செவ்வாய், 24 நவம்பர், 2020

இருக்கின்ற வாழ்க்கையை இன்னும் நன்றாக ரசித்து வாழ வேண்டுமா?


25 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

சென்ற வாரம் தான் "96" முழுதாகப் பார்க்க அமைந்தது. அதற்கு முன் சன் டி.வியில் விளம்பரங்கள், குழந்தைகளில் இடைஞ்சல்களுடன் பிட்டு பிட்டாக பார்த்ததில் ஒரு எளவும் பிடிக்கவில்லை. ஆனால் சென்ற வாரம் இரண்டு முறை பார்த்தேன். ஒரு குரூப்பில் வந்த லிங்க் மூலம் யூ டியூபில் ஒருமுறை. பார்த்து முடித்துவிட்டு மாலை திரும்ப லிங்க் ஓப்பன் செய்தால், லீகல் பிரச்சினை என்று தூக்கியிருந்தார்கள். பிறகு மறுநாளே டெலகிராமில் இரண்டாம் முறை.

படம் "96" பத்தாப்பு, நாம 97 பேட்ச் - பத்தாப்பு. ஒன் இயர் ஜூனியர். (ஆனால் சலூன் சீனில் த்ரிஷா பத்தாப்பு 94 என்றும், ஆரம்பத்தில் இருந்து மற்ற எல்லோரும் 20 வருஷம் என்றும் சொல்ல, ஹோட்டல் வாசலில் 22 வருஷம் ஆச்சு என்றும் சொல்லிக் குழப்புகிறார்) படம் முதல் பாதி முழுக்க நாஸ்டால்ஜியா தான். படம் வேறு கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் எடுத்தார்களாம். அம்மா ஊர். நானும் அங்கே ஒருமுறை சென்றிருக்கிறேன். ஆறாப்பு படிக்க என்ட்ரன்ஸ் எழுதி பாஸ் செய்து விட்டு அங்கே சேராமல் சேலம் வந்து விட்டோம். ஒரு வேளை அங்கேயே படித்திருந்தால், ராமச்சந்திரன், ஜானு, முரளி, சதீஷ், சுபாஷினி எல்லாரையும் பார்த்திருக்கலாம். நமக்கு ஒரு வருஷம் சீனியர்ஸ்.
முதல் பாதி நாஸ்டால்ஜிக் ஃபீலிங்க்ஸைக் கிளப்பினாலும் நாம படிச்சது மொட்டைப்பசங்க - பாய்ஸ் ஸ்கூல் என்பதாலும், பள்ளி லவ்ஸ் ஏதும் இல்லாததாலும் இரண்டாம் பாதி அவ்வளவாக நம்மை பாதிக்கவில்லை. ஒருவேளை இப்டி ஒரு லவ் இருந்திருந்தா நல்லாருக்குமே என்று தோண வைத்தது. படம் பற்றி சில பேர் சில குறை சொன்னாலும், முடிந்தவரை எல்லாவற்றுக்கும் லாஜிக் இருந்தது. "92 ல் ஏ.ஆர்.ரஹ்மான் வந்து விட்டார், 95 ல் முத்து படம் வந்து செம ஹிட் ஆனது ஆனால் படத்தில் இளையராஜா பாடல்கள் மட்டும் தான் உள்ளன" என்றெல்லாம் சில பதிவுகள் பார்த்தேன்.
ஒரு சின்ன விஷயம், ஹீரோயின் பேர் ஜானகி என்பதால், அவர் ஜானகி பாட்டு மட்டும் தான் பாடுவார் என்றொரு டயலாக் படத்தில் வரும். 4 வருடத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஜானகி எத்தனை பாடல்கள் பாடியிருக்க முடியும்? இளையாராஜாவிடம் தானே ஜானகி அதிகம் பாடியிருப்பார்? மேலும் இப்படி ஒரு படம் எடுக்கும் போது இளையராஜா பாடல்கள் தானே நம்மை ஒரு சுகானுபவத்திற்கு அழைத்துச் செல்லும்? ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் கரண்ட் ட்ரெண்டில் இருப்பதால், இதை முந்தைய தலைமுறை படமாகக் காட்டவும் இளையராஜா தேவை.
பல படங்களில் அட்டென்டன்ஸ் எடுக்கும் சீன்களில் ராஜா (R) வுக்கு அப்புறம் பாலு (B) என ஒரு வரிசையே இல்லாமல் கன்னா பின்னாவென்று பெயர்கள் வருவதைப் பார்த்து எனக்கு எரிச்சலாக வரும். ஆனால் இதில் கரெக்ட்டாக - ஜானுவுக்குப் பிறகு முரளி, முரளிக்குப்பிறகு ராமச்சந்திரன், அதற்குப்பிறகு சதீஷ், பின்னர் சுபா என சரியான ஆங்கில அகர வரிசைப்படி அட்டென்டன்ஸ் எடுக்கப்படும். இது போல எத்தனையோ நுணுக்கமான விஷயங்கள் படத்தில் உண்டு.
ராமச்சந்திரனும் சுபாவும் ஒரு பாலத்தில் போகும்போது அங்கே தூண்களில் ஒட்டப்பட்டுள்ள பழைய சினிமா போஸ்டர்கள், சதீஷின் பேண்டில் பட்டன் வைத்த மடிப்பு டிசைன், லேட்டா வீட்டுக்கு போனா அம்மா என்ன அரிஞ்சிடும் என்பது போன்ற வட்டார வழக்குகள், வாட்ஸ் அப் மேப் ஷேரிங் பற்றி யோசிக்காமல் நண்பனுக்கு போனில் வழிசொல்லும் முரளி ஆனால் கூகிள் மேப் பற்றிப் பேசும் ஜானு, வர்ஜினா என்று கேட்கப்படும் போது கூச்சப்படும் விஜய் சேதுபதி, என நிறைய விஷயங்களை கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், டயலாக் எழுதியவர், நடிகர்கள் என அனைவரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். அவையும் அட்டகாசம்.
கடைசியாக ஒரு விஷயம். நீங்கள் இப்படி ஒரு பள்ளியில் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களுக்கு பப்பி லவ் இல்லையென்றாலும் பரவாயில்லை, நீங்கள் நல்ல படங்களை ரசிப்பவர் என்றால் அமைதியாக உட்கார்ந்து ஒரு முறை "96" படத்தை பார்த்துவிடுங்கள். அட்லீஸ்ட், இருக்கின்ற வாழ்க்கையை இன்னும் நன்றாக ரசித்து வாழ வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிளது படம். அந்த விதத்தில் இயக்குனரும், படக்குழுவும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றே நான் சொல்வேன்.
- எஸ்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக