ஞாயிறு, 28 ஜூன், 2020

தினமலர் அனுபவங்கள்

28 ஜூன் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 


வாத்யார் Ganesh Bala வின் தினமலர் பதிவு கிளறி விட்ட ஞாபக அடுக்குகளில் இருந்து

நானும் தினமலர் தான். சேலம் - ஈரோடு பதிப்புகள்

ஏதேனும் ஒரு கட்சி விழா சிறப்பு மலர் அல்லது கல்வி மலர் என்று தினசரிப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக கட்சி விளம்பரங்களால் நிரம்பும் காலம் அது. "சிறப்பு மலர்" என்பது ஏகப்பட்ட விளம்பரங்கள், விளம்பரங்கள் தந்தவர்களின் புகழ்பாடும் கட்டுரைகள் கொண்ட ஏகப்பட்ட சப்ளிமெண்டுகள் (சப்ளிமெண்ட் என்பது நான்கு பக்க உபரிப் பக்கங்கள்) கொண்ட தினசரி. ஒரே ஒரு நாள் காலை வெளியாகும் அது 30, 40 என்று துவங்கி 80 பக்கங்களையெல்லாம் தாண்டும்.

அதற்காக குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தூக்கம் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். முக்கியமாக விளம்பரத் துறை, புரூஃப் டிபார்ட்மெண்ட், கணிப்பொறி வடிவமைப்பு டீம், எடிட்டர் மற்றும் அவரது முக்கிய சில சகாக்கள். மற்ற துறைகள் முதல் நாள் உபரி நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

ஏகப்பட்ட போட்டோக்கள், பின்னால் பெயர்கள், ஸ்கேன்கள், வேறு வேறு ஊர்கள், கட்டுரைகள், அதைப் பிழை திருத்துதல், எடிட்டி சுருக்குதல், விளம்பரங்களில் போட்டோ மாறிப் போதல், அதைக் கடைசி நேரத்தில் கண்டுபிடித்தல், டிசைன் செய்தல், நூற்றுக் கணக்கான விளம்பரங்கள் என்பதால் டிசைன்கள் ஒத்துப் போகாமல் பார்த்தல், எனக்கு எட்டாம் பக்கம் போடு, அவனுதைத் தூக்கி 48 ஆம் பக்கம் போடு என்ற அத்துமீறல்கள் என்று ஆபீஸே கலகலக்கும்.

திமுக கரையை (கறுப்பு, சிகப்பு) விளம்பர பார்டரா போடணும்னு சொல்லி அதை டிசைன் செய்து ஓக்கே செய்தால், முதலில் ஓடுகிற 100 பேப்பர்கள்களில் கறுப்பு, சிகப்பு மற்ற கலர்களுக்கான மை (CYMK) செட்டாகும் முன்னாடி கறுப்புக்கும் சிகப்புக்கும் நடுப்புற வெள்ளை வரும். எடிட்டோரியலில் ரிஜக்ட் செய்யப்படும்.

ஏன்? கறுப்பு, வெள்ளை, சிகப்பு - அதிமுக.

நம்ம டெலிவரி மேன்ஸ் ரொம்ப அதிபுத்திசாலித்தனமா அந்த பேப்பர்கள் வேஸ்ட் ஆகக்கூடாது, அதனால் தூரமா இருக்குற வில்லேஜ் களுக்குப் போற கட்டுகள்ல போடு என்று கலந்து அனுப்பிடுவார்கள். சிட்டி, டவுனுக்குப் போகிற பேப்பர்கள் கறுப்பு, சிவப்பு கச்சிதமா போகும்.

ஆனா, சம்பந்தப் பட்ட விளம்பரத்தைக் கொடுத்த தி.மு.க காரருக்கு அவர் ஊருக்கு, அவர் வீட்டுக்கு, சரியாக அந்த கலர் தள்ளிப்போன பேப்பரே சோதனையாப் போய்ச் சேரும். அதுக்கப்புறம்...............................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக