அதற்காக, கல்லூரி இறுதி ஆண்டு, என்று நினைக்கிறேன், அப்போது வரைந்து அனுப்பிய படம் இது. இது A3 யில் வரைந்த "முழு வண்ணச் சித்திரம்". ஆனால் இப்போது போல, ஃபேஸ்புக், இன்ஸ்டா வை விடுங்கள், அப்போது நினைத்தவுடன் போட்டோ எடுக்கக் கூட வழி கிடையாது. ஆகவே ஒரே ஒரு ஃபோட்டோ காப்பி (ஜெராக்ஸ்?) எடுத்து வைத்தேன்.
ஆனால் அதையும் மீறி யாரிடமோ கெஞ்சி கேமரா கடன் வாங்கி, எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த கல்லூரி ஹாஸ்டல் சென்று நல்ல வெளிச்சத்தில், வெயிலில் வைத்து ஒரு போட்டோ எடுத்தது நினைவிருக்கிறது. அதில் ஓரு ஓரத்தில் என் லுங்கி கூட விழுந்திருந்தது. அந்த போட்டோவையும் வழக்கம் போல் "காணவில்லை". (கிடைத்தால் அப்லோடுவோம்).
ஒரிஜினல் கலர் ஓவியத்தை ஆனந்த விகடனுக்கு அனுப்பி விட்டேன். டிரங்குப்பொட்டியில் உள்ளது ஜெராக்ஸ் மட்டுமே.
என் நேரக்கொடுமை நான் வரைந்து அனுப்புவதற்குள் சில வாரங்கள் ஆகியிருந்தன. அதற்குள் டிரெடிஷனல் ராமர், கிருஷ்ணர், ராதை என கடவுள்கள் படங்கள் பல வெளியாகி விட்டன. சில வாரங்களுக்குப் பிறகு வித்தியாசமான ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து பிரசுரிக்கத் துவங்கினார்கள். (அவங்களுக்கும் மூட்டை மூட்டையா வந்திருக்கும்ல). அதில் "பருந்துப் பார்வை"யில் வரையப் பட்ட "குதிரை போலோ" என்ற ஓவியம் மட்டும் இன்னும் பசேல் என்று நினைவில் நிற்கிறது. மற்றவை நினைவில்லை.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் என் பெயரிலேயே நண்பர் ஒருவர் இருந்தார். (செயின் ஸ்மோக்கர். கேன்சர் வந்து இறந்து விட்டார்). பஸ் ஸ்டாண்டுக்கு பார்சலில் வரும் விகடன் மற்ற ஏரியா கடைகளுக்குப் போகும் முன் பஸ் ஸ்டாண்டு கடைகளுக்கு வரும். வந்தவுடன் முதல் ஆளாக சொல்லி வைத்து வாங்கி வந்து தருவார். வாரா வாரம் அவர் கடையிலேயே நின்று நம்ம டிராயிங் வந்திருக்கா என்று முழுப்புத்தகத்தையும் புரட்டிப் பார்ப்பேன்.
என்னை விட ஆர்வமாக "வந்திருக்காடா, வந்திருக்காடா" என்று கேட்டுக் கொண்டே இருப்பார். ஏமாற்றம் தான் கிடைக்கும். ஆனால் "பப்பு லேது, உப்பு உந்தி" என என்னுடைய வேறு ஏதாவது ஜோக்ஸ் வந்திருக்கும். "சரி விடு, அடுத்த வாரம் வரும்" என்று ஆறுதல் சொல்வார். (இதை டைப் செய்யும் போது கண்ணில் நீர் வழிகிறது அவர் நினைவாக, literally) தொடர் போட்டிகளில் ஜெயிக்க தொடர்ந்து பல படைப்புகள் அனுப்ப வேண்டும் என்ற அறிவு கூட எனக்கு அப்போது இல்லை.
வரையப்பட்ட அதே சைசில் ஜெராக்ஸ் எடுத்து வைக்க வேண்டும் என்று அங்குமிங்கும் ஓடி (எல்லா இடங்களிலுமே A4 தான் கிடைக்கும் A3 கிடைக்காது) அதில் ஒரே ஒரு கடையில் தான் A3 கிடைத்தது. சீனியர் ரமேஷ் புண்ணியத்தில், ஒரு டப்பா ஓட்டை சைக்கிள் ஒன்றை வைத்து இருந்தேன். அதில் வைத்து ஜெராக்ஸ் எடுக்கக் கொண்டு போன போதும் திரும்பி வரும் போதும் அந்த ஓவியம் சுருண்டாமல், மடங்காமல் அதைக் காப்பாற்ற நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். (ஒரே நாஸ்டால்ஜிக்ஸ் தான் போங்க)
வழக்கம் போல “பார்த்து வரைந்த” ஓவியம் தான் இதுவும். நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் ஆகவே மூன்று நான்கு நாட்கள் ஆனது என்று நினைக்கிறேன். 24 பேனாக்கள் கொண்ட ஸ்கெட்ச் செட் ஏதோ ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட போது பரிசாகக் கிடைத்தது. அதை வைத்து வரைந்தது இது. இலைகள், செடி கொடிகளுக்கு அதில் இருந்த மூன்று வித பச்சை நிறங்களை பயன்படுத்தியிருந்தேன். அதே போல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சளிலும் இரண்டிரண்டு ஷேடுகள் கிடைத்தது கிருஷ்ணர் உடலுக்கும், உடைகளுக்கும் வித்தியாச வண்ணங்கள் கொணர உதவியது.
மற்றபடி என்னிடமிருந்த பனிரண்டே பேனாக்கள் கொண்ட ஒரே ஸ்கெட்ச் செட்டை வைத்துத் தீரும் வரை வரைந்தவை தான் மற்ற பல படங்கள். புதுசு கேட்கப் பயம். "இருக்கறதை வைத்து வரைடா, காசில்லை" என்பார் நைனா.
இன்னிக்கு வாங்கக் காசிருக்கு, வரைய நேரமில்லை.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக