வெள்ளி, 20 நவம்பர், 2020

அழகுப் பிள்ளையாரும், ரங்கோலி போட்டியின் கதையும்







அப்போது குமுதத்திற்கு அனுப்பிய அந்த விநாயகர் கலெக்ஷனிலேயே எனக்குப் பிடித்த படம் இது (மற்ற படங்களுக்கு ஆல்பம் பார்க்கவும்). சன்னமான இந்த அவுட்லைன் வரிகளை பிரஷ்ஷிலேயே வரைய கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனால் அவுட்புட் பார்த்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
இதற்கு ஒரு பின் கதையும் உண்டு. கல்லூரிக் காலத்தில் ஹிந்தி க்ளாஸ் படிக்கும் போது, இந்தப் பிள்ளையாரை மனதில் வைத்து, அவர்கள் நடத்திய ஒரு ரங்கோலி போட்டிக்கு துணிந்து பெயர் கொடுத்து விட்டேன். ஒரே ஒரு பச்சை நிறப் பொடி மட்டும் வாங்கிக் கலந்து கலர் கோலப் பொடியும் தயார் செய்தேன். சார்ட் டில் வரைந்த படம்தான் நல்லா வந்திருக்கே என்று ஒரு கான்ஃபிடன்ஸில், முன்கூட்டியே சிலமுறை கோலம் போட்டுப் பார்த்து ப்ரிப்பேர் செய்ய வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. கூச்சம் காரணமாக யாரிடமும் தகவல் சொல்லவும் இல்லை.
போட்டியன்று போய் மண்டபத்தில் பார்த்தால் புள்ளிக்கோலம், ரங்கோலி அது இது என என்னைத் தவிர எல்லாம் பெண்கள். அதிலும் பலர் காலம் காலமாக கோலம் போட்டுப் பழகியவர்கள். நான்லாம் கும்பகோணத்தில் எங்க அக்காக்களுடன் மார்கழி மாதத்தில் கூட இருந்து கோலம் போட்டு கலரடித்துப் பழகிய ஓவர் கான்பிடன்ஸ் கேஸ். பாண்டியராஜன் மாதிரி திருதிரு தான் அவர்களைப் பார்த்ததும். விதவிதமான கலர்கள், தனிப் பொடிகள், வெள்ளைப் பொடி, ஜிகினா அயிட்டங்கள், பூக்கள், ஊசிமணி, பாசிமணிகள் என்று அள்ளிக் கொண்டு வந்திருந்தார்கள்.
என்னிடம் இருந்ததோ ஒரே ஒரு பச்சை கலர் கோலப்பொடி மட்டுமே. ஆனாலும் "இந்த ஓட்டக் கண்ணாடியப்போட்டுட்டு எப்படித்தான் தைரியமா நிக்குறியோ?" என்று மன்னன் ரஜினி மாதிரி கூச்சப்படாமல் ஸ்கேல், இன்ச் டேப், சாக்பீஸ், கோலப்பொடி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய் எனக்குத் தந்த பாக்ஸில் அமர்ந்து விட்டேன். போட்டி ஆரம்பித்ததும், அவற்றை வைத்து மார்க்கிங் எல்லாம் செய்து, கோடுகள் போட்டு நான் கொடுத்த பில்டப்புக்கும், போட்டியில் பங்கு பெற்றதில் ஒரே ஒரு ஆண் என்பதாலும் மண்டபத்தில் ஒரே அப்ளாஸ். கூட ஹிந்தி படித்த ஆண்கள் எல்லாம் விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள் எனக்காக.
நானோ "தம்பிக்கு எந்த ஊரு" ரஜினி மாதிரி சுற்றி எதையும் பார்க்காமல் பொறுமையாக நெல்லு கீழே விழாமல் ஒரொரு கதிராக அறுத்து விட்டு, மார்க்கிங்கையும், பிள்ளையார் அவுட்லைனையும் முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சைடில் இருந்த அனைவரும் பாதி ரங்கோலியை முடித்து விட்டிருந்தார்கள். அதிர்ந்து போய் தடதடவென்று இருந்த மெட்டீரியலை வைத்து வேலையை ஆரம்பித்தேன். ஓரளவு திருப்தியாகவே முடிந்தது.
அருகில் இருந்த வண்ண வண்ண அலங்கார ரங்கோலிகளுடன் கம்பேர் செய்கையில் என் கோலம் கொஞ்சம் டல்லாகவே வந்திருந்தது. சாதாரணமான ஒரே ஒரு கலர். ஆனாலும் தனியாகப் பார்த்தால் என் ரங்கோலி அவுட்புட் நன்றாகவே
அருமையாக
வந்திருந்தது. பாராட்டுக்களும் கிடைத்தன.
ஹிந்தி க்ளாஸ் நண்பர் கண்ணன் "என்கிட்ட சொல்லியிருந்தா காசு போட்டு நான் நாலஞ்சு கலர் வாங்கிக் கொடுத்திருப்பேனேடா" என்றார். அக்கறையாக அவர் சொன்னாலும் அப்போது தான் முன் தயாரிப்புகள் இன்றி போட்டிக்கு வருவது தவறு என்று சில விஷயங்கள் உறைத்தன.
ஆனாலும், to my surprise........ வந்திருந்த 15 போட்டியாளர்களில் என் ரங்கோலிப்பிள்ளையார் பிடித்த இடம் ஐந்தாவது. முதல் பரிசுகள் மூன்று தான் என்றாலும் ஆறுதல் பரிசு என்ற வகையில் எனக்கு ஒரு அழகான பிளாஸ்டிக் தட்டு ஒன்றைக் கொடுத்தார்கள். ஒட்டு மொத்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஒரே ஆண் என்பதால் அதை ஸ்பெஷலாகப் பாராட்டி எனக்கு டபுள் கைதட்டல் கிடைத்தது.
அந்தத் தட்டை நீண்ட நாட்கள் வைத்திருந்தேன். கொஞ்ச நாட்கள் தங்கையிடம் இருந்தது என ஞாபகம். இப்போ அது எங்கே என்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக