திங்கள், 30 மார்ச், 2020

கொரோனா விபரீதமும் அறிவுறுத்தலும்


உலகம் முழுக்க இன்றைய தேதிக்கு கொரோனாவுக்கு 35000 பேர் பலி. எவ்வளவு பெரிய எண்ணிக்கை? ஸ்பெயினிலும், இத்தாலியிலும் கொத்துக் கொத்தாக சாகிறார்கள். எரியூட்ட நேரமின்றி பிணங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் பலர் நேற்று வரை நம்மைப் போல் மிகச் சாதாரணமாக சுற்றித் திரிந்தவர்கள். அதே சமயம், எச்சரிக்கையின்றி கவனக்குறைவாக இருந்தவர்கள். விபரம் தெரியாமல் மாண்டு போகிறவர்களும் அடக்கம்.

அதுபோல, நம் நாட்டிலும் சுமார் 30 - 40 சதம் மக்கள், நிலைமையின் விபரீதம் புரியாமல் இன்னமும் சுற்றித் திரிந்து கொண்டே இருக்கிறார்கள். அரசுகள் எடுக்கும் நடவடிக்கையால் இன்று வரை நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு வெளியில் தெரிய 14 நாட்கள் ஆகும் என்ற நிலையில் 5 நாட்கள் "உள்ளிருத்தல்" நிலையைக் கடந்துள்ள நாம், அடுத்த நிலையைத்தெரிந்து கொள்ள 7 முதல் 9 நாட்கள் ஆகலாம்.

A என்ற ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் வீட்டிலுள்ள C, D, E என்றவர்களுக்குப் பரவலாம். அதைக் கண்டுபிடிப்பது எளிது. ஆனால் வெளியே போய் நபர் A சந்திக்கும் மக்களை B என்று கொண்டால் அந்த B - யார் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? B என்பது ஒருவராகவும் இருக்கலாம், 400 ஆகவும் இருக்கலாம். ஆக, வெளியே போகாமல், முடிந்தவரை அடுத்தவர்களிடம் தொடர்பு இல்லாமல் இருப்பதே நல்லது.

கொரோனாவின் மற்றோர் ஆபத்து என்னவெனில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதன் அறிகுறிகள் வெளியே தெரியுமுன்பே மற்றவர்களுக்குப் பரவிவிடும். நான் நன்றாயிருக்கிறேன் என்று நினைத்து அவர் வெளியே சுற்றினால் அது அறியாமை.

"வெளியே போகாதே" என நாம் பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் கூவுவது, பெரும்பாலும் நம்மைப் போன்ற ஒத்த கருத்துள்ளவர்களிடமே போய்ச் சேர்கிறது. அல்காரிதமும், லாஜிக்கும் அப்படி.

நிலைமையின் தீவிரம் புரிந்த நீங்கள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் இல்லாத, ஆனால் உங்களுக்குத் தெரிந்த சிலருக்கு, உங்கள் பேச்சைக் கேட்கும் சிலருக்கு, அக்கம் பக்கத்தினரோ, உறவினரோ அடிக்கடி வெளியே செல்வோருக்குப் போன் செய்து அறிவுறுத்துங்கள்.

நான் சிலருக்கு அழுத்தமாக அறிவுறுத்தியிருக்கிறேன்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக