வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

நா ஒன் டாய் போட்டு வந்தேன் மிஸ், திம்ப சொங்க மிஸ்

 இன்றைக்கு ஆன்லைன் க்ளாஸ் ஆப்ஸர்வேஷனில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான EVS அதாவது "சுற்றுச்சூழல் அறிவியல்" வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒன்றாப்பு எனில், எல்.கே.ஜி மட்டும் பள்ளியில் படித்து விட்டு, கோவிட் காரணமாக யு.கே.ஜி முழு வருடம் பள்ளிக்கே போகாமல், ஒன்றாம் வகுப்புக்கு வந்துள்ள குழந்தைகள். சிலர் நேரடியாக எல்.கே.ஜி, ஊக்கேஜியெல்லாம் படிக்காமல் வந்தவர்கள்.
அழகாக, பொறுமையாக வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார் அந்த ஆசிரியை. ஆன்லைன் வகுப்புகளுக்கென்று சில விதிகளும், நியமங்களும் உண்டு. இருமொழி உபயோகம், பெற்றோர் அருகில் இருத்தல், கேமரா ஆனில் இருந்தல், மைக் மியூட்-டில் இருத்தல், கையில் வொர்க் புக் இருத்தல், அவ்வப்போது ஓரிருவர் பெயர் சொல்லி செக் செய்தல், தேவையான போது விதிகளைத் திரும்பச் சொல்லல், இதர, இதர. அவை அனைத்தையும் சரியாக பின்பற்றிக் கொண்டு இருந்தார் அவர். குழந்தைகளும் மிஸ் சொல்வதைக் கேட்டு சரியாக உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
பாடம் முடித்து Exercise - பயிற்சிப் பாடம் நடக்கையில் திடீரென அழகான கொஞ்சும் குரல் ஒன்று கேட்டது - "மிஸ், நா ஒன் டாய் (சூச்சூ) போட்டு வந்தேன் மிஸ், திம்ப சொங்க மிஸ்" என்றது அந்தக் குரல். வார்த்தைகள் புரியவில்லை ஆனால் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்று புரிந்தது. இதுபோல கோரிக்கை வரும்போது, வெவ்வேறு வகுப்புகளில் வெவ்வேறு வித மறுமொழிகள் வரும். இந்த மிஸ் என்ன சொல்லப் போகிறார் என்று அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
மிஸ், உடனே "என்னடா தங்கம்? பாத்ரூம் போயிட்டு வந்தியா? நான் திரும்ப பேஜ் 51 ஐப் படிக்கணுமா?" என்றார். "ஆமங் மிஸ்" என்று பதிலியது அந்தக் கொஞ்சும் குரல். சரி என்று "பசங்களா நான் மறுபடி இந்த எக்சைஸ் படிக்கப் போறேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பயிற்சியை மீண்டும் தெளிவாகச் செய்து காட்டினார் அந்த ஆசிரியை. 30 நொடிகள் தான் என்றாலும், நெட்வொர்க் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சனைகள் வரக்கூடிய ஆன்லைன் வகுப்பில் ஒற்றைப் பிள்ளைக்கான கோரிக்கையை முன்னெடுத்துச் செய்வது பெரிய விஷயம்.
தன் ஆசிரியை மேல் என்ன ஒரு நம்பிக்கையும், பிணைப்பும், உறவும் இருந்திருந்தால் அந்தக் குழந்தை கொஞ்சம் கூடப் பயமும், தயக்கமும் இன்றி இந்தக் கோரிக்கையை வைக்கும் என்று எண்ணிய போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அந்த அளவு சுதந்திரத்தையும் அந்த ஆசிரியை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
வகுப்பறைகள் மாறி வருகின்றன. கற்றல் முறை மாறி வருகிறது. ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான அணுகுமுறையும் நன்றாக மாறி வருகிறது. மாற்றத்திற்குத் தயாராக இல்லாத ஆசிரியர்கள் பின்தங்கிப் போவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக