சனி, 14 நவம்பர், 2020

"நான்" ஐ நிலைநிறுத்த வேண்டி

வெகுநீண்ட காலத்திற்கு முன் ஒரு சிறுகதை படித்திருக்கிறேன். "சமீரான் பரூவா" என்றொரு மனிதனைப் பற்றிய கதை. வெகுகாலம் மக்களுக்காகப் போராடிய ஒருவன், தன்னை மையப்படுத்தி இயங்கிய உலகத்தில் வாழ்ந்த ஒருவன், அன்று தான் இல்லாமல் உலகம் தன்போக்கில் இயங்குவதைப் பார்க்கிறான். தான் இல்லாமலும் தன் தேவை இல்லாமலும் உலகம் தன் இயல்பில், தன் இயக்கத்தில் இருப்பதை அவனால் முதலில் நம்ப முடியவில்லை. ஆனால் அதுதானே நிஜம்? மெள்ள மெள்ள அந்த நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் அவன் பிறகு தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டு மெள்ள அகல்கிறான். 

அது போலவே தானே நிஜ உலகும்? நாம் இருந்தாலும் இல்லையெனினும் அது தன் பாட்டுக்கு இயங்கவே செய்கிறது. பலருக்கு இது புரிவதில்லை. நாம் இருக்கும் உலகிலேயே நம் சுவடே படாத பல "பேரரல்" உலகங்களும் இயங்குவதுண்டு. டிஜிட்டல் என்றால் என்னவென்றே தெரியாத ஓர் உலகமும் உண்டு. தமிழில் இரண்டெழுத்தைக் கூட சேர்த்துப் படிக்கத் தெரியாத ஓர் உலகமும் உண்டு. சாலையில் இடது புறம் தான் போக வேண்டும் என்று ரூல்ஸ் தெரியாத ஓர் உலகமும் உண்டு. "அவங்க கிட்ட இருக்கு, நான் எடுத்துக்குறேன்" என்று சர்வசாதாரணமாகக் கொள்ளை அடித்து விட்டு (தீரன் திரைப்படத்தில்) ஆரவல்லி மலைத்தொடர்களில் பதுங்கும் ஆட்கள் கொண்ட ஓர் உலகமும் உண்டு. 

நிஜம் இது தான். நம் உலகத்தின் மைய அச்சு நாமாக இருக்கலாம். ஆனால் நிஜ உலகம் தனக்கென்று ஒரு அச்சை வைத்துக்கொண்டு இயங்கியபடியே இருக்கின்றது. ஏன்? நாளையே ஒரு பெரும் விண்கல் வந்து விழுந்து இந்தப் பூமி வெடித்தழிந்தாலும், பிரபஞ்சம் தொடர்ந்து இயங்கியபடியே தான் இருக்கப்போகின்றது.

பிறகெதற்கு இந்த "நான்" ஐ நிலைநிறுத்த வேண்டி இவ்வளவு போராட்டம்?

------------------ 

14 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியதன் லேசான திருத்தப்பட்ட வடிவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக