்தாளர்கள் சிலர் போட்டியில் நின்று கலக்கினார்கள். டாப் 5 இல் இருந்த ஒவ்வொருவருக்கும் சுமார் 20 கதைகளுக்கு மேல் வெளியாகி இருந்தன.

மற்றவர்கள் "எனக்கு 20, உனக்கு 18, அவனுக்கு 7" என்றெல்லாம் சந்தோஷித்தார்கள். விவாதித்தார்கள். ஊக்குவித்தார்கள். ஒரே ஒரு கதை வெளியான அன்பர்கள் கூட ஃபேஸ்புக்கில் அக்கதையைப் போட்டு "நானும் எழுத்தாளராகிட்டேன்" எனக்கூத்தாடினார்கள். அந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர் குழுக்களில் பெரும் ஆரோக்கிய போட்டியை இது உருவாக்கியது.

வெளியானது 25 என்றால் அனுப்பியது எவ்வளவு இருக்கும் என்று கேட்கிறீர்களா? ரேஷியோ பாருங்கள். வாரா வாரம் ஆயிரக்கணக்கான கதைகள் விகடனுக்குச் சென்று சேர்ந்தால்? அவற்றில் மொத்தக் காலகட்டத்தில் நான் அனுப்பியவை மட்டுமே 500-க்கும் மேற்பட்ட கதைகள். ஆனால் சில பல வருடங்களில் பல வீடுகள் (ஐ மீன் லேப்டாப்) மாறியதில் அத்தொகுப்பு காணாமல் போய் அண்ணன் Jackie Sekar க்கு ஒருமுறை குறும்படத் தேர்வுக்காக அனுப்பிய 250 கதைகளை மட்டுமே என்னால் மீட்டெடுக்க முடிந்தது.

அவற்றில் 100 கதைகளைத் தொகுத்து அமேஸான் புண்ணியத்தில் "பார்ட் - 1" எனத் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். இத் தொகுப்பில் உள்ளவற்றில் பல கதைகள் ஆனந்த விகடனில் வெளியானவை. அவற்றை குறிப்புக்குள் கொடுத்திருக்கிறேன். "பசியோடு திரிந்தான் பீட்ஸா விற்பவன்" என்பது போன்ற, "சம்பவம் - வேலை முரண்” கொண்ட (டேய், இதெல்லாம் ஒரு கதையாடா என்று வாத்யார் Ganesh Bala போன்றோர் திட்ட வாய்ப்பளிக்காமல்) ஒரு வரிக் கதைகளையெல்லாம் ஆன வரை தவிர்த்திருக்கிறேன்.

படித்துவிட்டு கருத்துச் சொன்னால் மகிழ்வேன். இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி. வெறும் ஈ.புக் என்றாலும், இந்த வாய்ப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்குத் தூண்டுகோலாக இருந்த அத்துணை நண்பர்களுக்கும் நன்றி. அதைத் தனிப் பதிவாகப் பிறகு போடுகிறேன்.

"10 செகண்ட் கதைகள்" தலைப்பை நான் உபயோகப்படுத்தக் கூடாது என்பதாலும், இக்கதைகளை 8 செகண்டிலேயே படித்து விட முடியும் (டைமர் வச்சு செக் பண்ணேன் பாஸ்), இத்தொகுப்பின் பெயர் "8 செகண்ட் கதைகள்" என்றானது (அப்பாடா, டைட்டில் வந்துருச்சி). அமேசான் லிங்க் முதல் கமெண்டில். "kindle unlimited" சப்ஸ் வைத்திருப்பவர்களுக்கு இலவசம். மற்றவர்களுக்கு அமேசானின் மினிமம் விலை.

டவுன்லோட் செய்ய இந்த லிங்க் செல்லவும்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக