செவ்வாய், 30 ஜூன், 2020
மரம் வைக்க ஆசை
ஞாயிறு, 28 ஜூன், 2020
தினமலர் அனுபவங்கள்
28 ஜூன் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
வாத்யார் Ganesh Bala வின் தினமலர் பதிவு கிளறி விட்ட ஞாபக அடுக்குகளில் இருந்து
நானும் தினமலர் தான். சேலம் - ஈரோடு பதிப்புகள்
ஏதேனும் ஒரு கட்சி விழா சிறப்பு மலர் அல்லது கல்வி மலர் என்று தினசரிப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக கட்சி விளம்பரங்களால் நிரம்பும் காலம் அது. "சிறப்பு மலர்" என்பது ஏகப்பட்ட விளம்பரங்கள், விளம்பரங்கள் தந்தவர்களின் புகழ்பாடும் கட்டுரைகள் கொண்ட ஏகப்பட்ட சப்ளிமெண்டுகள் (சப்ளிமெண்ட் என்பது நான்கு பக்க உபரிப் பக்கங்கள்) கொண்ட தினசரி. ஒரே ஒரு நாள் காலை வெளியாகும் அது 30, 40 என்று துவங்கி 80 பக்கங்களையெல்லாம் தாண்டும்.
அதற்காக குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தூக்கம் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். முக்கியமாக விளம்பரத் துறை, புரூஃப் டிபார்ட்மெண்ட், கணிப்பொறி வடிவமைப்பு டீம், எடிட்டர் மற்றும் அவரது முக்கிய சில சகாக்கள். மற்ற துறைகள் முதல் நாள் உபரி நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.
ஏகப்பட்ட போட்டோக்கள், பின்னால் பெயர்கள், ஸ்கேன்கள், வேறு வேறு ஊர்கள், கட்டுரைகள், அதைப் பிழை திருத்துதல், எடிட்டி சுருக்குதல், விளம்பரங்களில் போட்டோ மாறிப் போதல், அதைக் கடைசி நேரத்தில் கண்டுபிடித்தல், டிசைன் செய்தல், நூற்றுக் கணக்கான விளம்பரங்கள் என்பதால் டிசைன்கள் ஒத்துப் போகாமல் பார்த்தல், எனக்கு எட்டாம் பக்கம் போடு, அவனுதைத் தூக்கி 48 ஆம் பக்கம் போடு என்ற அத்துமீறல்கள் என்று ஆபீஸே கலகலக்கும்.
திமுக கரையை (கறுப்பு, சிகப்பு) விளம்பர பார்டரா போடணும்னு சொல்லி அதை டிசைன் செய்து ஓக்கே செய்தால், முதலில் ஓடுகிற 100 பேப்பர்கள்களில் கறுப்பு, சிகப்பு மற்ற கலர்களுக்கான மை (CYMK) செட்டாகும் முன்னாடி கறுப்புக்கும் சிகப்புக்கும் நடுப்புற வெள்ளை வரும். எடிட்டோரியலில் ரிஜக்ட் செய்யப்படும்.
ஏன்? கறுப்பு, வெள்ளை, சிகப்பு - அதிமுக.
நம்ம டெலிவரி மேன்ஸ் ரொம்ப அதிபுத்திசாலித்தனமா அந்த பேப்பர்கள் வேஸ்ட் ஆகக்கூடாது, அதனால் தூரமா இருக்குற வில்லேஜ் களுக்குப் போற கட்டுகள்ல போடு என்று கலந்து அனுப்பிடுவார்கள். சிட்டி, டவுனுக்குப் போகிற பேப்பர்கள் கறுப்பு, சிவப்பு கச்சிதமா போகும்.
ஆனா, சம்பந்தப் பட்ட விளம்பரத்தைக் கொடுத்த தி.மு.க காரருக்கு அவர் ஊருக்கு, அவர் வீட்டுக்கு, சரியாக அந்த கலர் தள்ளிப்போன பேப்பரே சோதனையாப் போய்ச் சேரும். அதுக்கப்புறம்...............................
வெள்ளி, 19 ஜூன், 2020
தலையைச் சுத்தி காதைத்தொடு
வியாழன், 18 ஜூன், 2020
போஸ்ட் ஆபீஸ் வட்டி விகிதம்.
ஞாயிறு, 14 ஜூன், 2020
விர்ச்சுவரல் போராளிகள்
இந்தப் பதிவு குறிப்பிட்ட ஒருவரைப் பற்றியது போல இருக்கலாம். ஆனால், பொதுவாக இந்த மாதிரி இன்டர்நெட்டில் (மட்டும்) கம்பு சுத்தும் சிலரைப் பற்றி நெடுநாளாக மனதில் ஓடும் ஒரு விஷயத்தைத்தான் சொல்ல வருகிறேன்.
அந்தம்மா பற்றி எனக்கு ஒன்றும் பெரிதாக விபரங்கள் தெரியாது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்ணில் படும். பார்க்கவே எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட - எனக்கு அவர்களைப் பற்றி எந்த அபிப்ராயமும் இருந்த தில்லை. ஆனால் அவரின் கொள்கைகள், நடவடிக்கைகள், அவரின் அடையாளங்கள், பேச்சுக்கள், தன்னை எப்பேர்ப்பட்ட பெண்ணென்று நிரூபணம் செய்யும் விதம்... எல்லாமே ஆரம்பம் முதலே தவறாகவே எனக்கு தோன்றியது...
எனக்கு பேஸிக் கா ஒரு விஷயம் இடிக்குது. ரூல்ஸ், கலாச்சாரம் போன்றவை நாடு, இடம், காலம் சம்பந்தப் பட்டவை. இங்க இந்தியாவுல வாழ்ந்துகிட்டு நான் அமெரிக்க கலாச்சாரம் தப்புன்னு சொல்லக்கூடாது. 2020 ல இருந்து கிட்டு 1920 ல வாழ்ந்த ஒரு குழுவோட கலாச்சாரத்தை "இப்படி இருந்திருக்கணும், அப்படி இருந்திருக்கணும்" னு சொல்லக்கூடாது. மகா தப்பு.
அதே போல "பெண் சுதந்திரம்" பேசும் பலர் இந்தியாவில், இங்கே, இப்போ பல போராட்டங்களுக்கு இடையில் வாழ்ந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்தால் வாழ்த்தலாம். பேசலாம். விவாதிக்கலாம்.
ஆனால், மிகச் சுதந்திரமான வெளிநாட்டில் மற்றொரு கலாச்சாரத்துக்கு நடுவில் வாழ்ந்துகொண்டு, வசதியான டாலர் கொட்டும் வேலைகளில் இருந்து கொண்டு இன்டர்நெட் தரும் கட்டற்ற போலி சுதந்திர மனப்பான்மைக்குள் (தன் ரூம்ல தான் தானே ராஜா?) சிக்கிக் கொண்டு அடிக்கடி எதையாவது (வீடியோவில் மட்டும்) உளறுவதெல்லாம் மகா அபத்தம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
உண்மையா தைரியம் இருந்தா நீ இங்க வா, 8000 - 10000 சம்பளத்துக்கு நம்ம ஊர் சாதாரண பெண்கள் போற மாதிரி பஸ்ல, ட்ரெயின்ல ட்ராவல் பண்ணி, ஒரு சாதாரண வேலைக்குப் போ (உதா- டீச்சர் வேலை, ஆபீஸ் வேலை). இங்க இருக்குற பிரச்சினைகளைச் சமாளி. அப்போ அவுத்துப் போட்டு வீடியோ போடு. EMA பத்திப் பேசு. உன் தைரியம் என்னன்னு பாப்போம்.
இதைச் சொன்ன போது "பொருளாதார சிக்கல் இருந்தா இந்த மனப்போக்கே வராதே.. ஒரு லீவுக்கு லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்குறவங்களுக்கு இது சாதாரணம்தானே" என்று நண்பரொருவர் சொன்னார். ஆக, பிரச்சினை அதுதான். மிதமிஞ்சிய பணம், "நான் செய்வது சரி" என்று எண்ணவைக்கிறது. அவ்ளவ் தான்.
இவர்களைப் போன்றோர் ஒரு குரூப் ஆரம்பித்து எதையாவது சொல்லி மற்றவர்களைத் தூண்டி விட்டு, (நாசமாக்கி விட்டு) இவர்கள் வழக்கம் போல, தன் வேலை (i mean job) யைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். சம்பளம், வருமானம் தாராளமாக வரும் இவர்களுக்கு இது பிரச்சினை இல்லை. இதை நம்பி பின்னால் செல்பவர்களுக்குத் தான் பிரச்சினை. இப்ப அதுதான் நடந்துட்டு இருக்கு..
ஒட்டு மொத்தமாக இவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்த்தால் - விர்சுவல் வெளியில் - அட்டைக் கத்தி சுற்றுகிறார்கள். ரோட்டில் இறங்க மாட்டார்கள். எந்த உண்மையான போராட்டத்தையும் முன்னெடுக்க மாட்டார்கள். EMA வை விடுங்கள், மேல் சாவனிசத்தில் அடிமைப்பட்டு கஷ்டப்படும் பெண்களின் உண்மையான, மிக பேஸிக் சுதந்திரத்தைக் கூட வாங்கித்தர இவர்கள் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க மாட்டார்கள்.
இன்னும் சிம்பிளா சொன்னா, நல்லா வேலைக்குப் போய், சம்பாதிச்சு, ஜாலி பண்ணி, தண்ணியடிக்கிற, கருத்து சொல்ற பழக்கம் பல ஆண்களுக்கே இருக்கு. அதை ஒரு பெண் (வீடியோவுடன்) செய்கிறார். அவ்ளவ் தான் மேட்டர். தண்ணியடித்துப் புலம்பி விட்டு, காலை எழுந்து மூஞ்சைக் கழுவி விட்டு வேலைக்குப் போய்விடுவார். இதனால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
இதுக்கு இவ்ளோ பெரிய பதிவை எழுதி நம்ம நேரத்தைத் தான் நாம வீணடிச்சிருக்கோம். இந்நேரத்துக்கு நாம, நம்ம துறை சார்ந்த ஒரு விஷயத்தைப் பத்தி ப்ரவுஸ் பண்ணியிருந்தா, நம் வாழ்க்கைக்கு நல்ல விதமா ஒரு செங்கல் எடுத்து வச்ச மாதிரி இருக்கும்.
ஆனா செய்ய மாட்டோம். ஆனா அது ஹ்யூமன் நேச்சர். கன்ட்ரோல் பண்றது கஷ்டம். என்னான்றீங்க?
யாருக்கு? யாருக்கோ.
யாரைப்பத்தி? யாரைப்பத்தியோ.
.
அடுத்த மாற்றம் என்ன?
படையப்பா - டைட்டில் ஓவியம்
அப்படியே டவுட் வந்து செக்யூரிட்டி பார்த்தாலும், ஒன்னு ரெண்டு பெரிய இடத்துப் பசங்களைத் தவிர மத்தவங்க எல்லாம், எல்லாம் ஒடிசலா, நோஞ்சானா தான் இருப்போம். எங்களை பார்த்தாலே பிரச்சினை பண்ற ஆளுக இல்லன்னு தெரிஞ்சுடும். சும்மா கிரவுண்டுல உக்காந்து கதை பேசிட்டுக் கிளம்பிடுவோம். அதனால எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்ப ஸ்மார்ட் போனெல்லாம் கிடையாது. ஒட்டு மொத்த காலேஜூக்கு மொத்தம் 20 பேர் செல்போன் வச்சிருந்தா அதிகம். அதுவும் பேசிக் மாடல்ஸ். இன்கமிங் 2 ரூபா அப்பலாம்.
வேற என்ன பொழுதுபோக்கு? அந்த மாதிரி சமயங்கள்ல எங்க க்ளாஸூக்குள்ள போய் போர்டுல விதவிதமா டைட்டில்ஸ் வரைஞ்சு வைப்பேன். நண்பன் Karthik Kr கூட "நீ எதாவது டிசைனிங் சம்பந்தப் பட்ட வேலைக்குப் போகலாம்டா, உனக்கு டிசைன்ஸ் நல்லா வருது"ன்னு சொல்வான். மதியம் கிளம்பும்போது எல்லாத்தையும் அழிச்சுடுவோம். இல்லாட்டி திங்கள் காலைல பொண்ணுங்க (40 க்கு 4 - ரேஷியோ ரொம்பக் கம்மி) வந்து கர்ம சிரத்தையா அழிச்சுடுவாங்க. நாங்க வந்ததும் "கார்த்தி, நீ தானே வரைஞ்சே" ன்னும் கேப்பாங்க.
அஜித், விஜய் க்கு அப்போ (இப்பவும் தான்) வெறி பிடிச்ச ரசிகர்கள் இருப்பானுங்க. தல படப் பேரை வரைடா, தளபதி படப் பேரை வரைடா-ம்பாங்க. ஏ.ஆர். ரஹ்மானுடைய தீவிர ரசிகன் ஒர்த்தன் இருந்தான் முகம்மத் அலி-ன்னு. அவன் "ஏ.ஆர்.ரஹ்மான் பேரை எழுது கார்த்தி" ன்னுவான். தீனா, முகவரி, குஷி, பத்ரி, ரெட், ஆளவந்தான் னு டைட்டில்ஸை டிசைன் டிசைனா எழுதிப் பார்த்திருக்கேன்.
அதே போல டிசைன் நல்லா இருந்தா நோட்புக்ல வரைஞ்சு வைக்கிறதும் பழக்கம். முகவரிலாம் நல்ல டிசைன் ஃபான்ட் கிடையாது. ரொம்ப சாதாரணமா இருக்கும். படையப்பா ரொம்ப வித்யாசமா இருந்ததால அதை காலேஜ் நோட்ல வரைஞ்சு வச்சிருந்தேன். அதை நண்பன் ஒர்த்தன் (தமிழ்ச்செல்வன்-னு நினைக்கிறேன்) எடுத்து எங்க புரொபஸர் கிட்ட காட்டிட்டான். மத்தவங்களா இருந்திருந்தா செம ஏத்து விழுந்திருக்கும். நல்ல வேளை, வேலுசாமின்னு ஒரு ப்ரொபஸர். ரொம்ப ஜாலி பேர்வழி. அவர் தப்பா எடுத்துக்கல.
"நல்லா இருக்குடா" ன்னுட்டு போயிட்டார்.
வாங்கக் காசிருக்கு, வரைய நேரமில்லை.
அதற்காக, கல்லூரி இறுதி ஆண்டு, என்று நினைக்கிறேன், அப்போது வரைந்து அனுப்பிய படம் இது. இது A3 யில் வரைந்த "முழு வண்ணச் சித்திரம்". ஆனால் இப்போது போல, ஃபேஸ்புக், இன்ஸ்டா வை விடுங்கள், அப்போது நினைத்தவுடன் போட்டோ எடுக்கக் கூட வழி கிடையாது. ஆகவே ஒரே ஒரு ஃபோட்டோ காப்பி (ஜெராக்ஸ்?) எடுத்து வைத்தேன்.
ஆனால் அதையும் மீறி யாரிடமோ கெஞ்சி கேமரா கடன் வாங்கி, எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த கல்லூரி ஹாஸ்டல் சென்று நல்ல வெளிச்சத்தில், வெயிலில் வைத்து ஒரு போட்டோ எடுத்தது நினைவிருக்கிறது. அதில் ஓரு ஓரத்தில் என் லுங்கி கூட விழுந்திருந்தது. அந்த போட்டோவையும் வழக்கம் போல் "காணவில்லை". (கிடைத்தால் அப்லோடுவோம்).
ஒரிஜினல் கலர் ஓவியத்தை ஆனந்த விகடனுக்கு அனுப்பி விட்டேன். டிரங்குப்பொட்டியில் உள்ளது ஜெராக்ஸ் மட்டுமே.
என் நேரக்கொடுமை நான் வரைந்து அனுப்புவதற்குள் சில வாரங்கள் ஆகியிருந்தன. அதற்குள் டிரெடிஷனல் ராமர், கிருஷ்ணர், ராதை என கடவுள்கள் படங்கள் பல வெளியாகி விட்டன. சில வாரங்களுக்குப் பிறகு வித்தியாசமான ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து பிரசுரிக்கத் துவங்கினார்கள். (அவங்களுக்கும் மூட்டை மூட்டையா வந்திருக்கும்ல). அதில் "பருந்துப் பார்வை"யில் வரையப் பட்ட "குதிரை போலோ" என்ற ஓவியம் மட்டும் இன்னும் பசேல் என்று நினைவில் நிற்கிறது. மற்றவை நினைவில்லை.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் என் பெயரிலேயே நண்பர் ஒருவர் இருந்தார். (செயின் ஸ்மோக்கர். கேன்சர் வந்து இறந்து விட்டார்). பஸ் ஸ்டாண்டுக்கு பார்சலில் வரும் விகடன் மற்ற ஏரியா கடைகளுக்குப் போகும் முன் பஸ் ஸ்டாண்டு கடைகளுக்கு வரும். வந்தவுடன் முதல் ஆளாக சொல்லி வைத்து வாங்கி வந்து தருவார். வாரா வாரம் அவர் கடையிலேயே நின்று நம்ம டிராயிங் வந்திருக்கா என்று முழுப்புத்தகத்தையும் புரட்டிப் பார்ப்பேன்.
என்னை விட ஆர்வமாக "வந்திருக்காடா, வந்திருக்காடா" என்று கேட்டுக் கொண்டே இருப்பார். ஏமாற்றம் தான் கிடைக்கும். ஆனால் "பப்பு லேது, உப்பு உந்தி" என என்னுடைய வேறு ஏதாவது ஜோக்ஸ் வந்திருக்கும். "சரி விடு, அடுத்த வாரம் வரும்" என்று ஆறுதல் சொல்வார். (இதை டைப் செய்யும் போது கண்ணில் நீர் வழிகிறது அவர் நினைவாக, literally) தொடர் போட்டிகளில் ஜெயிக்க தொடர்ந்து பல படைப்புகள் அனுப்ப வேண்டும் என்ற அறிவு கூட எனக்கு அப்போது இல்லை.
வரையப்பட்ட அதே சைசில் ஜெராக்ஸ் எடுத்து வைக்க வேண்டும் என்று அங்குமிங்கும் ஓடி (எல்லா இடங்களிலுமே A4 தான் கிடைக்கும் A3 கிடைக்காது) அதில் ஒரே ஒரு கடையில் தான் A3 கிடைத்தது. சீனியர் ரமேஷ் புண்ணியத்தில், ஒரு டப்பா ஓட்டை சைக்கிள் ஒன்றை வைத்து இருந்தேன். அதில் வைத்து ஜெராக்ஸ் எடுக்கக் கொண்டு போன போதும் திரும்பி வரும் போதும் அந்த ஓவியம் சுருண்டாமல், மடங்காமல் அதைக் காப்பாற்ற நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். (ஒரே நாஸ்டால்ஜிக்ஸ் தான் போங்க)
வழக்கம் போல “பார்த்து வரைந்த” ஓவியம் தான் இதுவும். நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் ஆகவே மூன்று நான்கு நாட்கள் ஆனது என்று நினைக்கிறேன். 24 பேனாக்கள் கொண்ட ஸ்கெட்ச் செட் ஏதோ ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட போது பரிசாகக் கிடைத்தது. அதை வைத்து வரைந்தது இது. இலைகள், செடி கொடிகளுக்கு அதில் இருந்த மூன்று வித பச்சை நிறங்களை பயன்படுத்தியிருந்தேன். அதே போல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சளிலும் இரண்டிரண்டு ஷேடுகள் கிடைத்தது கிருஷ்ணர் உடலுக்கும், உடைகளுக்கும் வித்தியாச வண்ணங்கள் கொணர உதவியது.
மற்றபடி என்னிடமிருந்த பனிரண்டே பேனாக்கள் கொண்ட ஒரே ஸ்கெட்ச் செட்டை வைத்துத் தீரும் வரை வரைந்தவை தான் மற்ற பல படங்கள். புதுசு கேட்கப் பயம். "இருக்கறதை வைத்து வரைடா, காசில்லை" என்பார் நைனா.
இன்னிக்கு வாங்கக் காசிருக்கு, வரைய நேரமில்லை.
மூஞ்சூறுப்பிள்ளையார் - ஓவியம்
பிள்ளையார் படங்கள் வரைவதென்றால் அவ்வளவு இஷ்டம். அப்படி மிகுந்த மனமகிழ்ச்சியோடு வரைந்த படம் இது. படத்தின் கீழே கையெழுத்து போடுவதெல்லாம் பிடிக்காது. அதை நண்பர்களுக்குக் காட்டலாம் என்று எடுத்துப் போனால், அதை வாங்கி "வேண்டாம்டா" என்று சொல்வதற்குள் நண்பன் Karthik Kr டக்கென்று பேரை எழுதிவிட்டான். அவன் கையெழுத்தில் என்பெயர் கீழே.
பார்வதி மேனன்.
உண்மையிலேயே நேரில் அவ்வளவு அழகு அவர்.
"பேங்களூர் டேஸ் (மலையாளம்)" புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன் அவர்களின் இயக்கத்தில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த "கூடெ (மலையாளம்)" படத்தில் நடிக்க, ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கின் போது எனக்கு ஒரு செறிய வாய்ப்புக் கிடைத்தது. ம்ஹூம், வேறொரு வேலைக்காகச் சென்றிருந்த நேரத்தில் வலிந்து கை தூக்கி அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன் என்று கூடச் சொல்லலாம்.
அதில் பார்வதி மேனன் கூடெ நடித்தது ஒரே ஒரு சீனென்றாலும், அது மூன்று - நான்கு டேக்குகள் வரை போனது. ஆதலால் அவரை நேருக்கு நேர், சரியாகச் சொன்னால் ஜஸ்ட் ஒன்றரை அடி தூரத்தில், நின்று பார்த்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் வந்து என்னிடம் ஒரு விபரம் கேட்க நான் போனில் பேசியபடி தர மறுப்பது போல ஒரு சீன். அது ஜஸ்ட் ஒரு வினாடி மட்டும் படத்தில் வருகிறது. அது பின்மாலை 7 மணி ஷூட்டிங். அறைக்கு வெளியே ஆயிரம் வாட்ஸ் லைட்டுகள் மூலம் ஒளி வெள்ளம் பாய்ச்சி பகலில் நடப்பது போல லைட்டிங் செய்திருந்தார்கள். அந்த வெளிச்சத்தில் உண்மையிலேயே ஜொலிஜொலித்தது அந்த நட்சத்திரம்.
அதே போல, பகலில் ப்ரித்விராஜூம், நானும் நடித்த மற்றொரு சீனில், நான் ப்ரித்விராஜிடம் பேசிவிட்டு ஆபீஸ் ரூம் உள்ளே போன பிறகு அவரைப் பார்க்க பார்வதி வருவது போல ஷாட். லாங் ஷாட், மிட் ஷாட், க்ளோஸப் என கேமரா இடம் மாறும் அந்த ஷாட் ப்ரேக்குகளில் அந்த அறைக்குள் மூன்று முறை அவர் அருகில் நிற்கவும், பேசவும் (வெறும் ஹாய், ஹலோதான், வேறென்ன?) வாய்ப்பும் கிடைத்தது. கூடெ இருந்த அஸிஸ்டெண்ட் டைரக்டன் ஒருவரிடம் ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார் பார்வதி. நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
அழகிகளை அமைதியாய் ரசிப்பது கூட அழகுதான்.
.
ஓவியர் ஸ்யாமும் நானும் - 1
எனக்கும் கொஞ்ஞ்ஞ்சூண்டு ஓவியம் வரைய வரும் என்பதால் விகடன் முதல் வாரமலர் வரை பல வாரப் பத்திரிகைகளை தொடர்ந்து படித்த காலங்களில் ம.செ, ஜெ, ராமு (அல்லது ராழி?), மாருதி, ட்ராஸ்கி மருது, அரஸ், ஸ்யாம் என்று பல ஓவியர்களுடைய படங்களையும் விடாமல் கவனிப்பது வழக்கம். அதில் ஸ்யாமுடைய ஓவியங்கள் தனித்துத் தெரியும். அவர் தான் இருப்பவர்களிலேயே இளையவர். கல்லூரி வயதுகளில் விகடன், குமுதங்களில் வந்த அவரது படங்களை அதே போல வரைந்து பழகியிருக்கிறேன்.
பள்ளிக் காலத்தில் நிறைய ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இரண்டு இடங்களுக்குள் வருவது வழக்கம். மாதம் ஒருமுறையாவது அசெம்ப்ளி ஏறி ஹெட்மாஸ்டர் கையால் பரிசு வாங்குவது வழக்கம். ஆனால் பெரும்பாலும் "பார்த்து வரையும்" படங்கள் தான். இன்னும் சில படங்களை "மெமரீஸ்" என்று 96 ராம் போல அந்தக் கால சூட்கேஸ் ஒன்றில் பத்திரமாக வைத்திருக்கிறேன். பிற்பாடு வேறு பல சந்தர்ப்பங்களில் வரைந்து வைத்த பல ஓவியங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன.
விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் அரிதாக வைக்கும் ஓவியப்போட்டிகளுக்கு படங்கள் வரைந்து அனுப்பியிருக்கிறேன். அதில் இரண்டு படங்கள் குமுதத்தில் "காலேஜ் கேம்பஸ்" என்ற பகுதியில் வெளியாகி பரிசும் பெற்றவை. ஓவியங்கள் அதிகம் வெளிப்பட வாய்ப்பு இல்லாததால் அதில் இருந்து திசை திரும்பிய அந்த ஆசைதான் பிறகு மடை மாறி சின்னச்சின்னதாய் வாசகர் கடிதம், ஜோக்குகள் எனத்துவங்கி சிறு துணுக்குகள், பத்திகள், ஒரு பக்கக் கதைகள், கதைகள் பிறகு கட்டுரைகள் என எழுதி வெளியாக ஆரம்பித்து இப்போது அமேஸானின் கின்டில் மின் புத்தகங்களில் வந்து நிற்கிறது.
நான் ஓவிய கோர்ஸ் எதுவும் படிக்கவில்லை. ஓவிய ஆட்களுடன் தொடர்பும் கிடையாது என்பதால் ஓவியங்களின் நுணுக்கங்கள், ஓவிய பாணிகள் தெரியாது. எது போன்ற பொருட்களை வைத்து வரைவது என்றும் தெரியாது. என் கையில் கிடைத்த ஸ்கெட்ச் பென்கள், மெழுகுக் கலர்கள், பிறகு வாட்டர் கலர்கள் என எதையாவது வைத்து வரைந்து கொண்டிருப்பேன்.
பள்ளி இறுதி முடிக்கும் போதே ஆர்ட் (ஆர்ட்ஸ் அல்ல) காலேஜில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் எங்க நைனா "படம் வரையறவன் வாழ்க்கைல கஷ்டப்படுவான். படம் வரையறதுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. எங்கியாவது கவர்மெண்ட் ஸ்கூல்ல ஒரே ஒரு வாத்தியார் வேலைதான் இருக்கும். அதுவும் நம்ம கம்யூனிட்டிக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை" என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்தி விட்டார். "தாரே ஸமீன் பர்" படத்தில் ஓவிய ஆசிரியர் ராம் ஷங்கர் நிகும்ப் வருவதற்கு முன்னால் இருக்கும் ஸ்டிரிக்ட் ஆன சிடுமூஞ்சி டிராயிங் சார் போலவே என் பள்ளியில் எனக்கு அமைந்த வாத்தியாரின் உருவம் வேறு என் கண் முன்னால் வந்து நிழலாடி ஓவியத்தின் மீதான ஆசையை மறக்கச் செய்தது.
லோயர் மிடிஸ் க்ளாஸூக்கும் கீழே கீழே ஏழை என்ற இடத்தில் இருந்து கொண்டிருந்த ஒரு மாணவனுக்கு மற்ற எல்லாவற்றையும் விட சோற்றுப் பிரச்சினையே பெரிதாக இருந்ததால், பார்ட் டைம் வேலை, படிப்பு, பிறகு வேலை என்று கால ஓட்டத்தில் திறமைகளை மறந்து மிடில் கிளாஸ் வாழ்க்கையில் தினசரி புவ்வா, ஆபீஸ் பாலிடிக்ஸ், வேலைப் பிரச்சினைகளில் காணாமல் போகும் இலட்சக் கணக்கான குடும்பத் தலைவர்களில் ஒருவனாய் மாறிப்போனேன்.
தங்கையின் திருமணக் கடன், எனக்கான கல்விச் செலவுகள், அப்பாவின் கடன், பிறகு என் திருமணக்கடன் என்று சட்டையைப் பின்னால் இழுத்துப் பிடித்த கமிட்மெண்ட்கள் வேறு "நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சே ஆகணும்டா" என்று உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தன. 2002 ல் ஆரம்பித்த என் வேலைப் பயணம் இன்னும் மூச்சு விட முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இருக்கும் வேலையை விட்டுத் தைரியமாக "பிடித்த ஒரு துறையில் வேலை பார்க்கலாம்" என்ற நிலைக்கு நகர பொருளாதாரம் இடம் கொடுக்கவே இல்லை. "இன்னிக்கு நின்னா நாளைக்கு சோறில்ல" என்ற கடன் பட்டார் நெஞ்சம் போல் இருந்த நிலையைத்தாண்டி வரவே ஒரு யுகம் பிடித்தது. மெள்ள மெள்ள வேலை, படிப்பு, எழுத்து என முன்னேறினாலும் இன்றைக்கும் வேலையை விட்டு வருமானமின்றி இருந்தால் மூன்று மாதம் கூட சமாளிக்க முடியாது என்பதே நிதர்சனம்.
ஒரு வேளை ஓவியத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் "அடுத்து என்ன?" என்ற நோக்கத்தோடு முன் நகர்ந்திருந்தால் ஆசைப்பட்ட துறையில் இருக்கிறோம் என்ற திருப்தியாவது கிடைத்திருக்குமோ என்னவோ. இது போன்ற சூழ்நிலையுடன் ஓவியர் ஸ்யாமின் மேல் நோக்கிய கிராஃபைப் பார்க்கும் போது நெஞ்சு கொள்ளாத சந்தோஷமாக இருக்கும். தினமலரில் வேலை செய்த போது 2003 மே - டென்த் ரிசல்ட் வேலைகளுக்காக சென்னை பிராஞ்சுக்கு சென்றிருந்த போது வாரமலருக்காக ஸ்யாம் வரைந்த ஒரிஜினல் ஓவியம் ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்த போது உணர்ச்சிப் பெருக்குடன் சந்தோஷித்திருக்கிறேன்.
-----------------------------------------
.
ஓவியர் ஸ்யாமும் நானும் - 2
ஓவியர் திரு. Shyam Sankar ற்றி திரு. Srinivasan Uppili அவர்கள் தொடர் பதிவுகள் போட்டதைப் பார்த்து பல நாஸ்டால்ஜிக் ஃபீலிங்ஸ் கிளம்ப நானும் ஸ்யாம் பற்றி சென்ற வாரம் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில், சிறு வயதில் நானும் ஸ்யாமின் ஓவியங்களை பார்த்து அப்படியே வரைய முயற்சித்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
அதை நிரூபிக்க வேண்டி, இன்று காலை முதல் என் மெமரீஸ் "டிரங்குப் பொட்டி" யைப் புரட்டிப் போட்டுத் தேடியதில் அதில் ஒன்றே ஒன்று கிடைத்தது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த இதோ அது. "96 ராம்" மாதிரி வேற ஏதாவது சிக்குமான்னு தங்கமணி அப்பப்போ எட்டிப்பார்த்து என் தோளில் மூச்சு விட்டது தனிக்கதை.
ஸ்கெட்ச் பேனாக்களில் மட்டுமே வரைந்து கொண்டிருந்த நான், இந்தப் படத்துக்காக கேம்லின் வாட்டர் கலர் கருப்பு நிறம் ஒன்றும் (15 ஓவா அப்போ, இப்போ விலை மிகக்குறைவு), ஒரு பிரஷ் ஒன்றும் (5 ஓவா) வாங்கி வந்து வரைந்தது. அதனால் வளைவுகள் வரையத் தடுமாறினேன். படத்தில் பார்த்தால் அது தெரியும். அப்போதைய சின்ன சைஸ் விகடனில் வந்தது இந்தப் படம் என்று நினைக்கிறேன். அந்த மழமழப்பான தாளில் பார்த்த அந்த ஓவியம் இன்னும் நினைவில் இருக்கிறது.