பிரபல (உண்மையாகவே) வலைப்பதிவர் முத்துச்சரம் ராமலக்ஷ்மி மெயிலியிருந்தார்... டெல்லியில் இருந்து வெளிவரும் "வடக்கு வாசல்" இதழுக்காக ஒரு கட்டுரை தாருங்கள் என்று... தந்தாயிற்று.. இரண்டு நாட்கள் நேரம் கேட்டு...
எத்தனையோ வெப்சைட்டுகளுக்காக கட்டுரை எழுதியிருந்தாலும், விகடன், குமுதங்களில் ஜோக்குகள் எழுதியிருந்தாலும், என்னுடைய முழுக்கட்டுரையை இப்போது தான் முதன் முதலாக அச்சில் பார்க்கிறேன்... மனம் பொங்கி நிற்கும் சந்தோஷம் வார்த்தைகளில் தெரிவிக்க முடியாதது...
கட்டுரை நன்றாக, தெளிவாக "வடக்கு வாசல்" ஆசிரியர்களால் எடிட் செய்யப்பட்டுள்ளது.. வடக்கு வாசலுக்காகவே மற்றவர்கள் எழுதியிருக்கும் போது, போகிற போக்கில் நான் எழுதிய "போகிற போக்கில்" தான் அவர்களுக்கு அதிகம் வேலை வைத்துவிட்டது எனப்புரிகிறது.. என் பாணியிலான கமர்ஷியல் வேகமும், ஆங்கிலக்கலப்பும் அவர்களால் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இதுவும் நன்றே...
ஒரே ஒரு சிறு கருத்துப்பிழை... பக்கம் 33-ல் "அங்கிருந்து தினசரி கர்நாடக அரசுப் பேருந்து சேவையில் திருப்பதிக்கு" என்று அச்சாகி உள்ளது. அது "ஆந்திர அரசுப் பேருந்து" என்று இருக்க வேண்டும்
அந்த இதழில் வெளிவந்த என் கட்டுரை - "போகிற போக்கில்.... (ஓசூர் அல்லது ஹோசூர்)" - அதனை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.. ஆனால் எடிட் செய்யப்படாத வெர்ஷன் கீழே... (நன்றாக) எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் படங்களாக....
கட்டுரையை அச்சில் வெளியிட்ட "வடக்கு வாசலுக்கு" ஆயிரம் நன்றிகள்.. ஆசிரியர் பென்னேஸ்வரன் அவர்களுக்கும்.... ராமலக்ஷ்மி அவர்களுக்கு அதைவிட அதிகமாக...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போகிற போக்கில்.... (ஓசூர் அல்லது ஹோசூர்)
புதிதாக வாங்கியிருக்கும் ஆன்டிராய்டு வசதி கொண்ட ஸேம்ஸங் கேலக்ஸி மொபைல்.. கையில் இருந்தாலே ஒரு சந்தோஷம்... பாடல்கள், கேம்ஸ், கூகிள் மேப், மெயில்கள், யூ டியூப், மினி டைரி, ஜி டாக், தினசரிகள், வாராந்தரிகள், ஈ புத்தகங்கள், அதுபோக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கணக்காக விக்கிபீடியாவில் இருந்து வெதர் கண்டிஷன் வரை எல்லாவற்றையும் நோண்டி, நோண்டி மற்றவர்களுக்குச்சொல்வதில் ஒரு பேரானந்தம்... குழந்தையைப்போல ஒரு குதூகலம்..
ஓசூர் வந்து சில வாரங்களிலேயே பிளாஸ்டிக் கலன்கள் விற்கும் நபர் ஒருவர் நண்பர் ஆனார்... ஒரே விலை தான் சார்... நோ பேரம்.. என்ற அவரது ஸ்ட்ராடஜி இரண்டுமுறை கடுப்படித்தாலும், பிற இடங்களில் விசாரித்த போது அவரது விலை குறைவாகவே இருந்தது... அவரும் அந்தப்பக்கம் போனால் ஒரு சல்யூட் அடிப்பார்.. வண்டியை விட்டு இறங்கிப்போய் பத்து நிமிடம் உபயோகமாகப் பேசிவிட்டு வரலாம்...
அவரிடம் நம்ம ஆன்டிராய்டை நோண்டி பாருங்க இதோ பாருங்க சார் என்னமா குளுருது ஓசூரு, பதினெட்டு டிகிரி காமிக்கிது சார், நாங்கள்ளாலம் ஏஸி ரூம்லயே பத்தம்போது தான் வைப்போம் என்றேன்.. அவர் சிரித்துவிட்டு (சாரில் இருந்து இறங்கி) தம்பி பதினெட்டு வருஷம் முன்னாடி ஓசூர் வந்தேன். அப்போ இருந்த குளுருக்கு இதெல்லாம் ஒண்ணுமேயில்லங்க.. ஆறு வினாடிக்கு மேல வெறும் தரையில நிக்க முடியாது.. பல்லெல்லாம் கிடுகிடுன்னு ஆடும். அந்தக்குளுருலயும் ஸ்வெட்டர் போடாம திரிவேன்.. அதோட கம்பேர் பண்ணா இதெல்லாம் ஒரு குளிரே இல்ல...
ஊட்டியில ஒரு பெரிய கான்வென்ட்ல தான் படிச்சேன்... சரியா இருபது வருஷம் முன்னாடி.. ஒருமுறை மேட்ச் விளையாடப் போனேன்.. முடிஞ்சதும் மொத்த டீமும் சேர்ந்து கிரவுண்டுல நின்னு முழு மலையும் தெரியுற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டோம்.. சும்மா பச்சைப் பசேல்னு பின்னணியோட இருக்கு அந்தப்போட்டோ... இப்போ ரெண்டு வாரம் முன்னாடி ஊட்டி போனேன்... இந்த வாட்டி குடும்பத்தோட... அதே கிரவுண்டுல அதே இடத்துல நின்னு போட்டோ எடுத்துகிட்டேன்.. இப்போ பாருங்க... காண்பித்தார்... ஷாக்கிங்.. அந்த மலை முழுக்க கட்டிடங்கள்... கான்கிரீட் குன்றுகள்...
இதே மாதிரிதான் தம்பி ஓசூரும் ஆயிடுச்சு.. இதுவும், பெங்களூரும் இருந்த நல்ல க்ளைமேட்டுக்கு சுற்றுலாத்தலமா ஆகியிருக்க வேண்டிய இடங்க... ஆனா பெங்களூரு புல்லா சாஃப்ட்வேர் கம்பெனி, ஓசூர் புல்லா புரொடக்ஷ்ன் கம்பெனின்னு மொத்தமா மாத்திட்டாங்க.... இன்னைக்கு ஓசூருக்கு ஸாம்சங் பொருளுங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு லாரி லோடு வருதாம்... அவ்வளவும் விக்கிது.. எங்கேதான் போகுதோன்னு அந்த டிரைவர் சலிச்சுக்குறான்..
பெங்களூரில் ஐ.டியும், மற்ற கம்பெனிகளும் வளர வளர அங்கே பணியில் இருந்து கொண்டே கலாசாரத்தையும் விட்டு விடாமல், மற்ற செலவுகளையும் கட்டுப்படுத்தி, பிள்ளைகளை தமிழ் மீடியம் பள்ளிகளில் படிக்க வைக்கும் மனோபாவம் கொண்ட மிடில் கிளாஸூக்கு ஓசூர் ஓர் மகா, மெகா வரப்பிரசாதம்.. இங்கே வாடகைக்கோ, சொந்தமாகவோ வீடு வாங்கி, இங்கிருந்து தினசரி டிரெயின், பஸ் பிடித்து பெங்களூர் செல்பவர்கள் பல ஆயிரம் பேர்..
நான் யோசித்தேன் பதினெட்டு வருடம் முன்பு நான் எங்கே இருந்தேன் என்று.. கும்பகோணத்தில்.. இருந்த போது பக்கத்து வீட்டு பாபு அண்ணா ஓசூர்ல (பெரிய ஆச்சரியக்குறி) இருக்காங்களாம், ஓசூர்ல (மறுபடியும் பெரிய ஆச்சரியக்குறி) இருக்காங்களாம், ஹெச்.எம்.டி ல வேலையாம்... அங்கயே செட்டில் ஆயிட்டாங்களாம்.. ஓசூர், ஓசூர் என அக்கம்பக்கத்தவர்கள் ஓதியது ஓசூர் பற்றிய ஒரு பெரிய, இனம்புரியாத பிம்பத்தை மனதில் தோற்றுவித்திருந்தது... (ஓசூரைப்பார்த்தாயிற்று.. ஆனால் பாபு அண்ணாவைத்தான் நான் பார்த்ததே இல்லை..)
பாபு அண்ணாவிற்கு ஒரு தம்பி, கணேஷ் அண்ணா என்று.. டீனேஜ் முடியும் தறுவாயில் தங்க(ம்) வேலை செய்து, சில வருடங்களிலேயே பெரியாளாகி கூடவே தொழில் செய்த மெட்ராஸ் நண்பன் ஒருவனால் ஏமாற்றப்பட்டு, ஆளவந்தாருக்கு பின்பு, நாவரசுக்கு முன்பாக துண்டு துண்டாகி சன் டிவி ஃப்ளாஷ் நியூஸில் வந்தார். மெட்ராஸ் காரனை நம்பாதே நம்பாதேன்னு சொன்னேனே கேட்டியா? என்று அந்த அத்தை அழுதது இன்னும் கண்களிலேயே நிற்கிறது.. கணேஷ் அண்ணாவின் துண்டு துண்டான உடலின் போட்டோவை இன்னமும் மறக்க முடியவில்லை..
ஒரு ஊர் என்பது வாழ்க்கையை ஓட்டுவதற்கான, குடி இருப்பதற்கான ஓர் இடம் மட்டுமே என்ற எனது எண்ணத்தை அடியோடு துடைத்தெறிந்த இரு சம்பவங்கள் அவை.. ஊர் என்பது ஊர் அல்ல அது ஓர் உயிர்... எண்ணிப்பார்க்கையில் என் வாழ்க்கையில் திருப்பூர், கும்பகோணம், சேலம், ஈரோடு, கோவை, சென்னை, அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாக டெல்லி மற்றும் மும்பை, இப்போது ஓசூர் என மாறி மாறிப்புயலடித்ததில் நான் கொண்ட பாதிப்பு தானேவை விட மிக அதிகமே...
மூன்று வருடம் இருந்திருந்தாலும் சென்னையின் கலர் என்னைப்பொறுத்த வரை கறுப்பு தான்... சென்னை பற்றி எனது மனதில் ஊறிய பிம்பங்கள் என் சென்னை வாழ்க்கையை தட்டில் ஊற்றிய பாதரசம் போல் ஒட்டாமலேயே இருக்கச்செய்தது.. ஆனால் ஓசூர் எனது கற்பனையில் ஒரு இனம்புரியா பிம்பமாகவே பதிந்து போயிருந்தது... வந்து ஒன்றரை வருடமாகியும் இன்னமும் அப் புதிரை என்னால் அவிழ்க்க முடியவில்லை...
ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து இடது புறமாக சுமார் 7 கிலோமீட்டர் கடந்தாலே போதும் ஊர் முடிந்து விட்டது.. கர்நாடகா உங்களை வரவேற்கிறது.. என்று எல்லா படங்களிலும் தலைகாட்டும் ஆர்ச் வரவேற்கிறது.. போனில் தவறிப்போய் இன்கமிங் அட்டெண்ட் செய்தால் போச்சு... ரோமிங் பாஸ்... ஜாக்ரதை. ஓசூர் முழுக்க சிப்காட் ஒன்று, சிப்காட் இரண்டு, என்று அசோக் லேலண்டில் துவங்கி, டி.வி.எஸ், டி.டி.கே, ஹெச்.எம்.டி என எவ்வளவோ கம்பெனிகள்.. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தினக்கூலி, வாரக்கூலி, மாதச்சம்பள தொழிலாளிகளை ஏற்றியபடி அங்குமிங்குமாய்ப்பறக்கும் கம்பெனி வண்டிகள்...
ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர், ஆட்டோ ஏறி அமர்ந்து எவ்ளோண்ணா (தமிழ்) என்றால் நாப்பது என்று பதில் வரும்.. "ஏமி அன்னையா? இந்த்தா செப்தாவு?" என்றால் "சரி முப்பை ரூபாய் இவ்வு..." (என்னண்ணே, இவ்ளோ சொல்றீங்க? சரி முப்பதே கொடு) சடாரென ஷேர் விலை கூட இவ்வளவு இறங்காது...
ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும்போது அவசரத்திற்கு ஆட்டோ பிடித்தாலும், அங்கிருந்து வாபஸ் வரும்போது நடந்தே வந்து விடலாம், ஜஸ்ட் பதினைந்து முதல் இருபது நிமிடம், மிச்சமான காசை செலவு செய்ய வேண்டுமே? இளநீர் சாப்பிடலாமா? பனிரெண்டு ரூபாய்க்கு கூவிக்கொண்டிருந்த அம்மாவிடம் போய் "காய எந்த்த அம்மா?" என்றால் முகத்தை பார்த்து ஒரு வினாடி தாமதித்து "பதி ரூபாய்லு இவ்வப்பா... என்கிறார்.. புரிகிறதா? ஓசூரில் தெலுங்கின் ஆதிக்கம் அதிகம்... ரோட்டில் இறங்கி தைரியமாக எவரிடமும் தெலுங்கு பேசலாம்...
நான்காண்டுகளுக்கு முன்பு அலுவலக வேலையாக சென்னையிலிருந்து பேங்களூர் (ஸாரி, பெங்களூரு) சென்ற போது ஆபீஸில் அட்வைஸி அனுப்பினார்கள். அங்கே இறங்கி தைரியமாக ஹிந்தி பேசலாம், எல்லோருக்கும் புரியும், ஓட்டை ஹிந்தியாக இருந்தாலும் பரவாயில்லை, அடிச்சு விடு என்று அவர்கள் சொன்னதை நம்பி ஒருமுறை ஆட்டோவில் ஏறி லால் பாக் ஜானா ஹை, கித்னா லோகே என்றேன்.. என்ன ஆச்சர்யம், எழுபது ரூபாய் என்று (ஹிந்தியில் தான் அய்யா) பதில் சொன்னான், எனக்கு தான் இப்போது மறந்து விட்டது.
அதே போல் இப்போது என்னைக் கேட்டால் தைரியமாகச் சொல்வேன்.. ஓசூரில் தெலுங்கு ஆறாக ஓடுகிறது... தெலுங்கு, தமிழ், கன்னடம், மூன்றுமே இங்கே சாமானியர்களின் மொழிகள்.. அவ்வளவு ஏன்? மூன்றும் கலந்த ஒரு புதிய மொழியே உருவாகிக்கொண்டு இருக்கிறது...
ஒரு கன்னட ஃபேமிலி நேதாஜி ரோட்டில் ஓட்டல் நடத்துகிறார்கள்... நீங்கள் எந்த மொழியில் டிபன், பார்சல் கேட்டாலும் அசராமல் கன்னடத்திலேயே பதில் சொல்வார்கள்.. இரவத்து, மூவத்து, என்று கன்னடம் கற்றுக்கொள்ள பகீரதப்பிரயத்தனம் செய்து பார்க்கிறேன்.. ம்ஹூம்.. ரொம்பக் கடினமாக இருக்கிறது... சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த நண்பரை கூட்டிக்கொண்டு போனேன்.. வார்த்தைக்கு வார்த்தை ".....த்தா" போட்டுப்பேசும் அவனுக்கு மும்மொழி கலந்த இந்தச் செம்மொழி பேசக்கடினமாயிருந்தது..
நேஷனல் இன்டக்ரிட்டி என்று சொல்வார்கள்... இங்கே அது நிறையவே இருக்கிறது... கண்கூடாகத் தெரிகிறது.... அவ்வளவு ஏன்? சில பெங்காலித் தாய்மார்களைக் கூட காண நேர்ந்தது. எப்படி பெங்காலி என்று சொல்கிறாய் என்கிறீர்களா? அதற்கும் ஒரு க்ளூ உண்டு.. திருமணமானோர் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி, குங்குமத்திற்குப்பதில் நெற்றி மேல் ஆரஞ்சு நிற செந்தூரம் வைத்திருப்பார்களாம்.. பெண்கள் இடது கையில் கட்டாயமாக ஒரு தாயத்து கட்டியிருப்பார்களாம்... கட்டுமானத் தொழிலுக்காக வந்திறங்கி அங்கங்கே செட்டிலாகிப்போன பெங்காலித்தொழிளாளர்களின் பீவிக்கள் அவர்கள்...
மற்றபடி......
போத்தீஸ், சரவணாஸ் போன்ற பெரும் துணிக்கடைகள் ஏதும் இல்லை... பீட்ஸா இன்னும் வரவில்லை... பதினைந்து ரூபாய்க்கு நல்ல மீன் துண்டு கிடைக்கிறது.. கூர்க்கா பத்து ரூபாய்க்கு இரண்டாக மடங்கி கும்பிடு போடுகிறான்... மூன்று பெரிய ஜூவல்லரிகள் சமீபமாக களம் இறங்கியிருக்கிறார்கள்.. தமிழ்நாடு என்பதற்கு ஆதாரமாக ஒவ்வொரு தெருவும் டாஸ்மாக் கொண்டிருக்கிறது... சன் க்ரூப் சேனல்கள் இந்த மாதத்தில் இருந்து வராது என முப்பது ரூபாய் குறைக்கிறார் கேபிள்காரர்,
(அங்கங்கு ஆந்திரா வாடை குறைந்த) ஒன்றிரண்டு ஆந்திரா மெஸ்கள் தட்டுப்படுகின்றன, தொண்ணூறு சதவீத ஓட்டல்கள் நான் வெஜ் விற்கின்றன, பெங்களூர் புறநகர் ஒன்றில் இருந்து டொனேஷன் கேட்டு கதவைத்தட்டுகிறாள் ஒரு அம்மா, ஹைவேஸ் வந்த பிறகு ஓல்டு பெங்களூர் ரோடு கடைகளாலும், டிராபிக்காலும் நிறைந்து போயிருக்கிறது.. எல்லா பெரிய ஊரிலும் இருக்கும் எம்.ஜி (மகாத்மா காந்தி) ரோடு இங்கும் ஒன்று உண்டு..
நகரைச்சுற்றியுள்ள தியேட்டர்களில் விஜய்யின் தமிழ் "நண்பன்", ப்ரின்ஸ் மகேஷ் பாபுவின் தெலுங்கு "பிஸினஸ்மேன்", ஹிந்தி வித்யா பாலனின் "டர்ட்டி பிக்சர்", ஹிந்தி கரன் ஜோகரின் "ஏக் து, ஔர் ஏக் மே", இங்கிலீஷ் ராக் நடித்த "ராட்சத பல்லி"யும் ஓடுகிறது அந்தந்த மொழிகளிலேயே... எல்லா தியேட்டர்களிலும் பேனர் கட்டுகிறார்கள், முதல் வாரம் ஹவுஸ்புல் ஷோக்கள், அதே தெருமுனைக்கடைகளில் அதே படத்தின் டி.வி.டி கிடைத்தாலுமே...
ஊரில் மிகப்பிரபலம் சந்திர சூடேஸ்வரர் ஆலயம், மலைக்கோவில். ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் அந்த மலையும், கோவிலும் தெரிகிறது.. கூகிள் மேப் தேவையே இல்லை.. கோபுரத்தைப்பார்த்தபடியே வழிகண்டுபிடித்துப்போய்விடலாம்.. அதற்கு முன்னால் இருந்த மலையில் தான் கொஞ்ச நாள் ஹோசூரின் டெம்பரவரி பஸ் ஸ்டாண்டு இருந்தது.. பழைய பேருந்து நிலையத்தை இடித்து, மராமத்து பார்த்து புதுப்பித்து சென்ற வருடம் ஸ்டாலின் அமைச்சராயிருந்த போது திறப்பித்தார்கள்.. பை தி வே, அவர் கலந்து கொண்ட கடைசி திறப்பு விழாவும் இதுதான் என்றார்கள்..
அங்கிருந்து தினசரி ஆந்திர பஸ் சர்வீஸில் திருப்பதிக்கு இரவு வண்டி உண்டு முன்பதிவு வசதியுடன், ஜிலேபி எழுத்துக்களுடன் நீண்ட மெட்டாடர் வேன் டைப்பிலான ஒரே ஒரு திறப்பு வைத்த பெங்களூர் பஸ்ஸூகள் சாரி, சாரியாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன, திருக்குறள் எழுதப்பட்ட நம்ம ஊர் தானா ஆனா (தமிழ்நாடு அரசு) தமிழ்நாட்டுவண்டிகள் அரசுப்பேருந்துகள் நிறைய..
ஓசூரில் இருந்து இடதுகைப்பக்கம் திரும்பி ஒரு பத்து கிலோ மீட்டர் போனால் கர்நாடகா வந்து விடுகிறது... சத்யஜித்ரே படத்தை விட சூப்பரான (ரோடே இல்லாத) கிராமங்களைப்பார்க்க முடிகிறது.. அப்படியே வலது கைப்பக்கம் திரும்பி ஒரு பதினந்து கிலோமீட்டர் போனால் ஆந்திரா... செமை மசாலா வாசனையுடன் கூடிய மக்களையும் பார்க்க முடிகிறது... இந்தப்பக்கம் ஆந்திரா பார்டர், அந்தப்பக்கம் கர்நாடகா பார்டர், நடுவில் ஓசூர்... பள்ளிகளில் தெலுங்கு டீச்சர், தமிழ் டீச்சர், கன்னடா டீச்சர், ஹிந்தி டீச்சர் கண்டிப்பாக உண்டு....
பணி நிமித்தமாக ஓசூரைச்சுற்றியுள்ள பள்ளிகளுக்குச்செல்லும் போது இப்போது நான் டீச்சர்களிடம் மறக்காமல் கேட்கும் முதல் கேள்வி...
"எல்லாருக்கும் தமிழ் தெரியுமா? அல்லது என் டிரெயினிங்கை ஆங்கிலத்திலேயே தொடரட்டுமா?"....
நேஷனல் இன்டக்ரிட்டி