"நாடு முழுவதும் கழிப்பறை பயன்பாட்டின் நிலை என்ன?- ஐ-பேடு, செல்பேசியில் கண்காணிக்க மத்திய அரசு திட்டம்" என்ற செய்தியை படித்தவுடன் அடிக்கடி "பாவம்பா" என்று மனதில் தோன்றும் ஒரு விஷயம் நம் வீட்டுப் பெண்களுக்கும் நடக்கும் போது கடும் கோபமாக மாறுகிறது.
ஒரு அனுபவம். இரு குடும்பத்தினர் கோவை வ.உ.சி பூங்கா சென்றிருந்தோம். இரண்டு பூங்காக்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிப்பறை. அதுவும் குழாய் அடைப்பால் வேலை செய்யவில்லை. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் பட்ட அவதி ரொம்பக் கஷ்டம். மூன்று நிமிடங்கள் தூரத்தில் நின்றபடி கவனித்தபோது நிமிடத்திற்கு ஏழெட்டு பெண்கள் உள்ளே போய் விசாரித்து விட்டு அவதியுடன் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள்.
அவர் சொல்வது போல (பெண்கள் வழக்கம்போல அடிவயிற்றை இறுக்கிப் பிடித்தபடி எரிந்து விழுந்துகொண்டே வீடுபோய் சேரலாம்) நிலையில் வந்து சேர்ந்தோம்.
சுற்றி நூறு தெருக் கடைகள், குதிரை சவாரி, ரெஸ்டாரண்டுகள், இத்யாதி, இத்யாதி... அரசு மற்றும் அரசு சாரா வகையறாக்களில் எல்லா வித பணப்புழக்கமும் சரளமாக இருப்பதாகவே தகவல். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குழந்தைகளை அழைத்தபடி வந்து போகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் மினிமம் ஒரு ஆண், ஒரு பெண்மணி, ஒரு குழந்தை. டயப்பர் மாட்டிய குழந்தைகளுக்கு பிரச்சினையில்லை. மூன்று முதல் ஐந்து வரையிலுள்ள குழந்தைகளும் ஓரமாக ஒதுங்கி பிஸ்ஸடிக்கின்றனர். அதற்கு மேலுள்ள பெண் குழந்தைகள்? பெண்மணிகள்?
உடனே பெண்ணியவாதிகள் சிலிர்த்துக் கொண்டு வரவேண்டாம். ஆண்களுக்கும் அதாவது எனக்கும் தான் அவதி. நானும் பொதுவாக (வேலை விஷயமாக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளை கடக்கும் போது தவிர) பொது இடங்களில் ஓரம் ஒதுங்குவதில்லை. தண்ணீர் குடிக்காமல், ஜூஸ் குடிக்கும் ஆசையையும் தணித்துக் கொண்டு.... வர வேண்டியிருந்தது.
ஒரே ஒரு ஐடியா தான் தோன்றியது. ஏதாவது ஒரு ரெஸ்டாரண்டுக்குப் போய் லைட்டாக சாப்பிட்டு விட்டு (அதற்கு முன்பாக) அங்குள்ள கழிப்பறைக்குச் செல்லலாமே? ஆனால் இன்றைய விலைவாசியில் நூறு ரூபாய் செலவு செய்ய முடியுமா? "வீட்ல தான் மாவு இருக்கில்ல. போனவுடனே தோசை ஊத்த வேண்டியது தானே" என்ற மிடில் கிளாஸ் மனசாட்சியின் குரலுக்கு மதிப்பு கொடுத்து அவசர அவசரமாக வீடு திரும்பினோம்.
சமீபமாக சிறுநகர், கிராமப்புறங்களில் "நம்ம டாய்லெட்" என்ற ஒரு புதுத்திட்டத்தைப் பார்க்கிறேன். ஆனால் அது எல்லா இடத்திலும் இல்லை. ஏன் மக்கள் இவ்வளவு அதிகமாகப் புழங்கும் இடங்களில் தேவையான கழிவறை இல்லை? ஏன் மாநகராட்சி இதை முன்னெடுத்து கழிப்பறைகள் (கொஞ்சம் கட்டணம் வாங்கட்டும், அப்போது தான் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்) அமைக்கக் கூடாது?
ஒரே கம்பேரிசன் தான். ஒரு ஏரியாவுக்கு இத்தனை என்று ஒரு தார்மீக வரையறை கூட இல்லாமல் டாஸ்மாக்கை அனுமதிக்கும் அரசு, எல்லா ஏரியாக்களிலும் டாய்லெட்டுக்கான வசதிகளை ஏன் செய்ய மறக்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக