மழைக்காலமா இருக்கு எங்க ஊர்ல. தினசரி மழை, தொடர்ந்து சிலபல பவர்கட்டுகள். எல்லாம் உண்டு. முந்தாநாள் பக்கத்து வீட்டு அங்கிள் ஒரு மக் தண்ணீரில் பினாயில் கலந்து அவங்க வீட்டை சுற்றி (மட்டும்) ஊற்றிக்கொண்டு இருந்தார். எனக்கு அப்பவே ஒரு டவுட்டு. என்ன சார் என்று கேட்டால் ஒன்றுமில்லை, மழைக்காலமா இருக்குல்ல, அதான், என்றார். (மழைக்காலத்துக்கும் பினாயில் ஊத்துறதுக்கும் என்னய்யா சம்பந்தம்?)
நேற்று நள்ளிரவு மூவிஸ் நவ்-ல் (எட்டாவது முறையாக) கராத்தே கிட் பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் தங்கமணி என்மேல் சாய்ந்து கேன்வாஸ் டூடில்-ல் கேண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென மேல் முதுகில் சுருக்கென்று ஒரு வலி. முள் குத்தியது போல. ஜேடன் ஸ்மித்-தை விட வேகமாக எகிறிக்குதித்தேன். அம்மணியையும் எழுப்பி விட்டுவிட்டு தலையணையை, பெட் ஸ்பிரெட்டையெல்லாம் உதறி, லைட்டை போட்டு என்னடாவென்று பார்த்தால்....
திருவாளர் பூரான் அவர்கள். சுமார் மூன்று இஞ்ச் அளவு இருக்கும். நல்ல கருஞ்சிவப்பு நிறம். எத்தனை ஜோடி கால்கள்? இரண்டு ஆன்டெனா கொடுக்குகள் வேறு. சர சர வென்று வளைந்து நெளிந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். பின்னாடியே நான் ஓட, அவர் ஓட, நான் ஓட, அவர் ஓட, தங்கமணியை சேரின் மேல் ஏற்றி நிற்கவைத்து விட்டு ஹால் பூரா அங்குமிங்கும் ஓடி வலியோடு நான் நடத்திய களேபரத்தில் பூரான் பாவம். எனக்கு கிங் காங் படத்தில் காட்டுக்குள் ஓடி டைனோசருக்கு பயந்து ஔியும் ஹீரோயினின் மேல் ஏறும் இரண்டடி நீள பூரானெல்லாம் நினைவில் வந்து பயமுறுத்தியது.
இப்போ தெரியுதா நேற்று ஏன் அங்கிள் பினாயில் ஊற்றிக்கொண்டிருந்தார் என்று? அட சொட்டைப் பக்கிப் பயலே, பூரான் என்று நேற்றே சொல்லியிருந்தால் நானும் கொஞ்சம் பினாயில் எடுத்து எங்க வீட்டையும் சுற்றி ஊற்றி வைத்திருப்பேன்ல?
பூரான் கடி எந்த அளவு விஷம் என்று எனக்குத் தெரியவில்லை. உடனே போனடித்து என் பாசமலரை எழுப்பிவிட்டேன். தங்கமணி ஒருபக்கம் போனில் அவரது அம்மாவை எழுப்பி விட்டார். இந்தப்பக்கம் லேப்டாப்பில் இணையத்தில் நுழைந்து விக்கி, கூகுளெல்லாம் செய்து பூரான் பற்றி தேடிப் பார்த்தால்.... பெரிய பிரச்சினையில்லை, லேசாக அங்கங்கு திப்பி, திப்பியாக வீங்கும், மற்றபடி விஷமெல்லாம் ஏறாது என்று ஆறுதலாக போட்டிருந்தார்கள். நல்ல வேளை. பாசமலரும், அத்தையும் கூட ஒண்ணும் பிரச்சினையில்லை என்று ஆறுதல் சொல்லிவிட்டு மருந்து தடவு, மாவு தடவு என்று சிம்பிள் வைத்தியமே சொன்னார்கள். மெடிக்கலுக்கோ, கிளினிக்குக்கோ போகலாம் என்று யோசித்தால் நட்ட நடுராத்திரி பூரான் கடிச்சா எங்கே போறது? (எனக்கு மட்டும் ஏண்டா இப்படிலாம் நடக்குது?)
நடு மண்டையை சொறிந்து நன்றாக யோசித்தேன். நம்ம கிட்ட தான் ஒரு கிரேட் மருந்து இருக்கே. அம்ருதாஞ்சனம்..... அதுவும் டிரெடிஷனல் மஞ்ச கலர் அம்ருதாஞ்சனம்..... கொஞ்சம் எடுத்து தடவி விட்டதும் அது கொடுத்த மகா எரிச்சலில் பூரான் கடியாவது, பாம்புக்கடியாவது, எரிச்சல் தருவதில் நம்ம அம்ருதாஞ்சனை அடித்துக்கொள்ள முடியாது.. கொஞ்ச நேரத்தில் ஜேடனின் குங் பூ கிக்-குகளை பார்த்துக்கொண்டே தூங்கி விட்டேன்.
காலையில் எழுந்திருத்து போய் எதிர்த்த வீட்டு ஆன்ட்டி-யிடம் மேட்டரை சொல்லிவிட்டு கைவைத்தியம் ஏதாவது இருந்தா சொல்லுங்க ஆன்ட்டிஎன்றால் அவர் தங்கமணி வயிற்றை பார்த்துவிட்டு "அவரை பூரான் கடிச்சா உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்" என்று (சீரியஸாக சொல்லிவிட்டு) ஒரு பூ எடுத்துக் கொடுத்தார்கள்.
நான் "ரெண்டு பாம்புக்குட்டி எடுத்துட்டு வந்து என் மேல விடுங்க ஆன்ட்டி, என்ன குழந்தை பிறக்குது-ன்னு பார்ப்போம்" - என்று சொல்லிவிட்டு வந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக