செவ்வாய், 4 மார்ச், 2014

ஹெல்மெட்

தமிழ் ஹிந்து-வில் வலைஞர் பக்கம் என்ற ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டு நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் அனுப்பிய கட்டுரை. ஒன்றரை மாதங்கள் ஆகியும் பிரசுரிக்கப் படவில்லை. இப்போது வலைஞர் பக்கம் தூக்கப்பட்டு விட்டது. ஆகவே கட்டுரையை என் ப்ளாக்-கில் பதிவு செய்கிறேன்.



கிராமத்துச்சாலை.. அதிசயமாய் நல்ல ரோடு. "ஓடாது பறக்கும்" என்ற பைக் .. பறந்தது.. ஓட்டியவன் என்னமோ நல்ல அனுபவசாலி தான். ஆனால் விதியும் கேயாஸ் தியரியும் சேர்கையில்? நானோ பின்னால் அமர்ந்திருந்தேன். இருவருமே ஹெல்மெட் இன்றி. நல்ல ரோடு. ஆகவே நல்ல வேகம்.

நாய் மோதி இரு சக்கர வாகனம் நிலைகுலைந்து போன விபத்துக்களை ஏற்கனவே நண்பர்கள் சொன்னதுண்டு. நமக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ரோட்டின் குறுக்கே ஓட யத்தனித்த நாய் டக்-கென்று ஸ்விங்க் ஆகி வந்த வழியே திரும்பி ஓட முயற்சித்தது. எங்கள் கணித்த எதிர்பார்ப்பு தவறி படுவேகத்தில் முன் சக்கரமும் நாயும் மோதிய போது சொழக் என்று ஒரு அதிர்வு தெரிந்தது, உடலில் உணரப்பட்டது.

"தட்"-டென்று வலது புறமாக சரிந்தது வண்டி. வீடியோ கேம்களில் வருகிறார்போல் அதி வேகத்தில் உலகம் எங்களை நோக்கி நகர்ந்து வந்தது. ஓ, ஒருவேளை நாங்கள் முன்னோக்கி இழுத்துச் செல்லப் பட்டோம் போலும். திரைப்படங்களில் உராய்வைக் குறைக்க சண்டைக் கலைஞர்களுக்கு ரோட்டில் மண் கொட்டப்பட்டிருக்கும். ஆனால் எங்களுக்கு அமைந்ததோ சுத்தமான தார் ரோடு.

அவன் 80 கிலோவுக்கு மேல் இருப்பான். ஜங்-கென்று அவனது தாடை தார் ரோட்டில் மோதியது. வண்டியின் ஹேண்டில் பார் தலையைத் தட்டியதில் சாலையைத் தொடாமல் தலை தப்பித்தது. முன் பல் ஒன்று துண்டாகி தெறித்து எங்கோ விழுந்திருந்தது. முழு உடலும் சரிந்து சாலையைத் தொட்டது. எனதும் தான். அவனது ஆஜானுபாகுவான உடல் ரோட்டில் மோத விடாமல் என் தலையைக் காப்பாற்றியது. நாய் எகிறிப்போய் எதிர்புறப் புதரில் விழுந்தது. சுமார் எண்பதடி தூரம் படுத்தபடி பயணித்திருப்போம்.

அவசர அவசரமாக எல்லாரும் ஓடி வந்தார்கள். ஓரிருவர் வந்து தூக்கி விட்டார்கள். யார் வீட்டுப் பையன்பா நீ? நீங்க எந்த ஊரு சார்? என்ற விசாரணைகளைத் தாண்டி என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. 108-க்கு போன் பண்ணுங்க என்றேன். கால் சென்டர் காரர்கள் அந்த இடம் எங்கே இருக்கிறது என்றார்கள். விவாதித்துக் கொண்டார்கள். விபரம் தெரிந்ததும் ஒரு வண்டி அனுப்ப முடிவெடுத்தார்கள்.

தடுமாறி எழுந்து நின்றேன். நடுக்கமாய் இருந்தது. உதறலாய் இருந்தது அவன் உடம்பு. என்னால் தூக்கி விட முடியவில்லை. கர்சீஃப்பை எடுத்து அவனது தாடையை அழுத்தினேன். நான்கே வினாடிகளில் கர்சீஃப் முழுக்க நனைந்தது. தாடையில் இருந்து அவ்வளவு அப்படி ரத்தம் வழிவதை நான் சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். எனக்கு முழு வலது பக்கம் முழுக்க ரத்தத்தீற்றல்கள். சட்டை கிழிந்து தொங்கியது. பெல்ட், ஷூ, பேன்ட், அண்ட டாயர் உட்பட அத்தனையும். உடல் முழுக்க சிராய்ப்புகள்.

பைக் ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட்டது. வண்டி சாவி, பேனா, தெறித்து விழுந்த செல்ஃபோன் பாகங்கள், சேகரித்து குவியலாய்த் தரப்பட்டன. நல்ல வேளை, லேப்டாப்புக்கு ஒன்றும் ஆகவில்லை. தண்ணீர் தெளிக்கப்பட்டது. குடிக்க வைக்கப்பட்டோம். கிராம மக்கள் தான் எவ்வளவு நல்லவர்கள்? (ம்...... இதே வண்டி ஒரு கிராமத்து சிறுவன் மேல் மோதியிருக்க வேண்டும். அப்போ இருக்குடி கச்சேரி உனக்கு). ஆம்புலன்ஸ் வந்தது. டக்-கென்று ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டாள் ஒரு கிராமத்துப்பெண்மணி. ஜி.ஹெச்-சில் இறங்கிக் கொண்டு "உன் கூட அவசரமா வந்ததுல பஸ்ஸூக்கு காசு எடுக்காம வந்துட்டோம் தம்பி" ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். 108-ல் நானும் ஏறுவேன் என்று கனவிலும் நினைத்துப்பார்த்ததே இல்லை. ஆம்புலன்ஸில் செல்லும் போது தலைவர் சுஜாதா சொன்ன கேயாஸ் தியரி ஞாபகம் வந்தது. அவனது தாடையில் கர்சீஃப் வைத்து அழுத்தியபடி அருகில் அமர்ந்திருந்த போது "ரன் லோலா ரன்" திரைப்படமும் நினைவுக்கு வந்தது.

காலையில் இருந்து நடந்த சம்பவங்களை பின் கோர்வையாய் அசைபோட்டேன். விபத்து நடந்த வினாடியில் இருந்து பின்னோக்கி. இதை எந்த இடத்தில் நேரக் கணக்கு மாறியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம் என்று.

திரும்பி வரும்போது லேட் ஆகியிருந்தது. ஏன் லேட் ஆனது? இன்று பார்க்கப்போன பெரிய மனிதர் சாப்பாட்டுக்கு போய் விட்டார். ஏன் போனார்? நாங்கள் லேட். ஏன் லேட்? வழியில் வண்டியை பஞ்சர் போட்டிருந்தோம், முக்கால் மணி நேரம் டிலே. ஏன் பஞ்சர்? ஒரு டாடா ஏஸை பின் தொடர்ந்ததால்? ஏன் பின் தொடர்ந்தோம்? ஒருவன் எங்களிடம் லிஃப்ட் கேட்டிருந்ததால்? ஏன் லிஃப்ட் கேட்டான்? அவன் கோவிலில் அமர்ந்திருந்தான். ஏன் கோவிலுக்கு போனோம்? டப்பாவிலிருந்த ஜவ்வரிசி உப்மா சாப்பிட.

ஏன் ஜவ்வரிசி உப்மா? அவல் உப்மா கேன்சல் ஆனதால். அவல் உப்மாவாய் இருந்திருந்தால் கொண்டு வந்திருக்க மாட்டேன். ஏன் அவல் உப்மா கேன்சல்? நேற்று கடைக்காரன் அவல் கேட்கையில் ஜவ்வரிசி தான் கொடுத்தான். ஏன் கொடுத்தான்? அவனுக்கு ஜவ்வரிசி தெரியாது. தமிழ் ஜவ்வரிசி. தமிழே தெரியாது. ஏன் தெரியாது? அவன் மாலுர் காரன். தமிழ்நாடு அல்ல. ஏன் மாலூரில் தமிழ் பேசுவதில்லை. ஏனென்றால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கையில் மாலூர் கர்நாடகாவுடன் போய் விட்டது. பிரித்தது யார்? சுதந்திரத்திற்கு முன் இருந்த தலைவர்கள். ஆகவே கேயாஸ் தியரிப்படி அந்த தலைவர்கள் தான் இந்த விபத்துக்கு காரணம்.

அந்த தலைவர்களின் மேல் எனக்கு கொஞ்சமாய் கோபம் வந்தது.

புத்தாண்டுப் பரிசாய் எனக்கு நானே ஒரு புதிய ஹெல்மெட் வாங்கிக் கொண்டு விட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக