புதன், 19 அக்டோபர், 2016

அளுகாச்சி



அதர்வன் பள்ளிக்குப் போகத் துவங்கி மூன்று மாதங்கள் ஆயிற்று. ஒழுங்காகத் தான் போய்க்கொண்டிருந்தான்.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக பள்ளிக்குப் போக ஒரே அழுகை. நடுவில் சில வாரங்கள் வெறும் சிணுங்கலோடு நிறுத்தியிருந்தவன், மீண்டும் அழுதுகொண்டே போகத் துவங்கியிருக்கிறான். கும்பகோணம் மகாமகம், பாம்பே ட்ரிப், உறவினர் வீட்டுக் கல்யாணம், விஜயதஸமி லீவுகள் கூடவே "நாங்களே எடுத்துக்குவோம்" லீவுகள், என நடுவில் சிலமுறை நெடும் விடுமுறைகள் எடுத்ததாலோ, அமைந்ததாலோ இருக்கும் இந்த அழுவாச்சி என்று நினைத்துக் கொண்டோம்.

ஆனால், நேற்று கவனித்ததில் விஜயதஸமிக்குப் பிறகு (பல) பள்ளிகளில் குழந்தைகள் கூட்டம் அதிகமாகியுள்ளது. முக்கியமாக ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி க்களில். (அவ்வளவு ஏன்? எங்கள் வீட்டிற்குப் பின்னால் புதிய பள்ளியே ஒன்று முளைத்துள்ளது)

ப்ரீ கே.ஜியில் மொத்தமே மூன்று பேர் என்பதால் எல்.கே.ஜி யுடன் அமர வைத்திருக்கிறார்கள்.

எனக்கெல்லாம் நாராயணன் மாமா அஞ்சு வயசில் அட்மிஷனுக்குக் கூட்டிப் போன போது "வலது கையைத்தூக்கி தலைமேல் வைத்து இடது காதைத்தொடு" என்ற ஒரே ஆக்டிவிடியில் ஒரு வருடம் பிரேக் கொடுத்தார் கும்பகோணம் திருமஞ்சன வீதி பெரிய வாத்தியார் "காது எட்டலடா, சின்னப் பையன், அடுத்த வர்ஷம் வா" என்று. "சன் ஆஃப் தி மாஸ்க்" போல காதையும் "ஃபென்டாஸ்டிக் 4" போல கையையும் நீட்டி எட்டிப் பிடித்திருந்தால் ஹாரி பாட்டர் போல "ஹாக்வர்ட்ஸ்இல்" இடம் கிடைத்து நாமளும் பெரியாள் ஆகி இருக்கலாமோ என்னவோ?

ஆனால் இவன், ஒரு வருடம் அட்வான்ஸாகப் படித்துக் கொண்டிருக்கிறான். "என்னடா படிச்சே இன்னிக்கு?" என்றால் "வன், டூ, த்தீ, ஐ, சிச், ச்செவன், எய்ட், டென், எவன், டுவய், தட்டீன், பிட்டீன்" என விட்டு விட்டு ஒப்பிக்கிறான்.

முன்பு இவன் தான் இருப்பதிலேயே குட்டியாய், சிவில் டிரஸ் அணிந்தபடி சென்று கொண்டு இருந்தான். மற்றவர்கள் எல்லாம் யூனிஃபார்ம். அட்மிஷன் போதே இவனுக்கும் யூனிஃபார்ம் வேண்டுமா? எனக் கேட்டார்கள். கட்டாயமா? என்றேன். ஆப்ஷனல் தான் ஸார் என்றதும், வேண்டாம் என்று சொல்லி விட்டேன். ஒரு வருஷம் தானே. அடுத்த வருஷத்தில் இருந்து இன்னும் சுமார் 14 ஆண்டுகள் யூனிஃபார்ம் கட்டி அழ வேண்டுமே.. பாவம்.

இப்போது இவன் வகுப்பில் இவனை விடக் குட்டி குட்டியாய் மூன்று பேர் புதிதாய் சேர்ந்திருக்கிறார்கள். நான்கைந்து கூக்குரல்கள் விடாமல் அழுதபடியே..

சரிதான். புது சகவாசம்.. "பூவோட சேர்ந்த நார்", "மேயற மாட்டை நக்குற மாடு", எக்ஸட்ரா, எக்ஸட்ரா...