வியாழன், 18 ஜூன், 2020

போஸ்ட் ஆபீஸ் வட்டி விகிதம்.

18 ஜூன் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

சென்ற வாரம், ஒரு வேலையாக போஸ்ட் ஆபீஸ் சென்றிருந்த போது அந்த அதிர்ச்சியான விஷயத்தைக் கவனிக்க நேர்ந்தது. ஃபிக்ஸட் டெபாஸிட், ரெக்கரிங் டெபாஸிட், போன்றவற்றிற்கான வட்டி வீதங்களை அரசு சடாரென 1.3 சதம் குறைத்துள்ளது. அறிவிப்புகள் ஏதுமில்லை. பணம் கட்டும் போது, நீங்களாகக் கேட்டால் தான் உண்டு. அல்லது பெரிய மனது வைத்து அந்த அதிகாரி, பழைய புதிய வட்டி வீதப் பேப்பரைக் காட்டினால் தப்புவீர்கள். கடந்த ஏப்ரல் வரை 8.4 சதம் இருந்த வட்டி வீதத்தை சடாரென 7.1 ஆகக் குறைத்துள்ளது. வங்கிகளில் பரவாயில்லை. இன்றைய நிலையில் சுமார் 7.4 சதவீதம். சில ஆண்டுகளுக்கு முன் டெபாஸிட்டுகளுக்கு 10.5 சதம் என்று இருந்த வட்டி வீதம் மெள்ள மெள்ளக் குறைந்து தற்போது 7.1 சதமாகக் குறைந்துள்ளது.
.
முதலீடு செய்ய வாய்ப்பில்லாமல் தங்கத்தின் விலை கடந்த மூன்று வருடங்களாக எப்படி தள்ளாட்டத்தில் இருக்கிறது, ஷேர் மார்க்கெட் எந்த அளவுக்கு விழுகிறது, ரியல் எஸ்டேட் சில வருடங்களாக எப்படிப் படுத்தே கிடக்கிறது, இன்ஷூரன்ஸ் ஒரு முதலீடே அல்ல என்பதெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவற்றைத் தவிர்த்தால் முதலீடு செய்ய பாதுகாப்பான வழி அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் மட்டுமே.
.
பள்ளிப் பாடங்களில் படித்திருப்பீர்கள். மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் அதைக் குறைக்கவும், அவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அரசாங்கம் வங்கி, போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றின் வட்டி வீதங்களை உயர்த்தும் என்று. இதுவே இதற்கு நேர் மாறாக பணப்புழக்கத்தை அதிகரித்து சேமிப்பைக் குறைக்க வேண்டுமென்றால்? ரிவர்ஸ். அதுதான் இன்று நடக்கிறது.
.
RBI ன் அதிகாரப் பூர்வ கணக்குப் படி இந்தியாவின் பணவீக்க விகிதம் 5.76 சதவீதம். உணவுப் பொருட்கள் உயர்வு வீதம் 7.55 சதம். 2012 ல் இருந்து ஆவரேஜ் செய்தால் கூட 7.70 சதம் பணவீக்கம் என்று அரசே (சரி RBI யே) சொல்லியிருக்கிறது. ஆக, உண்மையான பணவீக்கம் சுமார் 10 முதல் 12 சதம் இருக்க வாய்ப்புண்டு.
.
பண வீக்கம் புரியாதவர்களுக்கு - சிம்பிளாகச் சொன்னால் - இந்த வருடம் குடும்பச் செலவுக்கு 100 ரூபாய் தேவைப்பட்டால் அடுத்த வருடம் செலவுக்கு 107.70 ரூபாய் தேவை. அப்போது தான் உங்களால் குடும்பச் செலவை சமாளிக்க முடியும். இதைச் சொல்லும் அரசாங்கமே டெபாஸிட்டுகளுக்கு 7.10 சதம் தான் தருவேன் என்றால் என்ன அர்த்தம்? (மது ஆலைகளை மூட மாட்டோம். குடித்து விட்டு வருபவனைப் பிடிப்போம், சிகரெட் ஆலைகளை மூட மாட்டோம், சிகரெட் குடிப்பவனைப் பிடிப்போம் என்ற அபத்தங்களையும் இதனுடன் சேர்த்துக் கற்பனை செய்து கொள்ளுங்கள்)
.
அதே நேரம், இருசக்கர, நான்கு சக்கர வண்டிகள் வாங்குவதற்கான வட்டி விகிதம் வெகுவேகமாகக் குறைக்கப் பட்டுள்ளது. 12 அ 11 சதம் வட்டி என்ற அளவிலேயே டூவீலர் வாங்க முடியும். 9 அ 9.5 சதம் என்ற அளவில் கார் வாங்கி விடலாம். வீட்டுக்கடனையும் குறைத்து குறைத்து 9.5 சதம் வரை கொண்டு வந்து நிறுத்தி மறைமுகமாக உங்களைச் செலவு செய்யுங்கள் என்று சொல்கிறது அரசு. தனியார் ஒருபக்கம் கிரெடிட் கார்டுகள் மூலம் உங்களை "இப்போ செலவு பண்ணு, அப்பாலிக்கா கட்டிக்கோ" என்ற எண்ணத்தை விதைத்து, அறுவடையை வெற்றிகரமாகச் செய்து வருகிறார்கள். ப்ளிப்கார்ட், ஈ பே, அமேஸான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் இந்தத் தலைமுறையை "ஷாப், ஆன் தி கோ" என்று ஆக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாரும் செலவு செய்யுங்கள், நோ சேவிங்ஸ்.
.
இப்போ கூட்டிக் கழித்துப் பாருங்கள். எதாவது புரிகிறதா? உஷார். பின்னணியில் ஏதோ பெரிதாக நடந்து கொண்டிருக்கிறது.
.
சில பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிகள் ஏற்பட்ட போது நம் மக்களின் சேமிக்கும் பழக்கமே இந்தியாவைக் காப்பாற்றியது என்று சொல்வார்கள். இன்றைக்கு சேமிக்கும் பழக்கத்தை மறைமுகமாக நிறுத்தி செலவு செய்யும் பழக்கத்தை ஏற்றி வைத்திருக்கிறது. சம்பளம் வாங்கும் நண்பர்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள் சம்பளம் ஒரு வாரம் அக்கவுண்டில் நிற்கிறதா? இல்லை தானே? அப்போ உங்கள் நிலை என்ன? (நான் ஹவுஸிங் லோன் மட்டும் தான் வச்சிருக்கேன். மாசம் 30000 நாளைக்கு பிரச்சினைன்னா வீட்டை வித்துடலாமே? என்றார், ஒரு நண்பர்) ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் ரியல் எஸ்டேட்டும் சேர்ந்து தானய்யா விழும்?
.
இன்றைய இளைஞர்களே.. ஜாக்கிரதை...
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக