செவ்வாய், 4 ஜனவரி, 2022

பேச்சா? பேச்சாளரா?

4 ஜனவரி 2021 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

பல மேடைப் பேச்சாளர்களிடம் நல்ல திறமைகள் இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் அவர்களுடைய "சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்". தனக்கு விழும் கைதட்டல்கள் காரணமாக "தனக்கு எல்லாம் தெரியும்" என்ற எண்ணம். மற்றவரை விட தான் உயர்ந்தவர் என்ற எண்ணம். தன் பேச்சுத் திறமை காரணமாக யாரையும் மடக்க முடியும் என்ற எண்ணம்.

(ஒரு சின்னப்பெண். 22 வயது இருக்கலாம். ஒருவரைப் பற்றி அப்துல் கலாம் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து விட்டு, கடைசியில் அது "நான்தான்" என்கிறார்). (இதே எண்ணம் தான் ஸ்டேஜை விட்டு இறங்கியதும் எல்லாரையும் தாழ்த்திப் பேசவும் வைக்கிறது. அப்படி ஒருவரையும் பார்த்திருக்கிறேன்).
அவர்களிடம் ஒரு தலைப்பின் இரு கோணங்களையும் கொடுத்து மாற்றி மாற்றிப் பேசச் சொல்லுங்கள். அசத்தி விடுவார்கள். மேலும், அவர்கள் எந்தப் பக்கம் நின்று பேசினாலும் நூறு பேராவது கைதட்டுவார்கள். பாரதி பாஸ்கர் பேசினாலும் கைதட்டல் விழும். ராஜா பேசினாலும் கைதட்டல் விழும். சண்முகசுந்தரம் பேசினாலும் கைதட்டல் விழும். நான் பேசினாலும் கைதட்டல் விழும். லியோனி பேசினாலும் கைதட்டல் விழும். அவர்களே எதிரெதிராகப் பேசினாலும் கைதட்டல் விழும்.
ஆனால் அப்படி விழும் கைதட்டல்களை தன் பேச்சுக்குக் கிடைத்ததாக எண்ணாமல் தனக்கே கிடைத்ததாக எண்ணி மீண்டும் "எனக்கு எல்லாம் தெரியும்" மோடுக்குப் போய்விடுகிறார்கள் சிலர். நம் தொடர்பிலும் சிலர் அப்படி உள்ளார்கள். அதில் சிலருக்கு தான் எடுத்து வைக்கும் கருத்து சரியா என்பதை விட "தான் ஜெயித்தே ஆக வேண்டும்" என்ற உள் எண்ணமே அதிகம்.
(நீயா? நானா? வில் ஒரு பேச்சாளர் பெண்மணி. வைரமுத்துவின் கவிதையை ஏற்ற இறக்கமாகப் பேசினார். ஒரே கைதட்டல். அதைக் கண்டதும் அவரது உடல்மொழி பெருமிதமாக மாறியது. ஆனால் அது வைரமுத்துவின் வரிகளுக்குக் கிடைத்தது என்பதை அவர் மனம் ஒப்புக்கொள்ளாது)
மேலே சொன்னது போல அவர்களால் ஒரே தலைப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் திறமையாகப் பேச முடியும் என்பதால் "உன்னை விட்டேனா பார்" என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விடுகிறார்கள். "எந்தக் கருத்து சரி" என்பதை விட "யார் இங்கே ஜெயிப்பது?" என்ற ஈகோ மேலோங்கி நின்றுவிட்டால் "தீர்வை" நோக்கிப் போக முடியாது. இருபுறமும் மாற்றி மாற்றி பாயிண்டுகள் வைத்துக்கொண்டே இருக்கலாம். இன்றைக்கு அப்படி ஒரு அனுபவம். டயர்டாக்கி விட்டார் ஒரு அம்மணி.
இதைத்தான் "மற்றவர்க்கென்றால் ஜட்ஜாகும் மனிதன் தனக்கென்றால் வக்கீலாகி விடுகிறான்" என்று முன்னோர்கள் சொன்னார்கள். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக