சனி, 28 மார்ச், 2020

DC Extended Universe




Opinion differs என்றொரு சொலவடை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "ஒருவரது கருத்து மற்றொருவரது கருத்துடன் ஒத்துப்போக வேண்டிய அவசியமே இல்லை. மாறுபட்டு இருக்கலாம்" என்பார்கள்.
சில சமயம் என் டிரெயினிங் வகுப்புகளில் இதைச் சொல்லி விட்டு, இதற்கு வேறொரு கோணமும் சொல்லலாம். Opinion differs மற்றவர்களுடன் தான் இருக்க வேண்டும் என்றில்லை. நமக்குள்ளே கூட இருக்கலாம். அதாகப்பட்டது 5 வருடங்களுக்கு முன் நான் சொன்ன ஒரு கருத்தை, பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இன்று நான் கம்ப்ளீட்டாக மாற்றிக்கொண்டிருக்கலாம். தவறொன்றுமில்லை.
சொல்லி விட்டோமே என்ற காரணத்துக்காக அதே கருத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது யாருக்குப் புரிந்ததோ, நம்மூர் அரசியல் வாதிகள் இதை "நன்கு" புரிந்து கொண்டிருக்கிறார்கள், அண்ணன் வடிவேலு சொன்னது போல "அது போன மாசம். நாஞ்சொன்னது இந்த மாசம்" என்பது போல.
சிம்பிள் உதாரணம் - நீங்கள் 10 வருடத்துக்கு முன்பு அப்பாவிடம் சண்டை போட்டு, தீபாவளிக்கு எடுத்த சட்டையின் போட்டோவை எடுத்துப் பாருங்கள். "ச்சை, இதெல்லாம் ஒரு டிசைன்னு இதுக்கா சண்டை போட்டு எடுத்தோம்" என்று தோன்றலாம். 5 வருடம் முன்பு உங்கள் தங்கையிடம் ஏதோ சப்பை மேட்டருக்கு சண்டை கட்டியிருப்பீர்கள். பல வருடம் முன்பு விஜய்க்காகவோ, அஜீத்துக்காகவோ உயிர் நண்பனிடம் சண்டை போட்டிருக்கலாம். அதே விஜய் பற்றி இன்று உங்கள் கருத்து மாறியிருக்கலாம். இவையும் Opinion differs ஏ....
திரைப்படங்கள் விஷயத்தில் எனக்குச் சில சமயம் இவ்வாறு நடப்பதுண்டு. அதுவும் குறிப்பாக ஆங்கிலப் படங்கள் விஷயத்தில். சில சமயம் படங்கள் வெளியான சமயத்தில் அவை பிடிக்காமல் கடுப்பாகி, திட்டியிருப்பேன். ஏன் பதிவு கூடப் போட்டிருப்பேன். ஆனால் சில காலம் கழித்து, அந்தப் படங்களின் பின்னணி தெரிந்தோ, பிற விபரங்கள் அறிந்தோ, அல்லது சப் டைட்டில்கள் உபாயத்திலோ அந்தப் படத்தை மீண்டும் பார்க்கையில் அது வேறு ஒரு கலரில் மனதில் பதியும். தவறொன்றுமில்லை. ஒரு ரசிக்கும் படியான படைப்பு காலம் கடந்தாலும் ஒரு புதிய ரசிகனை உருவாக்கவே செய்யும்.
"சீரிஸ்" விஷயத்தில் நானெல்லாம் "மார்வல்" ரசிகன். Marvel Cinematic Universe - ன் வரிசைக்கிரமப் படி 23 படங்களையும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் தியேட்டரில். அதிலும் 3 டி யில். ஒரு படத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டால் "ஈஸ்டர் எக்ஸ்" புரியாது, கோர்வை விட்டு விடக் கூடாது என்று தடாபுடாவென yts ல் டவுன்லோடிப் ("என்ட் கேம்" வந்தபோது அவசர அவசரமாக "கேப்டன் மார்வல்" டவுன்லோடிப்) பார்த்துவிட்டுத் தான் "என்ட் கேம்" போனேன். அந்த அளவு ரசிகன், ப்ரியன், வெறியன்.
இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள உதவியாகக் பல பதிவுகள், சினிமா ஆர்வலர்கள் எழுதிய கட்டுரைகள், விக்கி, ஐ.எம்.டி.பி, எச்சட்ரா. மேற்கொண்டு விரிவாக விவாதிக்க இருக்கவே இருக்கு நம்ம டான் தலைமையிலான MFC குரூப். எனக்குள் மார்வல் விதைத்த ஒரு பேட்டர்ன், கலர் டோன், படங்களுக்குள்ளான இன்டர் கனெக்ஷன்ஸ், ஸாஃப்ட்டான, குழந்தைகளையும் உள்ளிழுக்கும் வகையான சில விஷயங்கள் பிடித்துப் போய் "மார்வல்" வெறியன் ஆகிப்போனேன்.
ஆகவே obviously, DC படங்கள் அவ்வளவாகப் பிடிக்காமல் போயின. Man of steel போய்விட்டு வந்து (கொஞ்சம் பிடித்திருந்தாலும்) "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?" என்று தான் விமர்சனம் போட்டேன். மார்வல் போல கலர்ஃபுல் ஆக இருக்கும் என நம்பி 6 வயசு மருமகனை "Batman Vs Superman" அழைத்துப்போய் அவன் காண்டாகி, அவனால் நான் காண்டாகி, கடுப்பேறிப் பதிவு போட்டேன். ரிலீஸ் ஆன காலகட்டத்தில் எனக்குப் பிடித்த DC யின் ஒரே படம் Wonder Woman மட்டுமே (காரணம்? அதையெல்லாம் கேக்கப்படாது. நீங்களா எதையாவது யோசிச்சிக்கணும்).
ஆனால் காலம் மாறமாற என்னுள் அந்த "Opinion differs" வேலைகாட்ட ஆரம்பித்தது. அதன் ஆரம்பப்புள்ளி Wonder Woman ஆக இருக்கலாம். அது பிடித்ததும், ஒவ்வொரு சூப்பர் ஹீரோவைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் கூகிளண்ணனைப் பீறாய்ந்து படித்தேன். காமிக்ஸ்களில் சித்தரிக்கப்பட்ட சூப்பர்மேன், க்ரிப்டன், டூம்ஸ் டே எனத் துவங்கி ஒரு மாற்று எண்ணம் வரத் துவங்கியது. அடுத்து வந்த "சூசைட் ஸ்குவாட்" மிகவும் பிடித்திருந்தது. நான்கைந்து முறை பார்த்தேன். "ஹார்லி க்வின் - மார்கோ ராபி - க்காகவும்", "என்சான்ட்ரஸ் - காரா டெலவேனி - க்காகவும்".
இப்படியே கிட்டத்தட்ட DC Extended Universe - ன் ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன். "ஜஸ்டிஸ் லீக்" அங்கங்கே யூடியூபில் பிச்சுப்பிச்சுப் பார்த்திருந்தேன். "ஆக்வாமேன்" பார்க்கவில்லை. சமீபத்தில் ரிலீஸ் ஆனதே தெரியாமல், வந்த வேகத்தில் காணாமல் போன "பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே"வையும் மிஸ் செய்திருந்தேன். அப்போது தான் கொரோனா வேலையைக் காட்டியது.
"வொர்க் ஃப்ரம் ஹோம்" போட்டார்கள். வேலை அதே அளவு இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு வாரமாக வீட்டிலேயே இருந்ததால், டிரெயின், பஸ் பயணங்களிலும், ஏர்போர்ட் செக்யூரிட்டி செக் இன்களிலும் வீணான நேரங்கள் அப்படியே மிச்சமாயின. அப்போது ஒரு எண்ணம் - DC Extended Universe ஐ வரிசையாகப் பார்க்கலாமே? என்ற எண்ணத்தைத் தூசு தட்டி ஆரம்பித்தேன். நான்கே நாட்கள். கிட்டத்தட்ட ஆறு படங்கள் அமேசான் ப்ரைமிலேயே கிடைத்தது. "ஆக்வாமேன்" மற்றும் "Birds of Prey" வை மட்டும் YTS ல் டவுன்லோட் போட்டு உட்கார்ந்தேன்.
பொடுசுகள் தொந்திரவு, "வொர்க் ஃப்ரம் ஹோம்" மற்றும் "வொர்க் ஃபார் ஹோம்" ஆகிய எல்லாத்தடைகளையும் தாண்டி DC வெளியிட்ட அதே வரிசைக் கிரமத்தில் 8 படங்களையும் நான்கே நாட்களில் பார்த்து முடித்தாயிற்று. ஒரு ஹாலிவுட் சினிமா ரசிகனாக, ஆக்ஷன் பட விரும்பியாக, ஒரு முழுத் திருப்தியான வாரம் இது எனக்கு. சக "பட விரும்பிகள்" முயற்சிக்கலாம். Unlimited Entertainment guarantee.
இதோ அந்த லிஸ்ட்.....
1. Man of Steel
2. Batman Vs Superman
3. Suicide Squad
4. Wonder Woman
5. Justice League
6. Aquaman
7. Shazam
8. Birds of Prey.
பின்கு - கொரோனா பிரச்சினை முடிந்ததும், சம்பந்தப்பட்ட எல்லோரும் பிழைத்திருந்தால் (நானு, தியேட்டர்கள், படாதிபதிகள்) கண்டிப்பாக Wonder Woman 1984 உட்பட அனைத்து எதிர்காலப் படங்களும் தியேட்டரில் 3 டியில் பார்க்கப்படும்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக