திங்கள், 24 ஜனவரி, 2022

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் (ஏன்யா சாவடிக்கிறீங்க)

அமீர்கானையும் (கொஞ்சூண்டு அமிதாப், கட்ரீனா போன்றவர்களையும்), அவரது உழைப்பையும், பெரும் பட்ஜெட்டையும் "மட்டுமே" நம்பி எடுக்கப் பட்ட படம். காட்சிகளில் பிரமாண்டம் இருக்கிறது. நம்பகத் தன்மை இல்லை. கதையிலும், திரைக்கதையிலும் மெகா மெகா ஓட்டைகள். "தங்கல்" முடித்தவுடன் வெளியான, அமீர்கான் கஷ்டப்பட்டுச் செய்த "Fat to Fit" வீடியோ வெல்லாம் கிளப்பிய எதிர்பார்ப்புகள் எல்லாம் வீணாகப் போனது தான் மிச்சம். 

செட்டிங்க்ஸ், உடைகள், கிராபிக்ஸூக்கும் உழைத்த உழைப்பு அருமை. ஆனால் கதைக்காக கொஞ்சம் கூட வரலாற்று ரெஃபரன்ஸ் எடுத்தது போலத் தெரியவில்லை. வர்றாங்க, போறாங்க, சுடுறாங்க, அடிக்குறாங்க என்றே போகிறது படம். பக்கா லோக்கல் தரை மசாலா கில்மா ஐட்டம் பாட்டுகள் மூன்று. சுதந்திரம் நடக்கும் காலகட்டத்தில் இப்படியெல்லாம் டான்ஸ் நடக்குமா? அல்லது எம்.ஜி.ஆர் காலத்தில் ஐட்டம் பாடலில் அவரே மெயின் டான்ஸராக வந்து ஆடுவதைப் போல 2018 ன் ரசிகர்களின் காதில் எந்த நம்பிக்கையில் பூத்தோட்டத்தை வைக்க முடியும் என்று அமீர்கான் நம்பினாரோ தெரியவில்லை. 

தரை லோக்கல் ரவுடி ஒருவன், ஒரு ராஜாவிடம், ஆங்கிலேயே பெரும் அதிகாரிகளிடமெல்லாம் இப்படிப் பேச முடியுமா? நடக்க முடியுமா? கட்டிப்பிடிக்க முடியுமா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. மூச். படம் பார்க்கும் போது ஒரு பதட்டம் வரவில்லை, ஒரு ஆர்வம் வரவில்லை, ஒரு மண்ணும் வரவில்லை. கதையில் நடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்க வேண்டும் அப்போது தான் படத்தில் ஒரு ஈர்ப்பு வரும். அமீர்கானின் பாத்திரப்படைப்பும் பெருங்குழப்பம். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பார்க்கும் போதே நான் தூங்கிய படம். அமேசான் ப்ரைம் தானே, சப்ஸ்க்ரிப்ஷன் தானே என்றெல்லாம் ரிஸ்க் எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

25 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக