வியாழன், 14 ஜூலை, 2022

தம்பி ரிலையன்ஸின் வைபாட்

ரிலையன்ஸ் வைபாட் பற்றிப் புலம்பி நீண்ட நாள் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். நினைவிருக்குமோ இல்லையோ. 

இப்போது ஐந்து நாட்களாக மீண்டும் அவர்களது அட்டகாசம் தாங்கவில்லை. இன்டர் நெட் கனெக்ட் ஆகவே இல்லை. வேலை விஷயமாக புது இடங்களுக்குப் போகிற எனக்கு கூகிள் மேப், ஓலா, கூகிள் சர்ச், வாட்ஸ் அப் உள்ளிட்டவை அவசியம் தேவை. நெட் இல்லாமல் இருக்க முடியாது. ரிலையன்ஸ் வைபாட் இல் என்ன பிரச்சினை என்று தெரியாமல் பழைய வேதாளம் ஏர்டெல்லுக்கு நெட் உபயோகத்திற்காக தனியாக தெண்டம் அழ வேண்டியிருக்கிறது. 

நம் நெட் பேலன்ஸ் ஒரு வேளை தீர்ந்து விட்டதோ என ஒரு சந்தேகத்தில் ஐ.வி.ஆர் மூலம் செக் செய்யப் பார்த்தால், "மன்னிக்கவும், இப்போது இந்தத் தகவலைப் பெற இயலாது" என்கிறது குரல். சரி எக்ஸிகியூட்டிவ் இடம் பேசலாம் என்று மீண்டும் போன் செய்தால் கலக்கப் போவது யாரு?வில் முல்லை, கோதண்டம் செய்த கஸ்டமர் காமெடி (எவ்ளோ நேரம் சுத்த உட்டாலும் கட் பண்ண மாட்டேங்கிறான் சார் இந்த கஸ்டமர்) என்பது போல எவ்வளவு நேரம் ஆனாலும் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் - இடம் பேச விடாமல் இழுத்தடிக்கிறார்கள். நானும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். மற்ற ஆப்ஷன்களுக்குள் தான் சுற்ற விடுகிறார்களே தவிர, எக்ஸிகியூட்டிவிடம் கனெக்ட் செய்யவே மாட்டேனென்கிறார்கள். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை, ஐந்து நாட்கள். 

ஒரு வழியாகப் பிடித்தேன். 23 நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு தான் கிடைத்தான். கஸ்டமர் கேர்காரனும் நம்மைப் போல மனுசன் தானே என்று அமைதியாகவே பேசுவது என் பழக்கம். ஆனால் ஐந்து நாட்களாக சுமார் 35 முறைக்கு மேல் முயற்சி செய்து வெறுத்துப் போனேன். பிடித்து ஏறலாம் என்று தோன்றினாலும் நேற்று சிக்கியவனிடம் போனால் போகிறதென்று அமைதியாகவே பேசினேன். 4 ஜிக்கு மாற்றுகிறோம், அதனால் இருக்கலாம் என்றான். புது சிம் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மெஸேஜாக அடித்துத் தள்ளுகிறார்கள். நெட்வொர்க் மட்டும் கனெக்ட் ஆக மாட்டேனென்கிறது. ஆனால் அதற்கு ஒரு தகவலும் கிடையாது. யோவ், "அப்போ ஒரு தகவலாவது மெஸேஜ் அனுப்பித் தொலையலாம்ல" என்றதற்கு "இன்று இரண்டு மணிக்கு மேல் சரியாகி விடும் சார்" என்றான். ஆச்சு. ஆனால் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் கனெக்ஷன் கட். மீண்டும் திரும்பத் திரும்பத் திரும்ப ட்ரை செய்து ஒருத்தனைப் பிடித்தால், என்னால செக் செய்ய முடியலை. "ஐ.வி.ஆர்ல செக் பண்ணுங்க" என்று பல்லவி. டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்த பிறகும் 2016 ல் கூட நம்மையெல்லாம் முட்டாள் என நினைக்கிறார்கள் போல. அது தான் வேலை செய்யலியே. 

"சர்வர் உன்கிட்ட தானே இருக்கு, உன்னால முடியலைன்னு என்னை நம்பச் சொல்றியா, இல்லே உன் கஸ்டமர் எல்லாம் விபரம் தெரியாத முட்டாப் பயன்னு நினைக்கிறியா? உன்னால செக் பண்ண முடியலைன்னா என்னால எப்படி முடியும்?" என்ற பிறகு, "இருங்க சார்" என்று செக் செய்து "இன்னும் 4 ஜி.பி பேலன்ஸ் இருக்கு சார்" என்கிறான். "பின்ன ஏன் கனெக்ட் ஆகலை?" என்றால் "திரும்ப முயற்சி பண்ணுங்க, ஆகும்" என்று பதில். பிறகு "4 ஜி சிம் வாங்கிட்டீங்களா?" என்று அபத்தமாகக் கேட்கிறான். "வைபாட் என்ற சி.ஜி.எம்.ஏ டிவைஸூக்குள் எப்படி ஐயா சிம்மை சொருகுவது, நீயே சொல்லித் தா" என்றேன். பிடித்து இரண்டு ஏறு ஏறி விட்டு போனை கட் செய்து விட்டேன். 

இப்போது கனெக்ட் ஆகிறது. நெட் வேலை செய்கிறது. என்ன எளவோ?

.

15 ஜூலை 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

"ஓலா கேப்" - இன் மோசமான ஒரு டிரைவர்

"ஓலா கேப்" - இன் மோசமான ஒரு டிரைவர் பற்றிய பதிவொன்று இன்றைக்கு வைரலாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்று பெங்களூரில் எனக்குக் கிடைத்த ஓலா கேப் டிரைவர் தங்கமான மனுஷன் என்பதையும், அவரும் (முன்பு வேறொருவரிடம் டிரைவராக இருந்து விட்டு) லோனில் வண்டி வாங்கி ஓட்டி வருகிறார் என்பதையும், எனக்கு நல்லதொரு சர்வீஸை நல்கினார் என்பதையும், அவ்வளவு மோசமான டிராபிக்கிலும் எவர் மேலும் லேசாகக் கூட இடித்து விடாமல் வண்டியோட்டினார் என்பதையும், யாரையும் திட்டவில்லை என்பதையும், அவருக்கு நான் ஐந்து ஸ்டார் கொடுத்தேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். 

இந்த நல்ல செய்தியையும் பதிவு செய்வீர்களா "அந்த" பத்திரிகை அவர்களே. 

("கோ" சிறகுகள் வசந்தன் போல "பேட் நியூஸ் செல்ஸ் பெஸ்ட்" என்று மனசாட்சிக்குள் குரல் ஓடுகிறது. மேலும் "மீடியா வெளிச்சம் உன் மேல் விழ நீ ஒரு பெண்ணல்லவே, கார்த்திகேயா" என்றொரு குரலும் சேர்ந்தே கேட்கிறது)

15 ஜூலை 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

என்கவுண்டர் மனித உரிமை மீறல் எனும் கருத்து கந்தசாமிகள்

 28 பிப் 2012 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

கொள்ளையர்களும், பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போது மனித உரிமை மீறல் என்று கொடிபிடித்துக்கொண்டு வரும் மனித உரிமைவாதிகள் எனும் கருத்து கந்தசாமிகள்............ 

கொள்ளையர்களாலும், பயங்கரவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் ஒற்றையாய், இரட்டையாய், நூற்றுக்கணக்கில் காமன் மேன்கள் கொல்லப்படும்போது எங்கே அய்யா போயிருந்தீர்கள்...?

கசாபுக்கு மனித உரிமை என்று கருணை காண்பித்து இன்னமும் சோறு போட்டு கேஸ் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அவனால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி குடும்பத்தலைவர்கள் விட்டுப்போன கடமைகளைத் தொடர நாம் என்ன உதவி செய்தோம்...? 

சம்பவம் நடந்த இரண்டாவது நாள் கழுவி விடப்பட்ட ரயில்வே பிளாட்ஃபார்மின் போட்டோக்களை பேப்பரில் பார்த்து "இயல்பு வாழ்க்கை திரும்பியது" என்ற பிரிண்டட் அபத்தத்தை நம்பும் அப்பாவிகளில் ஒருவரில் நீங்கள்?

திங்கள், 21 பிப்ரவரி, 2022

கேரள ஆட்டோ சேட்டன்களின் கனிவுகள்..

20 பிப் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

"சேட்டா, ஃபாத்திமா ஸ்கூல் பூவாமோ?"

"எவிட?"

"இவிட, ஃபாத்திமா ஸ்கூல்..." 

"ஹாங்.. பூவாம்... இருக்கி... நாயள்கமதந்கமளனக்நதசாளனக்ளநமகு" (அவரு சொன்னது எனக்கு இப்படித்தான் புரிஞ்சுது) 

"எத்தன ரூவா?"

"அம்பது கொடு"

"நாப்பது கொடுக்காம்"

"செரி, ஏறு"

"ஓகே"

"டுர்ர்ர்ர்ர்ர், பாம்... பீப்பீ... பாம்... பாம்... டுர்ர்ர்ர்ர்ர், சொய்ய்ய்ய்ய்ங்க்., ஜொய்ங்க்க்., டுர்ர்ர்ர்ர்ர், டுஸ்ஸ்ஸ்ஸ்"...

"ஸ்கூல் வந்நு" 

"தேங்க்ஸ் சேட்டா, இந்தா நூறு"

"பேலன்ஸ் புடிச்சோ.... பேந்யளகனம்தநசுபம்ாளனகம்பஒளுனள்நுதஔ (என்னமோ சொன்னாரு, எனக்குத் தான் புரியலை) முப்பது எடுத்து" (இது நல்லா புரிஞ்சு) 

"நாப்பது பறஞ்சில்லே?" 

"கொற்கதளன்கதசடமுநசமுக்னளுகள (புரியல) முப்பது மதி (நல்லா புரிஞ்சுது)" 

.

பக்கமா தானே இருக்கு, ஒன்றரை கிலோ மீட்டர்தான் இருக்கும், இதுக்கு நாப்பது வேணாம். முப்பதே போதும்னு சொல்லியிருப்பார் போல. 

.

சேட்டா, நீ வாழ்க, நின் கொடை (நான் நாப்பது ஓகே சொன்னப்புறம் பத்து திருப்பித்தந்தா அது அவர் தந்த கொடை தன்னே?, மனசிலாயோ?) வாழ்க, நின் சுற்றம் வாழ்க.. நின்ட ஸ்டேட் வாழ்க... வாழ்க.. வாழ்க..


ரஜினியை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?

22 பிப்ரவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

ரஜினியை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? 

புரிதல் Option 1 - தன்னை கிண்டல் செய்தவனை காத்திருந்து பிஜேபியை (பிஜேபியா? ஆமாம் - அதிமுக அரசு - பிஜேபி ஆதரவு - ரஜினியும் இணக்கம், ப்ளா, ப்ளா) வைத்துப் பழிவாங்கினார் ரஜினி
புரிதல் option 2 - அவனே ஒரு திருட்டுப் பயல். அவன் சொன்னதை வைத்து ரஜினியின் நல்ல இமேஜுக்கு களங்கம் விளைவிக்கப் பட்டுவிட்டது.
புரிதல் option 3 - எதையாவது வச்சு meme மட்டும் தான் போடுவோம். புரியிற மாதிரி சொல்ல மாட்டோம். நீங்களே எதையாவது கண்டபடி புரிஞ்சுக்கோங்க.




வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

குடுத்த காசை திருப்பி கேக்குறது ஒரு குத்தமாய்யா?

11 பிப் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

30 ஓவா சம்பளம் வாங்கும்போது ஏமாந்த 10 ஓவால இருந்து ரெண்டாயிரம் ஓவா சம்பளம் வாங்கும்போது ஏமாந்த 240, இருபது வாங்கும்போது ஏமாந்த ஆறாயிரம் - னு அது ஒரு பெரிய லிஸ்ட்டு. இன்னும் எத்தனை நாளைக்குடா ஏமாத்திகிட்டே இருப்பீங்க. திங்கிற சோறு செமிக்குமா? உருப்படுவியா நீ (என்றுதான் சாபம் விட்டு தான் மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னதான் வாய் கிழிய பேசினாலும், கீ போர்ட் தேய பதிவு போட்டாலும் நானும் நிஜ வாழ்வில் ஒரு சாமான்யன் தானே?)

என்னை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் என்று 15 க்கும் மேற்பட்டோர். உயிர் நண்பர்களாக நினைத்தவர்களும் அதில் அடக்கம்.
உன் தங்கச்சி கல்யாணத்துக்கு (பவுன் 7500 விற்ற போது) ரூ.25,000 ஏற்பாடு செஞ்சு தரேன் என்று சொல்லிச் சொல்லியே (நான் 2007 ம் ஆண்டு 6000 சம்பளம் வாங்கும் போது) என்னிடம் ரூ.4500 வாங்கின துரோகி ஒருத்தன் இன்னமும் (அப்போ விலைவாசி என்ன? இப்போ விலைவாசி என்ன?) தராமல் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறான். கடைசியில் அந்த ரூ.25,000 கடனையும் ஏற்பாடு செய்து தரவில்லை.
இன்றைக்கு தான் அந்த நாயை வாட்ஸ் அப்பில் ஒரு குரூப்பில் வைத்து அவமானப் படுத்தினேன். இந்த மாதக் கடைசியில் தருகிறேன் (அசலை மட்டும்) என்று சொல்லியிருக்கிறது. பார்க்கலாம்.

----------------------------------------------------------------------
குடுத்த காசை திருப்பி கேக்குறது ஒரு குத்தமாய்யா? - தொடர்ச்சி....
சென்ற மாதம் அழாத குறையாக ஒருத்தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை, குழந்தைக்கு பேதி என்றெல்லாம் சொ ல்லி 3000 ரூபாய் வாங்கிக் கொண்டு போனான். பிப்ரவரி சம்பளம் வாங்கிய அடுத்த நிமிடம் உனக்கு ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்து விடுகிறேன் என்று சத்தியம் செய்யாத குறையாக அழுது வாங்கினான். அவனுக்கு 8-ம் தேதி சம்பளம் போட்டு விட்டார்கள். அன்றைக்கு மட்டும் ஆறு முறை கால் செய்து விட்டேன்.
நாய் இன்னும் தராமல் மூன்று நாட்களாக "பேங்க் டைம் முடிந்து விட்டது, ஏ.டி.எம் அவுட் ஆஃப் ஆர்டர், பின் நம்பர் மறந்து விட்டேன், இன்னொரு ஏடிஎம்மில் பணம் இல்லை என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
என்னிடம் ஐசிஐசிஐ அக்கவுண்ட் உண்டு அவனிடமும் ஐசிஐசிஐ அக்கவுண்ட் உண்டு. இருவரிடமும் ஹெ.ச்.டி.எஃப்.சி அக்கவுண்டும் உண்டு. இரண்டிலும் நாய் ஆன்லைன் லாக்இன் வைத்திருக்கிறது. எதில் வேண்டுமானாலும் ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யலாம். ஆன்டிராய்டு மொபைல் அப்ளிகேஷனும் ஆக்டிவேட் செய்து வைத்திருக்கிறது. அதில் கூட செய்யலாம். இதுபோக கோவையில் தெருவுக்குத் தெரு ஊருக்கு ஊர் ஐசிஐசிஐ மற்றும் ஹெ.ச்.டி.எஃப்.சி ஏடிஎம்கள் உள்ளன. அதுவும் போக ஐசிஐசிஐ கேஷ் டெபாஸிட் செய்யும் மிஷின்கள் இரண்டு இடத்தில் இருக்கின்றன. அதில் பணத்தை டெபாஸிட் செய்யலாம். எனக்கு ஒரு நிமிடத்தில் கிரெடிட் ஆகி விடும். அல்லது ஐசிஐசிஐ ஏடிஎம்மில் அக்கவுண்ட் டு அக்கவுண்ட் பண்ட் டிரான்ஸ்பர் செய்யலாம். இதே வசதி ஹெ.ச்.டி.எஃப்.சி ஏடிஎம்மிலும் உண்டு.
இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்த பிறகும் இப்படி காரணம் சொல்லி பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றும் பன்னிகளை என்ன செய்யலாம்?
--------------------------------------------------------------------------

வியாழன், 10 பிப்ரவரி, 2022

ஒரு கவுண்டமணியின் புலம்பல்


Me to my portfolio


உங்களுக்கு நான் என்னடா கொறை வச்சேன். என்னிக்காவது முழுசா ஒரு பச்சையைப் பாக்க விடுறீங்களா? பத்து பேர் க்ரீன்ல இருந்தா பத்து பேர் ரெட்ல போய் உக்காந்துக்கிறீங்க? பத்து பேர் செவம் மாதிரி வாங்குன வெலையிலயே கெடக்கீங்க.

நான் என்ன சரியா அலகேஷன் பண்ணலயா? நல்ல ஷேரான்னு பார்த்து வாங்கலியா? இல்ல நீங்க பிசினஸ் பண்றதுக்கு நான் எடஞ்சலா இருந்தனா? இல்ல நெறைய டிவிடெண்ட் கொடுங்கன்னு நச்சு பண்ணினேனா? என் 16 வருச சர்வீஸூல இப்படி ஒரு காரியம் நடந்ததே இல்ல. அப்பயாவது 50, 100 ன்னு இன்ட்ரா டேல காசு வரும் பஸ் காசுக்கு ஆவும். ஆனா இப்ப?

லாக் டவுனால கன்ஸ்ட்ரக்ஷன், சிமெண்டு ஷேரெல்லாம் இறங்கி வச்சிருக்கீங்க சரி. ஐடி, கெமிக்கலாம் ஏன்டா இறங்கி வச்சிருக்கீங்க? சரி அதுக்காவது எதாவது காரணஞ்சாெல்லலாம். குடி (Alcoholic Beverages) ஷேரெல்லாம் ஏன்டா இறங்கியிருக்கீங்க? உங்களுக்கு வெக்கமா இல்ல?

புதுசா மார்க்கெட்டுக்கு வந்தவங்கல்லாம் அவ்ளோ சம்பாரிச்சேன், இவ்ளோ சம்பாரிச்சேன்னு ஸ்கிரீன்ஷாட் போடுறாங்க. வெங்கி பாபா மாதிரி பழையா ஆளுங்களும், டெக்னிகல் பார்த்து பண்ற இன்னும் சில பேரும் கூட 70% Growth 80% CAGR ன்னு ஸ்கிரீன்ஷாட் போடுறாங்க. ஆனா நான் மட்டும் என்னடா பாவம் பண்ணேன். அவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்வேன்? நீங்களே வாயத்தொறந்து பதில் சொல்லுங்க. 


திங்கள், 31 ஜனவரி, 2022

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?

30 ஜனவரி 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

"திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?" இது பழைய பாட்டு. ஆனா அவுங்க லாபம் பார்த்து கிட்டு தான் இருக்காங்க.

எந்த செல்ஃபோன் கம்பெனி நாய்களும் திருந்த மாட்டார்கள் போல இருக்கிறது. குறிப்பாக ஏர்டெல். நேற்று காலையில் தான் ஏர்டெல் திருந்திட்டானோ? என்றொரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். இல்லை என்று நேற்றிரவே நிரூபித்து விட்டான்கள். இரவு என் போனில் 60 எம்.பி டேட்டா பாக்கி இருந்தது. (43 ரூபாய் பேலன்ஸூம்) டேட்டாவை உபயோகப் படுத்தி வைஃபை மூலம் லேப்டாப்பில் ஃபேஸ்புக் மற்றும் இன்னபிற பிரவுசிங் வேலைகளுக்கு உபயோகித்தேன். அவ்வாறு வைஃபை உபயோகப் படுத்தும் போது குத்து மதிப்பாக இவ்வளவு நேரம் தாங்கும் என்று கணக்கு வைத்து டிஸ்கனெக்ட் செய்வது வழக்கம். 

எப்போது தீர்ந்தது என்று தெரியவில்லை. அந்த 60 எம்.பி வெகுவேகமாகக் காலி. கூடவே அந்த 43 ஓவாவும் ஸ்வாகா. 

நெட் பேக் இருக்கும் போதெல்லாம் ரொம்ப ஸ்லோவாக சுத்தோ சுத்தென்று சுத்தும் உங்க நெட்வொர்க்கு அதெப்படிடா நெட் பேக் தீர்ந்த இரண்டு நிமிடத்தில் நாற்பது ரூபாய் வெகு வேகமாக காலியாகும் அளவுக்கு தீர்கிறது? கொஞ்சமாச்சும் நியாயமா சொல்லுங்க... பல முறை இவ்வாறு ஐம்பது ரூபாய், நூறு ரூபாயெல்லாம் இழந்திருக்கிறேன். 

உங்க கணக்குக்கே வர்றேன் . ஒன் ஜி.பி நெட் பேக் 197 ரூபாய்ன்னா, நாப்பது ரூபாய்க்கு 200 எம்.பி அளவுதானே? அதெப்படி நான் ரெண்டே நிமிஷத்தில் 200 எம்.பிக்கு என்ன கருமத்தை பிரவுஸ் செய்ய முடியும்? அல்லது டவுன்லோடே செய்தாலும் நிமிடத்துக்கு 100 எம்.பி க்கு என்ன டவுன்லோட் நடந்திருக்கும்? நான் என்ன சூப்பர் மேனா? நெட் பேக் இருக்கும் போது அந்த அளவு வேகத்தில் என்னைக்குடா ஸ்பீடு கொடுத்திருக்கீங்க? 

(மக்களே, இது சிலர் உபயோகப் படுத்தும் வெகு வேக பிராட் பேண்ட் கனெக்ஷனோ, கம்பெனிகள் சர்வர் மெயின்டனென்ஸூக்கு உபயோகப் படுத்தும் அதி ஸ்பீடு கனெக்ஷனோ அல்ல, மிகச் சாதாரணமான ஒரு மிடில் கிளாஸ் குடிமகன் வைத்திருக்கும் சாதாரண 2 ஜி சிம்மு, அதில் 3 ஜி நெட் பேக்கு) 

இந்த ஸ்டேட்டஸ் டைப்பினது கூட தங்கமணி மொபைலில் இருந்து சுட்ட நெட்டில் போட்டது.

---------------------------------- 

அப்டேட் 2022 பிப் 1 - அந்நியன் ஸ்டைலில் (அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா?) இப்படியெல்லாம் செய்து தான் இன்றைக்கு அவர்கள் மேலே நிற்கிறார்கள் போலும். ஆனால் திருந்தியபாடில்லை. 

சினிமாவும், நானும் - இயக்குனர் மகேந்திரன்.

சில புத்தகங்களை வாங்கி பத்து பக்கம் தாண்டும் போதே போரடிக்கும், கடுப்படிக்கும், புரியாது. செம டாபிக்காக இருக்கும், ஆனால் அதையும் போரடித்து எழுதி.. கடவுளே... (அப்படி எனக்கு போரடித்த ஒன்று டாடா - நிலையான செல்வம்).

ஆனால் சில புத்தகங்களைப் படிக்கும் போது இதனை புழு போல அரித்து உள்ளேயே இறங்கி விடலாமா? என்று ஆசையாக இருக்கும்.




இந்த வாரத்திற்காக நான் பரிந்துரைக்கும் புத்தகம் இயக்குனர் மகேந்திரனின் (அதென்ன இயக்குனர் மகேந்திரன்? மகேந்திரன் என்ற பெயரில் வேறு யாரேனும் வி.ஐ.பி உள்ளாரா என்ன?) "சினிமாவும் நானும்" கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் மணிக்கூண்டின் எதிரே உள்ள NCBH புத்தகக் கண்காட்சியில் (10% கழிவுடன்) வாங்கியது.

லேசாக பழைய நடைதான். 1950 களிலேயே கதை வசனம் என்று சினிமாவுக்கு வந்தவராயிற்றே. ஆனாலும் அலுப்பில்லை. பக்கத்தில் உட்கார்ந்து மெள்ள கதை சொல்கிறார். அனுபவம் சொல்கிறார். கேஷூவலாக சில விஷயங்களை செய்து ஹிட்டடித்திருந்தாலும் தான் செய்த சில தவறுகளை செய்யாதே என்று நமக்கு அட்வைஸூகிறார்.

190 பக்கங்களை தாண்டியாயிற்று. வேலை இருக்கு நைட்டு பார்த்துக்கலாம் என்று எழுந்திருத்தால், இன்னும் கொஞ்சம் கேட்டுட்டு போ என்று மெள்ள சட்டையைப் பிடித்து இழுக்கிறார். 

1 பிப் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

வியாழன், 27 ஜனவரி, 2022

புதுசா தொழில் ஆரம்பிச்சிருக்கேன் சார் - அட்ராசிடீஸ்

இங்க புதுசா தொழில் ஆரம்பிக்கிறேன்னு வர்ற பல பேர் ஆர்வக்கோளாறுல தான் வராங்க. சில பேர் இன்வெஸ்ட்மெண்ட் தேடி நண்பர்கள், உறவினர்கள்னு பையில கை வைக்கிறாங்க. சரியான ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கூட இருப்பதில்லை. கீழே உள்ளவை சில அவதானிப்புகள்.

1. பர்மீஸ் உணவுக்கடை (இது நம்மூர்ல எத்தனை பேருக்குப் பிடிக்கும்?)
2. இளைஞர்களுக்கான திடீர் துணிக்கடைகள் (போட்டிக்கடைகள் பற்றிய ரிசர்ச் இல்லை). காட்டுக்குள்ளாற ஒருத்தன் வச்சிருக்கான். அங்க யார் வருவா?
3. தேவையற்ற இன்டீரியர் செலவு செய்யப்பட்ட ஜூஸ் கடைகள் (10 ரூவா லெமன் ஜூஸூக்கு மொஜிட்டோன்னு பேர் வச்சு 90 ஓவா, எத்தனை பேர் திரும்ப வருவாங்க?) 12 X 12 ஜூஸ் கடைக்கு எதுக்குடா 4 இலட்ச ரூவாய்க்கு இன்டீரியர்?
4. பார்பிக்யூ வண்டிகள் (அதுல பிரண்ட்ஸ் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு, ஒரே ஒரு தொழிலாளியை வச்சி கிட்டு, நானும் ஒரு முதலாளின்னு சுத்தி நின்னுகிட்டு அந்தப்பையனை ஆர்டர் போட்டுகிட்டு இருப்பானுக, அவன் அதே ஏரியால வேற ஒரு ஹோட்டல் திறந்ததும் அங்க ஓடிருவான். பார்பிக்யூ க்ளோஸ்)
5. பைக் ரிப்பேர் காராஜ் ஷோரூம்கள் (அந்த ஏரியாவில் இப்படி ஒரு கடை தேவையா, அல்லது இதுக்கு முன்னாடி எத்தனை கடைகள் அங்கே இருக்குன்னே ரிசர்ச் பண்ணாம)
6. ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் (ஆபீஸ் எங்கடா? வீடு தான் சார் ஆபீஸ். இதுக்கு முன்னாடி ஈவென்ட் பண்ணியிருக்கியா? ஓ, எங்கம்மா பர்த்டே நான் தான் செலப்ரேட் பண்ணுவேன்).
7. பிரியாணிக் கடைகள், வண்டிகள் (முஸ்லிம் பிரண்டு இருக்கான், முஸ்லிம்னாலே சூப்பரா பிரியாணி பண்ணுவாங்கள்ல - அப்டின்னு இவரே ஒரு ஜஸ்டிஃபிகேஷன். நாலு மாசத்துல அவன் துபாய் போயிடுவான்)
8. கேன்டிட் கேமரா ஷூட் - (மாமா கேமரா, ஆறு மாசம் என்கிட்டதான் இருக்கும்)
9. இதுபோக "செம்ம ஐடியா" என்ற பெயரில் ஏற்கெனவே கூகிளில் உள்ள ஒரு குப்பையை தூக்கி வந்து "இன்வெஸ்ட் பண்ணுங்க சார்" என்பது
10. ஒரு ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கும் போது மூணு வருசம் கழிச்சு யாருக்காவது வித்துடணும் என்ற எண்ணத்துடனே ஆரம்பிப்பது
11. ஷவர்மா ஹோட்டல் - (ஒன்னு 40 ரூபா தான் சார் அசல் ஆகும். ஆனா 100 ரூபாய்க்கு விக்கலாம் சார். 2.5 மடங்கு இலாபம் சார். அதெல்லாம் சரி தம்பி, ஆனா தினமும் இரவு எவ்வளவு ஷவர்மா குப்பைக்குப் போகிறது? அது என்ன கணக்கு? கரண்டு பில், உன் சம்பளம்? அந்தப் பையன் சம்பளம்?)
இதுபோல பல விஷயங்கள். இவங்க எதையோ புதுசா பண்றதா மனசுல நினைச்சுகிட்டு ஓவர் சீனா இருக்கு. சின்னதா ஆரம்பிச்சு வளர மாட்டேன் என்கிறார்கள். எடுத்தவுடனே ஹீரோ தான் என்பது போல பல இலட்சங்கள் இல்லாட்டி கோடிகள்
இதுல சக்ஸஸ் ரேட் வெறும் 5% கூட இருப்பதில்லை. மீதிப்பேர் 6 மாசத்துல கடையை சாத்திட்டு கிளம்பிர்றானுக. எதை நம்பி இவனுக மேல இன்வெஸ்ட் பண்றது?

திங்கள், 24 ஜனவரி, 2022

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் (ஏன்யா சாவடிக்கிறீங்க)

அமீர்கானையும் (கொஞ்சூண்டு அமிதாப், கட்ரீனா போன்றவர்களையும்), அவரது உழைப்பையும், பெரும் பட்ஜெட்டையும் "மட்டுமே" நம்பி எடுக்கப் பட்ட படம். காட்சிகளில் பிரமாண்டம் இருக்கிறது. நம்பகத் தன்மை இல்லை. கதையிலும், திரைக்கதையிலும் மெகா மெகா ஓட்டைகள். "தங்கல்" முடித்தவுடன் வெளியான, அமீர்கான் கஷ்டப்பட்டுச் செய்த "Fat to Fit" வீடியோ வெல்லாம் கிளப்பிய எதிர்பார்ப்புகள் எல்லாம் வீணாகப் போனது தான் மிச்சம். 

செட்டிங்க்ஸ், உடைகள், கிராபிக்ஸூக்கும் உழைத்த உழைப்பு அருமை. ஆனால் கதைக்காக கொஞ்சம் கூட வரலாற்று ரெஃபரன்ஸ் எடுத்தது போலத் தெரியவில்லை. வர்றாங்க, போறாங்க, சுடுறாங்க, அடிக்குறாங்க என்றே போகிறது படம். பக்கா லோக்கல் தரை மசாலா கில்மா ஐட்டம் பாட்டுகள் மூன்று. சுதந்திரம் நடக்கும் காலகட்டத்தில் இப்படியெல்லாம் டான்ஸ் நடக்குமா? அல்லது எம்.ஜி.ஆர் காலத்தில் ஐட்டம் பாடலில் அவரே மெயின் டான்ஸராக வந்து ஆடுவதைப் போல 2018 ன் ரசிகர்களின் காதில் எந்த நம்பிக்கையில் பூத்தோட்டத்தை வைக்க முடியும் என்று அமீர்கான் நம்பினாரோ தெரியவில்லை. 

தரை லோக்கல் ரவுடி ஒருவன், ஒரு ராஜாவிடம், ஆங்கிலேயே பெரும் அதிகாரிகளிடமெல்லாம் இப்படிப் பேச முடியுமா? நடக்க முடியுமா? கட்டிப்பிடிக்க முடியுமா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. மூச். படம் பார்க்கும் போது ஒரு பதட்டம் வரவில்லை, ஒரு ஆர்வம் வரவில்லை, ஒரு மண்ணும் வரவில்லை. கதையில் நடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்க வேண்டும் அப்போது தான் படத்தில் ஒரு ஈர்ப்பு வரும். அமீர்கானின் பாத்திரப்படைப்பும் பெருங்குழப்பம். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பார்க்கும் போதே நான் தூங்கிய படம். அமேசான் ப்ரைம் தானே, சப்ஸ்க்ரிப்ஷன் தானே என்றெல்லாம் ரிஸ்க் எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

25 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 

அரசு ஆசிரியர்கள், விரிவுரையாளர்களின் அட்ராசிடீஸ் - 3

 நல்ல ஆசிரியர்கள், நல்ல கேரக்டர் உள்ளவர்கள், நல்ல திறமை உள்ள ஆசிரியர்கள், நியாயமாக வேலை வாங்கியவர்கள், நியாயமான சம்பளம் வாங்குபவர்கள், சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யும் ஆசிரியர்கள் ஓரமாகப் போகவும். நீங்கள் வாழ்க. இது உங்களுக்கானதல்ல. இந்தப்பதிவைப் படிக்க வேண்டாம்.

8. பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு மீட்டிங் போயிருந்தேன். நான் ஏற்கனவே டிகிரி வாங்கிட்டேனே. என்னை ஏன் மீண்டும் மீண்டும் எக்ஸாம் எழுதச் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அரசு அங்கீகரித்த கல்லூரிகளில் தானே அந்த டிகிரி வாங்கினோம், அப்போ அது செல்லாதா என்று குதர்க்கமாகக் கேள்வி வேறு. நாளுக்கு நாள் வேகமாக முன்னேறும் உலகில் 1990 ல் வாங்கிய டிகிரியை மட்டும் வைத்துக்கொண்டு 2018 வரை திரும்பத் திரும்பத் திரும்ப எடுத்ததையே எடுத்துக் கொண்டிருப்பார்களாம். அப்டுடேட் ஆக இருக்க மாட்டார்களாம். ஐந்தாண்டுகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூட புது எக்ஸாம் எழுதி தன் தகுதியை நிரூபிக்க மாட்டார்களாம். ஆனால் சாகும் வரை பழைய பென்ஷன் திட்டத்தின் படி பென்ஷன் மட்டும் வேண்டுமாம். (அவர்கள் கட்டிய பணத்தை அவர்களுக்கு அரசு தருவது தான் முறை. நான் சொல்வது அதையல்ல. பழைய பென்ஷன் திட்டத்தை)
டிஸ்கி - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. இன்னும் நிறைய வருது. ஆனால் நண்பர்களை இழக்க நேரிடுமே என்று இத்துடன் "வணக்கம்" வைக்கிறேன்.

25 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. பார்ட் 1 படிக்க இங்கே க்ளிக் செய்யவும். பார்ட் 2 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அரசு ஆசிரியர்கள், விரிவுரையாளர்களின் அட்ராசிடீஸ் - 2

 நல்ல ஆசிரியர்கள், நல்ல கேரக்டர் உள்ளவர்கள், நல்ல திறமை உள்ள ஆசிரியர்கள், வேலையை நியாயமாக வாங்கியவர்கள், நியாயமான சம்பளம் வாங்குபவர்கள், சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யும் ஆசிரியர்கள் ஓரமாகப் போகவும். நீங்கள் வாழ்க. இது உங்களுக்கானதல்ல. இந்தப்பதிவைப் படிக்க வேண்டாம்.

4. தகுதி இருக்குல்ல, தகுதியோட தானே வேலைக்கு வந்தோம் என்று சிலர் பொங்குவது கண்ணில் பட்டது. ஆனால் தெருவில் இறங்கி நெருக்கமான இத்துறை விபரம் தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். இலஞ்சம் கொடுக்காமல் "எந்த அரசு வேலையும்" கிடைக்காது. கிடைத்திருந்த சிலருக்கு, ஒரு ஊரில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்து "தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது" என்று வழக்குப் போட வைத்து அந்தத் தேர்வையே செல்லாததாக்கிய கதையை உறவினர் ஒருவர் சொன்னார்.
5. இலஞ்சம் என்ற ஒன்று வந்து விட்டால் அங்கே தகுதிக்கு என்ன வேலை? வேலையின் கிரேடு, டிபார்ட்மெண்ட், கிடைத்த ஊர், உங்க கம்யூனிட்டி, சிபாரிசு இதையெல்லாம் பொறுத்து குறைந்த பட்சம் 5 இலட்சத்தில் இருந்து 45 இலட்சம் வரை இலஞ்சம் இல்லாமல் அந்த வேலை கிடைக்காது. தனியார் கல்லூரியில் MBA வகுப்பெடுக்கும் அண்ணன் ஒருவர் வாத்தியார் வேலை கிடைத்து பல ரவுண்டுகளைத் தாண்டி ஃபைனல் இன்டர்வியூவுல 45 இலட்சம் கேட்டாங்க கார்த்தி. அதைப் புரட்ட முடியாம தனியார்லயே இருக்கேன் என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தெரிந்தவர்கள் அவருக்குத் தெரிந்தவர்கள் மட்டும் 15 பேர் இப்படிப் பணம் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னார்.
அது போல லஞ்சம் கொடுத்து வந்தவர்கள் எத்தனை சதவீதம் பேர் இந்தப் போராட்டத்தில் சத்தம் காட்டாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்?
6. "மாணவர்களின் எதிர்காலத்திற்காகத்தானே போராடுகிறோம், ஆச்சா, போச்சா என்று சிலர் குதிக்கிறார்கள்" ஆனால் நண்பர் மகாதேவன் சியெம் பகிர்ந்திருந்த ஜாக்டோ - ஜியோ நோட்டீஸைப் பார்த்தேன். அனைத்து கோரிக்கைகளும் "சம்பளத்தை ஏத்து" என்றே இருந்தன. போனால் போகட்டும் என்று கட்ட கடேசி பாயிண்ட் ஆக 3500 பள்ளிகளை மூடக் கூடாது என்ற பாயிண்டை சேர்த்திருந்தார்கள்.
7. ஊர்ல, 76 வயசாவுற எங்க மாமா ஒர்த்தரிடம் "ஏய்" படத்துல "இந்த ஸ்டாம்புல இருக்கறது யாரு?" என்பது போல "மாமா, இந்த வாத்தியாருங்க...." என்று எடுத்துக் கொடுத்தால் போதும். "இந்த வாத்திப் பயலுக இருக்கானுங்களே" என்று ஆரம்பித்தால் "இவ்ளோ சம்பளத்தை வாங்கிகிட்டு" என்று வண்டை வண்டையாகக் கேட்கத் துவங்கி விடுவார். அவர் இன்னும் உடலுழைப்பு தேவைப்படும், லிட்ரலி, மூட்டைகளைத் தூக்கி இறக்கும் வேலையெல்லாம் செய்து கொண்டு ஒரு கடையில் தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் உங்கள் கோரிக்கைகளை விளக்கி கன்வின்ஸ் செய்யுங்கள் பார்ப்போம்.
டிஸ்கி - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

25 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. பார்ட் 1 படிக்க இங்கே க்ளிக் செய்யவும். பார்ட் 3 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அரசு ஆசிரியர்கள், விரிவுரையாளர்களின் அட்ராசிடீஸ் - 1

 நல்ல ஆசிரியர்கள், நல்ல கேரக்டர் உள்ளவர்கள், நல்ல திறமை உள்ள ஆசிரியர்கள், நியாயமான சம்பளம் வாங்குபவர்கள், சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யும் ஆசிரியர்கள் ஓரமாகப் போகவும். நீங்கள் வாழ்க. இது உங்களுக்கானதல்ல. இந்தப்பதிவைப் படிக்க வேண்டாம். மேலும் இது பொதுவான பதிவு அல்ல. நான் பார்த்த குறிப்பிட்ட சிலரைப் பற்றியது. பொத்தாம் பொதுவாக கோபப் பட்டு பீ.பி ஏற்றிக் கொள்ளாதீர்கள்.

மூன்று வருடம் முன்பு ஃப்ரீலான்சராக இருக்கும் போது ஒரு பீரியடுக்கு 350 ரூபாய் என்ற கணக்கில் ஒரு அரசுக் கல்லூரியில் Soft Skills வகுப்பு எடுக்கப் போனேன். கேம்பஸூக்குள் பசங்கள் இருப்பதைப் பொறுத்து, மற்ற ஆசிரியர்களில் ஷெட்யூலைப் பொறுத்து ஒரு நாளைக்கு இரண்டோ, மூன்றோ பீரியட்கள் கிடைக்கும். இதில் பஸ், சாப்பாடு இதர செலவுகள் நமதே.
1. கல்லூரிக்குள் உடை, நடை, உடல்மொழி, ஷேவிங் பண்ணாத கசகசவென்ற முகம், இன் பண்ணாத அதுவும் கசங்கிய சட்டை, கக்கூஸ் செப்பல் என்று அக்யூஸ்டு மாதிரியே 35 வயதுக்காரன் ஒருத்தன் திரிஞ்சான். கேன்டீனில் அவனுடைய பேச்சு கூட பக்கா தரை டிக்கெட் போல இருந்தது. யாரு அதுன்னு கேட்டா ஃபுரொபசர் னு சொன்னாங்க. அவன் இருந்த கிரேடுக்கு 48 ஆயிரம் சம்பளம். இப்போ அதிகமாகியிருக்கும். பார்க்கிற வேலைக்காவது ஒழுங்காக வந்தால் என்ன கேடு?
2. என்னுடன் வந்த ஒரு பெண் டிரெயினருக்கு பாத்ரூம் போக புரொபஸர்களின் டாய்லெட் சாவியைத் தரமுடியாது என்று சொல்லி விட்டார்கள். "அந்த டிபார்ட்மெண்ட் வந்தவங்க எதுக்கு இங்க கக்கூஸ் போகணும்?" என்று ஒரு பொம்பளை புரொபஸர் கேட்பது எங்க காதில் விழுந்தது. காமெடி என்னன்னா, நாங்க போனது Soft Skills வகுப்பு எடுக்க. இது எந்த டிபார்ட்மெண்டையும் சேராது. மனிதாபிமானம் கூடவா இல்லை? அப்படியே கன்வின்ஸ் செய்தாலும் HOD கிட்ட கேக்காம தரமுடியாதுங்க என்று ஒரு பதில். HOD யம்மா கிட்ட கேட்கப் போனா, அவுங்க மீட்டிங்க்ல இருக்காங்க (சும்மா பேசிக்கிட்டு தான் இருந்தாங்க) என்று உள்ளே விடவில்லை. வேறொரு நல்ல HOD யை வைத்து போன் செய்தால் பேரைப் பார்த்து விட்டு அந்தம்மா போனை எடுக்கவே இல்லை.
3. அங்கே ரெகுலராகப் போனதால் தெரிந்து கொண்டது - அதே ஊரில் உள்ள ஒரு பெண்கள் கலைக்கல்லூரியில் ஒரு டிபார்ட்மெண்ட்டின் HOD அம்மணி காலையில் வந்தவுடன் நாற்காலியில் நன்றாக சொர்ணக்கா மாதிரி அகட்டி உட்கார்ந்து கொள்ளுமாம். டிரெய்னீ புரொபஸர்கள், ஜூனியர் புரொபஸர்களை "ஏய், இங்க வா" என்றழைத்து "இந்த பீரியட் நீ போ, இதுக்கு நீ போயிடு, இந்த பீரியட்ல இந்த கட்டுரையை படிச்சு பசங்களை எழுதிக்கச் சொல்லிடு" என்று கட்டளைகள் கொடுக்குமாம். அத்தனை பீரியட்களும் இந்தம்மா போக வேண்டியவை. 12 மணிக்கு, கொண்டு வந்த லஞ்ச் சை முடித்து விட்டு, இரண்டு மணிக்கு மீண்டும் ஒரு "சாப்பாட்டுக்கு அப்புறம்" ஒரு மினி சாப்பாடை அடித்து இறக்கி விட்டு, மூன்று மணிக்கு கிளம்பி விடுமாம். செய்கிற வேலை - பல பேப்பர்களில், லெட்ஜர்களில் HOD என்ற முறையில் போடும் பல கையெழுத்துகள் மட்டும். அப்போதைய சம்பளம் 1,50,000 ஆயிரம் எக்ஸ்பீரியன்ஸ் காரணமாக. (இப்போது இன்னமும் ஏறியிருக்கும்)
இது ஒரு நாள் இரண்டு நாள் கதையல்ல. தினமுமே இப்படித்தான். இது போக எம்.ஃபில் கைட் செய்வது, பி.ஹெச்டி கைட் செய்வது, பேப்பர் திருத்துவதற்கு சன்மானம் தனியாக வரும் என்ற பழைய கதையை நான் சொல்ல வேண்டுமா?
டிஸ்கி - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

25 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. பார்ட் 2 படிக்க இங்கே க்ளிக் செய்யவும். பார்ட் 3 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

யூடியூப் கொடுமைகள் (சில சேனல்களும் கூட)

யாரைப் பார்த்தாலும் "நீங்க தளபதி பத்தி என்ன நினைக்கிறீங்க? தல பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்று மைக்கை வாயில் வைக்கிறார்கள். இப்ப அதைத் தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க? 

மனசு வலிக்க ஒரு விஷயம் - ஒரு சேனலில் ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனில் "தளபதி விஜய் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அவர் நடிப்பைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" (இன்னும் ஏதோ கொஞ்சம் அபத்தமாகவே) என்று ஒரு இசையமைப்பாளரிடம் அபத்தமாகக் கேள்வி கேட்டார் ஒரு தொகுப்பாளினி. அப்படியே நேரில் போய் அறைய வேண்டும் போல் இருந்தது.

அந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

ஏ.ஆர். ரஹ்மான் எனும் இசை மேதையிடம் கேட்க வேறு கேள்வியா இல்லை? அவர் உயரம், அவர் சாதனை, அவரின் பெரு முயற்சிகள், உலகம் முழுக்க பெரும் இசைக் கலைஞர்களிடம் இணைந்து பணிபுரிந்தது, எதுவும் தெரியாமல் "எதையாவது கேப்போம்" என்று ஒரு கேள்வி. 

ஒரு ஆடியோ ரிலீஸ் என்றால் அங்கே ஹீரோ அந்த இசையமைப்பாளர் தானே? அந்தச் சின்ன லாஜிக் கூடத் தெரியாதா இவர்களுக்கு? 

இதே தான் இளையராஜா என்ற இசை மேதைக்கும் நடக்கிறது. அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ அதை விட்டுவிட்டு "பீப் பாட்டு பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்று கேவலமாக ஒரு கேள்வி. அவர் திருப்பித் திட்டியதும் "இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அடுத்த நாள் ஒரு அறிக்கை. 

முட்டாள்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது மீடியா.

24 ஜனவரி 2021 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

#சாவுங்கடா_பதிவுகள்

வெள்ளக் கார்டுக்கு பொங்கல் பரிசு 1000 ஓவா இல்லையாம். "தர்பார்" பாத்தது சொந்தக்காசுல. அப்பறமா அந்த ஓட்ட பக்கெட்டத்தூக்கிட்டு வராதீங்க. ஆம்மா...

மேலே உள்ளது 2020 ஜனவரி 10 ஆம் தேதி போஸ்ட். 

---------------------------------------------------------------------------------------------- 

"சலுகை, சன்மானம், அதிர்ஷ்டம், லக்கு, இட ஒதுக்கீடு, உதவித்தொகை, குலுக்கல், அன்புப் பரிசு, ஸ்காலர்ஷிப், லக்கி ட்ரா, அதிர்ஷ்டப்போட்டி, குல்மால், இலவசம், அரசு இலவசங்கள், காக்கா பாலிடிக்ஸ், சீட்டிங்" - இவற்றுக்கும் எனக்கும் பத்து கிலோ மீட்டர் தூரம். நான் இங்கே வருகிறேன் என்றால் இவையெல்லாம் என்னை ஸ்மெல் செய்து, மேப் பார்த்து யூ டர்ன் எடுத்துச் சென்று விடும். இன்று வரை 99 சதம் இவற்றில் எனக்கு வாய்ப்புகளோ, வெற்றிகளோ கிட்டியதே இல்லை. 

திரும்பிப் பார்த்தால், வேலை, உழைப்பு அல்லது திறமைகள் மூலம் கிடைத்த வாய்ப்புகளும், பரிசுகளும் மட்டும் தான் வாழ்க்கை முழுக்க இருக்கின்றன. இன்றைக்கு வரை அப்படியே நகர்கிறது வாழ்க்கை.

மீள் - டெய்ல் பீஸ் - போன வருஷம் வெள்ளை கார்டுக்கு பொங்கல் பரிசு கிடைக்கலைன்ற காண்டுல போட்டது. இந்த வருஷமும் அதே கதை. கார்டு மாத்த ஒரு முறை வாய்ப்பு குடுத்தாங்களே. ஏன்டா மாத்தலை ன்னு கேட்பவர்களுக்கு, "அது என் தப்பு தான். கவனிக்கலை". 

டெய்ல் பீஸ் 2 - இந்த வருஷம் அரிசி கார்டா மாத்தி வைப்பேன். அடுத்த வருஷம் பொங்கல் பரிசே தர மாட்டாங்க பாருங்களேன். என் ராசி அப்புடி.

இது (மேலே) 2021 ஜனவரி 10 ஆம் தேதி போஸ்ட். 

---------------------------------------------------------------------------------------------- 

சொன்னம்ல.

இந்த வருஷம் ரேஷன்ல பொங்கல் பரிசுப் பணமே கிடையாதாம். என் ராசிதான். (பை தி வே, நான் இன்னும் அரிசி கார்டா மாத்தலை)

#சாவுங்கடா_பதிவுகள்

இது (மேலே) 2022 ஜனவரி 10 ஆம் தேதி போஸ்ட். 

---------------------------------------------------------------------------------------------- 

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச் சங்கக் கூட்டம் (2018)

8 ஜனவரி 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கோவையில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியையகள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட "தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச் சங்கக் கூட்டத்தில்" பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

அது குறித்து பத்திரிகைக்காக அனுப்பப்பட்ட செய்தி - "ஜனவரி 6 ஆம் தேதி, கோவையில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வித்துறை தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத் தலைவர், செயலாளர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடர்ச்சியாக, கல்வித்துறையில் உலக அளவில் 175 வருடங்கள் அனுபவம் உள்ள பியர்சன் எஜூகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் "பியர்சன் மைபீடியா" செயல்விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மைபீடியா மேலாளரும், மென்திறன் பயிற்சியாளருமான கார்த்திகேயன் பயிற்சியை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியையகள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்"








ஒரு சூப்பர் சேமிப்பு, முதலீட்டு ஐடியா - எல்லாருக்கும்.

நம்ம ஃபைனான்ஸ் குரூப்புக்காக எழுதியது.

மாதச் சீட்டு கட்டி (அதில் கசறு இலாபம்), அந்தப் பணத்தில் நகையை வாங்கி அதை தேசிய வங்கியில் அடமானம் வைத்து விட்டு அதை வேறு இடத்தில் முதலீடு செய்பவர்களும் உண்டு.
உதா - 2 இலட்ச ரூவாய்க்கு நகையை அடமானம் வைத்து அதை ஒரு சென்ட் நிலம் வாங்கி விட்டு, மாதாமாதம் 5000 கட்டி சில ஆண்டுகளில் நகையை மீட்டும் ஒருவரை எனக்குத் தெரியும்.
கொஞ்சம் தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் வேலை. ஆனா, தங்கமும் கையில் நிக்கும், நிலமும் நிற்கும். 3 ஆண்டுகளில் நிலத்தின் விலை ஏறியிருக்கவும் வாய்ப்புண்டு.
இதே ஐடியாவை ஷேர் வாங்கவும் உபயோகப்படுத்தலாம் என்று சொல்லும் அன்பர்களும் உண்டு. இந்த ஐடியா படி அடமானம் வச்ச காசு, புதுச் சீட்டுக் காசு இரண்டையும் பல்க்காக எடுத்து (சுமார் 3 அ 4 இலட்சம்) ஹவுசிங் லோனை சடாரெனக்குறைக்கும் நண்பர் ஒருவரும் உள்ளார்.
ஆராய்ந்து, யோசித்து ரிஸ்க் புரிந்து செய்வது உங்க திறமை.

நம்ம ஃபேஸ்புக் குரூப் லிங்க் - https://www.facebook.com/groups/862203214261615/

டாக்ஸிக்காரன்_கதைகள் 1 (சிட்ரா சிக்னலாண்ட)

"சிட்ரா சிக்னலாண்ட சார், ஸ்லோவா போயிட்டிருந்தேன். திடீர்னு ஒரு வண்டி பின்னாடி இடிச்சிருச்சி. கோவமா காரை நிறுத்தி இறங்கிட்டேன். சண்டைக்கு போலாம்னு பாத்தா அது ஒரு பி.எம்.டபிள்யூ ஹை எண்டு. அதுவும் ஓட்னது ஒரு லேடி".

"எறங்கி வாங்க"-ன்னு கை காமிச்சேன். ஓரம் நிறுத்தி இறங்கி வந்தாங்க. வண்டில நல்ல டெண்ட்டு. காமிச்சு "என்னாங்க இப்டி பண்ட்டீங்க?"ன்னு கேட்டேன்".
"இத சரி பண்ண எவ்ளோ ஆகும்?"னு கேட்டாங்க. "ஒரு ஆறாயிரம் இல்ல ஏழாயிரம் ஆகும்"னேன். கார்ல இருந்து 8000 எடுத்துட்டு வந்து கைல வச்சாங்க. "திருப்தியா?" ன்னு கேட்டாங்க. தலையை ஆட்னேன்.
வண்டியைக் கிளப்பிட்டு போயிட்டாங்க.

பேரிடர் காலப் பாடம்

நம்ம ஃபைனான்ஸ் குரூப்புக்காக எழுதியது.

பேரிடர் காலப் பாடம்
உங்கள் நிதி நிலையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வருடச் செலவிற்குத் தேவையான பணத்தை கேஷாக வங்கியில் (அல்லது கொஞ்சம் அடகு வைக்கத் தோதான நகைகள்) அல்லது பிக்ஸட் டெபாஸிட் ஆக வைத்துக் கொள்வது நல்லது.
உதா 1 - வீட்டுச்செலவு மாதம் 20, ஈஎம்ஐ மாதம் 20 எனில் 40 X 12 மாதங்களுக்குத் தேவையான 4,80,000 இருப்பது நல்லது. (இவருக்கு சுமார் 50,000 சம்பளம் இருக்கலாம் என்ற கணிப்பு)
உதா 2 - வீட்டுச்செலவு மாதம் 25, லோன் ஈஎம்ஐ மாதம் 25 எனில் 50 X 24 மாதங்களுக்குத் தேவையான 12,00,000 இருப்பது நல்லது. (இந்த நபருக்கு சுமார் 70,000 சம்பளம் இருக்கலாம் என்ற கணிப்பில்)
உதா 3 - வீட்டுச்செலவு மாதம் 15, லோன் ஈஎம்ஐ இல்லை எனில் 15 X 24 மாதங்களுக்குத் தேவையான 3,60,000 இருப்பது நல்லது. (இந்த நபருக்கு சுமார் 25,000 சம்பளம் இருக்கலாம் என்ற கணிப்பில்)
இந்தக் கணக்கு உங்கள் பேக்ரவுண்ட், வேலையின் நிலைத்தன்மை, நிரந்தர வருமானம், வட்டி, வாடகை, ஒற்றை வருமானம், இரட்டை வருமான வீடு, ஆல்ரெடி உள்ள சேமிப்பு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞன், இவற்றையெல்லாம் பொறுத்து மாறலாம்.
கொரோனா, அல்லது விபத்து, அல்லது மரணம் வேலை இழப்பு போன்ற எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் 2 வருடம் தாங்குவதற்கு இது உதவும். டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது தனி.
அடிப்படையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்கான சேமிப்புக்குப் பிறகே முதலீட்டுக்குப் போகவேண்டும்.

புதன், 5 ஜனவரி, 2022

மாஸ் ஹீரோவா? ரியல் ஹீரோவா? 40 கோடியா? 40 ஆயிரமா?

திரையில் மாஸ் ஹீரோவாய் நடிக்கும் ஒரு நடிகர் ஒரு படத்திற்கு வாங்கும் 40 கோடியை, ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி புகட்டி 15,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு பள்ளி ஆசிரியர் கண்ணில் பார்க்க 2,222 ஆண்டுகள் ஆகும். 

அதே பணத்தைப் பார்க்க, "நிறைய சம்பளம் வாங்குறான்" என்று பொதுஜனம் திட்டும், 40,000 சம்பளம் வாங்கும் ஒரு அரசாங்கப் பள்ளி ஆசிரியருக்குக் கூட 833 ஆண்டுகள் ஆகும். 

சினிமா ஹீரோவின் ஸ்கிரீன் சாகசத்தை நம்பி 1,000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்குகிற, தியேட்டர் சீட்டைக் கிழிக்கிற, சாலையில் தகராறு செய்கிற, பால் திருடிக் கட் அவுட்டில் ஊற்றுகிற, யூடியூபில் வெறித்தனம் எனக் கத்துகிற, கல்விக்கூடத்தையும் சினிமா தியேட்டரையும் கம்பேர் செய்கிற, ட்விட்டரில் எதிர் ஹீரோவின் ரசிகனுடன் மல்லுக்கட்டுகிற (ஏதோ ஒரு வேலைக்குப் போய் 15,000 - 20,000 சம்பளம் வாங்கும்) அறிவுகெட்ட ரசிகனுக்கு அவனால் வாழ்நாள் முழுக்க ஒரு கோடி ரூபாயை கண்களால் கூடப் பார்க்க முடியாது (கொரோனாவையும் தான்) என்பதும்..........

கொரோனாவுக்கு எதிராக கண்ணுக்குத் தெரியாமல் வேலை செய்யும் டாக்டர், துப்புரவாளர்கள் மற்றும் போலீஸ் எனும் ரியல் ஹீரோக்களின் வாழ்வை நாம் நாசம் செய்கிறோம் என்பதும் தெரியாது. புரியாது. 

வெறும் சினிமா ரசிகனாய் இருப்பது வேறு. ஒரு ஹீரோவின் வெறியனாய் இருப்பது வேறு. 

- எஸ்கா. 

ஜனவரி 6, 2021 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

செவ்வாய், 4 ஜனவரி, 2022

நீ இப்படி பண்ணியிருக்கணும், அப்டி பண்ணியிருக்கணும்

பிக் பாஸ் பார்த்தவரை.

ஆரியும் சரி. அனிதாவும் சரி.
எவன் எது சொன்னாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிதுங்க. தனக்குன்னு ரூல்ஸ் வச்சிகிட்டு அடுத்தவங்களை "நீ இப்படி பண்ணியிருக்கணும், அப்டி பண்ணியிருக்கணும், இப்டி பண்ணியிருக்கலாம், அப்டி பண்ணியிருக்கலாம்"னு எதையாவது சொல்லிகிட்டே இருக்குதுங்க.
அடுத்தவன் என்ன பண்ணனும்னு நீ எப்படி முடிவு பண்லாம்? நீ நினைப்பதை மற்றவர்கள் எப்படி செய்ய முடியும்? மற்றவர்கள் நினைப்பதை நீ செய்ய முடியுமா?
"காலையில் இட்லி சாப்பிட்டேன்" என்று ஒருத்தன் சொன்னால், "நீ தோசை சாப்பிட்டிருக்கலாம், உப்மா சாப்பிட்டிருக்கலாம்" என்று எதையாவது உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அட் லீஸ்ட் இட்லி சாப்பிடும் முன்பாவது "இட்லி சாப்பிடாதே. தோசை சாப்பிடு" என்று சொல்லியிருந்தால் சாப்பிட்டிருக்கலாம். எனக்கு இட்லி சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் நான் இட்லி தானே சாப்பிடுவேன்? எப்படி தோசை சாப்பிட முடியும்?
சைக்கோக்கள்.
இது போல ஒரு கேரக்டரை என்னுடைய முந்தைய கம்பெனியில் கண்டிருக்கிறேன். எதற்கெடுத்தாலும் ஒரு விவாதம். ஒரு எதிர்க்கருத்து. கூடவே "நான் என்ன சொல்ல வந்தேன்னா? நான் என்ன சொல்ல வந்தேன்னா? நான் என்ன சொல்ல வந்தேன்னா? நான் என்ன சொல்ல வந்தேன்னா? நான் என்ன சொல்ல வந்தேன்னா?" என்று அதை ஜஸ்டிஃபை செய்ய முயற்சித்து வளவளவளவளவென்று வம்பிழுத்து மெயின் விஷயத்தை விட்டு விட்டு விலகி சில்லறை விஷயங்களுக்கு ஜல்லி அடித்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கு டென்ஷன் தான் மிச்சம்.
இது போன்ற கேரக்டர்களை உங்கள் வாழ்க்கையில் கண்டால் ஒதுங்கிப் போய்விடுங்கள் மக்களே.

ஏன் இந்த சப்பைக் கட்டு?

4 ஜனவரி 2021 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

தியேட்டரை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தியேட்டர் கள் திறக்கப்படும் 100 சதம் இருக்கைகள் நிரப்பிக் கொள்ளலாம், என்று அறிவித்த அரசு அதேபோல் 

பள்ளிகளை நம்பி உள்ள பல இலட்சம் பேரை ஏன் கருத்தில் கொள்வதில்லை? மாணவர்களின் கற்றல் இழப்பு ஒரு பக்கம். அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் "ஸ்கில் கேப்" ஒருபக்கம் போக, 

பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள்,

மற்ற அலுவலக ஊழியர்கள், 

பள்ளிகளுக்கு வேன் சர்வீஸ் விடுபவர்கள், 

பள்ளிகளுக்கு புத்தகம் சப்ளை செய்பவர்கள், 

பள்ளிகளுக்கு தண்ணீர் போன்றவை சப்ளை செய்பவர்கள், 

டாய்லெட் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், 

வெளியில் இருந்து கான்ட்ராக்ட் மூலம் வேலை செய்யும் யோகா, செஸ், மெடிடேஷன், கையெழுத்து வகுப்பு எடுப்பவர்கள், 

கம்ப்யூட்டர், லேப் போன்றவை சர்வீஸ் செய்பவர்கள், 

பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரும் என்னைப் போன்றவர்கள், 

புரொஜெக்டர் போன்ற ஸ்மார்ட் க்ளாஸ் கருவிகளை சப்ளை செய்பவர்கள், சர்வீஸ் செய்பவர்கள், 

பள்ளிகளில் லைசென்சிங் வேலை செய்பவர்கள், 

க்ளீனிங் கான்ட்ராக்ட் எடுத்தவர்கள், 

கேன்டீன் நடத்துபவர்கள், 

பள்ளிகளின் அக்கவுண்டன்டுகள், 

தோட்டம் சுத்தம் செய்பவர்கள், 

உபரிக் கட்டிட வேலை செய்பவர்கள், 

இது போக எத்தனையோ உபரிப் பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்கள், 

நோட்டுப் புத்தகங்கள் விற்பவர்கள், 

பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சிறு பொருட்கள் விற்கும் ஸ்டேஷனரி கடைகள், 

பள்ளி மாணவர்களுக்கு தீனி விற்கும் பஜ்ஜி போண்டாக் கடைகள், 

இன்னும், இன்னும், இன்னும், இன்னும், இன்னும், இன்னும், 

என கோடிக்கணக்கானோர் புழங்கும் இது ஒரு மிகப்பெரிய இன்டஸ்ட்டிரி. இவர்களில் பாதிப்பேருக்கு இன்று  வேலை இல்லை. மீதிப்பேர் கால் சம்பளம், அரைச் சம்பளம் வாங்குகின்றனர். பெரும்பாலானோர் கடைகளை மூடிவிட்டார்கள். 

இது ஏன் அரசின் கண்களில் படவில்லை? மால்கள் திறந்தாயிற்று, மார்க்கெட் திறந்தாயிற்று, கோவில்கள் திறந்தாயிற்று, டாஸ்மாக் திறந்தாயிற்று, பஸ்கள் ஓடுகின்றன, டிரெயின்கள் ஓடுகின்றன, ரேஷன் கடை நடக்கிறது, விமானங்கள் ஓடுகின்றன, பேக்டரிகள் திறந்தாயிற்று, கடைகள் திறந்தாயிற்று, தியேட்டர்கள் 100 சதம் நிரப்பிக்கொள்ளலாம், கிரவுண்டுகள் திறந்துள்ளன, ஜிம்கள் திறந்துள்ளன, வங்கிகளில் கூட்டம் அம்முகிறது, நகைக்கடை, துணிக்கடைகள் திறந்து வியாபாரம் நடக்கிறது. இங்கே எல்லாம் எல்லா வயதுக்குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும், கல்லூரி மாணவர்களும் புழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

ஏன் பள்ளித் துறை மட்டும் என்ன பாவம் செய்தது? அதற்கு மட்டும் ஏன் "பெற்றோர்களிடம் கருத்துக் கேட்போம்" என்ற சப்பைக் கட்டு? 

பேச்சா? பேச்சாளரா?

4 ஜனவரி 2021 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

பல மேடைப் பேச்சாளர்களிடம் நல்ல திறமைகள் இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் அவர்களுடைய "சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்". தனக்கு விழும் கைதட்டல்கள் காரணமாக "தனக்கு எல்லாம் தெரியும்" என்ற எண்ணம். மற்றவரை விட தான் உயர்ந்தவர் என்ற எண்ணம். தன் பேச்சுத் திறமை காரணமாக யாரையும் மடக்க முடியும் என்ற எண்ணம்.

(ஒரு சின்னப்பெண். 22 வயது இருக்கலாம். ஒருவரைப் பற்றி அப்துல் கலாம் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து விட்டு, கடைசியில் அது "நான்தான்" என்கிறார்). (இதே எண்ணம் தான் ஸ்டேஜை விட்டு இறங்கியதும் எல்லாரையும் தாழ்த்திப் பேசவும் வைக்கிறது. அப்படி ஒருவரையும் பார்த்திருக்கிறேன்).
அவர்களிடம் ஒரு தலைப்பின் இரு கோணங்களையும் கொடுத்து மாற்றி மாற்றிப் பேசச் சொல்லுங்கள். அசத்தி விடுவார்கள். மேலும், அவர்கள் எந்தப் பக்கம் நின்று பேசினாலும் நூறு பேராவது கைதட்டுவார்கள். பாரதி பாஸ்கர் பேசினாலும் கைதட்டல் விழும். ராஜா பேசினாலும் கைதட்டல் விழும். சண்முகசுந்தரம் பேசினாலும் கைதட்டல் விழும். நான் பேசினாலும் கைதட்டல் விழும். லியோனி பேசினாலும் கைதட்டல் விழும். அவர்களே எதிரெதிராகப் பேசினாலும் கைதட்டல் விழும்.
ஆனால் அப்படி விழும் கைதட்டல்களை தன் பேச்சுக்குக் கிடைத்ததாக எண்ணாமல் தனக்கே கிடைத்ததாக எண்ணி மீண்டும் "எனக்கு எல்லாம் தெரியும்" மோடுக்குப் போய்விடுகிறார்கள் சிலர். நம் தொடர்பிலும் சிலர் அப்படி உள்ளார்கள். அதில் சிலருக்கு தான் எடுத்து வைக்கும் கருத்து சரியா என்பதை விட "தான் ஜெயித்தே ஆக வேண்டும்" என்ற உள் எண்ணமே அதிகம்.
(நீயா? நானா? வில் ஒரு பேச்சாளர் பெண்மணி. வைரமுத்துவின் கவிதையை ஏற்ற இறக்கமாகப் பேசினார். ஒரே கைதட்டல். அதைக் கண்டதும் அவரது உடல்மொழி பெருமிதமாக மாறியது. ஆனால் அது வைரமுத்துவின் வரிகளுக்குக் கிடைத்தது என்பதை அவர் மனம் ஒப்புக்கொள்ளாது)
மேலே சொன்னது போல அவர்களால் ஒரே தலைப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் திறமையாகப் பேச முடியும் என்பதால் "உன்னை விட்டேனா பார்" என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விடுகிறார்கள். "எந்தக் கருத்து சரி" என்பதை விட "யார் இங்கே ஜெயிப்பது?" என்ற ஈகோ மேலோங்கி நின்றுவிட்டால் "தீர்வை" நோக்கிப் போக முடியாது. இருபுறமும் மாற்றி மாற்றி பாயிண்டுகள் வைத்துக்கொண்டே இருக்கலாம். இன்றைக்கு அப்படி ஒரு அனுபவம். டயர்டாக்கி விட்டார் ஒரு அம்மணி.
இதைத்தான் "மற்றவர்க்கென்றால் ஜட்ஜாகும் மனிதன் தனக்கென்றால் வக்கீலாகி விடுகிறான்" என்று முன்னோர்கள் சொன்னார்கள். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

திங்கள், 3 ஜனவரி, 2022

வகான்டா ஃபாரெவர்

 எது நடந்தாலும் கல்லா கட்டுவதில் மார்வலை மிஞ்ச முடியாது. மார்வல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைத் தூக்கி விழுங்கி வைத்திருக்கும் டிஸ்னியையும் மிஞ்ச முடியாது. "எல்லாக் கேரக்டருக்கும் ஒரு ஸ்டாண்ட் அலோன் படத்தைப் போடுடா" என்று அடித்து ஆடுகிறார்கள்.


மார்வலின் தாய் நிறுவனமான டிஸ்னியின் வரலாற்றிலேயே அவர்கள் தங்கள் திரைப்படங்களை 7 - 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி எடுப்பது அல்லது ரீ - ரன் விடுவது வழக்கம். பார்ட் 1, பார்ட் 2 கச்சேரிகள் தனி. அதே கதையில் கார்ட்டூன் படங்கள் தனி, அனிமேஷன் படங்கள் தனி, தியேட்டர்களில் ஓட்டி கலெக்ஷன் அள்ளிய பிறகு உலகம் முழுக்க தன்னிடம் இருக்கும் டி.விக்களில் எல்லா மொழிகளிலும் டப் செய்து கல்லா கட்டுவது தனி.

இப்போது ஓடிடி கல்ச்சரில் அங்கேயும் வெளியிட்டு காசு பார்ப்பது தனி. யூடியூப் மாதிரி எவனாவது நம்மளை விட வளந்திருக்கானா? சரி அவன்ட்ட ஒரு அக்ரிமெண்டைப் போடு - ன்னு "Buy or Rent" ஆப்ஷனில் சம்பாதிப்பது தனி. இவை போக அதே படத்திற்குப் பில்டப் ஏத்த காமிக்ஸூகள் விற்பனை, அவற்றிலும் பிரிண்டட் காமிக்ஸூகள், ஆன்லைன் காமிக்ஸூகளும் உண்டு. அமேசான் மாதிரி ஒருத்தன் பெரியாளா இருக்கானா? அதுலயும் ஒரு செல்லிங்கைப் போடு எனக் கின்டிலிலும் அடித்து ஆடுகிறார்கள். ஃபிரான்ச்சைஸ் பொம்மைகள் விற்பனை தனி. காமிக் கான் போன்ற விழாக்கள், அதில் வரும் வருமானம் தனி..

"என்னது? ஸ்பைடர் மேன் லைசென்ஸ் சோனி கிட்ட இருக்கா? - அவன்கிட்ட போடுறா ஒரு அக்ரிமெண்டை, தனியா ஆடுற ஸ்பைடர் மேனைக் கூட்டியாந்து அவெஞ்சர்ஸ் கூட சேர்த்து விடு. மடக்கி மடக்கி ஒரு நாலு படத்தை இறக்குவோம், இலாபத்தைப் பிரிச்சுக்குவோம்" என்று இதுவரை 4 படங்களை வெளியிட்டு விட்டார்கள்.

எது நடந்தாலும் அதை வைத்து நிகழ்ச்சி செய்யும் விஜய் டி.வி இவர்களிடமிருந்தே கற்றுக் கொண்டிருப்பான் என நினைக்கிறேன். பை தி வே, விஜய் டி.வியும் இந்த டிஸ்னி கோஷ்டியில் சேர்த்தி தான். விஜய் டி.வியின் ஓனர் ஏஷியா நெட்டின் ஓனரும் இதே டிஸ்னி தான்.

சரி, இவ்ளோ பில்டப் எதுக்கு? 2018 ல் உலகம் முழுக்க கறுப்பின மக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக வெளியாகி சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் (1.35 பில்லியன் டாலர்கள்) மேல் வசூல் செய்த சூப்பர் டூப்பர் ஹிட் "பிளாக் பேந்தர்" படத்திற்கு சீக்வல் தயார் செய்யத்துவங்கினார்கள். ஆனால் அதன் ஹீரோ சாட்விக் போஸ்மன் இறந்து போகவே சீக்வல் படத்திற்கான ஐடியா கிடப்பில் போடப்பட்டது. கறுப்பின மக்களின் சூப்பர் ஹீரோவாக அழுத்தமான ஒரு அடையாளமாக மாறிப்போன அவருக்குப் பதிலாக வேறொருவரைப்போட புரொடக்ஷன் டீமுக்கே மனதில்லை.




ஆனா, அதுக்காக கோடிகள் கொட்டித்தரும் ஐடியாவை விடமுடியுமா? என யோசித்தவர்கள் ஒரே கல்லில் இன்னோரு மாங்காய் அடிக்கப் ப்ளான் போட்டு அடுத்த ப்ளாக் பேந்தர் படமாக "வகான்டா ஃபாரெவர்" என்றொரு படத்தைத் துவக்கியிருக்கிறார்கள். இதுவொரு ப்ளாக் சூப்பர் உமன் படமாக இருக்கப்போகிறது. ப்ளாக் பேந்தர் ராஜா "டி-சாலா"வின் சகோதரியான "ஷூரி" யும் ஒரு காமிக்ஸ் சூப்பர் ஹீரோ (உமன்) தான். எனவே இந்தப்படம் அவரை மையப்படுத்தி இருக்கப்போகிறது.


"கறுப்பினப் பெண்மணி - ஒரு சூப்பர் ஹீரோ (உமன்)" அப்படி இப்படி என விளம்பரப்படுத்தப்பட இருக்கும் அவர்கள் விளம்பரங்களில் மயங்கி புல்லரித்துப் போய் ரசிகர்கள் அதையும் சூப்பர் ஹிட் ஆக்கத்தான் போகிறார்கள். பை தி வே, ஒரு மார்வல் சூப்பர் ஹீரோ படம் கண்டிப்பாக அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியே இருக்கும். அது தனி.

இன்னோரு 10,000 கோடி எடுத்து வைங்க.