வெள்ளி, 20 நவம்பர், 2020

"தீபாவளி சீட்டு" கேள்விப்பட்டிருக்கிறீர்களா?





தீபாவளிப் பலகாரங்களுக்காக, துணி மணிகளுக்காக, பண்ட பாத்திரங்களுக்காக, பட்டாசுகளுக்காக, ஏன் தீபாவளி தங்கச் சீட்டு, ஃபுல் விஸ்கி சீட்டு கூட உண்டு. அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும் வருடா வருடம் சீட்டு கட்டியே வீட்டிற்கும், பெண் பிள்ளைகள் கல்யாணத்திற்கும் என பெரிய பெரிய பாத்திரங்கள் வாங்கியவர்கள், பணம் சேர்த்தவர்களைப் பார்த்திருக்கிறேன். 

லோயர் மிடில் கிளாஸ் மற்றும் ஏழை மக்கள் இருக்கும் இடங்களில் இந்த சீட்டு மக்கள் புழங்குவார்கள். ஒரு தீபாவளி முடிந்ததும் அடுத்த தீபாவளி சீட்டு துவங்கும். முதல் வாரம் ஒரு துகை அட்வான்ஸாகவும், வாரம் ஒரு துகை என்றும் கட்ட வேண்டும். தீபாவளிக்கு ஒருவாரம் அல்லது இருவாரம் முன்பு பொருட்களும், பணமும் வந்து சேரும். பொறுப்பற்ற, குடிகாரக் கணவன்கள் உள்ள பெண்மணிகள் இதை வைத்தே தீபாவளிச் செலவை ஈடுகட்டுவதைப் பார்த்திருக்கிறேன். 

சிறுவயதில் என் அம்மா வாரம் 10 ரூபாய் சீட்டு கட்டுவார். தீபாவளியின் போது இரண்டு கிலோ ஸ்வீட்ஸ், இரண்டு கிலோ காரம், ஒரு பித்தளை அண்டா என்று கொணர்ந்து தருவார்கள். அதை டிஸ்ட்ரிபியூட் செய்வதைப் பார்க்கவே அவ்வளவு குஷியாக இருக்கும். அண்டா வேண்டாம் என்றால் பணமாக வாங்கிக் கொள்ளலாம். 

இப்போதும் அவ்வகை சீட்டுகள் ஜகஜ்ஜோதியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. வாரம் ஒரு தொகை கட்டினால் தீபாவளியின் போது இவ்வளவு ஸ்வீட்ஸ், இவ்வளவு காரம், இவ்வளவு பட்டாசு, தங்கச் சீட்டு என்றால் ஒரு கிராம், இரண்டு கிராம், ஃபுல் சீட்டு என்றால் மூன்று ஃபுல், 5 ஃபுல், முழுதுமே கேஷ் என்றால் "இவ்வளவு கேஷ்" என முன்பே லிஸ்ட் தரப்படும். அது உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அதில் சேர்ந்து கொள்ளலாம். 


சென்ற வருடம் என் தங்கை சொல்லி, இங்கே ஒரு அம்மணி யிடம் ஒரு சீட்டு போட்டேன். வாரம் 300 ரூபாய். சின்ன தொகைதானே. மளிகை செலவு போல போகட்டும் என. என்று தீபாவளி சமயத்தில் துணி, பட்டாசுகள், கிஃப்ட் பர்ச்சேஸ்களுக்கு உதவும் என்று கணக்குப் போட்டேன். XIRR போட்டுப் பார்த்தாலும் கிட்டத்தட்ட 16% வந்தது. இந்த தீபாவளி சமயம் சீட்டு முடிந்து சுமார் 15,000 ஓவாவும் ஒரு அழகான துணிப்பை கிஃப்ட்டும் வந்தது. 

ஆனால் இந்த முறை ரெகுலர் செலவுகள் போக உறவில் இரண்டு “பெரிய காரியங்கள்” வேறு சேர்ந்து கொண்டன. அதற்கு மொய்கள், செய்முறைகள், உணவுச் செலவுகள், இதர, இதர என அத்தனைக்கும் இந்த முறை கை கொடுத்தது அந்தப் பணம் தான். போனஸ் இல்லா வேலையில் இருப்பவர்களுக்கு இவை போன்ற சீட்டுகள் ஒரு மிகப்பெரிய நண்பன். 

ஒருவேளை XIRR குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இது போன்ற சீட்டுகள் முதலீட்டுக் கணக்கில் வரா. சேமிப்பு வகையில் சேரும். சின்ன விஷயம் போலத் தெரிந்தாலும் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். செலவுகள் இல்லாதவர்கள் இதை அப்படியே பல்க் ஆக வேறு முதலீட்டுக்குத் திருப்பலாம். 

உதா - அலுவல் நண்பன் ஒருவன் 14,000 த்துக்கு யமஹா கீபோர்ட் வாங்கியிருக்கிறான். வேறொருவர் அரை பவுன் மோதிரம் வாங்கியிருக்கிறார். அவர்களுக்கு இது போல பல்க்காக வரும் தொகை உதவும். அல்லது ஷேர் வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் அதில் இறக்கலாம், பணம் கைக்கு வந்ததும் FD போடலாம், அட்வான்ஸ் கொடுத்து EMI இல் டூவீலர் வாங்கலாம், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போல, வீட்டுக்குப் பெரிய பொருள் வாங்கலாம் உங்கள் தேவை எப்படியோ அதற்கு உதவும். 

பழைய மந்திரம் தான் - சிறு துளி பெரு வெள்ளம். 

உஷாராக இருக்க வேண்டிய இடங்கள் - 1. சீட்டு வசூலிக்கும் ஆள் அப்ஸ்காண்ட் ஆகலாம். மொத்தமும் போச்சு, பல வருடங்களாக நம்பிக்கையாக உள்ளவர்களிடம் மட்டும் போடவும். 2. தங்கச் சீட்டு நமக்கு நட்டம். சீட்டு முடியும் நேரத்தில் உள்ள தங்கம் விலைதான் எடுத்துக் கொள்ளப்படும். 3. இன்னும் சில சேஃப்டி விஷயங்களை அனலைஸ் செய்து கொள்ளவும். இதிலேயே இலட்சக்கணக்கில் மோசடி செய்து ஓடிப்போய் டி.வியில் வந்தவர்களும் உண்டு. உஷார், உஷார், உஷார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக