புதன், 8 ஜனவரி, 2020

ராகவன்.... ஸ்டே இன் தி ப்ராஸஸ்.....



இந்த குட்டிப் பயலை ராஷ்மண்ட்ரி (ராஜமுந்திரி, ஆந்திரா) ஏர் போர்ட்டில் சந்தித்தேன். ஏதோ ஷூட்டிங் வந்திருப்பான் போல. படத்தில் ஒரு மாதிரி க்யூட் ஆக இருந்தால், நேரில் வேறு மாதிரி க்யூட் ஆக இருந்தான் புசுபுசுவெனப் பறக்கும் அழகிய கேசத்துடன். ரொம்பக் குட்டியெல்லாம் இல்லை. நன்கு வளர்ந்திருக்கிறான். நம் இடுப்பளவுக்கு மேல், லேசாக நெஞ்சு உயரம் அளவுக்கு. ஆனால் பிள்ளைகளுக்கான விளையாட்டுத் தனம் இருந்தது. ஏர்போர்ட்டில் வீல் வைத்த சின்னப் பெட்டியுடன், நம் மனசுக்குள் ஜாலியாக ஒரு பாட்டு ஓடினால் லேசான முக மலர்ச்சியுடன் திரிவோமே, அதுபோலத் திரிந்து கொண்டிருந்தான்.

அவனது தந்தை அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மே பி சென்னை ஏர்போர்ட்டாக இருந்திருந்தால் அவனைக் கூட்டம் மொய்த்திருக்கக் கூடும். அது ஆந்திராவென்பதால், அவனை யாரும் அறிந்திருக்கவில்லையோ, என்னவோ? அந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். பாவம், "செல்ஃபி, போட்டோ, வீடியோ" என்று போய் அந்த சின்னப் பையனின் பிரைவஸியைக் கெடுக்க விரும்பவில்லை. நேருக்கு நேர் முகம் பார்த்த போது மட்டும் கண் சிமிட்டிச் சிரித்தேன். அதே போலச் சிரித்தான்.

ஃபிளைட்டில் (பிளைட்டா அது? கொஞ்சம் பெரிய பர்வீன் டிராவல்ஸ். 2 + 2 சீட் போட்டு, இடம் பற்றாமல், லேசாகத் திரும்பினாலே பின்னிருப்பவர்களை முழுதாகப் பார்க்கும்படி) பார்த்தால் அவன் என் பின் ஸீட். "ஹாய் மேன்" என்று கோணலாகக் கை நீட்டினேன். "ஹாய்" என்று அதில் தட்டினான். புன்னகைத்தபடி "உம் பேரு மட்டும் தெரியாது" என்றேன். "ராகவன்" என்றான்.

"யு லுக் க்யூட்" என்றேன். "தேங்க்ஸ் அங்கிள்" என்றான்.

அவனுடன் சேர்த்து இரண்டு தெத்துப்பற்களும் புன்னகைத்தன.
.
5 டிசம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக