எனக்கும் கொஞ்ஞ்ஞ்சூண்டு ஓவியம் வரைய வரும் என்பதால் விகடன் முதல் வாரமலர் வரை பல வாரப் பத்திரிகைகளை தொடர்ந்து படித்த காலங்களில் ம.செ, ஜெ, ராமு (அல்லது ராழி?), மாருதி, ட்ராஸ்கி மருது, அரஸ், ஸ்யாம் என்று பல ஓவியர்களுடைய படங்களையும் விடாமல் கவனிப்பது வழக்கம். அதில் ஸ்யாமுடைய ஓவியங்கள் தனித்துத் தெரியும். அவர் தான் இருப்பவர்களிலேயே இளையவர். கல்லூரி வயதுகளில் விகடன், குமுதங்களில் வந்த அவரது படங்களை அதே போல வரைந்து பழகியிருக்கிறேன்.
பள்ளிக் காலத்தில் நிறைய ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இரண்டு இடங்களுக்குள் வருவது வழக்கம். மாதம் ஒருமுறையாவது அசெம்ப்ளி ஏறி ஹெட்மாஸ்டர் கையால் பரிசு வாங்குவது வழக்கம். ஆனால் பெரும்பாலும் "பார்த்து வரையும்" படங்கள் தான். இன்னும் சில படங்களை "மெமரீஸ்" என்று 96 ராம் போல அந்தக் கால சூட்கேஸ் ஒன்றில் பத்திரமாக வைத்திருக்கிறேன். பிற்பாடு வேறு பல சந்தர்ப்பங்களில் வரைந்து வைத்த பல ஓவியங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன.
விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் அரிதாக வைக்கும் ஓவியப்போட்டிகளுக்கு படங்கள் வரைந்து அனுப்பியிருக்கிறேன். அதில் இரண்டு படங்கள் குமுதத்தில் "காலேஜ் கேம்பஸ்" என்ற பகுதியில் வெளியாகி பரிசும் பெற்றவை. ஓவியங்கள் அதிகம் வெளிப்பட வாய்ப்பு இல்லாததால் அதில் இருந்து திசை திரும்பிய அந்த ஆசைதான் பிறகு மடை மாறி சின்னச்சின்னதாய் வாசகர் கடிதம், ஜோக்குகள் எனத்துவங்கி சிறு துணுக்குகள், பத்திகள், ஒரு பக்கக் கதைகள், கதைகள் பிறகு கட்டுரைகள் என எழுதி வெளியாக ஆரம்பித்து இப்போது அமேஸானின் கின்டில் மின் புத்தகங்களில் வந்து நிற்கிறது.
நான் ஓவிய கோர்ஸ் எதுவும் படிக்கவில்லை. ஓவிய ஆட்களுடன் தொடர்பும் கிடையாது என்பதால் ஓவியங்களின் நுணுக்கங்கள், ஓவிய பாணிகள் தெரியாது. எது போன்ற பொருட்களை வைத்து வரைவது என்றும் தெரியாது. என் கையில் கிடைத்த ஸ்கெட்ச் பென்கள், மெழுகுக் கலர்கள், பிறகு வாட்டர் கலர்கள் என எதையாவது வைத்து வரைந்து கொண்டிருப்பேன்.
பள்ளி இறுதி முடிக்கும் போதே ஆர்ட் (ஆர்ட்ஸ் அல்ல) காலேஜில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் எங்க நைனா "படம் வரையறவன் வாழ்க்கைல கஷ்டப்படுவான். படம் வரையறதுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. எங்கியாவது கவர்மெண்ட் ஸ்கூல்ல ஒரே ஒரு வாத்தியார் வேலைதான் இருக்கும். அதுவும் நம்ம கம்யூனிட்டிக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை" என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்தி விட்டார். "தாரே ஸமீன் பர்" படத்தில் ஓவிய ஆசிரியர் ராம் ஷங்கர் நிகும்ப் வருவதற்கு முன்னால் இருக்கும் ஸ்டிரிக்ட் ஆன சிடுமூஞ்சி டிராயிங் சார் போலவே என் பள்ளியில் எனக்கு அமைந்த வாத்தியாரின் உருவம் வேறு என் கண் முன்னால் வந்து நிழலாடி ஓவியத்தின் மீதான ஆசையை மறக்கச் செய்தது.
லோயர் மிடிஸ் க்ளாஸூக்கும் கீழே கீழே ஏழை என்ற இடத்தில் இருந்து கொண்டிருந்த ஒரு மாணவனுக்கு மற்ற எல்லாவற்றையும் விட சோற்றுப் பிரச்சினையே பெரிதாக இருந்ததால், பார்ட் டைம் வேலை, படிப்பு, பிறகு வேலை என்று கால ஓட்டத்தில் திறமைகளை மறந்து மிடில் கிளாஸ் வாழ்க்கையில் தினசரி புவ்வா, ஆபீஸ் பாலிடிக்ஸ், வேலைப் பிரச்சினைகளில் காணாமல் போகும் இலட்சக் கணக்கான குடும்பத் தலைவர்களில் ஒருவனாய் மாறிப்போனேன்.
தங்கையின் திருமணக் கடன், எனக்கான கல்விச் செலவுகள், அப்பாவின் கடன், பிறகு என் திருமணக்கடன் என்று சட்டையைப் பின்னால் இழுத்துப் பிடித்த கமிட்மெண்ட்கள் வேறு "நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சே ஆகணும்டா" என்று உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தன. 2002 ல் ஆரம்பித்த என் வேலைப் பயணம் இன்னும் மூச்சு விட முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இருக்கும் வேலையை விட்டுத் தைரியமாக "பிடித்த ஒரு துறையில் வேலை பார்க்கலாம்" என்ற நிலைக்கு நகர பொருளாதாரம் இடம் கொடுக்கவே இல்லை. "இன்னிக்கு நின்னா நாளைக்கு சோறில்ல" என்ற கடன் பட்டார் நெஞ்சம் போல் இருந்த நிலையைத்தாண்டி வரவே ஒரு யுகம் பிடித்தது. மெள்ள மெள்ள வேலை, படிப்பு, எழுத்து என முன்னேறினாலும் இன்றைக்கும் வேலையை விட்டு வருமானமின்றி இருந்தால் மூன்று மாதம் கூட சமாளிக்க முடியாது என்பதே நிதர்சனம்.
ஒரு வேளை ஓவியத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் "அடுத்து என்ன?" என்ற நோக்கத்தோடு முன் நகர்ந்திருந்தால் ஆசைப்பட்ட துறையில் இருக்கிறோம் என்ற திருப்தியாவது கிடைத்திருக்குமோ என்னவோ. இது போன்ற சூழ்நிலையுடன் ஓவியர் ஸ்யாமின் மேல் நோக்கிய கிராஃபைப் பார்க்கும் போது நெஞ்சு கொள்ளாத சந்தோஷமாக இருக்கும். தினமலரில் வேலை செய்த போது 2003 மே - டென்த் ரிசல்ட் வேலைகளுக்காக சென்னை பிராஞ்சுக்கு சென்றிருந்த போது வாரமலருக்காக ஸ்யாம் வரைந்த ஒரிஜினல் ஓவியம் ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்த போது உணர்ச்சிப் பெருக்குடன் சந்தோஷித்திருக்கிறேன்.
-----------------------------------------
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக