புதன், 20 ஜனவரி, 2021

ஒவ்வொரு பெண்ணும் வெற்றியடையாமல் பார்த்துக்கொள்ள ஒரு ஆண்

20 ஜனவரி 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

 Ilangovan Balakrishnan தன் முகநூல் சுவற்றில் பதிந்திருந்தார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------சமுதாயத்தில் ஏதேனும் ஒரு துறையில் சாதித்திருக்கும் சாதனைப் பெண்கள் சிலரை ஒவ்வொருவராக நினைத்துக் கொள்கிறேன்....
பெரும்பாலும் திருமணமாகாதவராய் இருக்கிறார்கள், கணவனை இழந்தவராக இருக்கிறார்கள் அல்லது கணவனை விட்டுப் பிரிந்தவராக இருக்கிறார்கள்.
நீங்களும் உங்களுக்குத் தெரிந்த சாதனைப் பெண்களை நடு நிலையோடு சொல்லிப்பாருங்கள். என்ன காரணமோ தெரியவில்லை 90% இப்படித்தான் அமைந்திருக்கிறது.
"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்" - என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் நாம் ஒவ்வொரு பெண்ணும் வெற்றியடையாமல் பார்த்துக்கொள்ள ஒரு ஆண் இருக்கிறான் என்ற ரீதியில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் போலிருக்கிறதே....
எங்கேயோ...ஏதோ.... தவறு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் புலப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நானும் இதை பலமுறை யோசித்திருக்கிறேன். தன் குடும்ப ஆண்களை இழந்த அல்லது தன் குடும்ப ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வெறியோடு போராடி மிக நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
நல்லவனாய் வாழ்ந்து வீட்டுச்சுமைகளை ஏற்கும் ஒரு ஆணிடம் "வர்ற வருமானத்துக்குள் சிக்கனமா அட்ஜஸ்ட் பண்ணி குடும்பம் நடத்தும்மா" என்றே இந்தியப் பெண்கள் போதிக்கப்படுகிறார்கள்.
ஸோ, கொஞ்சம் குயுக்தியாய் யோசித்தால், நாம் நல்லவனாக இருந்து நம் வீட்டுப்பெண்களிடம் ஒளிந்து கிடக்கும் ஏதோ ஒரு திறமையை அழித்து விடுகிறோமோ?
பல வருடங்களுக்கு முன் என் நண்பன் ஒருவன் சொன்னான் "வர்ற சம்பளத்துக்குள்ள சிக்கனமா வாழ்க்கை நடத்தணும்னு சொல்றது நல்ல விஷயம் தாங்க, ஆனா தேவையான செலவைப் பண்ணிட்டு, அதற்கும் சேர்த்து அதிகமா சம்பாதிக்கணும்ங்க"
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். திருமணத்திற்கு முன் வேலைக்குச் சென்று நன்றாகச் சம்பாதித்த அல்லது சம்பளம் குறைவாகவே இருந்தாலும் தன் திறமையை நிரூபித்த ஒரு பெண்ணை திருமணம் என்ற சடங்கின் மூலம் இந்தியாவில் என்ன நிலைக்கு ஆளாக்கி வைத்திருக்கிறோம்?
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளல், வீட்டைப் பார்த்துக்கொள்ளல் என்று ஆயிரம் தடைகள் அவளுக்கு. இந்தப்போக்கிலேயே செல்லும் ஒரு இந்தியக் குடும்பத்தின் ஆண் திடீரென இறந்து போனால் அந்தக் குடும்பம் அட் லீஸ்ட் அடுத்த தலைமுறை வரையாவது நாசமாய் போகிறது.
இந்தத் திடீர் சோகத்தின் பாரத்தோடும், குடும்பத்தைக் காப்பாற்றும் பாரத்தோடும் பல வருடங்கள் கழித்து ஒரு பெண் வேலைக்குப்போக ஆரம்பித்தால் அவளின் பழைய திறமை மங்கிப் போயிருக்காதா? ஏன்? நாம் இன்டர்வியூவுக்குப் போகும்போதே ப்ரொஃபைலில் ஒரு ஆறு மாதம் வேலைக்குப்போகாமல் கேப் விழுந்திருந்தால் ஹெச்.ஆர் ஆசாமிகள் என்னென்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக