ஞாயிறு, 3 நவம்பர், 2013

கருத்து கந்தசாமிகள் - புரியலைடா சாமி.



பல முறை நீயா? நானா? வில் கருத்து சொல்வதற்காக ஒரு தடி கண்ணாடி போட்டுக்கொண்டு டாக்டர் மோகன் என்ற (படிப்பளவில்) பெரிய ஆள் ஒருத்தர் கருத்து சொல்ல வருகிறார். இன்றைக்கும் வந்தார். பி.ஹெச்.டி எல்லாம் படித்த பெரிய படிப்பாளி போலும். இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் பார்க்குறவங்களுக்கு புரிகிறதா? என்பது தான் கேள்வி.

அவர் பேச ஆரம்பித்தால் கலந்து கொள்பவர்களில் இரு பக்கமும் கொட்டாவி விட ஆரம்பிக்கிறார்கள். கோபியே ஓரமாக போய் படிக்கட்டில் அமர்ந்து கொள்கிறார். அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டேடேடேடேடே போகிறார். தான் பேசும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அவர் மனதிற்குள் டிஸ்கிளெய்மர் ஓடுகிறது. எவனொருவன், தான் பேசவும் வேண்டும், தன் கருத்துக்கு எதிர்ப்பும் வரக்கூடாது, தான் சொல்ல நினைத்ததையும் முழுதாக சொல்ல வேண்டும், எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறானோ அவன், தான் சொல்லும் ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும் ஜஸ்டிஃபை செய்ய விரும்புவான். அவனது பேச்சும் வளவளவென்று இழுத்துக்கொண்டே போகும்.

பொதுவாக கம்பெனிகள் தான் இப்படி ஒவ்வொரு வரிக்கும் டிஸ்கிளெய்மர் வைப்பார்கள். குறிப்பாக இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள். எந்த வரியிலும் தனக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்று அப்படிப்பட்ட கம்பெனிகள் நினைப்பதன் காரணமாகத்தான் ஒவ்வொரு அக்ரிமெண்டும் பக்கம் பக்கமாக ஓடுகிறது. உங்களிடம் பதினாறு கையெழுத்துக்கள் கேட்கிறார்கள்.

சமீபத்தில் குமுதம் இன்டர்நெட் ஸ்பெஷலில் ஒரு வரியை கவனிக்க நேர்ந்தது. இன்டர்நெட்டில் "சங்கொலி மங்க முழங்கும் யாக்கை" என்றெல்லாம் கடினமான வரிகளைப்போட்டு கவிதை எழுதுவார்கள் சிலர். "தல, சுத்தமா புரியல ஆனா சூப்பரா இருக்கு, தொடருங்கள்" என்று பின்னூட்டம் இட்டு அவர்களை உற்சாகப்படுத்துவார்கள் சிலர், என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

கல்லூரியில் என்னுடைய புரபஸர் ஒருத்தர் இருந்தார். பாடம் நடத்த ஆரம்பித்து விட்டால் நடத்திக்கொண்டே இருப்பார் அருவித்தண்ணீர் போல, யாருக்காகவும் நிறுத்தாமல். புரியவில்லை என்றால் திருப்பி நடத்த மாட்டார். நடுவில் யாரேனும் எழுந்து போனால் கண்டுகொள்ளவும் மாட்டார். ஒன்றிரண்டு முதல் பெஞ்ச் மாப்பிளைகள் மட்டும் அவரை கவனிப்போம். மாணவனுக்கு புரியும் படி நடத்துபவன் தான் ஒரு நல்ல ஆசிரியன் அவரோ என் கடமை பாடம் நடத்துவது மட்டுமே என்பதே அவரது எண்ணம். நாலு பெஞ்சு இருந்தாலும் போதும், நான் பாடம் நடத்துவேன் என்று சொல்வார். ஆனால் அப்படி நடத்தி என்ன பிரயோசனம்? அவர் அறிவாளி, படிப்பாளி என்பது மட்டுமே நாம் அந்த இடத்தில் புரிந்து கொள்ளும் விஷயம்.

அதுபோல யாருக்கும் புரியாமலே எழுதுவது, பேசுவது என்று கொள்கை வைத்துக்கொண்டு திரிகிறார்கள் சிலர். என்னுடைய கேள்வி - அப்படி என்னத்தை அய்யா சாதிக்கப்போகிறீர்கள் கேட்பவனுக்குப் புரியாமல்? நீங்கள் அறிவாளி எனக்காட்டிக் கொள்ளும் உத்வேகம் மட்டும் தான் தெரிகிறது உங்கள் பேச்சில். அவரை சப்போர்ட் செய்பவர்களும் அப்படித்தான். அவரை சப்போர்ட் செய்வதன் மூலம் தானும் ஒரு அறிவாளி என்று காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் தமக்கும் சுத்தமாக புரியவில்லை என்பதை வெளியே சொல்வதில்லை. (சொல்பவனை கூட்டாக சேர்ந்து கும்மி வேறு அடிப்பது உண்டு)

அவர் கலந்து கொள்ளும் ஷோவில் அவர் பேச ஆரம்பித்தால் நான் கண்களையெல்லாம் இடுக்கிக்கொண்டு அவரையே கூர்ந்து கவனித்து அவர் சொல்வதைப்புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் வீட்டில் (அப்பா, மனைவி, தங்கை, மச்சான், குழந்தைகள், மாமியார், மாமனார் என பலரும்) டேய், சேனலை மாத்தேண்டா. லூஸூ மாதிரி (சத்தியமாக இந்த வார்த்தையை சொன்னார்கள்) புரியாமயே பேசிட்டு இருக்கான். மாத்துறியா? இல்லையா? என்கிறார்கள் என்னிடம்.

ஒருமுறை குழந்தைகள் பற்றிய ஷோ ஒன்றிலும் இப்படித்தான் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் எப்படி வந்தன என்று விளக்க ஆரம்பித்து ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஜீன், ஜெனடிக்ஸ், இலக்கியம், மருத்துவ விளக்கம் என குழப்போ குழப்பென்று குழப்பியடித்து சுமார் 20 நிமிடம் பேசித் தள்ளி விட்டார். சத்தியமாய் கோபிநாத்-திற்கே புரிந்திருக்காது. இரு குழந்தைகள் தூங்கியே விட்டன. எதிர்சாரியில் அமர்ந்திருந்த பல பெற்றோர் மோகனை முறைக்க ஆரம்பித்தார்கள். அதே போல் கோபி பேச ஆரம்பித்த பிறகு மோகனின் கருத்துக்களின் சுவடே இன்றிப் பேச வேண்டியிருந்தது. அல்லது மோகனின் பேச்சை அப்படியே எடிட்டிங்கில் கட் செய்து உருவி எடுத்து விட்டால் அந்த நிகழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்ற நிலையிலேயே இருந்தது அவரது பேச்சு.

மற்றொரு முறை ஆண்களின் உடை மற்றும் அப்பியரன்ஸ் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியிலும் அப்படித்தான். ஒவ்வொரு முறையும் நீயா? நானா? வை ரசித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பம் மோகனின் இரு நிமிடங்கள் பேச்சை பார்த்ததும் சேனல் மாற்றுகிறது. இன்றைக்கு எனக்குத் தெரிந்து நான்காவது முறை.

என்னுடைய தாழ்மையான கருத்து - எப்போதுமே எந்தப் படைப்பும், பேச்சும், இலக்கியமும், ஓவியமும், கதை, கட்டுரை, சினிமாக்களும் பார்வையாளனுக்கு / ரசிகனுக்கு / ஆடியன்ஸூக்குப் புரிய வேண்டும். அப்போது தான் அது வெற்றி பெறும். அப்படி இல்லாமல் போனால் அது தோல்வியே. வேண்டுமானால் கருத்து ரீதியாக அது வெற்றிதான் என்று ஆறுதலாக நமக்கு நாமளே சொல்லிக்கொண்டு படிக்கட்டில் அமர்ந்து மூக்கு சீந்திக் கொள்ளலாம் அல்லது தன் கருத்தையொத்த இன்னும் சிலரை சேர்த்து வைத்து மாறி மாறி சொரிந்து கொள்ளலாம். சுகமாக இருக்கும்.

வியாழன், 17 அக்டோபர், 2013

ஐயா.. நான் காப்பியடிச்சுட்டேன்.


"""உங்க சொந்த ஊரு எதுங்க?
எனக்கு திருநெல்வேலி பக்கம். உங்களுக்கு?
எனக்கு திருநெல்வேலி தூரம்"""

இது சேலம் எஸ்கா (எ) எஸ்.கார்த்திகேயன் என்கிற நான் எழுதிய ஜோக்.
வெளியானது 31.05.2006 தேதியிட்ட குமுதம் இதழ் (ஸ்கேன் காப்பி இணைப்பு)



"""உங்க சொந்த ஊரு எதுங்க?
எனக்கு திண்டுக்கல் பக்கம். உங்களுக்கு?
எனக்கு திண்டுக்கல் தூரம்"""

இது கொளக்குடி சரவணன் என்ற அன்பர் எழுதியது (ஸ்கேன் காப்பி இணைப்பு)
வெளியானது அதே குமுதம் இதழ். ஆனால் வெளியான தேதி என்னவோ 16.10.2013.



எப்படி? நான் ஏழு வருஷம் முந்தியே ஒரு ஜோக்கை காப்பியடிச்சுட்டேன். ஐயா.. ஜாலி.. ஜாலி.. ஜாலி.. ஜாலி..

புதன், 16 அக்டோபர், 2013

ஆட்டுக்குட்டியும் மற்றும் இரு ஆடுகளும்



கோவை. அண்ணா சிலை பஸ் ஸ்டாப். இரவு கிட்டத்தட்ட பதினோரு மணியைத் தொட்டிருந்தது.

எப்போதும் சேலத்தில் இருந்தோ, ஓசூரில் இருந்தோ பஸ்ஸில் கோவை செல்லும்போது பஸ் ஸ்டாண்டு வரை செல்லாமல் கோவை நுழைந்ததுமே லக்ஷ்மி மில்ஸ் தாண்டி அண்ணா சிலை பஸ் ஸ்டாப்-பில் இறங்கிவிடச் சொல்வார் பாவா. பஸ் ஸ்டாண்டு தூரம் அதிகம். இங்கே இறங்கினால் லோக்கலில் வேலையாக இருந்தால் அவரே வந்து டூ வீலரில் கூட்டிப்போய்விடுவார். அல்லது அவ்வழியில் 2- ம் எண் பேருந்து வந்தால் அதில் ஏறி அவர்கள் வீடு வரை ஒரே பஸ்ஸில் போய்விடலாம்.

அன்று கோவை முழுக்க இருட்டில் அமிழ்ந்து போய் இருந்தது. பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரமாக அந்த பெண் வியர்வை வழிய நின்று கொண்டு இருந்தார். நான் இறங்கியதும் அங்கிருந்த பெஞ்ச்-சில் சாய்ந்து உட்கார்ந்தபடி என்னுடைய ஸேம்ஸங்கில் கேன்டி கிரஷ் விளையாடிக்கொண்டிருந்தேன். பாவா வர லேட்டாகும். லோக்கல் பேருந்துகள் நேரம் முடிந்து விட்டிருந்தது.

நேரம் பத்து மணியைத்தாண்டவும் லோக்கல் பேருந்துகள் மௌ்ள மெள்ள ஷெட்டுக்குப் போய்க் கொண்டிருந்தன. அந்த பஸ் ஸ்டாப்பில் நான் வந்ததில் இருந்து ஒருசிலர் இறங்கியதும், அடுத்த பஸ் ஏறியதுமாக இருந்தனர். யாரும் ஒரிரு நிமிடங்களுக்கு மேல் நிற்கவில்லை என்னையும் அந்தப் பெண்ணையும் தவிர.

அந்தச் சாலை ஹைவேஸ் போல சிட்டி ரோடாக இருந்தாலும் மாநகரின் இயக்கம் சுத்தமாக நின்று போயிருந்தது. அங்கு ஸ்டேண்டில் இருந்த ஒற்றை ஆட்டோவும் சவாரிக்கு போய்விட்டது. பஸ் ஸ்டாப்புக்கு பின்னால் இருந்த பள்ளி மைதானமும் மரங்களுடன் அடர்ந்த கும்மிருட்டில் இருந்தது. நாய் கத்தல் போன்ற உபரி விஷயங்களும் உண்டு. அங்கங்கு சோகையாக வெளிச்சம் உமிழும் ஒன்றிரண்டு சோடியம் வேப்பர் விளக்குகள் மட்டும்.

இந்தப்பெண்ணின் முகம் இருளில் சரியாகத் தெரியவில்லை. சுடிதார் தான். அவளது உடல் மொழியில் ஒரு சங்கடம் தெரிந்தது. பயம், படபடப்பு எல்லாம். யாரையோ எதிர் பார்த்து ரொம்ப நேரமாக காத்துக்கொண்டிருந்தார். முதல் பாராவில் சொன்னது போல அந்த அபத்த கால்குலேஷனைப்போட்டு அவளும் இங்கேயே இறங்கியிருப்பாள் போலும். ஆனால் பெண் என்பதால் நேரம் செல்லச் செல்ல பயந்து விட்டிருக்கிறாள்.

என்னவென்று கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் வலிய உதவி செய்யப் போனால் ஒரு பிரச்சனை உண்டு. நம்மையும் தப்பாக நினைத்து விடுவார்கள். நினைத்தால் போய்த்தொலைகிறது. பரவாயில்லை. கத்தி கித்தி ஊரைக்கூட்டி விட்டால் நாம் நியாயம் பேசிக்கொண்டு இருக்க முடியாது. அக்கம் பக்கத்தில் ஆளரவம் இல்லை.

கொஞ்ச நேரம் போனது. சரி, கேட்போம் என்று நினைத்து கேட்டேன் "என்னங்க ஆச்சு? உங்களை கூப்பிட ஆள் வரலியா இன்னும்?" அவள் "வந்து கிட்டு இருக்காங்க", என்றாள் தயக்கத்துடன். "போன் இருக்கா உங்ககிட்ட?" என்றேன். பார்வையே இல்லை என்றது. "இந்தாங்க" என்றதும் கொஞ்சம் யோசித்து வாங்கிக்கொண்டாள். கொஞ்சம் தள்ளிப்போய் நின்று படபடவென நம்பரை டயல் செய்து யாருக்கோ அவசர அவசரமாகப் பேசினாள். திட்டினாள் போலத் தெரிந்தது. திரும்ப வந்து "தேங்க்ஸ்ங்க" என்று கொடுத்து விட்டுப்போனாள்.

நான் கேன்டி க்ரஷ்-ஷை தொடர்ந்தேன். அவள் தள்ளிப்போய் டென்ஷனாக நின்று கொண்டாள்.

என்னை கூட்டிப்போக பாவா வந்துவிட்டார். ஆனால் அவரைக் கூட்டிச்செல்லும் ஆள் இன்னும் வரவில்லை.

முதலில் அந்தப்பெண்ணை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டுச் சென்று விடலாம் என்றாலும் மனது கேட்கவில்லை... "பாவா, ஒரு ரெண்டு நிமிஷம் நிக்கலாம் பாவா" என்றேன். "என்ன விஷயம்?" என்றார். சொன்னேன். நின்றார். நின்றோம். ஒருவேளை அவரை அழைத்துப்போகும் ஆள் வர லேட்டானால் என்ன ஆகும்? இந்தப்பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டால்? நம்மால் உதவி செய்ய வாய்ப்பிருந்தும் அஜாக்கிரதையால் நம்மையும் அறியாமல் ஒரு சமூக குற்றம் நடைபெற விட்டுவிடக்கூடாதே. அப்போதுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் படங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.

ஒரு ஐந்தாறு நிமிடங்கள் இருக்கும். ஒரு ஜாலி பாய்ஸ் குரூப் ஒரு காரில் எங்களை கடந்து "ஓய்" என்று சத்தமிட்டுக்கொண்டே சென்றது. இவள் இன்னும் பயந்தாள். "பயப்படாதீங்க, நாங்க இருக்கோம்" என சொன்னார் பாவா. நானும் பேச்சுக்கொடுத்தேன். மேலும் ஓர் ஐந்து நிமிடங்கள்.

அப்படி இப்படி என கிளைமாக்ஸாக ஒருவழியாக அவளது ஆள் வந்துவிட்டான். யமஹா எஸ்டி பைக். ஆபீஸில் பர்மிஷன் போட்டு வந்திருப்பானோ அல்லது நீண்ட தூரத்தில் இருந்து வந்திருப்பானோ? டென்ஷனாக இருந்தான். அந்தப் பெண் அவனுடன் பைக்கில் ஏறி விட்டு எங்கள் இருவரையும் பார்த்து "ரொம்ப நன்றிங்க" என்றார். அவனிடம் "நான் தனியா இருக்கேன்கறதுக்காக துணைக்கு நின்னாங்க இவங்க" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் எங்களை கண்டுகொள்ளவில்லை.

எங்களுக்கும் கொஞ்சம் கடுப்பானது. "பார்த்துங்க. இங்க இறங்கறதுக்கு பதில் பஸ் ஸ்டாண்டுக்கே போயிருக்கலாம்ல? கொஞ்சம் லேட்டானாலும் கூட்டம் இருக்கும்ல, ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டு, லேட்டாச்சு கிளம்பலாம் என்று கிளம்பி விட்டோம்.

கொஞ்ச தூரம் போயிருப்போம். எங்களை வேகமாக ஒரு டூ வீலர் சேஸ் செய்வது போல இருந்தது. ஒரு சிக்னலில் நின்றோம். சேஸ் செய்த வண்டி வ்ர்ரூரூம் என்றபடி எங்கள் அருகில் வந்து நின்றது. பில்லியனில் நாங்கள் பஸ் ஸ்டாப்பில் பார்த்த அந்தப்பெண்.

வண்டியை ஓட்டி வந்த அவளின் ஆள் ஹெல்மெட்டை உயர்த்தி எங்களை பார்த்து "தேங்க்ஸ் பாஸ்" என்றான்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சர்க்கஸ்-ன் எதிர்காலம்?



சினிமாவுக்குப்போகலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். ஒரு பழைய படம். தமிழ்நாட்டில் தமிழில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் ஆன படம். அதே படம் ஹிந்தியில் அமிதாப் நடித்து சூப்பர் ஹிட். ஹைதராபாதோ, விஜயவாடாவோ போகிறீர்கள். அதே படம். மறுபடி சிரஞ்சீவி நடித்து அங்கேயும் சூப்பர் ஹிட். பெங்களூருக்கு போகிறீர்கள். அங்கேயும் அதே படம். விஷ்ணுவர்தன் நடித்து பட்டாஸ் ஹிட். எங்கே எந்த ஊருக்குப்போனாலும் அதே படம் தான் ஓடுகிறது. பாஷை வேறு, இடம் வேறு, ஆட்கள் வேறு. ஆனால் அதே படம்.

இன்றல்ல, நேற்றல்ல, உங்களுக்குத் தெரிந்து உங்கள் அப்பாவுக்குத் தெரிந்து சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் ஓடத்துவங்கிய அந்தப்படத்தைத்தான் நீங்கள் எங்கே போனாலும் பார்க்க முடியும். கூட்டம் வராவிட்டாலும், பிலிம் கிழிந்து தொங்கினாலும். ஒன்றிரண்டு சீன்கள் குறைந்திருக்கலாம். சில காட்சிகள் புரியாமல் கூடப்போகலாம். ஆனால் நீங்கள் படத்திற்குப்போக வேண்டும் என்று முடிவு செய்தால் வேறு வழியின்றி அந்தப் படத்துக்கே தான் போக வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உங்களைச் சுற்றி உள்ள உலகத்தில் பொழுது போக்கு அம்சங்கள் எவ்வளவோ மாறியிருக்கும். அப்டேட் ஆகியிருக்கும். இப்படி ஒரு நிலை இருந்தால் எப்படி இருக்கும்? கடுப்பாகாது உங்களுக்கு?

மேலே அப்படிப் படமாகக் கற்பனை செய்யப்பட்டு சொல்லப்பட்ட ஒரு அம்சம் "சர்க்கஸ்"

ஓசூரில் "தி கிரேட் பிரபாத் சர்க்கஸ்" நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன் ஈரோட்டில் வேலை பார்க்கும் போது சர்க்கஸ் பார்த்தேன். அதற்கு பத்து வருடங்களுக்கு முன் சேலம் வந்த புதிதில் அம்மா, அப்பா கூட்டிப்போனார்கள். இருபது வருடங்கள் ஆயிற்றே. இப்போது என்னதான் நடக்கிறது என்று சும்மா பார்க்கலாமே என்று எட்டிப்பார்த்தேன். மூன்று மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதல் பாராவில் கண்ட மனநிலைதான் எனக்கு முழு சர்க்கஸ் பார்க்கும் போதும் இருந்தது. அதே சர்க்கஸ், அதே நிகழ்ச்சிகள். கொஞ்சம் கூட மாற்றமில்லாத விளையாட்டுக்கள். 1970 களில் இருந்த தலைமுறை ரசித்த விளையாட்டுக்களை 2013-ன் ஆன்டிராய்டு தலைமுறையும் அப்படியே ரசிக்கும் என்று எந்த நம்பிக்கையில் இவர்கள் சர்க்கஸ் நடத்துகிறார்கள்?

எம்.ஜி.ஆர்-ன் பறக்கும் பாவை-யில் பார்த்த அதே பார் விளையாட்டுக்கள், கமலின் அபூர்வ சகோதரர்களில் வந்த அதே சித்திரக்குள்ளர்கள், ஆனால் சிங்கம், புலி விளையாட்டுக்கள் மிஸ்ஸிங். இரண்டு கலரில் இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து இரண்டையும் தனித்தனியாக எடுப்பவனையும் காணோம். ஐந்து ஆப்பிரிக்க இளைஞர்கள் வந்தார்கள். நான்கைந்து முறை வந்து போனார்கள். வரும்போதெல்லாம் ஒரே மாதிரி ஆடினார்கள். காற்றைப்புணர்வது போல ஆடிக்காண்பித்தார்கள். என் பக்கத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பாப்பா தலையில் அடித்துக்கொண்டாள். அவளுக்கும் புரிகிறது.. நாய் இரண்டு காலில் நடந்து காண்பித்தது. கிளி சைக்கிள் ஓட்டிக் காண்பித்தது. அழகிகள் தம் உடலில் வளையம் சுற்றினார்கள். ஜோக்கர் என்ற பெயரில் மூவர் மரண மொக்கை போட்டார்கள். நேபாள், பூட்டான், சைனா இளைஞர்களும், இளைஞிகளும் (பலர் வயதான பெண்கள், கலரும் தோலும் மட்டும் ஆடியன்ஸைக்கவர) வந்து கம்பி சுற்றினார்கள். கயிறு ஏறினார்கள். ஒரே சைக்கிளில் ஆறு பேர் பயணித்துக் காண்பித்தார்கள்.

பால்கனி கட்டி அமர்ந்த ஆர்க்கெஸ்ட்ரா 80-களில் வந்த  (தங்கமணி சொன்னார்) ஹிந்திப்பட பீஜியம்-களை கொய்ங்க், கொய்ங்க் என்று இசைத்தார்கள். அவர்கள் இசைத்ததில் லேட்டஸ்ட் என்றால் டைட்டானிக்கில் வந்த இரு பாடல்கள் (அதுவும் 97-ல் வந்தது. அதுவே 16 வருடப்பழசு) டரட், டரட், டரட், என்று சைலன்ஸர் கழட்டிய இரு மோட்டார் சைக்கிள்கள் உலக உருண்டைக்குள் சுற்றின. மூன்று டொக்கு விழுந்த யானைகள் சிவபூஜை செய்தன. எனக்கு டஜன், டஜனாக கொசுக்கள் கடித்துத் தள்ளின. குர்பானி போடக் கூட்டி வந்த ஒட்டகம் போலும், தளர்வாக ஒரு நடை நடந்து சுற்றி வந்தது. எனக்கு 27 முறை கொட்டாவி வந்தது.

காலம் எவ்வளவோ மாறிப்போன பிறகு 1970-ல் செய்த அதை வித்தையைத் தான் இன்றைக்கும் திரும்ப செய்வேன், நீ வந்து பார், காசு கொடு என்றால் எப்படி? அந்த தொழிலாளர்கள் பாவம்தான், கஷ்டப்படுகிறார்கள் தான், உயிரைப்பணயம் வைத்து சாகசம் செய்கிறார்கள் தான். ஆனால் அதற்காக போய் எல்லாரும் சர்க்கஸ் பார்க்க முடியுமா? (மீண்டும் முதல் பாராவை படிக்கவும்) நான் என் தாத்தாவின் பிஸினஸையே இன்றைக்கு செய்ய முடியுமா? புழக்கத்தில் இருந்தே அழிந்து போன பேஜரை விற்கிறேன் என்று கடை போட்டால் போணி ஆகுமா? தோள் பட்டி வைத்த பெல்பாட்டம் பேன்ட்-டை மட்டுமே இன்றைக்கும் தைத்துத் தரும் டெய்லராக வேலை செய்ய முடியுமா? 2013 -ல் ஊருக்கு ஊர் டென்ட் அடித்து ஹரிதாஸ் நாடகம் போட முடியுமா?




தயவு செய்து மாறுங்கள் சர்க்கஸ் தொழிலாளர்களே.. மக்களிடம் வெறும் இரக்கத்தையும், அனுதாபத்தையும் மட்டும் வைத்து இனிமேலும் ஷோ-க்கள் நடத்த முடியாது. சம்பாதிக்க முடியாது. உங்கள் ஒட்டுமொத்த டீமுக்கும் சோற்றுக்கு மட்டுமே பல ஆயிரங்கள் ஒரு நாள் தேவை. காலத்திற்கேற்ப மாறுங்கள். ஏதேனும் செய்யுங்கள்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

நடுராத்திரி-யில் ஒரு கடி





மழைக்காலமா இருக்கு எங்க ஊர்ல. தினசரி மழை, தொடர்ந்து சிலபல பவர்கட்டுகள். எல்லாம் உண்டு. முந்தாநாள் பக்கத்து வீட்டு அங்கிள் ஒரு மக் தண்ணீரில் பினாயில் கலந்து அவங்க வீட்டை சுற்றி (மட்டும்) ஊற்றிக்கொண்டு இருந்தார். எனக்கு அப்பவே ஒரு டவுட்டு. என்ன சார் என்று கேட்டால் ஒன்றுமில்லை, மழைக்காலமா இருக்குல்ல, அதான், என்றார். (மழைக்காலத்துக்கும் பினாயில் ஊத்துறதுக்கும் என்னய்யா சம்பந்தம்?)

நேற்று நள்ளிரவு மூவிஸ் நவ்-ல் (எட்டாவது முறையாக) கராத்தே கிட் பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் தங்கமணி என்மேல் சாய்ந்து கேன்வாஸ் டூடில்-ல் கேண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென மேல் முதுகில் சுருக்கென்று ஒரு வலி. முள் குத்தியது போல. ஜேடன் ஸ்மித்-தை விட வேகமாக எகிறிக்குதித்தேன். அம்மணியையும் எழுப்பி விட்டுவிட்டு தலையணையை, பெட் ஸ்பிரெட்டையெல்லாம் உதறி, லைட்டை போட்டு என்னடாவென்று பார்த்தால்....

திருவாளர் பூரான் அவர்கள். சுமார் மூன்று இஞ்ச் அளவு இருக்கும். நல்ல கருஞ்சிவப்பு நிறம். எத்தனை ஜோடி கால்கள்? இரண்டு ஆன்டெனா கொடுக்குகள் வேறு. சர சர வென்று வளைந்து நெளிந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். பின்னாடியே நான் ஓட, அவர் ஓட, நான் ஓட, அவர் ஓட, தங்கமணியை சேரின் மேல் ஏற்றி நிற்கவைத்து விட்டு ஹால் பூரா அங்குமிங்கும் ஓடி வலியோடு நான் நடத்திய களேபரத்தில் பூரான் பாவம். எனக்கு கிங் காங் படத்தில் காட்டுக்குள் ஓடி டைனோசருக்கு பயந்து ஔியும் ஹீரோயினின் மேல் ஏறும் இரண்டடி நீள பூரானெல்லாம் நினைவில் வந்து பயமுறுத்தியது.



இப்போ தெரியுதா நேற்று ஏன் அங்கிள் பினாயில் ஊற்றிக்கொண்டிருந்தார் என்று? அட சொட்டைப் பக்கிப் பயலே, பூரான் என்று நேற்றே சொல்லியிருந்தால் நானும் கொஞ்சம் பினாயில் எடுத்து எங்க வீட்டையும் சுற்றி ஊற்றி வைத்திருப்பேன்ல?

பூரான் கடி எந்த அளவு விஷம் என்று எனக்குத் தெரியவில்லை. உடனே போனடித்து என் பாசமலரை எழுப்பிவிட்டேன். தங்கமணி ஒருபக்கம் போனில் அவரது அம்மாவை எழுப்பி விட்டார். இந்தப்பக்கம் லேப்டாப்பில் இணையத்தில் நுழைந்து விக்கி, கூகுளெல்லாம் செய்து பூரான் பற்றி தேடிப் பார்த்தால்.... பெரிய பிரச்சினையில்லை, லேசாக அங்கங்கு திப்பி, திப்பியாக வீங்கும், மற்றபடி விஷமெல்லாம் ஏறாது என்று ஆறுதலாக போட்டிருந்தார்கள். நல்ல வேளை. பாசமலரும், அத்தையும் கூட ஒண்ணும் பிரச்சினையில்லை என்று ஆறுதல் சொல்லிவிட்டு மருந்து தடவு, மாவு தடவு என்று சிம்பிள் வைத்தியமே சொன்னார்கள். மெடிக்கலுக்கோ, கிளினிக்குக்கோ போகலாம் என்று யோசித்தால் நட்ட நடுராத்திரி பூரான் கடிச்சா எங்கே போறது? (எனக்கு மட்டும் ஏண்டா இப்படிலாம் நடக்குது?)



நடு மண்டையை சொறிந்து நன்றாக யோசித்தேன். நம்ம கிட்ட தான் ஒரு கிரேட் மருந்து இருக்கே. அம்ருதாஞ்சனம்..... அதுவும் டிரெடிஷனல் மஞ்ச கலர் அம்ருதாஞ்சனம்..... கொஞ்சம் எடுத்து தடவி விட்டதும் அது கொடுத்த மகா எரிச்சலில் பூரான் கடியாவது, பாம்புக்கடியாவது, எரிச்சல் தருவதில் நம்ம அம்ருதாஞ்சனை அடித்துக்கொள்ள முடியாது.. கொஞ்ச நேரத்தில் ஜேடனின் குங் பூ கிக்-குகளை பார்த்துக்கொண்டே தூங்கி விட்டேன்.

காலையில் எழுந்திருத்து போய் எதிர்த்த வீட்டு ஆன்ட்டி-யிடம் மேட்டரை சொல்லிவிட்டு கைவைத்தியம் ஏதாவது இருந்தா சொல்லுங்க ஆன்ட்டிஎன்றால் அவர் தங்கமணி வயிற்றை பார்த்துவிட்டு "அவரை பூரான் கடிச்சா உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்" என்று (சீரியஸாக சொல்லிவிட்டு) ஒரு பூ எடுத்துக் கொடுத்தார்கள்.

நான் "ரெண்டு பாம்புக்குட்டி எடுத்துட்டு வந்து என் மேல விடுங்க ஆன்ட்டி, என்ன குழந்தை பிறக்குது-ன்னு பார்ப்போம்" - என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

மற்றுமோர் மைல்கல் - எங்கள் புதிய ஆன்டிராய்டு அப்ளிகேஷன்


நண்பர் செல்வ முரளி கிட்டத்தட்ட பத்து வருடப்பழக்கம். தினமலரில் வேலை செய்யும் காலத்தில் இருந்தே ஏதேனும் செய்ய வேண்டும் புதிதாய் செய்ய வேண்டும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்றெல்லாம் அவ்வப்போது ஆலோசனைகள் நடக்கும்.

Road not taken போல இரண்டு பேரின் பாதைகள் வேறு வேறாய் இருந்தாலும் இருவரையும் இணைத்த விடயங்களில் ஒன்று எழுத்து. மெயின் ஸ்டிரீம் விஷயம் வேறாக இருந்தாலும் இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் அவ்வப்போது விடாமல் எழுதி வந்தோம்.

ஏதோ காரணங்களால் என் எல்லை வெறும் வலைப்பூ மற்றும் குமுதம், விகடனில் ஜோக் எழுத்தாளர் என்று குறுகிப்போனது. ஆனால் முரளி பெரிய எல்லைகளை தொட்டுவருகிறார். (விளக்கமாகப்பார்க்க அவரது ஃபேஸ்புக் பக்கம்)

ஏற்கனவே விஷூவல் மீடியா டெக்னாலஜீஸ் மூலமாக பல (இலவச) ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களை வழங்கி சாதனையையும் படைத்திருக்கிறார் அவர். ஒரு நாள் திடீரென தோன்றிய யோசனை என்னுடைய ஜோக்குகளை ஆன்டிராய்டில் அப்ளிகேஷனாக கொடுக்கலாமே என்று தோன்றியது.

ஆறு மாதமாக பேச்சுவார்த்தையில் இருந்த விடயம் (பவர்கட் உள்ளிட்ட) ஆயிரம் பிராக்டிகல் பிரச்சினைகளையும், தடைகளையும் தாண்டி இன்று அது செல்வ முரளியின் அயராத உழைப்பினால் ஆன்டிராய்டு அப்ளிகேஷனாக மலர்ந்துள்ளது.

ஒரு இலக்கியவாதி கைக்காசை போட்டு புத்தகம் பதிப்பிப்பதை ஒத்த, நேரத்தையும், உழைப்பையும் விழுங்கிய விஷயம் இது. இலவசங்களுக்கப் பழகிய நாட்டில் இலவசங்களாகவே கொடுக்கலாம் என்று ஏக மனதாக (வேறு வழியின்றி) முடிவானது. இரண்டே பேரின் கடின உழைப்பு, அதுவும் இலவசம் வேறு, அதுவும் இவ்வரிசையில் முதல் அப்ளிகேஷன் வேறு என்பதால் மிக எளிமையாவே கொடுத்திருக்கிறோம்.

அடுத்தடுத்த வெர்ஷன்கள் கொண்டுவர முடிவெடுத்து முயற்சித்து வருகிறோம். பலம் சேர்க்கும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இலாப நோக்கமற்ற வணிக நோக்கமற்ற முயற்சி இது.

இணையத்தில் பார்க்க 

உங்கள் மொபைலில் ஆன்டிராய்டு google play வில் தேடி டவுன்லோடு செய்ய tamil jokes, visual media jokes, yeskha என்ற key words உபயோகித்து தேடலாம்.

நகைச்சுவையின் முடிசூடா மன்னர்கள் கவுண்டமணி, செந்தில் எங்கள் முகப்புப் பக்கத்தை அலங்கரிக்கிறார்கள்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

‘ஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?’ ஓர் செயல்முறை விளக்கம்


சமீபத்தில் "ஒரு குடும்பத்துக்கான ஒரு முழு நாள் உணவுச் செலவு ரூபாய் 33 (நகர்ப்புறம்) 27 (ஊர்ப்புறம்)" மட்டுமே என்ற பொருளாதார அறிவு ஜீவிகள் அளித்த ஓர் அறிக்கையை படிக்க நேர்ந்தது. அது பற்றி பலரும் பல விதமாக கருத்து சொல்லி வந்த வேளையில் நாமும் ஏன் கருத்து சொல்வானேன் என்று நினைத்தேன். பதிலாக ஒரு முறை செயல்படுத்திப்பார்க்கலாமே என்று தோன்றியது. தங்கமணியிடம் கேட்டேன். அவரும் .கே சொன்னார்.

அப்படி செயல்படுத்திப்பார்த்ததில் இன்றைக்கு எங்கள் வீட்டு சாப்பாட்டுக்கான செலவு பத்து ரூபாய் மட்டுமே.. நீங்களும் இந்த மாதிரி செய்து பார்க்கலாம். இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றலாம். இதனால் அந்த அறிக்கையை கண்மூடித்தனமாக (?) வெறித்தனமாக (?)  நான் ஆதரிக்கிறேன்.

இன்றைக்கு சுதந்திர தினம் ஆனதால் நாங்கள் இருவரும் சுதந்திரமாக தூங்கி காலை சுமார் ஒன்பதரை மணிக்கு தான் எழுந்திருத்தோம். ஆக பல் விளக்கி, காலைக்கடன்களை முடித்து காபி ஹார்லிக்ஸ் வகையறாக்கள் சாப்பிட்டு விட்டு துணிகளை துவைக்கப்போட்டு முடித்து காயப்போட்டு குளித்து வீடு கூட்டித் துடைத்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்து விட்டு டிவி பார்த்து விட்டு கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தால் மணி பனிரெண்டு ஆகி இருந்தது. ஆக காலை உணவு சாப்பிடவே இல்லை.

அதனால் அந்த செலவு மிச்சம்.

மதிய உணவை லைட்டாக சாப்பிடலாம் இரவு உணவை ஹெவியாக்கலாம் என்று முடிவு செய்து விட்டு மதிய உணவுக்காக நேற்று நைட்டு மீதமிருந்த வெள்ளை சோறை எடுத்துக்கொண்டு பிரிட்ஜில் இருந்த பழைய ரசத்தை சூடாக்கி சாப்பிட்டோம். பக்கத்து கடையில் ஒரே ஒரு தயிர் பாக்கெட் வாங்கிக்கொண்டோம்.

ஆக மதிய உணவுக்கான செலவு பத்து ரூபாய்.

நன்றாக சாப்பிட்டு விட்டு மல்லாக்கப்படுத்துக் கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து டி.விக்களிலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் (?) நடித்த படங்கள், தியாகிகள் (?) செய்த மொக்கை காமெடி ஷோக்கள், தியாகிகள் (?) நடித்த சீரியல்கள் எல்லாவற்றையும் ரிமோட் தேயத்தேய மாற்றி மாற்றிப் பார்த்தோம். பிறகு, மிக விரைவில் என் வயதில் ஒன்று கூடும் விதமாக எனது வாழ்க்கையில் இன்னோரு வருடம் கழிந்து விட்டதால் இன்றைய இரவு உணவை வெளியே ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிடலாம் என்று ஏக மனதாக முடிவானது. அதே போல் செய்து விட்டு உணவகத்தில் செலவான தொகையை டெபிட் கார்டு மூலமாக கொடுத்து விட்டோம்.

ஆக இரவு உணவுக்கு செலவே இல்லை...

ஸோ, இப்போது கூட்டிக் கழித்துப்பாருங்கள். இன்று முழுவதும் இரண்டு பேர் கொண்ட எங்கள் பெரிய (?) குடும்பத்திற்கு உணவுக்காக செலவான தொகை வெறும் ரூபாய் பத்து மட்டுமே.. இந்த மாதிரி நீங்களும் செய்தால் அந்த பொருளாதார அறிவு ஜீவிகள் சொன்ன மாதிரி 27 ரூபாய்க்குள் செலவை முடித்துக்கொள்ளலாம்.





கடுப்பாவுதுல்ல... அப்போ அந்த அறிவு ஜீவிகள் கொடுத்த அறிக்கையை படிச்சுட்டு எங்களுக்கு எவ்வளவு கடுப்பாவும்? கொய்யால..
--------------------------------------------------------------------------------------------------------------- 
படித்துப்பார்க்கவும்
 
சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா? யுவகிருஷ்ணாவின் பதிவு இது