புதன், 8 ஜனவரி, 2014

பீட்ஸா - 3


சுற்றி ஃபேமிலிக்கள் இருக்கும் இடத்தில் தங்கியிருக்கும் பேச்சுலர்கள் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.

வைஸ் வெர்சா-வாக சுற்றிலும் பேச்சுலர்கள் இருக்கும் இடத்தில் ஃபேமிலிக்கள் பாடும் கஷ்டம் தான். பெரிய பெரிய கம்பெனிகள், ஜூவல்லரிகளின் பணியாளர்கள் நிறைய பேர் தங்கியிருக்கும் இடங்களில் ஃபேமிலிக்கள் பாடுதான் கஷ்டம். அட்டகாசம் செய்வான்கள்.

எங்க வீட்டுக் காம்பவுண்டிலும் சுமார் ஒன்பது பத்து வீடுகள். அதில் ஒரு வீடு மட்டும் பேச்சுலருக்கு. மற்றதெல்லாம் குடும்பிகள், இப்போதைய நிலையில் என்னையும் குடும்பியாகச் சேர்த்து. நான் இங்கே வரும்போது பேச்சுலர்தான். எனக்கு முந்தைய வரலாற்றில் ஒரு சின்னப்பையன் இஸ்கோல் போவதற்காக பேச்சுலராக வந்தவன் நாளடைவில் மெள்ள மெள்ள அப்பா அம்மாவையும் கூட்டி வந்து விட்டான். அவன் ஒழுங்காக இருந்தமையால் அதற்குப்பிறகு பேச்சுலராக வந்து வீடு கேட்ட எனக்கு வீடு கிடைத்தது. ஒரே கண்டிஷன் "அசைவம் சமைக்கக் கூடாது" நான் ஓக்கே சொல்லிவிட்டேன். சமைக்கத் தானே கூடாது? வாங்கி வந்து சாப்பிடலாமுல்ல?

நானும் ரொம்பவே ஒழுங்கான பையனாக இருந்ததால் (வந்த உடனே கதவை சாத்தி விடுவேன். பூட்டிய கதவுக்குள் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், உனக்கென்ன போச்சு?) அடுத்து வரப்போகும் பேச்சுலர் பசங்களுக்கும் பிரச்சினையில்லாத ஒரு ராஜபாட்டை கம்பளம் போட்டு விரித்து வைக்கப்பட்டது. அவ்வப்போது நெட்டில் டிக்கெட் புக்கிங் செய்து தருவது, ஈ.பி பில் ஆன்லைன் பேமெண்ட் கட்டுவது, குமுதம் விகடனில் இருந்து நமக்கு அடிக்கடி வரும் மணியார்டர், மேனேஜர் என்று வீட்டு வாசலில் மொபைல் எண்ணுடன் நான் ஒட்டிய பேப்பர் எல்லாமாகச் சேர்ந்து நமக்கு சினேகப் புன்னகைகளை வாங்கித்தரவே செய்தது.

இரு சம்பவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இங்கே நான் என்னையும் ஒரு பேச்சுலராக நினைத்துக்கொண்டு எழுதுகிறேன். நான் இன்னும் என்னை குடும்பஸ்தனாக முழுமையாக ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. அவ்வப்போது கதறியழுது ஊரைக்கூட்டும் என் ஜூனியர் தான் நான் குடும்பஸ்தன் என கொஞ்சம் நினைவு"படுத்திக்" கொண்டிருக்கிறான்.

பேச்சுலர்களின் முதல் பிரச்சினை புவ்வா. அதைப்பற்றிய எனது ஒரு கட்டுரையை ஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி என்ற பதிவில் படித்துக்கொள்ளலாம்.

ஒருநாள் பீட்ஸா வாங்கி வரலாம் எனப் போனபோது சிப்பந்தியார் "மீடியம் மேஜிக் பேன் பீ்ட்ஸா வாங்கினால் இன்னோரு சாதா மீடியம் பீட்ஸா ஃப்ரீ சார்" என்றார். மேஜிக் பேன் பீட்ஸா. க்ரஸ்ட் நன்றாக மெத்து மெத்தென்று இருக்கும். சரி, ஒன்று வாங்குவோம் என்று ஆசையில் ஃப்ரீ-யையும் சேர்த்து வாங்கி வந்து விட்டேன். நானும் தங்கமணியும் வீட்டுக்குள்ளேயே கடைபரப்பி பீட்ஸாவை காலி செய்ய ஆசைப்பட்டோம். மூன்று பேருக்காகத்தான் வாங்கியது. ஆனால் மாமியார் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

போச்சு. ஒரு பீட்ஸா அப்படியே மிச்சம். மிஞ்சிமிஞ்சிப்போனால் ரெண்டு சிலைஸ் சாப்பிடலாம். மீதி நான்கு? சரி தானம் கொடுத்து விடலாம் என்றால் அங்கே தான் வந்தது ட்விஸ்ட். ஏதோ சுண்டல், பொங்கல் என்றால் கூச்சமின்றி அக்கம் பக்கத்து கதவை தட்டி கொடுத்து விடலாம். பீட்ஸா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், செரிமானம் ஆகாத பெரியவர்கள், லேசாக முறைத்துக்கொள்ளும் மேல் வீட்டு அங்கிள், கோயில் பூசாரி, பீட்ஸா பிடித்து தின்னத் தெரியாத நான்கு, ஆறு வயதுக் குழந்தைகள், லேட் ஷிஃப்டில் நடு ராத்திரி வரும் சொட்டை அங்கிள் என யாருக்கும் பீட்ஸா தானம் செய்ய முடியாதே?

"ஆடம்பரப்பொருளை இலவசமாகக் கூட கொடுப்பது கஷ்டமே" என்று எழுத்தாளர் என்.சொக்கன் ஒருமுறை டெல்லியில் இருந்து வந்து கொண்டிருந்த "வடக்கு வாசல்" என்ற அச்சிதழில் ஒரு கதையில் எழுதியிருந்தார். (இப்போது வடக்கு வாசல் மின்னிதழாக மாறி விட்டது) அது எனக்கு இப்போது புரிந்தது. என்னடா இது சோதனை. தூக்கிக் குப்பையில் போடவும் மனமில்லை. சுமார் 200 ஓவா அந்தப் பீட்ஸா.

அப்போது தான் சோத்துக்கு சிங்கி அடிக்கிற பேச்சுலர் குரூப்பு ஒண்ணு இருக்கே என்று நினைவு வந்ததும் போய்க் கேட்டேன். அந்த பேச்சுலர்கள் அறையில் நான்கைந்து பேர் இருக்கிறார்கள்.

ஓசூரில் பவர்கட் அதிகம். அப்போது பவர்கட். கதவைத்தட்டினால் திறக்கவே பயந்து ஒருவருக்கொருவர் நீ போ, நீ போ என்று பத்து நிமிடம் கழித்து வந்துதான் கேட்டார்கள். சொன்னேன். நாலு சிலைஸ் இருக்குப்பா, எத்தனை பேர் இருக்கீங்க? என்றதற்கு இன்னைக்கு நாலு பேர்தான் என்று பதில் வந்தது. ரொம்ப யோசித்து வாங்கிக் கொண்டார்கள். இருளில் யார் வந்து வாங்கினார்கள் என்று கூட நினைவில்லை. அந்த இருட்டில் பீட்ஸா வேண்டுமா என்றதும் அவர்களுக்கு பீட்ஸா படத்தின் ஷாட் கூட நினைவுக்கு வந்திருக்கலாம்.

ஆனாலும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்கள். லேப்டாப்பில் ஏதோ படம் போல. பார்த்துக்கொண்டே சாப்பிட்டு விட்டார்கள். இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருந்தால் கோக் கூட கொஞ்சம் ஊற்றிக்கொடுத்திருக்கலாம்.

அவர்களின் அடுத்த பிரச்சினை பிரைவஸி.
சுதந்திரமாக, சந்தோஷமாக இஷ்டப்படி திரிய முடியாதல்லவா?

ஒரு நாள் மாலை. அவர்களில் எவனோ ஒருவன் மொபைலில் வெகு ஜூவாராஸ்யமாக பேசிக் கொண்டிருந்தான். அந்தப்பக்கம் அவன் ஆள் போல.. வராண்டா முழுக்க நடந்தபடி. மேலே சட்டை, பனியன் எதுவும் இல்லை. ஒரே ஒரு ஷார்ட்ஸ் (கூட இல்லை, அதைவிட குட்டியாக ஒரு) டவுசர். ராமராஜன் செண்பகத்திடம் பால் வாங்க, ஐ மீன் கறக்கப்போகும் போது போட்டிருத்த டைட் ஜட்டி போன்ற டவுசர். மற்றவர்கள் அந்தக் கவர்ச்சியை ஒரு மாதிரி பார்த்தபடி நகர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவனுக்கும் பேச்சு மும்முரத்தில் எதுவும் தோன்றவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது? ஸாரி, இங்கே அது தப்பான உதாரணம். ஐ மீன் யார் அவனிடம் மாணிக் பாட்ஷா மாதிரி "உள்ளே போ" என்று கர்ஜிப்பது?

என் பேச்சுலர் பருவம் நினைவுக்கு வந்தது. சென்னையில் என் ரூமில் இருந்த இரண்டு தடி எருமைகள் ஜாக்கியில் சைடு கட் வருமே அந்த மாதிரி ஜட்டியை மட்டும் போட்டுக்கொண்டு மற்றதையெல்லாம் உருவி எறிந்து விட்டு நைட்டு முழுக்க கஷ்க நாத்தத்துடன் சுற்றுவார்கள். அந்தக் கொடுமைக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. அதனால் "போச்சு, எல்லாம் போச்சு. குடும்பஸ்தர்கள் இருக்குற இடத்துல பேச்சுலர்களை அலவ் பண்ணலாமா? பண்ணினா இப்படித்தான் எல்லா அசிங்கமும் நடக்கும்" என்றெல்லாம் மாமா-க்கள் போல புலம்ப எனக்குத் தோன்றவில்லை.

ஸோ, சிம்பிளாக அவனிடம் கேட்டேன். "தம்பி, உள்ள போறியா? போட்டோ எடுத்து பேஸ்புக்-ல போடவா?" என்றேன். பயபுள்ள, அதுக்கப்புறம் சட்டையில்லாமல் வெளியே வருவதே இல்லை. அந்த நாலு ஸ்லைஸில் ஒன்றாக இருக்கக் கூடும்..

1 கருத்து:

  1. நோஓஓஓஓ...பேஸ்புக்ல பேஸ் மட்டும்தான் வரணும்.ஃபுல் பாடியும் வரக்கூடாதுன்னு அலறிட்டு ஓடியாச்சா..?! இப்பல்லாம் தன்மானம் (முச்)சந்தியில இல்ல...பேஸ்புக்லதான் இருக்கு.

    பதிலளிநீக்கு