ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு உணவு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு போன்ற மிக முக்கிய (மேலும் சில இருக்கலாம்) விஷயங்களை தான் வசூலிக்கும் வரியில் இருந்து செய்து தர வேண்டும். இது சாமானியனுக்கும் புரியும். புரியாவிட்டாலும் தெரியும், அதாவது நம்மூர்ல ரேஷன் கடை இருக்கணும், நம்மூருக்கு கவர்மெண்டு பஸ்ஸூ வரணும், நமக்கு கவர்மெண்டு ரோடு போட்டுத் தரணும் ஊருக்கு ஒரு கவர்மெண்டு பள்ளிக்கூடம் இருக்கணும், கவருமெண்டு ஆசுபத்திரி இருக்கணும் என்ற விஷயங்கள் அவனுக்குத் தெரியும். அவற்றில் மெள்ள மெள்ள நடக்கும் அநியாயங்களில் சிலவற்றைப் பற்றி யோசிக்கவே இந்தக் கட்டுரை.
ஆதார் அட்டையை கிட்டத் தட்ட கட்டாயமாக்கி ரேஷன் கார்டுடன் இணைத்து, வாடிக்கையாளரை வங்கிக் கணக்கு துவக்க வைத்து, அதை சிலிண்டர் கணக்கில் இணைத்து, கேஸ் சிலிண்டருக்கான அரசு மானியத்தை நேரடியாக பொதுமக்களின் கணக்கில் செலுத்துவது என்ற திட்டத்தில் அரசாங்கம் அடித்த கூத்து எதிர்காலத்தில் எங்கே கொண்டு போய் விடும் என்பது பற்றி பல பேர் ஆராய்ச்சி செய்து எழுதி விட்டனர்.
அதன் கதைச் சுருக்கம் என்னவென்றால் மானியப் பணம் வராவிட்டால் நீங்கள் எங்கேயும் போய் கேட்க முடியாது. மெள்ள மெள்ள மானியம் ஒதுக்கப் படுவது குறையலாம். இப்போதே ஒரு முறை சிலிண்டர் 710 ரூபாய் (வங்கிக் கணக்கில் மானியம் 309 ரூபாய்), அடுத்த முறை 630 ரூபாய் (மானியம் 208 ரூபாய்) வேறொரு ஏரியாவில் பழைய 440 ரூபாய் என்று ஏக குழப்படிகள். சம்பந்தப்பட்ட கேஸ் போடும் லைன் மேன், ஏஜன்ஸி, வங்கி, என யாரைக் கேட்டாலும்"எனக்குத் தெரியாது சார்" தான் பதில்.
மானியத்திற்கான பட்ஜெட் ஒதுக்கவில்லை, போதவில்லை என்று ஒரேயடியாக ஒரு நாள் நின்று போகும் வாய்ப்பும் உண்டு. அப்போது வங்கியில் கேட்பதா? ரேஷன் கடையில் கேட்பதா? கேஸ் ஏஜன்ஸியிடம் கேட்பதா? இன்டேன் போன்ற எல்.பி.ஜி நிறுவனத்திடம் போய் கேட்பதா? லோக்கல் கவுன்சிலரிடம் கேட்பதா? அல்லது சி.எம் செல்லுக்கு கம்ப்ளெயண்ட் செய்வதா என்று எந்த சாமானியனுக்கும் (இன்றும்) தெரியாது, நாளைக்கும் தெரியப்போவதில்லை. பஸ் கட்டணத்தை விதியே என்று வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்வது போல நாளைக்கு இதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இது மட்டுமல்ல. இதே போல வேறு பல விஷயங்கள் சத்தமில்லாமல் நடந்து வருகின்றன.
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் (இலவசமாக) சேர்க்கப்பட வேண்டும், அதற்கான மானியத்தை அரசு அப்பள்ளிகளுக்கு வழங்கும் என உத்தரவிடப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இது அமலில் உள்ளது. ஒரேயடியாக இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி மெள்ள மெள்ள பள்ளிகள் அதை பின்பற்றி வருகின்றன. அதிலொரு கூத்தாக, அதற்கான மூன்று வருட மானிய நிலுவைத் தொகை சுமார் 97 கோடி ரூபாய். அதைக் கொடுங்கள் என்று மெட்ரிக் பள்ளிகள் பல மாதங்களாக தமிழக அரசிடம் போராடி வருவதும், தற்போதைய செய்தியாக நம் (அஃபீஷியல்) முதல்வர், என்கிட்ட காசு இல்ல, இரு மத்திய அரசுகிட்ட வாங்கித் தாறேன் என்று மோடியிடம், சர்வ சிக் ஷா அபியான் தொகையில் இருந்து எங்களுக்கு கொஞ்சம் தாங்க என்று மனுப்போட்டு கெஞ்சி வருவதும் சமீப கால செய்திகள்.
கேஸ் மானியம் போல சேர்க்கை குறைவாக உள்ளது, செலவுகள் கட்டுப்படி ஆகவில்லை என்று காரணம் சொல்லப்பட்டு மெள்ள மெள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கப் படுகின்றன. இடிந்த பள்ளி வகுப்பறைகளையும், கழிவறைகளையும், சுற்றுச் சுவரையும் கட்டுவதில்லை. (பணம் ஒதுக்கினாலும் அது பலரின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது) இவற்றின் காரணமாகவும் மாணவர் சேர்க்கை குறைகிறது.
குறிப்பிட்ட பாட்டம் லைன் அளவுக்குக் கீழே சேர்க்கை குறைந்தால் அந்தப் பள்ளி மூடப்படும் என்று அரசு அறிவிக்கிறது. அதற்காகப் போராட யாருக்கும் நேரமில்லை. அந்தப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மட்டும், அதுவும் வேலை போச்சுன்னா நாள் பூரா சும்மா இருந்தே நாம் வாங்கும் சம்பளம் என்னாவது? அல்லது டிரான்ஸ்பர் போட்டு விட்டால் என்ன செய்வது என்ற கவலையில், கவலையிலேனும் போனால் போகிறது என்று பள்ளியை மூடக் கூடாது என்று போராடுகிறார்கள். மாணவர் சேர்க்கையை உயர்த்தவோ, வெளியேறும் மாணவர்களை தடுக்கவோ என்ன செய்தார்கள் என்பது தனியாக செய்யப் பட வேண்டிய ஓர் ஆராய்ச்சி.
புதிய பள்ளிகள் ஆரம்பிக்கப் படுவதே இல்லை. காரணம் பட்ஜெட் இல்லை, பணம் இல்லை. பணம் இல்லை என்றால், சாதாரண குடிமகனாகிய நீங்களும் நானும் ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் சர்வீஸ் டேக்ஸின் மேல் இரண்டு சதவீதமாகக் கட்டும் "எஜூகேஷன் செஸ்" எனும் கல்வி வரி எங்கே போகிறது? அதை என்ன செய்கிறார்கள்? சில அரசு ஆசிரியர்கள் தமது பள்ளியில் கம்ப்யூட்டர் வாங்க, காம்பவுண்டு கட்ட என பிச்சை எடுக்காத குறையாக காசு வசூலித்து காரியம் செய்கிறார்கள். அவற்றிற்காக பணம் ஒதுக்கப் படுகிறதா இல்லையா? இல்லை என்றால் ஏன்? ஒதுக்கப்படுகிறது என்றால் எங்கே "ஒதுக்கப்படுகிறது?"
ஏற்கனவே கல்வித் துறையை தனியாருக்குத் திறந்து விட்டு நாட்டில் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கிறது என எல்லாருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த 25 சதம் திட்டத்தின் பின்னணி என்ன? இப்போது தனியார் பள்ளிகளிடம் போய் 25 சதவீத்தை சேத்துக்கோ, நான் காசு தரேன் என்றால் என்ன அர்த்தம்? இதனால் நாளாக, நாளாக மெள்ள மெள்ள எல்லா பகுதிகளிலும் புதிய அரசுப் பள்ளிகள் துவக்கப்படுவது குறையலாம். ஒருநாள் நின்று போகலாம். ஒரு நாள் மெள்ள மெள்ள ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் உள்ள பள்ளிகள் எண்ணிக்கை குறையத் துவங்கலாம்.
யார் கேள்வி கேட்டாலும் " அரசுப் பள்ளி எதுக்கு? அதான் உங்க ஏரியாவுல உள்ள தனியார் பள்ளியிலயே சேர்க்கலாமே, இலவசம், அரசாங்கம் மானியம் தரும், படிப்பும் மத்த 75 சதம் பிள்ளைங்க படிக்குற மாதிரி தரமா உன் பிள்ளைக்கும் கிடைக்கும்? அப்புறம் எதுக்கு அரசுப்பள்ளி?" என்ற பதில் தரப்படும். ஒரு நாள் அரசுப்பள்ளிகளே இல்லாத நிலை வரலாம். இப்போது கேஸ் மானியம் கதையை இங்கே பொருத்திப் பாருங்கள். எதிர்காலத்தில் பள்ளிக்கான மானியம் குறைக்கப் பட்டாலோ, நிறுத்தப் பட்டாலோ தனியார் பள்ளிகள் என்ன செய்யும்? அதற்கேற்றவாறு ஏழை மாணவர்கள் சேர்க்கையைக் குறைக்கவோ நிறுத்தவோ செய்யும்.
சோன முத்தா? போச்சா? அரசுப்பள்ளியும் இல்லாமல், தனியார் பள்ளியும் இல்லாமல் ஒரு ஏழை எங்கே போவான்? இது கொஞ்சம் அதீத கற்பனை போலத் தோன்றலாம். ஆனால் சுஜாதா புகழ், கமலின் தசாவதாரம் புகழ் கேயாஸ் தியரிப்படி (எங்கோ ஒரு இடத்தில் மெள்ள அசையும் ஒரு பட்டாம் பூச்சியின் சிறகடிப்பு இயல்பாக இருக்கும் காற்றில் ஒரு சலனத்தை உண்டாக்கி, அது மெள்ள மெள்ள மற்ற சலனங்களை சேர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு பெரிய புயலுக்குக் காரணமாக இருக்கலாம்) இங்கே, இப்போது, இப்படி மெள்ள ஆரம்பிக்கும் ஒரு விஷயம் நாளை எங்கே முடியும் என்பதை யாரறிவார்?
இன்னோரு விஷயம் போக்குவரத்து. போக்குவரத்திலும் தனியார் பேருந்துகளை அனுமதிக்க ஆரம்பித்து அவர்கள் ஆடும் ஆட்டத்தை பெங்களூரு, சென்னையில் வேலை பார்க்கும் இளைஞர்களிடம் கேட்டால் அழுது தீர்ப்பார்கள். பொதுப் போக்குவரத்தான பேருந்துகளின் எண்ணிக்கை மெள்ள மெள்ளக் குறைக்கப் படுகிறது. நூறு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டால் நூற்று நாற்பது பழைய பேருந்துகள் கண்டமாக்கப் படுகின்றனவாம் (ஒரு கீழ்நிலை அதிகாரி சொன்னது. நாம் சர்வே எடுத்தால் இதை விட மோசமான கணக்கு வரலாம்),
அடக்கொடுமையே, ஏறும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் அதே நேரம் தனியார்களுக்கு புதிய புதிய தடங்களுக்கும் சேர்த்து புதிய, அதிக எண்ணிக்கையில் லைசென்ஸூகள் தரப் படுகின்றனவாம். நான் சொல்லவே வேண்டாம். உங்கள் பயணத்தில் சும்மா நீங்களே கவனித்துப் பாருங்கள் தெரியும். இது உ.கை.நெ.க. அப்போது அந்த ஒதுக்கீட்டில் எவ்வளவு பணம் விளையாடுகிறது? அது எங்கே கருப்பாக ஒளிகிறது?
நகரங்களில் நடக்கும் கொடுமை இன்னொன்று. இடம் இருக்கோ இல்லையோ, காசு இருக்கோ இல்லையோ, எல்லாரும் கார் வாங்கி ஓட்டுங்க என்று தனியார் மயமாக்கலில் வங்கிக் கொள்கைகள் தளர்த்தப் பட்டு தனியார் போக்குவரத்து அநியாயத்திற்கு ஊக்குவிக்கப் படுகிறது. பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப் படுவதால் அதை உபயோகிப்பவர்கள் தமக்கே தெரியாமல் இரு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது மிகவும் மோசமான நிழல் அரசியல். நூறு பேர் பயணம் செய்யும் ஒரு பஸ் நிற்கும் இடத்தை அடைத்துக் கொண்டு இரண்டே இரண்டு பேர், இரண்டே கார்களில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் ஏஸி, பஸ்ஸில் நிற்கும் சாமானியனுக்குத் தேவையான காற்றின் ஈரப்பதத்தையும் அனலாக்கி திருப்பித் தருகிறது.
சரி, அரசாங்கம் ரோடையாவது போடுகிறதா என்றால் அதுவும் இல்லை. அதையும் தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு டோல் கேட் என்ற பெயரில் அவர்கள் கடை போட்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். நூறு கோடி செலவழித்து ரோடு போட்டு விட்டு, 20 ஆண்டு கான்டிராக்ட் வசூல் என்று 2000 கோடி ரூபாயை வசூல் செய்கிறார்கள் நம்மிடமே. அப்போ, வண்டி வாங்கும் போதே நாம் கட்டும் ரோட் டாக்ஸ் என்ற வரி எங்கே போகிறது? ஒரு நாளைக்கு டூ வீலர் முதல் பெரு லாரிகள் வரை இந்தியாவில், தமிழ்நாட்டில் எத்தனை வண்டிகள் விற்கின்றன. எத்தனை கோடி ரோட் டேக்ஸ் வசூலாகிறது? அதெல்லாம் எங்கே போச்சு?
மருத்துவம்? கொடுமையிலும் கொடுமை. பெருங்கொடுமை. அதிலும் தனியார். தனியார். தனியார். இலட்சங்களில் செலவு. சிறுகச் சிறுக நூறுகளில் பணம் சேர்க்கும் ஒருவன் தன் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் புது வியாதியோ, விபத்தோ (இதற்கு டாஸ்மாக் போதையும் ஒரு காரணம்) ஏற்பட்டால் இலட்சங்களில் அழுது தீர்க்க வேண்டியிருக்கிறது. வாழ்நாள் சேமிப்பும் காலி.
சமீபத்தில் உறவினர் ஒருவர் சந்தித்த சிறு விபத்தில் (ரோட்டில், வண்டியில் நின்ற நிலையிலேயே, சமநிலையற்ற சாலையில் நிலை தடுமாறி இடது பக்கம் பள்ளத்தில் விழுந்து தலையில் பலத்த அடிபட்டு கோமாவுக்குப் போனார்) அந்தக் குடும்பமே நிலை குலைந்து போனது. கடந்த ஆறு மாதத்தில் 13 இலட்ச ரூபாய் செலவு அவரை மீட்டெடுக்க. அந்தக் குடும்பத்தின் மொத்தக் கையிருப்பே நான்கு இலட்சம் தான். மீதி?
ஒரு காலத்தில் அமெரிக்கர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்ட "என்னது? மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்கலையா?" என்ற கேள்வி இன்றைய ஓரளவு படித்த, வேலைக்குப் போகிற ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன். நான் ஏன் அய்யா இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்? மருத்துவம் என்பது அடிப்படையாயிற்றே? எனக்கு இலவச மருத்துவம் செய்ய என் தகப்பன் போன்ற என் அரசாங்கத்தினால் முடியாதா? உடனே சென்னை போன்ற பெரு நகரங்களில் "சகல" வசதிகளும் உள்ள மருத்துவமனைகளையும், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையும் காண்பிக்காதீர்கள். அவை போதவில்லை என்பதே என் வாதம். தனியார் மருத்துவமனைகளின் விழுக்காடு அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையைத் தாண்டி எங்கோகோகோகோகோகோ உள்ளன. இது உங்களுக்கும் தெரியும். தடுக்கி விழுந்தால், எந்த ஊரிலும், தனியார் மருத்துவமனைதான்.
அரசாங்கம் மக்களுக்குச் செய்வது என்றால் அதில் மிச்சம் இருப்பது ரேஷன் கடை தான். அதிலும் வெள்ளை கார்டு, மஞ்சள் கார்டு, நீல கார்டு என்று வகை பிரிக்கத் துவங்கி விட்டார்கள். வெள்ளை கார்டுக்கு சக்கரை கார்டு என்றொரு பெயர் உண்டு. அதாவது, அந்தக் கார்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்டால் "விலையில்லா" மிக்ஸி, பேன், கிரைண்டர், அரிசி, சேலை, வேட்டி, மண்ணெண்ணெய் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது. வெறும் சர்க்கரையும், ஒரே ஒரு லிட்டர் பாமாயிலும் (அதுவும் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் தான்). அதில் உங்களுக்கு மிச்சமாகும் தொகை வெறும் அறுபது ரூபாய் இருக்கலாம். அப்பறம் எதுக்கய்யா ரேஷன் கார்டு? வெறும் அட்ரஸ் புரூஃபுக்குத் தான் உபயோகப் படும் அது.
அப்போ என் அரசாங்கம் என்ன தான் செய்யும்? உட்கார்ந்து சாராயம் விக்கும். அதற்கு டார்கெட்டும் வைக்கும். எலைட் பார் திறக்கும். அதில் போய் குடித்து போதையில் ஒரு குடும்பத்தலைவன் விபத்தில் சிக்கினால் அவனை டாக்ஸியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போக டோல் கேட்டில் கட்டப் பணம் வேண்டும், அவனைத் தூக்கிப் போய்ப் போட நல்ல ஒரு அரசு ஆஸ்பத்திரி (எல்லா ஊரிலும்) இல்லை, தனியார் மருத்துவமனைக்குக் கட்ட அவனிடம் பணம் இல்லை, இன்ஷூரன்ஸ் என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது. கிடைத்த ஆம்புலன்ஸூம் சாலை முழுக்க நிற்கும் தனியார் போக்குவரத்தான கார்களின் நடுவில் மாட்டி முதல்வன் படத்தில் வருவது போல அவன் ரோட்டிலேயே சாக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக