புதன், 11 நவம்பர், 2020

பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா?

 கடை கண்ணி தொறந்து கூட்டம் அள்ளுது.

குழந்தைகளை ஃபுட்பால், பேஸ்கட் பால்னு எல்லா கிரவுண்டுக்கும் கொண்டு போய் விட்டு, டீம், டீமா சேர்ந்து விளையாடுறாங்க.
யோகா க்ளாஸ், ஜிம்முன்னு காலேஜ் பசங்க சுத்திட்டு இருக்கானுக.
எல்லா ரெஸ்ட்டாரெண்டுலயும் பிள்ளைகளோட போய் குடும்பமா உக்காந்து தின்னு, கூடி கும்மியடிக்கிறாங்க.
தீபாவளி பர்ச்சேசுக்கு மார்க்கெட்ல சின்னச் சின்ன பசங்களை கூட்டிட்டுப் போய் கடைவீதி நிரம்பி வழியுது.
துணிக்கடைல ஃப்ளோர் வாரியா வயசு வாரியா பசங்களை கூட்டிட்டுப்போய் துணி எடுக்குறாங்க, பலகாரக்கடை, பட்டாசுக்கடைல எவ்வளவு கூட்டம்...
டவுன் பஸ்ஸூல நிக்க இடமில்லாம பிள்ளைங்களோட ட்ராவல் பண்றாங்க.
"போகலைன்னா ஒறமொறை கோச்சுக்கும்"னு கல்யாணத்துக் கும்பலா போறாங்க.
எழவு வீட்டுக்கு "பாட்டி மூஞ்சிய ஒரு தடவை பிள்ளைங்களுக்குக் காட்டிடுவோம்" னு பிள்ளைங்களோட போய் கூட்டத்துல கறி சோறு திங்கிறாங்க.
காலேஜ் கவுன்சிலிங் அட்மிஷன் ஆரம்பிச்சாச்சு, பசங்களோட கேம்பஸ் கேம்பஸா ஏறி இறங்குறாங்க. ஆனா, பள்ளிக்கூடம் திறக்கலாமா-ன்னு (அதுவும் 9 ஆம் வகுப்புக்கு மேல) கேட்டா "வேணாம், கொரோனா வந்துட்டா?"ன்னு கேக்குறாங்க இந்தப் புத்திசாலி பெற்றோர்கள். ஏன்னா மேல சொன்ன இடத்துலல்லாம் வராத கொரோனா ஸ்கூல்ல போய் ஒளிஞ்சிகிட்டு "பிள்ளைங்க வரட்டும், புடிச்சிக்குறேன்" னு வெயிட் பண்ணுதாம்.
உண்மையிலேயே கொரோனாவைப் பற்றி எந்த ஒரு பேஸிக் அறிவும் இவர்களுக்குக் கிடையாது. தாடைக்கு மாஸ்க் போடும் புத்திசாலிகள், சாக்கடை நாற்றத்தின் போது மூக்கைப் பொத்துவதைப்போல சேலைத் தலைப்பை பொத்துபவர்கள் (கொரோனா வராதாம்),
நாலு பேர் சானிடைசர் போட க்யூவில் நின்றால் சைடில் புகுந்து கடைக்குள் செல்பவர்கள், மாஸ்க் போட்டோ இருந்தாலும் பக்கத்தில் வந்து மாஸ்க்கை இறக்கிப் பேசுபவர்கள். நான் லான் செக்கப்பே போகல, ஸ்டீல் பாடி என்று வீம்பு பேசுபவர்கள் (உனக்கு ஸ்டேஜ் 5 வந்திருக்கும் மூதேவி, அது கொரோனா உனக்குப் போட்ட பிச்சை) என்று நம்மைச்சுற்றி ஒரு பெரும் அறிவாளிக் கூட்டமே இருக்கிறது. இதில் நீங்களும், நானும் கூட இருக்கலாம். .
இதுல இன்னும் சில பேர் "அதுக்கும் மேல" போய், என் புள்ளைக்கு கொரோனாவுல செத்துப் போச்சுன்னா அரசாங்கம் இழப்பீடு தரணும்னு கேட்டிருக்கானுங்க (செய்தி பார்க்க). 135 கோடியைத் தாண்டிய நாட்டில் பிள்ளைகள் என்பவை நம்மாட்களுக்கு வருமானம் தரக்கூடிய சோர்ஸ், அவ்வளவுதான். நாலு பெத்து நாலையும் வேலைக்கு அனுப்பிச்சா எவ்ளோ வரும்னு பேசுறவன்களை என் கண்ணால பாத்துருக்கேன். அதுல ஒன்னு செத்தா எவ்ளோ காசு வரும்னு போதைல புலம்பினவர்களையும் பாத்திருக்கேன்.
போர்வெல் குழியில விழுந்து இறந்த சுர்ஜித் அமெரிக்கக் குழந்தையா இருந்திருந்தா அவங்கப்பனை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டு காலம் பூரா நல்ல வேலைக்குப் போக விடாம ரெக்கார்ட்ல ஏத்தியிருப்பாங்க (ஒரு விபரம் தெரிந்த அமெரிக்க நண்பர் சொன்னது). ஆனா அது இந்தியக் குழந்தை என்பதால் போர்வெல்லை மூடாத பொறுப்பற்ற அப்பனுக்கு, 40 இலட்சம் வரை கொட்டிக் கொடுத்தார்கள் எதையோ தின்னும் ஓட்டு வங்கி அரசியல் வாதிகள்.
இந்த ஒரு வருட கல்வி இழப்பு இன்னும் சில ஆண்டுகளில் ஆண்டுகளில் வேலைக்கு வரப்போகும் "வொர்க் ஃபோர்ஸ்" களில் கண்ணுக்குத் தெரியாத பெரிய இழப்பை ஏற்படுத்தப் போகுது. இந்த வருட அறிவியல் பாட பேஸிக்ஸை படிக்காமல் விட்டவன் எத்தனை பேர் ஆராய்ச்சியாளர் ஆகுற வாய்ப்பை இழக்கப்போகிறார்கள்? இந்த ஒரு வருடம் உடல் பருமன் ஏறிய குழந்தைகள் எத்தனை பேர் 20 வருடம் கழித்து அதீத உடல் உபாதைகளால் கஷ்டப்படப்போகிறார்கள்? அதில் எவ்வளவு பேர் ஸ்போர்ட்ஸ்மேன் ஆகும் கனவை இழக்கப் போகிறார்கள்?
இந்த வருடத்தை "ஜீரோ அகாடமிக் இயர்" ஆக அறிவித்தால் விட்டுப்போன சிலபஸை கல்வித்துறை எப்படி வரும் ஆண்டுகளில் மிக்ஸ் செய்ய முடியும்? செய்தாலும் அதற்கு எத்தனை கமிட்டி போட வேண்டும்? எத்தனை மீட்டிங், ஸ்கூல் சிலபஸ், காலேஜ் சிலபஸ், யுனிவர்சிடி சிலபஸ் என எந்தெந்த சிலபஸை மாற்றுவது? எத்தனை கோடி புத்தகங்களை மீண்டும் அச்சடிப்பது? அச்சடித்த கோடிக் கணக்கான புத்தகங்களை என்ன செய்வது? ஆனா அதைப்பத்தி நமக்குக் கவலையில்லை.
அதே போலத் தான் டாஸ்மாக்கும். குடி ஏற்படுத்தும் எதிர்கால ஸ்கில் இழப்புகள், அது ஏற்படுத்தும் விபத்துக்களால் ஆகும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பொருளிழப்பு, இன்ஷூரன்ஸ் மூலம் வீணாகும் தொகையெல்லாம் நம் கண்ணுக்குத்தெரியாதே. "குடி ஒரு பேரானந்தம்" னு போதையைக் கொண்டாடுவோம்.
ஆனா நாம, கண்ணுக்குத் தெரிவதை மட்டும் தானே நம்புவோம்? கண்ணுக்குத் தெரியாத கெட்டதையோ, கண்ணுக்குத் தெரியாத நல்லதையோ நம்ப ஒத்துக்க மாட்டோமே. 600 கோடி செலவு பண்ணி ராக்கெட் விட்டா எதிர்காலத்துல என்ன நன்மைன்னு யோசிக்காம அந்த 600 கோடிக்கு சோறு வாங்கி ஏழைகளுக்குப் போட்டா நல்லது ன்னு நினைக்கிற "சிவகுமார்கள்" இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது.
என்ன சொல்ல வருகிறேன் என்று சரியாகப் புரிந்து கொள்ளாத சிலருக்காக மறுபடி அழுத்தமாக ஒரே கேள்வி கேட்கிறேன் "மார்க்கெட்ல வராத கொரோனா, பஸ்ஸூல போனா வராத கொரோனா, துணிக்கடை கூட்டத்துல வராத கொரோனா, கிரவுண்டுல கிரிக்கெட் விளையாடும்போது வராத கொரோனா, கறிக்கடையில வராத கொரோனா, மீன் மார்க்கெட்ல வராத கொரோனா, காய்கறிச் சந்தையில வராத கொரோனா, ஸ்கூல்ல தான் வருமா?"
நன்றிகள்.
- எஸ்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக