புதன், 8 ஜனவரி, 2020

நட்புடன் எஸ்.கா - 2 (நல்லதைச் சொல்வோம்)

1 ஜனவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் வருமானத்தில் 2% - இரண்டு சதவிகிதத்தை (இது உதாரணம் தான். நீங்கள் எவ்வளவு ஒதுக்குகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்) ஒதுக்கி கடவுளுக்குத் திருப்பிக் கொடுக்கலாம். ஒரு நன்றிக்கடனாக.

உதா - 20,000 சம்பளம் என்றால் மாதம் 400 ரூபாயைத் தனியாக எடுத்து வைத்து வருடம் 4800 ரூபாய்க்கு, உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு, பொதுவாக அவை சிறு தெய்வங்களாக இருக்கும், விளக்கு வாங்கித் தருவது, காண்டாமணி வாங்கித் தருவது, தளம் கட்டித்தருவது, பீரோ வாங்கித் தருவது என எது முடியுமோ, அதைச் செய்யலாம். திடீரென சாமி செலவுக்கு காசு எடுக்க முடியவில்லை என தடுமாறும் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர் போன்றவர்களுக்கு இது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அந்தப் பணத்தைத் தர்மம் செய்யலாம். என்ன செய்வது? என்பவர்களுக்கு - முதலில் எடுத்து வையுங்கள். என்ன செய்வது என்பதற்கு வழி தானாகத் தெரியும். சாப்பாடு வாங்கிக் கொடுக்க நினைப்பவர்கள் அம்மா உணவகத்தில் டோக்கன் வாங்கிக் கூடத் தரலாம். ஏற்கனவே வேறு உதவிகள் செய்து வரும் நண்பர்களுடன் இணைந்து கொள்ளலாம். சாப்பாடு பொட்டலம் வாங்கிக் கொண்டு ஜி.ஹெச் பக்கம் போய்ப்பாருங்கள். தேவைப்படுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனத் தெரியும்.

உங்கள் ஏரியாவில் குப்பை அள்ளும் தொழிலாளிகளைக் கவனியுங்கள். பெரும்பாலும் கையுறை இல்லாமல் தான் வருவார்கள். அவர்களுக்கு கையுறை வாங்கித் தரலாம். இதுதான் என்றில்லை. இதுபோல் எத்தனையோ.

இதை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். ஆனால் இன்று புத்தாண்டு என்பதால் இன்று கூடத் துவங்கலாம்.

நீங்கள் எதை அளிக்கிறீர்களோ, அதுவே உங்களிடம் திரும்பி வரும்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக