புதன், 8 ஜனவரி, 2020

பரிசும் மகிழ்ச்சியும்

7 ஜனவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

புத்தாண்டுப் பரிசாக (ஒரு வாரம் கழித்து வந்தாலும்) இன்றொரு அசத்தலான புகைப்படங்கள் உள்ள ஒரு டேபிள் காலண்டரும், லெதர் (தான் என்று நினைக்கிறேன்) டைரி ஒன்றும் கொரியர் மூலம் வந்தடைந்தன. ஆனந்த அதிர்ச்சி. அன்புக்கு நன்றி. அனுப்பிய அன்பர் யாரென்று தெரியவில்லை. (கண்டுபுடிக்கிறேன்) ஏனென்றும் புரியவில்லை. எப்போதேனும் வரும் இது போன்ற திடீர் பரிசுகள் வாழ்வை ஆச்சரிய அதிர்ச்சிகளால் நிரப்புகின்றன.

அவ்வப்போது நேரில் செல்லும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் பல அன்பளிப்புகள் கிடைக்கும். அவை சகஜம். பெரும்பாலும் சால்வைகள், (20 க்கும் மேற்பட்டவை "என்ன செய்ய?" என்று தெரியாமல் அலமாரியின் அடுக்கை அலங்கரிக்கின்றன), புத்தங்கள் தான் கிடைக்கும். சில சமயம் பேசியதைப் பாராட்டி "தப்பா நினைச்சுக்காதீங்க, ஃபார்மாலிட்டி" என்று வற்புறுத்தி கவர் வைப்பார்கள், என்னைப்போல சிலர் தவிர்த்து விடுவதால் சில சமயம் தெரியாமல் புத்தகத்துள் வைத்திருப்பார்கள்.

எங்கேனும் சீஃப் கெஸ்ட் ஆகப் போனால், தம் நிறுவன விளம்பரங்கள் போட்ட விசிறிகள், ஃபைல்கள், நோட் பேடுகள், பேனா ஸ்டாண்டு, டைரி, போன்றவை கிட்டும். ஒருமுறை சின்ன, நல்ல குவாலிட்டி பிளாஸ்க் கூட கிடைத்திருக்கிறது. பள்ளி விழா ஒன்றில் பரிசு வாங்கிய மாணவர்களுக்கு வரிசையாக கவர் செய்யப்பட்ட எவர்சில்வர் தட்டு, கிண்ணிகளைக் கொடுத்து விட்டு, பாசமாக "சாருக்கு ஒன்னு கொடுங்க" என்று எனக்கு ஒரு "சின்ன எவர்சில்வர் குண்டா" கொடுத்தார்கள். இன்னும் வைத்திருக்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் படித்த போது (ஓவியம், கட்டுரை, க்விஸ்) போட்டிகளில் கலந்து கொண்டால் என்ன செய்வது என்று தெரியாவிடிலும், பெருமையாக ஃபீல் செய்ய வைக்கும் விதவிதமான ஷீல்டுகள் கிடைக்கும். ப்ளஸ் ஒன் படிக்கையில் ஒருமுறை ஹாட்பாக்ஸ் (அதுக்குப் பேரு கேஸரோல் என்றார் பெரீப்பா) கிடைத்தது. வழங்கியவர் அன்றைய அமைச்சர் வீரபாண்டியார். 20 வருடத்துக்கும் மேலாக அது இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறது.

பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த போது கேஷ் ப்ரைஸ்கள் தான் பெரும்பாலும் - மணியார்டரில் வரும். அன்றைக்கெல்லாம் ஏரியாவிலேயே கெத்தா சுத்துவோம். எவ்ளோ கார்த்தி, அம்பதா? நூறா? என்று யாராவது கேட்டு கெத்தை ஏத்தி விட்டுப்போவார்கள். அன்பளிப்புப் புத்தகங்கள் வரும். ரைட்டர் காப்பிகள். ஒரு முறை வசந்த் டி.வியில் இருந்து எவர்சில்வர் கேஸரோல் வந்தது. சில சமயம் பிளாஸ்டிக் தட்டு, டிராவல் பேக் என்று யோசித்தே பார்க்க முடியாத ரேண்டம் பரிசுகளெல்லாம் கிடைக்கும்.

முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் ஒருமுறை டார்கெட் போட்டியில் வென்று சோனி கேமரா ஒன்று கிடைத்தது. மற்றபடி பல நிறுவனங்களில் பெரும்பாலும் கேஷ் ப்ரைஸ் தான் (TDS பிடித்தம் போக). பல சமயங்களில், சிறப்பாக வேலை செய்ததற்காக அவார்டுகள், சர்டிபிகேட்டுகள் கிடைக்கும். Book Exchange scheme களில் கலந்து கொண்டால் முகம் தெரியா அன்பர்களிடம் இருந்து விதவிதமான புத்தகங்கள் வரும்.

சிறிதோ, பெரிதோ, எந்த வயதிலும் இதுபோல நிகழும் குட்டிக் குட்டிச் சம்பவங்கள் தான் வாழ்வை மிகவும் அழகாக்குகின்றன.

ஆனால், பணி புரிந்த நிறுவன லோகோ போட்ட மெர்ச்சாண்டைஸ்கள் (கீ செயின், காபி கப்ஸ், பால், கார் பொம்மை, வாட்ச், க்ளாக்) கணக்கில் எடுக்கப் படவில்லை, அவை எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக தரப்படுவதால். போலவே, உணவுகள், விருந்துகள், ட்ரீட்டுகள் கணக்கில் சேரா. இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு விஷயம் - இவற்றில் நான் சம்பந்தப்பட்டிருப்பேன். என் விருப்பத்துடன் நான் கலந்து கொண்டிருப்பேன். நான் விரும்பிச் சென்றிருப்பேன்.

ஆனால் எனக்கே தெரியாமல், இது போல அத்திப்பூத்தார்ப்போல, அனுப்பியவர் யாரென்றே தெரியாமல் வரும் பரிசுகள் மிகவும் அபூர்வம். இம்முறை, இதில் அனுப்பியவர் அலுவலக முகவரி உள்ளது. ஆனால் அவர் யாரெனத் தெரியவில்லை. யாரென்று தெரிந்தால் நன்றி பகர ஏதுவாக இருக்கும்.

"கடைசி காலத்துல காசு பணத்தை விட, அசைபோட, மெமரீஸ் தான் நமக்கு நிக்கும் பாஸ்" என்று வடகோடி கண்டியிலே காந்தி உப்பு சத்தியாகிரகம்னு சொன்னவுடனே, தென்கோடி தூத்துக்குடியில சட்டிப்பானைய எடுத்துகிட்டு சமுத்திரத்த நோக்கி நடந்தாரே ஒரு மகான், அவர் சொல்லியிருக்கார். அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்த அந்த நண்பருக்கு மீண்டும் ஓர் நன்றி.

பாஸ், வேற யாருக்கோ அனுப்ப வேண்டியதை எனக்கு அனுப்பலைல்ல? (இருக்காது. இருக்காது. தெளிவா Karthikeyan, yeskha ன்னு எழுதியிருக்காங்களே - #notetoself)

பி.கு - திரு. Rafeek Mohd தான் அந்த அன்பர் என்று தெரிந்தது. ஒரு ஸ்பெஷல் நன்றி மீண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக