புதன், 8 ஜனவரி, 2020

சுஜாத்................ஆ

3 டிசம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

நான்கைந்து நாட்களாக ஒரே மண்டை குடைச்சலாக இருக்கிறது, எந்த வேலையும் செய்ய முடியாமல். ஐ மீன் லிட்ரலி, தலைவலியைச் சொல்கிறேன் ஐயா. தலைவலி என்று கூட சொல்ல முடியாது, நெற்றியில் வலி இல்லை. "மண்டை வலி" என்பது தான் சரியான பதம். அதிலும் ஒரு பக்கம் மட்டுமே. வலது பக்க மண்டை மேல் பகுதியில் ஒரே வலி. பசி, நேரத்திற்கு சாப்பிடாமை, டி.வி பார்த்தல், மொபைல், லேப்டாப் நோண்டல், உடல் ஹீட்டு, எதையாவது யோசித்துக் கொண்டே இருத்தல், என பல காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கு நிவாரணங்கள் கொடுத்தால் கொஞ்சமாகக் குறையும் வலி சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் "ங்ங்ங்ங்ங்கொய்" என்று ஆரம்பித்து வைக்கும். சில சமயம் கன்ட்ரோல் செய்ய முடியாத அளவுக்கு. அப்படியே சுவரோரம் சாய்ந்து நிற்க வேண்டும் போலத் தோன்றும். ஒப்புக்கொண்ட இரண்டு முக்கிய வேலைகளைக் கூட முடித்துத் தரமுடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு, கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

ஏழெட்டு மாதங்கள் முன் இதே போல் இடது பக்கம் வலி கண்டு ஒரு 15 நாட்களுக்கும் மேல் அவதிப் பட்டேன். மாத்திரைகளில் தற்காலிக நிவாரணங்களே கிடைத்தன. டாக்டரிடம் போன பிறகும், "சரியான காரணம் தெரியவில்லை ஆனால் பயப்படும் அளவு பெரிய பிரச்சினை இல்லை, தலையில் நீர் கோர்த்திருக்கலாம்" என்றும் "ஈரத்தலையுடன் இருக்காதீர்கள்" என்றும் அட்வைஸி மாத்திரைகள் போதும் என்று கொடுத்து அனுப்பினார். "நிறைய யோசிப்பீங்களோ?" என்றார். "நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய" என்றேன். சிரித்தார். "பயப்பட வேண்டாம்" என்று டாக்டரும், மருந்துக் கடைக்காரரும் சொல்லி விட்டதால் ஸ்கேனிங் லெவலுக்கெல்லாம் இறங்கவில்லை. மூன்று நான்கு நாட்கள் குறைந்திருந்த வலி 15 நாட்களுக்கு விட்டு விட்டு வந்து விளையாட்டுக் காட்டி விட்டு, ஒரேயடியாய்க் காணாமல் போய் விட்டது. தினமும் தலைக்குக் குளிப்பதால் ஹேர் டிரையர் வாங்கியே ஆக வேண்டும் என்றெழுந்த வைராக்கியமும் தலைவலி குறைந்ததும் ஓடிப் போய்விட்டது.

"தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். இரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன். நிறைய இனிப்பு தின்பேன், இன்றும் கூட. அதன் விளைவுகளாக, கடந்த சின்ன வயதில் கேவிட்டீஸ் பற்றியெல்லாம் விபரம் தெரியாமல் விளையாட்டுத் தனமாய் இருந்ததன் காரணமாக பத்து ஆண்டுகளில் மூன்று கடைவாய்ப் பற்களை பல்லு புடுங்கிகளிடம் இழந்திருக்கிறேன். ஒரு ரூட் கேனால் வேறு. ஆகவே, வருடத்திற்கு ஒரு பெரிய உடல் உபாதை வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது. (இது போக அம்மா, அப்பா, வேலை இழப்பு என சில சமயம் மன உபாதைகள் வேறு) இப்போது மீண்டும் தலைவலி. கொஞ்சம் கஷ்டம் தான். என்ன செய்ய. ஆனால், ஒரு கஷ்டத்தை அனுபவித்து விட்டு, பின் மீண்டும் சராசரி வாழ்க்கைக்கு வந்தால் வாழ்க்கையே ஆனந்தமாக இருக்கிறது. "சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும் போது தெரியாது" என்று விருமாண்டி தந்த தத்துவத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

நான் பயங்கர சென்ஸிடிவ் பார்ட்டி வேறு. கோபமோ, பாசமோ, மற்ற சிலபல குணாதிசயங்களோ, என்னிடமிருந்து எக்ஸ்ட்ரீம் ஆகத் தான் வெளிப்படும். மளுக் கென்று கண்ணில் நீர் வந்து விடும். தங்கமணியும், தங்கையும் அறிவார்கள் இதை. திரைப்படங்களைக்கூட அதன் உள் இறங்கி முழுதாய் ரசிக்கும் ஒரு பாமர ரசிகன். "பிச்சைக்காரன்" படத்தையெல்லாம் கண்ணில் நீர் வழிய அழுதபடியே தான் பார்த்தேன். 95 ல் "ஜூமாஞ்சி" பார்த்து விட்டு வந்ததும் நைட்டு கனவில் "ஜூமாஞ்சி பார்ட் டூ" கற்பனையில் ஓடும் அளவு ரசித்துப் பார்ப்பவன். எழுத்திலும் கொஞ்சம் அனுபவம் இருப்பதால், கதாபாத்திரத்தை திட்டும் அளவிற்கு, லயித்துப் பார்ப்பதே வழக்கம். பெரும்பாலும் நான் படங்களை ரசிப்பது அப்படித்தான்.

இப்போது "சைத்தான்" பட விமர்சனங்களைப் படிக்கும் போது எனக்கும் மண்டைக்குள் குரல் கேட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. யேசப்பா, காப்பாத்தப்பா...
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக