மோசர் பேர்-ன் 3 இன் 1 கலெக்ஷனில் சில பழைய எம்.ஜி.ஆர் பட டி.வி.டி-க்கள் சிக்கின. மிகப் பழைய படங்கள் என்பதால் தரம் பார்க்க இரண்டு டி.வி.டிக்கள் மட்டும் வாங்கினேன். நல்ல குவாலிட்டிதான். குறையொன்றுமில்லை. ஐந்து நாட்கள் முன்பு தான் "இதயக்கனி" பார்த்தேன்.
சின்ன வயதில் படம் பார்த்த ஞாபகத்தில், படப் பெயரையும் வைத்து இது ஒரு அரசியல் படம் என்றே நினைத்திருந்தேன். அல்ல. 97 சதம் இது ஒரு க்ரைம் த்ரில்லர். பாக்கெட் நாவல் வகையில் வைக்கக் கூடிய, கதாநாயகியைச் சுற்றி நிகழும் ஒரு த்ரில்லர் கதையை தன் பாணியில் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். கதை திரைக்கதை ஆர்.எம்.வீரப்பன். தயாரிப்பு சத்யா மூவிஸ்.
தன் ஏழைத் தாயார் திடீரென இறக்கவே, எஸ்டேட் ஓனரான நாயகனிடம் தஞ்சம் புகும் நாயகி, தொடர்ந்து நிகழும் சில சம்பவங்களால் அவனது மனைவியாகிறாள். அங்கிருந்து வேகம் எடுக்கும் கதை, கதாநாயகன் ஒரு போலீஸ், நாயகி ஒரு கொலையாளி என இருபது நிமிடத்துக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தபடி நகர்கிறது. கொலைக்குற்றத்திற்காக அவளைக் கைது செய்யும் நாயகன் அவள் ஒரு அம்னீஷியா பேஷண்ட் என்பதையும், அவளைக் கொல்ல நடக்கும் சதியையும் கண்டு அந்தக் கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறான். சதி செய்யும் கொள்ளைக்கூட்டத்தை நாயகன் பிடித்தாரா? நாயகியைக் காப்பாற்றும் அவனது முயற்சி வென்றதா? இருவரும் இணைந்தார்களா என்பதை வெள்ளித் திரையில் ஸாரி, டி.வி.டி வாங்கி வந்து உங்கள் வீட்டு சின்னத் திரையில் காண்க.
இன்றைய காலகட்டத்தில் வைத்துப் பார்த்தால் கூட பெரிய குறையேதும் சொல்ல முடியாத நல்ல படம். அங்கங்கு வரும் கட்சி சார்புப் பிரச்சார வசனங்கள், தேவையா என்று யோசிக்க வைக்கும் இன்ட்ரோ பாடல் போன்றவற்றைத் தவிர ரசிக்கும் படியான படமே. யுரேனியம், ஆள் மாறாட்டம் என்றெல்லாம் போகும் கதையில் எம்.ஜி.ஆர் இன் ஸ்கிரீன் ப்ரஸன்ஸ் அட்டகாசம். பளபளவென ஜொலிக்கும் அவரது முகத்தை க்ளோசப் பில் அடிக்கடி காட்டுகிறார்கள். கண்டிப்பாக அந்தக் கால ரசிகர்களை வாய் வலிக்க விசிலடிக்க வைத்திருப்பார்.
கலர் படத்தின் சாத்தியங்களை அதிக பட்சம் உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் எம்.ஜி.ஆர் உடைகளில் ஆரம்பித்து போலீஸ் ஸ்டேஷன் செட்கள் வரை கண்ணைப் பறிக்கும் ஜெம்ஸ் மிட்டாய் கலர்களை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.
உறவினர் மாமா ஒருவர் எம்.ஜி.ஆர் வெறியர். வீட்டில் அவர் இருக்கையில் ஜெயா டி.வி மட்டுமே ஓடும். முகம் பார்க்கும் கண்ணாடியில் விக், தொப்பி இல்லாத ஜிப்பா போட்ட பழைய எம்.ஜி.ஆர் படம் ஒன்றை இன்றும் ஒட்டி வைத்திருக்கிறார். அதே போல் சேலத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குதிரை வண்டிக்காரர். எம்.ஜி.ஆர் செத்துட்டாராம் என்று சொன்னதற்காக அவரது மகனை ரோட்டில் புரட்டிப் புரட்டி அடித்தவர். அது போன்ற அவரது ரசிகர்களோடு தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக