வாட்ஸ் அப்பில் கொஞ்சம் உருப்படியாக ஒரு நல்ல குரூப் இயங்கி வருகிறது. அதில் பல கோமான்கள் இருக்கிறார்கள். பல புரவலர்களும் உண்டு. அவ்வப்போது ஏதாவது போட்டி வைப்பார்கள். சென்ற மாதம் ஒரு கதைப் போட்டி வைத்தார்கள். இந்த மாதம் "தூங்காவனம்" விமர்சனப் போட்டி. அதற்காக அனுப்பிய விமர்சனம் இது. சில விதிமுறைகளும் உண்டு.
என் ப்ளாக் என் உரிமை என்று சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல், படத்தை ஒரு சார்பாக கழுவி ஊற்றாமல், ஸ்பாய்லர்கள் இல்லாமல், கதையை சொல்லியும் சொல்லாமல், 500 சொச்சம் வார்த்தைகளில், அச்சில் வரும் விமர்சனம் போல நிறை குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று சில நல்ல நிபந்தனைகள். அவற்றை அனுசரித்து எழுதப் பட்ட விமர்சனம் இது.
தூங்காவனம்
விமர்சனம் - எஸ்கா
"ஸ்லீப்பிங்
டிஸ் ஆர்டர்" எனப்படும், சரிவரத் தூங்க இயலாத வியாதியின் பெயர் "இன்ஸோம்னியா".
அதை, மாடர்ன் இளசுகள் தூங்காமல் விடிய விடிய ஆட்டம் போடும் ஒரு "நைட் கிளப்"பின்
பெயராக வைத்து, அதைத் "தூங்கா வனம்" என இலக்கியத் தரத்துடன் மொழி பெயர்த்து
அதனைக் கொடிய மிருகங்கள் உலவும் இடமாக உருவகிக்க வைத்து, மூலப்படத்தின் "ஸ்லீப்லெஸ்
நைட்" என்ற பெயருடனும் இணைத்து "ஒரு கோர்வையா வருதா?" என கேட்காமல்
கேட்கும் கமல் டச்சே தூங்காவனத்தின் முதல் வெற்றி.
தன்
போலீஸ் வேலையால் மனைவியைப் பிரிந்து, ஒரு போதை மாஃபியாவைப் பிடிக்க அண்டர்கவர் ஆபரேஷனில்
வேலை செய்யும் ஒரு அதிகாரி, அதே வேலையால் தன் மகனும் கடத்தப்பட, பிடிபட்ட போதை மருந்தைத்
திருப்பித் தந்தேனும் மகனை மீட்கக் கிளம்ப, அவரைத் துரத்தும் நேர்மையான பெண் அதிகாரி,
ப்ளாக் ஷீப் அதிகாரி, டபுள் கிராஸ் நண்பன் ஆகியோரைச் சமாளித்தாரா? ஆபத்தில் சிக்கினாரா?
மகனை மீட்டாரா? என்பதே "தூங்காவனம்". சிம்பிள் லைன் தான். ஆனால் ஒரிஜினல்
பிரெஞ்சுப் படத்தைத் தழுவிய திரைக்கதையால் போரடிக்காத தீபாவளி ராக்கெட்டாகச் சீறிப்
பாய்கிறது படம்.
இரண்டே
மணி நேரம். ஷார்ப்பான திரைக்கதையில் படம் முழுக்க போலீஸ் அதிகாரி திவாகராக மனதில் நிற்கிறார்
கமல். கத்திக்குத்து காயம் மெள்ள மெள்ள வலியேற்ற, நேரம் ஆக ஆக ஏறும் வலியின் டெஸிபலை
முகத்திலும், உடல்மொழியிலும் அதற்கேற்றவாறு காட்ட அவரால் மட்டுமே முடியும். த்ரிஷா
முதல் முறையாக போலீஸ் வேடம். காக்கிசட்டை இல்லாமல் நார்காடிக்ஸ் இன்வெஸ்டிகேஷன் பீரோவோ
என்னமோ சொல்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். கமலுடன் ஒரு ஃபைட் வேறு. உமா ரியாஸூக்கும்
அவருக்கும் அப்படி ஒரு முகப் பொருத்தம், கமலா காமேஷ் என்று த்ரிஷாவை மீம்ஸ் கிரியேட்டர்கள்
கிண்டல் செய்வதற்கு வாகாக.
சிங்கீதம்
சீனிவாசராவ், சந்தான பாரதி, சக்ரி டோலேட்டி, ரமேஷ் அர்விந்த் ஆகிய கைப்பாவை டைரக்டர்கள்
வரிசையில் ராஜேஷ் ம சில்வா. "சந்தோஷ் சுப்ரமண்யம்" அப்பா போல ராஜேஷை முன்னால்
நிற்க வைத்து பின்னாலிருந்து எல்லா வேலையும் கமலே பார்த்திருப்பது நன்றாகத் தெரிகிறது.
டிஸ்கோ க்ளப்பின் தொம், தொம்மென அதிர வைக்கும் டி.ஜே மியூசிக்குக்கு இடையில் தன் திறமையை
நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஜிப்ரானுக்கு. கமலுடன் தொடர்ந்து நான்காவது படம். வாழ்த்துக்கள்
ஜிப்ரான்.
வ
- குவாட்டர் கட்டிங், சரோஜா, ஹவுஸ்புல் போன்ற படங்களின் வரிசையில் ஒரே லொக்கேஷனில்,
ஒரே இரவில் நடக்கும் கதை. "சின்ன கல்லு, பெத்த லாபம்" என்ற ரெட்டி ஐடியாவை
வெற்றிகரமாக இந்த வருடமே இரண்டாவது முறையாக முயற்சித்திருக்கிறார் கமல். சின்ன பட்ஜெட்
படம் என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரே லொக்கேஷனாக "இன்ஸோம்னியா" நைட் க்ளப்
பின் டிஸ்கொதே ஹால், பில்லியர்ட்ஸ் கோர்ட், டைனிங் ஹால், மினி பார், கிச்சன், ஸ்டோர்
ரூம், பார்க்கிங் லாட், அண்டர்கிரவுண்ட் பார்க்கிங், ஆண் பெண் டாய்லெட் என சுற்றிச்
சுற்றி வருகிறது கதை.
முதல்
ஆக்ஷன் பிளாக் நடக்கும் பாலம், கமலின் வீடு, ஆபீஸ் அறை, அவர் அனுமதிக்கப்படும் ஆஸ்பத்திரி
என மிக மிகச் சொற்ப சீன்களே வேறு இடங்களில். மற்றபடி க்ளப்-பே கதியென நகர்கிறது வர்கீஸின்
கேமரா.
க்ளப்-பின்
வராண்டாவிலேயே முத்தமிட்டுக்கொண்டிருக்கும் இரண்டு பெண்கள், இருட்டில் ஆங்காங்கு முகம்
தேய்த்தபடி அமர்ந்திருக்கும் ஜோடிகள், டாய்லெட்டில் வைத்து கேர்ள் ஃபிரண்டை அனுபவிக்க
நினைக்கும் இளைஞன், லேசாக மேலே மோதினாலே முஷ்டியை உயர்த்தும் இளைஞர்கள் என இன்றைய மேல்தட்டு
இளைஞர்களைக் காட்சிப்படுத்தியிருந்தாலும், அவர்கள் மேல் விமர்சனமும் இல்லாமல், இது
சரி, தவறு என எந்த மாரல் போலிஸிங்கும் செய்யாமல் கடந்து போகிறார் திரைக்கதையாசிரியர்
கமல்.
ஒரிஜினிலில்
எப்படியோ? மூலப்படமான "ஸ்லீப்லெஸ் நைட்" டுக்கான டைட்டில் கிரெடிட் கூட அரை
வினாடியில் கடந்து போகிறது. வெகு வேகமாகக் கடக்கும் முன்பாதி அளவுக்குப் பின்பாதி இல்லாமல்
லேசாகத் தடுமாறி ஸ்லோ ஆவதைக் கொஞ்சம் இறுக்கியிருக்கலாம்.
சம்பத்,
ஆஷா சரத் ஆகியோர் ஒன்றிரண்டு சீன்களோடு வீணடிக்கப்பட்டிருந்தாலும், எல்லா கேரக்டர்களையும்
கதைக்குத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தியிருப்பது திரைக்கதையாசிரியரான கமலின் வெற்றி.
சின்ன வெண்ணிற ஆடை மூர்த்தியான நண்டு ஜெகன் வாயைக் கட்டியிருப்பதே ஒரு சோறு பதம். உத்தம
வில்லனின் ஹேங் ஓவரில் இதிலும் அப்பா மேல் பாசம் குறைந்த, சற்றே கேர்லஸ் ஆன மகன் கதாபாத்திரமும்
உண்டு.
உலக
நாயகனுக்கு இந்த வருடத்தில் ரிலீசாகும் மூன்றாவது படம் இது. ஆளவந்தானை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தீபாவளி
ரிலீஸ் வேறு. முழுக்க முழுக்க ஒரு புல்லட் வேகத் த்ரில்லர் ஒன்றைக் கொடுத்து ரசிகர்களைக்
கவர்ந்தாலும் "பாபநாசம்" படத்தில் கஷ்டப்பட்டுத் தியேட்டருக்கு இழுத்து வந்த
ஃபேமிலி ஆடியன்ஸை த்ரில்லர் என்ற காரணத்தாலேயே இந்தப் படத்தில் தக்க வைத்துக் கொள்ளத்
தவறியது மட்டுமே ஒரு சின்ன மைனஸ்.
அதே
போல், க்ளப் ஓனர் பிரகாஷ் ராஜ் சி.சி.டி.வியில் பார்ப்பதெல்லாம் தன் கதவு என்ட்ரன்ஸில்
உள்ள கேமரா மட்டுமே. அவ்ளோ பெரிய பப்புக்குள் வேறு எங்குமே கேமரா இருக்காதா? கிச்சனுக்குள்
அவ்வளவு சண்டை நடக்கிறது. அங்கே கேமரா இல்லையா? என்னா பாஸ்?
படம்
முடிந்ததும் கதாபாத்திரங்கள் எல்லாரும் வந்து ஆடும் அந்த ஜாலியான க்ளைமாக்ஸ் டான்ஸைத் தவிர்த்திருக்கலாம் - சரோஜா
படம் போல ஷூட்டிங் ப்ளூப்பர்ஸூடன் ட்ரை செய்திருக்கிறார்கள். ஆனா ஒரு நல்ல த்ரில்லர்
பாத்துட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்பற ஃபீல் போச்சே பாஸ்.