ஞாயிறு, 30 நவம்பர், 2014

மதமாற்றமும் நாத்திகமும்

நண்பர் ஒருவர். அவர் பெயர்.... வேண்டாம். இப்போதைக்கு தான் இந்துவா? கிறித்துவரா? என்ற தெளிவு அவருக்கே வரவில்லை. வரும்போது பெயர் சொல்கிறேன். மேட்டர் அதான். பூஜையறையில் ராமர், ஆஞ்சநேயர் முதல் குபேரன், பாலாஜி வரை நமக்காகப் படைக்கப் பட்ட எல்லா சூப்பர் ஹீரோ ஸ்வாமிகளும் உண்டு. ஆனால் வரவேற்பரை முதல் பாத்ரூம் கண்ணாடி மாட்டும் இடம் வரை ஏசப்பா ராஜ்ஜியம், டி.விக்கு அருகில் பைபிளும், புதிய ஏற்பாடு புத்தகமும், மேரி மாதா வாசலிலேயே ஆசீர்வதிப்பார், கரண்டு போனால் எடுக்கும் மெழுகுவர்த்தி கூட கிறித்தவர்கள் ஸ்டைல் ஸ்டாண்டில் அமர்ந்திருக்கிறது. பழைய மர சோபா செட் வந்திருக்கிறது, அதில் துணி போர்த்தியிருக்கிறார்.

ஒரு மீடியம் சைஸ் டவுன் அருகில் பத்து கி.மீ தள்ளியுள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். நிரந்தர வருமானமென்று ஏதும் இல்லை. பழைய பூர்வீக வீடு. ஆகவே வாடகைப் பிரச்சினையில்லை. அரிசி, பருப்பென்ற தினப்படிக்கு மாரடித்தாக வேண்டும். நல்லவரே. சோம்பேறியின் அடையாளங்களுமுண்டு. மழையின்றி காய்ந்திருக்கும், கிணறற்ற, உபயோகமற்ற ஒரு ஏக்கர் நிலமுமுண்டு.

அவரைப்பார்க்கப் போயிருந்த ஒரு லீவு நாளில் "இங்க என்ன கோயில்டா ஃபேமஸ்" என்றேன். சொன்னார். "கோயிலுக்குப் போலாமாடே" என்ற கேள்விக்கு "இல்லடா நாங்க இப்போ ஏசப்பாவ கும்பிடுறோம்".

"என்னடா சொல்ற?" என்றால், "ஆமாடா, இங்க டவுன்ல மாதா கோவில் சர்ச்சு ஒண்ணு இருக்கு. நாத்திக்கௌமயானா வண்டி வச்சு கூட்டிட்டுப் போறாங்க. கூட்டு ஜெபம் நடக்கும், ஜெபம் முடிச்சு மத்தியானம் பிரியாணி போடுவாங்க. பண்டிகைன்னா துணிமணி தர்றாங்க. வருஷத்துல பத்து பதினஞ்சு நாளு பெரிய திருவிழாவா நடக்கும். அப்போ கலந்துகிறவங்களுக்கு அன்பளிப்பு கிஃப்டெல்லாம் தருவாங்க. பசங்களுக்கு ஞானஸ்நானம் செஞ்சு விட்டாங்க.

உடம்பு சரியில்லைன்னா வீட்டுக்கு வந்தே ஜெபிப்பாங்க. மனசுக்குத் தெம்பா இருக்கும். அவுக ஆளுங்க டாக்டரு கம்மியா பீஸூ வாங்கிக்குவாரு. சர்ச்சுக்குப் போக தலைக்கு எறநூறு ரூவா தாராய்ங்க. நாங்க நாலு பேருல்லா. வாரம் எட்டு நூறு கெடக்கிது. மாசம் எவ்வளவுன்னு பாரு. என்றவரிடம் கொஞ்சம் மௌனம். மெள்ள. .. "நம்ம கோயிலுக்குப் போனா ரொம்ப செலவாவுதுடா" என்றார்.

நான் யோசித்தேன். நம்ம கோவிலுக்குப் போகலாம்னா செருப்பு பாதுகாக்குமிடத்திலேயே ஓவா இரண்டு, ஒரு ஜோடிக்கு எடுத்து வைக்கணும். ஆக எட்டு பத்து ரூவாய் அங்கேயே. பைக்கோ, காரோ பார்க்கிங் பத்து இருபது ரூபாய், கடவுளுக்குப் படைக்கப் பட்ட பிரஸாதத்ததை இலவசமில்லையாம், இப்போது துட்டு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமாம். லட்டு, பஞ்சாமிர்தம், பொங்கல், புளியோதரை என வகைக்கு பத்து முதல் முப்பது ரூபாய் வரை பாக்கெட், அனைத்தும் சேர்ந்த ஒரு பை நூறு அல்லது 150 ரூபாய். மேற்படி தாகசாந்திக்கு மினரல் வாட்டர் பாட்டில் தான் கிடைக்கும். அதுக்கு தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பொது தரிசனம் இலவசம், ஆனா ஒரு நாளாகும் கியூ நகர, 20 ரூபாய் தரிசனம், 50, 100, 500 ரூபாய் தரிசனம் என்று வகைகளும் உண்டு. அதற்கேற்றாற்போல் சந்நிதியில் மூங்கில் கட்டைகளால் அடுக்கடுக்காகப் பிரித்திருப்பார்கள். பின்னடுக்கு பொதுவுக்கு, முன்னே போகப் போக கட்டணக் கூடுதல். 2500 ரூபாய் கட்டணமும் பூசாரிக்கு சம்பாவணையும் வைத்தால் விக்கிரகத்தையே தொட அனுமதிக்கும் கோவில்களும் நம்மூரில் உண்டு.

உள்ளே நுழைகையில் பூஜை சாமான்களுக்குத் தனிப்பை, தனி ரேட்டு, மாலை ஒன்று ஆரம்ப விலை 60. பூஜைத்தட்டு மூங்கிலில் இருந்து எவர்சில்வர் வரை 60 முதல் 150 வரை. அர்ச்சனைக்குச் சீட்டு பத்து ரூபாய், அபிஷேகத்திற்கு சீட்டு, தோஷம் போக சீட்டு, அதில் ஊழல் ஆக அதற்கு இப்போது எலக்ட்ரானிக் மெஷின் வந்து விட்டது. மொட்டையடிக்க தனி சீட்டு, மொட்டையடிப்பவனுக்கு தனி காசு. அதான் ஆல்ரெடி அடிக்கிறீங்களே.

கோவில் குளத்தில் குளிக்க ஆண்களுக்கு தனி சார்ஜ், பெண்களுக்கு தனி சார்ஜ், கோயிலுக்குள்ளே பப்ளிக்குக்கு நவீன கட்டணக் கழிப்பிடம். நவீன கட்டணக் கழிப்பிடமென்றால் என்னவென்று பலருக்கும் டவுட்டுண்டு. ஒரு நல்லவன் நவீன கட்டண முறை கழிப்பிடம் என்றெழுதியிருந்தார் ஒரு கோவிலில். வாழ்க நீ எம்மான்.

கோவில் பெரிது, , பெரிசுகளால் நடக்க முடியவில்லையா? எலக்ட்ரானிக் கார், அதுக்கும் துட்டு குடுத்துப் போகலாம். சரி, முன்னே போய் அவர்கள் தனியாக என்ன செய்வார்கள், விதியே என்று மொத்தக் குடும்பத்துக்கும் சீட்டு எடு. கணக்குல சேத்துக்கோ. எல்லாம் முடிந்து தரிசனம் செய்து விட்டு நின்றால் பூசாரியின் தட்டில் காசு போட வேண்டும், ஸாரி, இப்போது காசுக்கு மதிப்பில்லை, நோட்டு போட வேண்டும். உண்டியலில் காசு போடுகிறேன் என்று பையன் அழுதடம்பிடிப்பான். அதுக்கு தனியா எடுத்து வை. இது போக சிறப்பு நாட்கள் தரிசனத்திற்கு எல்லாமே டபுள் ரேட்டாகும்.

கோவிலுக்குள் யானையோ, குதிரையோ நின்றால் அதன் தும்பிக்கையில் காசு வைக்க வேண்டும், அதன் மேல் ஏற்ற குழந்தைகளுக்கு பத்து ரூபாய். சந்நிதியில் விக்ரகத்தின் காலடியில் உங்கள் குழந்தையை வைத்து ஆசீர்வதிக்க தனி காசு, ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைக்கு அப்படி வைக்க அனுமதியில்லை என்று ரூல்ஸ் போட்டு அதை உடைக்க டபுள் ரேட்டு. இதில் கண்ணாடி மாளிகை, அலங்கார மாளிகை, பழைய விக்ரக அறை என்று தனியாக ஒரு ஸ்பெஷல் அறையை ஏற்படுத்தில அதற்கு கட்டணச் சீட்டு,

ஒரு கோவிலுக்கு சாதாரணமாக போய் வரும் நிலையை மாற்றி "யாத்திரை" செய்யும் நிலை வந்திருக்கிறது. ஐந்தாறு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு முறை ஸ்வாமி கும்பிட 1000 ரூபாய் செலவுக்கு எடுத்து வைக்க வேண்டும். செலவுக்குப் பயந்து வேறு காரணங்கள் சொல்லி கோயிலுக்கெல்லாம் போவேணாம் என்று சொல்கிறான் ஒரு சாமானியக் குடும்பத் தலைவன். இதெல்லாம் போக பிச்சைக்காரர்களுக்குப் போடுவதும், போக்குவரத்துச் செலவும், குடும்பத்துடன் வெளியில் உண்ணும் செலவும், ஷாப்பிங் செய்து தொலைத்தால் அந்தச் செலவும் கணக்கில் இல்லை. ஆனால் அங்கே?

மதமாற்றமும் நாத்திகமும் எந்தப்புள்ளியில் ஆரம்பிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக