திங்கள், 24 நவம்பர், 2014

பேங் பேங் - சினிமா ரசிகனா இருக்கறது குத்தமாய்யா?


டாம் குரூஸ், கேமரூன் டயஸ் அசத்திய நைட் அண்ட் டே-வின் அஃபீஷியல் ரீமேக் என்று விக்கியில் போட்டிருந்ததை நம்பி பார்க்கத் துணிந்தேன்.

நைட் அண்ட் டே-வில் கூட படத்தின் வேகத்தில் பல லாஜிகல் கேள்விகள் இரண்டாவது முறை பார்க்கும் போது தான் தோன்றும். முதல் முறை பார்க்கும் போது, "ச்ச, சூப்பர்ல" என்றே இருந்தது. எந்த விளைவுகளையும் யோசிக்காமல் "மோதி மிதித்துவிடு பாப்பா" என்று அடித்துப் பிளந்து, தடால் புடால் என்று தன்னை எதிர்த்தவர்களை தொம்சம் செய்து கொண்டே போகும் ஒருவனை வைத்து நம்மூர்லயும் இப்படி ஒரு படம் வந்தா எப்டி இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் அதை பேங் பேங்-கில் பார்க்கும் போது அண்ணன் வடிவேலு போல எனக்கு நானே விரல் நீட்டி "உனக்கு இது தேவையா?"

அங்கே பேட்டரி என்றால் இங்கே கோஹ்-இ-நூர் வைரம். அங்கே ஃபயர் மேன். இங்கே மொக்கை எம்.டி. இது போக தேவையில்லாத ஒரு கிழவி கேரக்டரை திணித்து... கொடுமை.. இடுப்பில் துப்பாக்கி குண்டு காட்சியின் கேமரா கோணம் ஸ்டலோனின் ரோம்போ த்ரீயை ஞாபகப் படுத்துகிறது. ஒரிஜினல் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்க படத்துடன் ஒன்றவும் முடியவே இல்லை. கதையை இண்டியனைஸ் செய்கிறேன் பேர்வழி என்று பஸ் ஸ்டாண்டு வௌிக் கடையில் தீய்ந்து போன கொத்து பரோட்டா போல ஆக்கி விட்டார்கள்.

ஹ்ரித்திக்கை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தூம் ஒன்-னில் கூட ஏகப்பட்ட கெட்டப்பில் வருவார். தியேட்டரில் பாப்கார்ன் திங்கும் சீனில் நமக்கே நன்றாகத் தெரிகிறது, "ஏண்டா இந்தாளு கன்னத்துல நெறைய பவுடர் அட்ச்சிகினு வந்துருக்கான்னு. ஆனா பக்கத்துல இருக்குற ஐஸூக்கும், அபிக்கும் அடையாளமே தெர்லயாம். இதுக்கு எம்.ஜியாரோட மச்ச மேக்கப்பே தேவலைடா சாமி" என்று எண்ண வைத்தார் அதில். இதில் நல்லவேளை கெட்டப் சேஞ்ச் (மட்டும்) இல்லை.

பழைய புத்தகங்களில் சினிமா விமர்சனங்கள் படித்தால் "பாடல்களில் கருத்தாழம் இல்லை" என்று எழுதியிருப்பார்கள். போல, எனக்கு பொதுவாகவே ஹிந்திப் படங்கள் மீது அந்த எண்ணம் தான். சம்பந்தமே இல்லாமல் மேம்போக்காக ஓடும். அதிலும் இப்போது வசூல் மட்டுமே அவர்களது குறிக்கோள். கலாச்சாரம், சமூகம் பற்றிய படங்கள் தியேட்டருக்கு வந்தால் இழவுகள் ஸாரி இளசுகள் வாட்ஸ் அப்பிலேயே அடித்துத் துவைத்து விடுகிறார்கள்.

இனிமேல் ரீமேக் படங்களை பார்க்காதடா கார்த்தி... என்று தான் சொல்லிக் கொண்டேன்.

இது காறும், நான் பார்த்த வரையில் சிங்கம் மற்றும் கஜினி ரீமேக்குகள் தான் தேவைக்கேற்ற அருமையான மாறுதல்கள் கொண்டு பாக்ஸ் அபீஸையும் கிளப்பு கிளப்பு என்று கிளப்பியவை. இரண்டிலுமே லாஜிக்கலாக டிங்கரிங் செய்து திறமையாக கிளைமாக்ஸையே மாற்றியிருப்பார்கள். இதில் ஒரிஜினல் கஜினியே மெமெண்டோவின் ரீமேக் தான் என்று நோலனுக்குத் தெரியாது. (ஹி.ஹி. யாராச்சும் மெயில் தட்டீராதீங்கப்பா).

இன்னும் கப்பர் சிங் பார்க்கவில்லை. அதுவும் அப்படி அடிப்பொளி கிளப்பியதாகக் கேள்வி. தபங்-கை ஓஸ்தியென்று நாஸ்தி செய்த தரணி அய்யா (பாவம் அம்பு, அதோட வில்லு சிம்பு) செய்ததையெல்லாம் பார்த்ததில் ரத்தமே வந்தது எனக்கு கண்ணில். விட்ருங்கடா... எங்களை.. சினிமா ரசிகனா இருக்கறது குத்தமாய்யா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக