புதன், 16 அக்டோபர், 2013

ஆட்டுக்குட்டியும் மற்றும் இரு ஆடுகளும்



கோவை. அண்ணா சிலை பஸ் ஸ்டாப். இரவு கிட்டத்தட்ட பதினோரு மணியைத் தொட்டிருந்தது.

எப்போதும் சேலத்தில் இருந்தோ, ஓசூரில் இருந்தோ பஸ்ஸில் கோவை செல்லும்போது பஸ் ஸ்டாண்டு வரை செல்லாமல் கோவை நுழைந்ததுமே லக்ஷ்மி மில்ஸ் தாண்டி அண்ணா சிலை பஸ் ஸ்டாப்-பில் இறங்கிவிடச் சொல்வார் பாவா. பஸ் ஸ்டாண்டு தூரம் அதிகம். இங்கே இறங்கினால் லோக்கலில் வேலையாக இருந்தால் அவரே வந்து டூ வீலரில் கூட்டிப்போய்விடுவார். அல்லது அவ்வழியில் 2- ம் எண் பேருந்து வந்தால் அதில் ஏறி அவர்கள் வீடு வரை ஒரே பஸ்ஸில் போய்விடலாம்.

அன்று கோவை முழுக்க இருட்டில் அமிழ்ந்து போய் இருந்தது. பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரமாக அந்த பெண் வியர்வை வழிய நின்று கொண்டு இருந்தார். நான் இறங்கியதும் அங்கிருந்த பெஞ்ச்-சில் சாய்ந்து உட்கார்ந்தபடி என்னுடைய ஸேம்ஸங்கில் கேன்டி கிரஷ் விளையாடிக்கொண்டிருந்தேன். பாவா வர லேட்டாகும். லோக்கல் பேருந்துகள் நேரம் முடிந்து விட்டிருந்தது.

நேரம் பத்து மணியைத்தாண்டவும் லோக்கல் பேருந்துகள் மௌ்ள மெள்ள ஷெட்டுக்குப் போய்க் கொண்டிருந்தன. அந்த பஸ் ஸ்டாப்பில் நான் வந்ததில் இருந்து ஒருசிலர் இறங்கியதும், அடுத்த பஸ் ஏறியதுமாக இருந்தனர். யாரும் ஒரிரு நிமிடங்களுக்கு மேல் நிற்கவில்லை என்னையும் அந்தப் பெண்ணையும் தவிர.

அந்தச் சாலை ஹைவேஸ் போல சிட்டி ரோடாக இருந்தாலும் மாநகரின் இயக்கம் சுத்தமாக நின்று போயிருந்தது. அங்கு ஸ்டேண்டில் இருந்த ஒற்றை ஆட்டோவும் சவாரிக்கு போய்விட்டது. பஸ் ஸ்டாப்புக்கு பின்னால் இருந்த பள்ளி மைதானமும் மரங்களுடன் அடர்ந்த கும்மிருட்டில் இருந்தது. நாய் கத்தல் போன்ற உபரி விஷயங்களும் உண்டு. அங்கங்கு சோகையாக வெளிச்சம் உமிழும் ஒன்றிரண்டு சோடியம் வேப்பர் விளக்குகள் மட்டும்.

இந்தப்பெண்ணின் முகம் இருளில் சரியாகத் தெரியவில்லை. சுடிதார் தான். அவளது உடல் மொழியில் ஒரு சங்கடம் தெரிந்தது. பயம், படபடப்பு எல்லாம். யாரையோ எதிர் பார்த்து ரொம்ப நேரமாக காத்துக்கொண்டிருந்தார். முதல் பாராவில் சொன்னது போல அந்த அபத்த கால்குலேஷனைப்போட்டு அவளும் இங்கேயே இறங்கியிருப்பாள் போலும். ஆனால் பெண் என்பதால் நேரம் செல்லச் செல்ல பயந்து விட்டிருக்கிறாள்.

என்னவென்று கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் வலிய உதவி செய்யப் போனால் ஒரு பிரச்சனை உண்டு. நம்மையும் தப்பாக நினைத்து விடுவார்கள். நினைத்தால் போய்த்தொலைகிறது. பரவாயில்லை. கத்தி கித்தி ஊரைக்கூட்டி விட்டால் நாம் நியாயம் பேசிக்கொண்டு இருக்க முடியாது. அக்கம் பக்கத்தில் ஆளரவம் இல்லை.

கொஞ்ச நேரம் போனது. சரி, கேட்போம் என்று நினைத்து கேட்டேன் "என்னங்க ஆச்சு? உங்களை கூப்பிட ஆள் வரலியா இன்னும்?" அவள் "வந்து கிட்டு இருக்காங்க", என்றாள் தயக்கத்துடன். "போன் இருக்கா உங்ககிட்ட?" என்றேன். பார்வையே இல்லை என்றது. "இந்தாங்க" என்றதும் கொஞ்சம் யோசித்து வாங்கிக்கொண்டாள். கொஞ்சம் தள்ளிப்போய் நின்று படபடவென நம்பரை டயல் செய்து யாருக்கோ அவசர அவசரமாகப் பேசினாள். திட்டினாள் போலத் தெரிந்தது. திரும்ப வந்து "தேங்க்ஸ்ங்க" என்று கொடுத்து விட்டுப்போனாள்.

நான் கேன்டி க்ரஷ்-ஷை தொடர்ந்தேன். அவள் தள்ளிப்போய் டென்ஷனாக நின்று கொண்டாள்.

என்னை கூட்டிப்போக பாவா வந்துவிட்டார். ஆனால் அவரைக் கூட்டிச்செல்லும் ஆள் இன்னும் வரவில்லை.

முதலில் அந்தப்பெண்ணை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டுச் சென்று விடலாம் என்றாலும் மனது கேட்கவில்லை... "பாவா, ஒரு ரெண்டு நிமிஷம் நிக்கலாம் பாவா" என்றேன். "என்ன விஷயம்?" என்றார். சொன்னேன். நின்றார். நின்றோம். ஒருவேளை அவரை அழைத்துப்போகும் ஆள் வர லேட்டானால் என்ன ஆகும்? இந்தப்பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டால்? நம்மால் உதவி செய்ய வாய்ப்பிருந்தும் அஜாக்கிரதையால் நம்மையும் அறியாமல் ஒரு சமூக குற்றம் நடைபெற விட்டுவிடக்கூடாதே. அப்போதுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் படங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.

ஒரு ஐந்தாறு நிமிடங்கள் இருக்கும். ஒரு ஜாலி பாய்ஸ் குரூப் ஒரு காரில் எங்களை கடந்து "ஓய்" என்று சத்தமிட்டுக்கொண்டே சென்றது. இவள் இன்னும் பயந்தாள். "பயப்படாதீங்க, நாங்க இருக்கோம்" என சொன்னார் பாவா. நானும் பேச்சுக்கொடுத்தேன். மேலும் ஓர் ஐந்து நிமிடங்கள்.

அப்படி இப்படி என கிளைமாக்ஸாக ஒருவழியாக அவளது ஆள் வந்துவிட்டான். யமஹா எஸ்டி பைக். ஆபீஸில் பர்மிஷன் போட்டு வந்திருப்பானோ அல்லது நீண்ட தூரத்தில் இருந்து வந்திருப்பானோ? டென்ஷனாக இருந்தான். அந்தப் பெண் அவனுடன் பைக்கில் ஏறி விட்டு எங்கள் இருவரையும் பார்த்து "ரொம்ப நன்றிங்க" என்றார். அவனிடம் "நான் தனியா இருக்கேன்கறதுக்காக துணைக்கு நின்னாங்க இவங்க" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் எங்களை கண்டுகொள்ளவில்லை.

எங்களுக்கும் கொஞ்சம் கடுப்பானது. "பார்த்துங்க. இங்க இறங்கறதுக்கு பதில் பஸ் ஸ்டாண்டுக்கே போயிருக்கலாம்ல? கொஞ்சம் லேட்டானாலும் கூட்டம் இருக்கும்ல, ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டு, லேட்டாச்சு கிளம்பலாம் என்று கிளம்பி விட்டோம்.

கொஞ்ச தூரம் போயிருப்போம். எங்களை வேகமாக ஒரு டூ வீலர் சேஸ் செய்வது போல இருந்தது. ஒரு சிக்னலில் நின்றோம். சேஸ் செய்த வண்டி வ்ர்ரூரூம் என்றபடி எங்கள் அருகில் வந்து நின்றது. பில்லியனில் நாங்கள் பஸ் ஸ்டாப்பில் பார்த்த அந்தப்பெண்.

வண்டியை ஓட்டி வந்த அவளின் ஆள் ஹெல்மெட்டை உயர்த்தி எங்களை பார்த்து "தேங்க்ஸ் பாஸ்" என்றான்.

6 கருத்துகள்:

  1. அதான் பாஸ் தெரியல. பெரிய புடுங்கி-ன்னு நினைப்பு. ஏதாவது நடந்ததுக்கப்புறம் மட்டும் மார்ல அடிச்சிகிட்டு அழுவானுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ANTHA HELMAT MANDAYAN UDANE YEAN THANKS SOLLALA//
      yeskha ஹெல்மெட் மண்டையன் மொபைல் நம்பர் உம்ம மொபைல்ல இருக்குல்ல. அவனுக்கு போன்(அ) போடும்.என்னன்னு கேட்டுருவோம்.(மைண்ட் வாய்ஸ் :ரெண்டு நாளா எவனுஞ் சிக்கல.இவனையும் உட்ரக்கூடாது")

      நீக்கு
    2. விடுங்க. போய்த் தொலையட்டும். ரொம்ப நாளாச்சு வேற. நம்பரை சேவ் பண்ணி வைக்கலை.

      நீக்கு
  2. அவரின் நன்றி கிடைக்கவில்லையெனினும் உங்களுக்கு மனதிற்கு திருப்தி கிடைத்திருக்கும் அல்லவா...

    பதிலளிநீக்கு

  3. கண்டிப்பாக. அந்த இடத்தில் நம்ம வீட்டுப்பெண் இருந்திருந்தால்?

    நாம் யாருக்கோ செய்யும் உதவி யாராலோ நமக்கு வேறேதேனும் வகையில் எப்போதேனும் திரும்ப வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    பதிலளிநீக்கு